Wednesday, 28 November 2012

செயல்வழி கற்றல்: மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி

பாளையங்கோட்டையில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.


பாளையங்கோட்டையில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செயல்வழி கற்றல் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.  தமிழக அரசால் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொதுப்பாடத் திட்டங்களுக்கு ஏற்ப, செயல்வழி கற்றல் அட்டைகளில் சில மாற்றங்கள் செய்து, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறையின்மூலமாக ஆக்கபூர்வமான கற்றல் நிகழ அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய கற்றல் முறை குறித்து தமிழகம் முழுவதும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் 2 நாள் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது.

பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான ப. கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தொடங்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் ஆர். ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெயகுமார், ஜெகதீஸ்வரன், ரவிகுமார், பரமேஸ்வரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செல்வின், ஆசிரியர்கள் மரிய ஜோசப் லாரன்ஸ், சந்திரசேகரன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சகாய ஜூடி செய்திருந்தார். தொடர்ந்து அனைத்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (நவ.28,29) வட்டார வளமையங்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, 19 June 2012

செயல்வழி கற்றலா? சமச்சீர் கல்வியா? ஆசிரியர்களுக்கு குழப்பமோ குழப்பம்!

சென்னை மாநகராட்சி யில் கடந்த 2003 - 2004 ஆம் ஆண்டில் செயல் வழிக் கற்றல் என்ற முறை அறிமுகம் செய்யப்பட் டது. இந்த முறையில் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக கற்றல் அட்டை கள் பயன்படுத்தப்பட் டன. படிப்பதை விட பார்த்து தெரிந்து கொள் ளும் முறையில் மாண வர்கள் நல்ல அடைவுத் திறனை பெற்றனர். இது பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த செயல்வழிக் கற்றல் முறை ஒரு ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம் பரிட்சார்த் தமாக அறிமுகம் செய் யப்பட்டது. அதற்கு பிறகு ஒரு ஒன்றியத்துக்கு 10 பள்ளிகளில் அறி முகம் செய்யப்பட்டது.

இதையடுத்து 2007 - 2008ஆம் ஆண்டில் 1 முதல் 4ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளி களிலும் செயல்வழிக் கற்றல் முறை கொண்டு வரப்பட்டது. 5ஆம் வகுப் பில் எளிதாக்கப்பட்ட படைப்பாற்றல் கல்வி (எஸ்ஏஎல்எம்) அறிமு கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட இரண்டு முறையிலும் கற்றல் அட் டைகள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. இதன் கீழ் சுமார் 37000 பள்ளிகளில் படித்த 36 லட்சம் குழந்தைகள் செயல்வழிக் கற்றல் முறையை பின்பற்றி படித்தனர்.

இதுகுறித்து 2007 - 2008ஆம் ஆண்டு என்சி இஆர்டி ஒரு சர்வே நடத் தியது. அதில் செயல்வழி கற்றல் முறையின் கீழ் தமிழகத்தில் மாணவர் கள் நல்ல கல்வித் திறன் பெற்றுள்ளதாக கண்ட றிந்தது.

செயல்வழிக் கற்றல் முறை 1 முதல் 4ஆம் வகுப்பு வரை நடத்தப் படுவதால் மாணவர்கள் பள்ளிக்கு புத்தகம் எடுத்து வரத் தேவை யில்லை. புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங் கள் குறித்த விவரங்களே செயல் வழிக் கற்றல் அட்டையில் உள்ளதால் புத்தகங்களை வீட்டில் படிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து விட்டது.

