Thursday, 30 April 2009

குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை


நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன்.

தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பேரில் பெரும் குப்பைகள் –நீதிக்கதைகள்-மற்றும் புராணக்கதைகள் என்ற பேரில் கொட்டப்பட்டு வரும் இந்நாளில் இன்னும் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வழங்க கூட்டு முயற்சிகள் –விவாதங்கள்-கலந்துரையாடல்கள் தேவை.வந்துள்ள சில நல்ல முயற்சிகள் மீதும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தேவை.

சோவியத் யூனியன் இருந்த நாட்களில் ஏராளமான வண்ண வண்ணப் புத்தகங்கள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.உலகத்துக்கெல்லாம் கப்பல் கப்பலாக ஓசியில் புத்தகம் அனுப்பி ஓய்ந்துபோன தேசமல்லவா அது.

அதை விட்டால் தமிழில் அந்தக்காலத்தில் கண்ணன் வந்துகொண்டிருந்தது. எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியிலிருந்து 7 மைல் நடந்து சாத்தூருக்குப்போய் கண்ணன் வாங்கி வருவேன்.அப்படி இழுத்தது கண்ணன்.அதை நடத்திய எழுத்தாளர் ஆர்.வி சமீபத்தில்தான் காலமானார்.அம்புலிமாமாவும் பின்னர் வந்த சிவகாசிப் படக்கதை-காமிக்ஸ் புத்தகங்களும் மிகப்பெரிய ஈர்ப்புகளாக இருந்தன.

இன்று தமிழகத்தில் பதிப்பகங்கள் பெருத்துவிட்ட சூழலில் புத்தகக் கண்காட்சிகள் பத்து இருபது இடங்களில் பரவலாக நடத்துவது பழக்கமாகிவிட்ட ஒரு பின்னணியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்கிற பெரிய மார்க்கெட் பெரிய பதிப்பகங்களின் நாவில் நீர் சுரக்க வைப்பது சகஜம்.


பள்ளிக்கூடங்களுக்குப் போய் சில ஆசிரியர்களைப் பிடித்து நூலகத்துக்கு மொத்தமாக புத்தகங்களை வாங்கிப் போட வைத்துவிட முடிகிறது.இந்த ஏரியாவில் முடிசூடா மன்னனாக முன்னர் NCBH மட்டும் இருந்து வந்தது. இப்போது போட்டி அதிகமாகி விட்டது. நல்லது.அப்படிப் போட்டியினால் நிறையக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வந்தால் நமக்கு நல்லதுதானே?

ஆனால் மார்க்கெட்டை மட்டும் மனதில் கொண்டு புத்தகங்களை அடித்துத் தள்ளினால் குப்பைகூளம்தான் மறுபடியும் சேரும். அப்படிச் செய்துவிடாதீர்கள் என எல்லாப் பதிப்பகத்தாரையும் அன்போடு கேட்டுக்கொள்வோம்.

நல்ல புத்தகம் எது? யார் தீர்மானிப்பது?

இதில் பதிப்பகம் நடத்துவோரின் சார்பு- மற்றும் புத்தகம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் அவர்கள் கொண்டிருக்கும் புரிதல்தான் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்தக் கலந்துரையாடலில் கூட நீதிக்கதைகளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று ஒரு பெரியவர் கேட்டார்.அந்தக்காலத்தில் நீதிக்கதைகளைப் படித்துத்தான் நாங்களெல்லாம் வளர்ந்தோம்.இப்போ பூராவும் டிவி சினிமான்னு ஆகிப்போச்சு என்று வருத்தப்பட்டார்.

நீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா? ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும்.தவிர குழந்தைகளுக்கு நீதியும் அறிவுரையும் சொல்வதுபோல ஒரு அராஜகம் உலகத்தில் எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கு அது பிடிப்பதுமில்லை.