இந்நிலையில் ஆண்டுதோறும் இலவச புத்தகங்கள் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6ஆம் வகுப்பு களுக்கு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள படி 1 மற்றும் 6ஆம் வகுப் புகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களை கொடுக் கத் தொடங்கிவிட்டனர். மேலும் 3 வாரங்களுக்கு பாடம் நடத்த கூடாது என்றும் தெரிவித்துள் ளனர். இதனால் 1 மற் றும் 6ஆம் வகுப்பு சமச் சீர் கல்வி புத்தகத்தை பெறும் மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றலை நடத்த வேண்டுமா அல் லது சமச்சீர் கல்வியை நடத்த வேண்டுமா என்று ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Thursday, 19 April 2012

கருணாநிதி, கனிமொழி சுயசரிதை தான் சமச்சீர் கல்வியா?: அமைச்சர்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் சுயசரிதை தான் சமச்சீர் கல்வியா என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கேள்வி எழுப்பினார். 

விவாத விவரம்:
தங்கம் தென்னரசு (திமுக): திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில், சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்தியாகக் கூறுகிறேன். சமச்சீர் கல்வித் திட்டம் அமல், 53,000 ஆசிரியர்கள் நியமனம், முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 10,000 கோடியாக உயர்த்தியது. 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி: நீங்கள் பல திட்டங்களை தலைப்புச் செய்தியுடன் நிறுத்திவிட்டீர்கள். அதிமுக ஆட்சி வந்த பின்னர் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதாகக் கூறுகிறீர்கள். திமுக தலைவர், கனிமொழி இவர்களைப் பற்றிய சுயசரிதைகளை எல்லாம் படிப்பது தான் சமச்சீர் கல்வியா?. உண்மையான சமச்சீர் கல்வி இப்போது தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டதாகக் கூறுகிறார். புரட்சித் தலைவி ரூ.15,000 கோடி ஒதுக்கியுள்ளார். ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 351 ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், 53,120 ஆசிரியர்களை நியமனம் செய்ய அம்மா நடவடிக்கை எடுத்தார். தங்கம் தென்னரசு: பள்ளிக் கல்வி கொள்கை விளக்க புத்தகத்தில், "சமச்சீர் கல்வி' என்ற வார்த்தையே இல்லை. 

அமைச்சர் சிவபதி: பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தங்கம் தென்னரசு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, விதி 110ன் கீழ் முதல்வர் சட்டசபையில் பேசும்போது தரமான, உண்மையான சமச்சீர் கல்வியை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், கொள்கை விளக்க புத்தகத்தில், சமச்சீர் கல்வி என்ற வார்த்தையே இல்லை. இதன்மூலம் முதல்வரின் கருத்துக்கு மாறான நிலையை பள்ளிக்கல்வித் துறை எடுத்துள்ளதா? 

வணிகவரித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: சமச்சீர் கல்வி என்பது, வெறும் பாடத்திட்டத்தை மட்டும் கொண்டது அல்ல. தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் சமச்சீர் கல்வி என்று முத்துக்குமரன் கமிட்டியே கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது சமச்சீர் கல்வி என்ற வார்த்தை பொருத்தமானதல்ல. பொதுப் பாடத்திட்டம் என்பதே சரி என்று நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கூறினார்.

தங்கம் தென்னரசு: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே, பழைய பாடப் புத்தகங்களை அச்சடித்தீர்கள். இதில், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது? அந்த புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? 

அமைச்சர் சிவபதி: நீங்கள் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அச்சிட்டிருந்தால், அவற்றை மாணவர்களுக்கு வழங்கியிருப்போம். நீங்கள் தான் திமுக தலைவரின் வரலாறு, கனிமொழி வரலாற்றை எல்லாம் படிப்பதற்காக, ரூ. 300 கோடி செலவு செய்தீர்கள். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இல்லை: 

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வால், அவர்கள் பாதிக்கப்படுவர். வேண்டுமானால் பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து, அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளலாம் 

அமைச்சர் சிவபதி: ஆசிரியர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை, தமிழக அரசு கடைபிடிக்கும். ஆசிரியர் நியமனம் தேர்வு முறையில் தான் இருக்கும். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்.

Saturday, 11 February 2012

ஆசிரியை உமாமகேஸ்வரி படுகொலை: உரையாடல்கள் மறுக்கப்பட்ட சமூகத்தின் இன்னுமொரு பரிதாப நிகழ்வு

பொதுவாக மாலை தினசரியைத் தலைப்புச் செய்திகள் மூலமே வாசித்துவிட விரும்பும் மனிதர்களில் ஒருவனாகவே நேற்றும் பிற்பகல் பெட்டிக்கடை ஒன்றில் கொண்டு வந்து கயிற்றில் தொங்கவிடப்பட்ட மாலை இதழ் ஒன்றை வாசிக்க முற்பட்டவன் அதிர்ந்தே போனேன். அடுத்த நிமிடமே அந்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு அது தரக் காத்திருந்த கோர நிகழ்வு ஒன்றின் கொடிய கணங்களுக்குள் பயணத்தைத் தொடக்கினேன். 

அது நடந்தே விட்டது. தனது ஆசிரியை ஒருவரை அவரது மாணவன் ஒருவனே கொன்று விட்டான். வியப்பு, அச்சம், நடுக்கம், ஏக்கம் எல்லாம் தமது கண்களிலிருந்து கொட்டித் தீர்த்தும் அதன் பொருளை உணர்ந்து அதற்கு வழி கொடுக்கும் சிந்தனையே இல்லாதிருந்த ஒருவனிடமிருந்து தமக்கு தப்பிக்க ஒரு வழியும் இல்லாது போன நேரத்தில் உமா மகேஸ்வரி உயிரற்று விழுந்துவிட்டார். தனது கொடுஞ்செயலின் அடுத்தடுத்த விளைவுகள் குறித்த எண்ணங்கள் இல்லாது போயிருந்த இர்ஃபான் கால காலத்திற்குமான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு காவல் துறை வசம் பிடிபட்டு உட்கார்ந்திருக்கிறான். உலுக்கப்பட்டு திடீரென்று விழித்துக் கொண்டாற் போல சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது இந்த முப்பத்தாறு மணி நேரங்களாக.

என்ன நடக்கிறது, ஏன் இப்படியெல்லாம் ஆகிவிடுகிறது என்று யோசிக்குமுன், நமது அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சில சொல்லாடல்களை நினைத்துப் பார்த்தேன். "எவனையாவது ரெண்டு பேர போட்டுத் தள்ளினாத் தான் சரி வரும்", "உசுர வாங்குறான்"," மவன சாவடிச்சிடுவேன், "கொன்டே போடுவேன்" . 

நமக்கு ஓர் எதிரி உருவாவதும், அவரைப் பழி வாங்க அவருக்கான மரண வாசலைத் திறந்து வைக்க வேண்டுவதும் ஏதோ மானுட தருமம் போன்ற - தவிர்க்க முடியாத கடமை போன்ற - செய்தே தீர வேண்டிய தீரச் செயல் போல மண்டைக்குள் இரத்த ஆறு ஓடத் தொடங்குகிறது. முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஆயுதங்கள் வழியாகவே பேசிக் கொள்ளவும் தூண்டப் படுகிறோம். இர்ஃபான் கையில் கத்தி இருந்ததா, கத்தியின் கையில் இர்ஃபான் இருந்தாரா என்பது உள்பட விவாதிக்க வேண்டி இருக்கிறது. 

ஆசிரியர்-மாணவர் உறவு, டாக்டர்-நோயாளி உறவு, கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு எல்லாமே நெகிழ்வுத் தன்மை அற்ற - நிபந்தனைகளுக்கு உட்பட்ட அடிப்படையிலேயே இயங்குவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வழிப்பாதையான உரையாடலே எங்கும் ஒலிக்கிறது. பணத்தால் படியமைக்கப்பட்ட உறவுகளில் பரஸ்பரம் தூய்மையான இதயங்களின் உரையாடல் கேட்பதே இல்லை. அன்பின் சன்னல் வெளிச்சம் ஊடுருவாத அறைக்குள் கவ்வி இருக்கும் இருட்டில் சத்தங்கள் மட்டுமே வெளியே கேட்கின்றன, காட்சிகள் புலனை ஒரு போதும் எட்டுவதே இல்லை.