சரி. இப்போது நம்முடைய குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் பதிப்பகங்களிடமிருந்து நேரடியாகக் குழந்தைகளுக்குப் போய்ச்சேருவதில்லை.அவை ஒன்று பெற்றோர் மூலமாக அல்லது ஆசிரியர்/பள்ளிக்கூடம் மூலமாகத்தான் குழந்தைகளைச் சென்றடைகின்றன. இரா.நடராசன் அக்கூட்டத்தில் சொன்னதுபோல குழந்தைகளுக்கான புத்தகங்களை – நூலகத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியின் மூலம் – ஒருபோதும் குழந்தைகள் தேர்வு செய்வதில்லை.எல்லா வகுப்புகளிலிருந்தும் மாணவ மாணவியரை அழைத்துக்கொண்டு கூட்டமாக புத்தகக் கடைகளுக்குப் போய் அவர்களைத் தேர்வு செய்யச்சொல்லி புத்தகங்களை அள்ளி வருகிற ஒரு தலைமை ஆசிரியரை-ஒரு ஆசிரியரை நம் நாட்டில் காட்ட முடியுமா? அந்த ஆசிரியருடைய அறிவுக்கும் புரிதலுக்கும் ஏற்ப தேர்வு செய்து அடுக்கப்பட்ட புத்தகங்களே பள்ளிக்கூட நூலகங்களில் உள்ளன.அவற்றையும் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள ஒரு நூலகரை நியமித்துள்ளது தனிக்கதை.நூலகர் பள்ளிக்கூடத்தின் மற்ற எழுத்தர் பணிகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்.பாவம்.

பெற்றோரின் புத்தக ரசனை-புத்தக்க் காதல் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இதே கல்விமுறையால் வளர்த்தெடுக்கப்பட்ட முன்னாள் குழந்தைகள்தானே? நம்முடைய கல்விச்சாலைகள் பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து புத்தகக்காதலர்களாக வெளியே வரவேண்டிய நம் குழந்தைச் செல்வங்களை புத்தக விரோதிகளாக மாற்றக் கடுமையான பணியாற்றி வருகின்றன.இதியெல்லாம் தாண்டித்தான் பிள்ளைகள் சரியான புத்தகங்களைத் தற்செயலாகக் கண்டடைந்து படிக்கிறார்கள்.அது எல்லோருக்கும் வாய்க்காதல்லவா? முறைசார் கல்வியிலேயே இதற்கான ஏற்பாடு –புத்தக வாசிப்புக்கு ஆதரவான சூழல் இருந்தால் நாம் எல்லோருமே புத்தக் காதலர்களாக மாறியிருப்போம்.தலைமுறைகள் கடந்தும் நம் நாட்டில் இதுவிசயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அதுபற்றிய ஒரு தன்னுணர்வும் சமூகத்தில் உருவாகவில்லை.

ஆங்கிலக் கல்வி பயிலும் நகர்ப்புரக்குழந்தைகள் சிலர் தீவிரமான புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.தவிர வசதியுள்ள வீட்டுப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பாக்கெட் மணியும் உள்ளது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று இன்று நாம் தயாரித்து வழங்குபவையெல்லாமே படித்த மத்திய தர வர்க்கத்துக்க் குழந்தைகளுக்காக மட்டுமேதான்.பல்வேறு பொருளாதார மற்றும் கலாச்சாரப் பினனணியில் வளரும் பல்வேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. அரைகுறைப்படிப்பாளிகளாக drop out ஆன குழந்தைகளாக நகரத்து வீதிகளிலும் கிராமத்து சிறு தொழில்களிலும் உழலும் குழந்தை உழைப்பாளிகளான வாசகர்கள் பற்றி எந்தப் பதிப்பகத்தாரும் எந்த எழுத்தாளரும் கவலை கொள்வதில்லை என்று சுயவிமர்சனமாக நாம் விவாதிக்க வேண்டும்.

வயது வாரியாக குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களுக்கான புத்த்கங்கள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

பாரதி புத்தகாலயம்,தாரா பதிப்பகம்,NCBH, குழந்தைகளுக்கான நேஷனல் புக் ட்ரஸ்ட் ,ப்ராடிஜி என எல்லோரும் கூடிப் பேசி இன்னும் சரியான திசை நோக்கி நகர வேண்டும். எழுத்தாளர்கள் இதில்

மிக முக்கியப்பங்காற்றவேண்டியுள்ளது. அதுபற்றித் தனியே விரிவாகப் பேசலாம்.

தயாரிப்பிலிருந்து விநியோகம் வரை குழந்தைகளுக்கான புத்தகம் என்கிற துறையில் அவர்களின் பங்கு ஏதுமில்லாத ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும். நாம் என்பது இதுபற்றி அக்கறை உள்ள எல்லோரையும்.
ச.தமிழ்ச்செல்வன்