குழந்தை பிறந்த அடுத்த கணம் முதல் அதன் அடுத்தடுத்த மைல் கற்கள் பற்றிய வரைபடத்தை மருத்துவ உலகம் நமக்குக் கற்பிக்கிறது. தாலப் பருவம், முத்தப் பருவம், செங்கீரைப் பருவம்...என்று இலக்கியம் பேசுவது போலவே, தவழ்தல், நிற்றல், நடத்தல். பேசுதல்..என குழந்தையின் வளர்ச்சி குறித்த அளவீடுகள் உண்டு. காலம் தவறினால் தலையீடு தேவைப்படுகிறது. கல்விப் பயணத்திற்கும் இப்படியான படிக்கட்டுகள் இருக்கின்றன. முந்தைய மைல் கற்களைக் கடந்து வந்த விதத்தின் பிரதிபலிப்பு இதில் வெளிப்படும். அதற்கேற்ற உதவியும் தேவைப்படும். இந்த நுட்பமான விஷயத்தை மிக இலேசாக நினைத்தாலோ, எல்லாக் குழந்தைகளும் ஒன்று தான் என்று முரட்டடியாக அணுகினாலோ பிரச்சனைகளின் வேர் ஆழமாகப் போகிறது.

நூற்றுக் கணக்கில் மாணவர்கள் நிரம்பி வழியும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறை எந்த உன்னதமான கற்பித்தல் முறையையும் அனுமதிக்கவே செய்யாது. அங்கே இலக்குகள் மட்டுமே இயங்கும். பாட திட்டம் மட்டுமே நடக்கும். காகிதங்களில் வெளிப்படும் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அறிவு அளக்கப்படும். ஐம்பது அறுபது மாணவ எந்திரங்களுக்கு எதிரில், ஓர் ஆசிரிய எந்திரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும். தாழ்வு மனப்பான்மை குடியேறிவிட்ட உள்ளங்களின் கரும்பலகையில் சிலேட்டுக் குச்சியால் எழுத முடியாது, ஆணியால் கீறிக் கொண்டிருக்க வேண்டி வரும். அந்த வலியில் துளிர்க்கும் இரத்த வேதனையில் கற்பது எந்தக் காலத்தில் இனிக்க முடியும்?

வேக கதிக்கு மாற்றப் பட்ட நமது அன்றாட வாழ்க்கையில் சகிப்புத் தன்மை, பொறுமை, சிந்தித்துப் பார்த்துப் பதில் சொல்லுதல், ஒரு வேளை எதிரில் இருப்பவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று அங்கீகரித்தல்... இவை யாவும் தடை செய்யப்பட்டு விடுகின்றன. அலைபேசி உரையாடல்களில் இருந்து, ரயில் பேருந்து வழிப்பயண தள்ளு முள்ளுகளில் இருந்து, காத்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும், பணி செய்யும் இடத்திலும் எரிச்சல், ஆத்திரம், முன் கோபம், அதீத எதிர்பார்ப்பு, அடுத்தவரையே குற்றம் சாட்டுதல் இவையே ஆட்சி புரிகின்றன. இதன் பளு தாங்காமல் முறிகின்ற உறவுகளில் ஈவிரக்கம், நியாய அநியாயம், சரி தவறு இவை எதையும் பொருத்திப் பார்க்கும் மிகச் சிறிய கால இடைவெளி யாருக்கும் வைப்பதில்லை. அந்த மிகச் சிறிய கால இடைவெளியின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகத் தான் உமா மகேஸ்வரியின் மரணம் நமது கண்ணெதிரே நடந்தேறி இருக்கிறது. இரத்தம் சொட்டும் கத்தியை வைத்துக் கொண்டு பரிதாபமாக சமூகத்தைப் பார்க்கும் இர்ஃபான் குறித்து உமாவிற்கோ, உமா பற்றி இர்ஃபானுக்கோ சிந்திக்கக் கிடைக்காத மிகச் சிறு கால இடைவெளி அது.

ஓர் ஆசிரியையின் இபபடியான ஒரு மரணம் பல நூறு குழந்தைகளுக்கான கற்பித்தலின் மரணம். அடுத்திருக்கும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும் பூகம்பத்தை விதைக்கும் கொடிய மரணம். அதே பள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ வேறு பிஞ்சுக் குழந்தைகள் பலரும் இர்ஃபான்களோ என்று சந்தேகப் பார்வைக்குள் சிக்கிவிடக் கூடும் சித்திரவதையை சாத்தியமாக்கிவிட்ட மரணம்.

அன்பின் வழியது உயிர்நிலை என்றனர் நமது முன்னோர்கள். எதிர்காலத்தைப் பற்றிப் பட்டியலிடும் நிபுணர்களின் வழிகாட்டிப் புத்தகங்கள் முழுக்க முடிவற்ற பந்தயங்களும், பல முனை போட்டிகளும், வெற்றி குறித்த துரத்தல்களும், தோல்வி குறித்த மிரட்டல்களும், இலக்குகளும், குறியீடுகளும், மைல் கற்களுமே நிறைந்திருக்க நேயம், அன்பு போன்ற சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பதை நிம்மதியற்றுப் பார்க்கிறோம். 

எந்தக் குழந்தையின் போக்கு குறித்தும் அட்டையில் எழுதி அதன் கழுத்தில் தொங்கவிடுமுன் அந்தத் தீர்ப்பளிக்கும் நீதிபதியா நாம் என்று யோசிப்போம்! சமூகத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் கண்ணாடிகள் தான் அடுத்தடுத்த தலைமுறை என்பதை உணர்வோம். பள்ளிகள் வர்த்தகக் கடைகளாயிருப்பதை மாற்றி கல்வி நிலையங்களாக மீட்டெடுப்போம்.

துள்ளத் துடிக்க மரணத்தை எதிர்கொண்ட உமாமகேஸ்வரியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்போம். இர்ஃபானை இப்படி கொண்டு நிறுத்திய சூழலிடமும்!

************

நன்றி: எஸ் வி வேணுகோபாலன்
தீக்கதிர்: பிப்ரவரி 11

Tuesday, 10 January 2012

பள்ளிகளில் வகுப்பு நேரம் 35 நிமிடம் அதிகரிப்பு-சமச்சீர் கல்வி குழப்பத்தால் வந்த வினை!

சென்னை: சமச்சீர் கல்வியை அமலாக்குவதில் தமிழக அரசு செய்த குழப்படி காரணமாக, இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாகத் துவங்கின. பள்ளிகள் துவங்கினாலும் புத்தகங்களே இல்லாமல் மாணவ, மாணவிகள் மாதக்கணக்கில் பள்ளிகளுக்கு சும்மா சென்று வந்தனர். இதனால் இழக்கப்பட்ட வகுப்பு நேரத்தை ஈடுகட்ட, இனி வகுப்புகள் 35 நிமிடங்கள் கூடுதலாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 4.10க்கு பதிலாக இனி 4.45 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். இந்தத் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள், 15 நாள் தாமதமாக திறக்கப்பட்டன. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறி சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றம் கொட்டிய பிறகே சமச்சீர் கல்வி அமலுக்கு வந்தது. அதற்கான பாடப் புத்தகங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகே வழங்கப்பட்டன. இதனால் சுமார் 3 மாதம் புத்தகங்களே இல்லாமல் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போய் வந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளில் அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்களை ஈடுகட்டவும், பாடப் பகுதிகளை முடிக்கவும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரித்து தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். வழக்கமாக தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மாலை 4.10க்கு முடிகின்றன. இனி, மாலை 4.55 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.