Thursday, 28 August 2014

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை, கவிதைப் போட்டிகள்

By சிவகங்கை
First Published : 27 August 2014 01:58 AM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்களுக்கு கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டத் தலைவர் சாஸ்தா சுந்தரம் கூறியது: செப்.5 ஆசிரியர் தினத்தையொட்டி மாநில அளவிலான போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துவதென தீர்மானித்துள்ளது.

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் என்ற தலைப்பில் ஏ-4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், ஆசிரியர்கள் வகுப்பறையில் வசந்தம் என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு மிகாமலும், ஆர்வலர்கள் அரசுப்பள்ளிகள் நேற்று.. இன்று.. நாளை.. என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரைகளும், கல்லூரி மாணவர்கள், இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற தலைப்பில் 25 வரிகளுக்கு மிகாமல் கவிதையும் எழுதி படைப்புகளை, பி.சாஸ்தாசுந்தரம், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 373 சிலம்புதெரு, சிவகங்கை-2 என்ற முகவரிக்கு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.

மாவட்ட அளவில் ஒவ்வொருபிரிவிலும் தேர்வாகும் முதல் மூன்று படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதிபெறும். செப்டம்பர் கடைசியில் நடைபெறும் விழாவில் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Wednesday, 27 August 2014

அரசுப்பள்ளி-மக்கள் பள்ளி: பாதுகாப்போம்; பலப்படுத்துவோம் செப்.8ல் மாநில அளவிலான பிரச்சார இயக்கம் துவக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த ஞாயிறு அன்று (ஆக.24.2014) மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி தலைமையில் சேலம் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் நடைபெற்றது. அரசுப்பள்ளி மக்கள் பள்ளி பிரச்சார இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து பிரச்சாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தேனி.சுந்தர் விளக்கிப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் நிறைவுரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.


1. குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வியை வழங்குவது அரசின் கடமை..

2. ஒரு குழந்தை படித்தாலும் அரசு அப்பள்ளியை மூடக்கூடாது. தொடர்ந்து நடத்த வேண்டும்.

3. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்..

4.முறையற்ற அமலாக்கத்தினால் ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள செயல்வழிக்கற்றல் மற்றும் தொடர்மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்திட வேண்டும்.

5.கல்விப் பணிகள் பாதிக்காதவண்ணம் நலத்திட்டப் பணிகளுக்கான தனி அலுவலர்களை நியமித்திட வேண்டும்.

6.அனைத்துப் பள்ளிகளிலும் நல்ல குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி வகுப்பறைகள், வகுப்பிற்கொரு ஆசிரியர் என்பதை அரசு உத்தரவாதப்படுத்தவேண்டும்..

7. கல்வியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும்..

8. தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான எல்லைகளை (எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு) வரையறுக்க வேண்டும்..

9. பள்ளிகளில் ஒரு வகுப்பில் எத்தனை குழந்தைகள் இருக்கலாம்.. ஒரு பள்ளியில் ஒரே வகுப்பிற்கு எத்தனை பிரிவுகள் இருக்கலாம் என்பதை தமிழக அரசு வரையறுக்க வேண்டும்..

10. அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க மேலும் கூடுதலான நிதியை ஒதுக்கிட வேண்டும்.. 

11. பள்ளிக்கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிடும் நடவடிக்கைகள் வேண்டும்..

12. முழுவதும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான அருகமைப் பொதுப்பள்ளிகளை அமைத்து உண்மையான சமச்சீர் கல்வியை வழங்கிட வேண்டும்..

13. கல்வியில் பின் தங்கிய மற்றும் பின் தங்கா பகுதிகளில் மத்திய அரசு அமல்படுத்தி வருகின்ற அரசு, தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளைத் (Public PrIvate Partnership school-PPP) தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது...

14. அரசுப்பள்ளிகள் என்பவை மக்களின் வரிப்பணத்தில் இயங்குபவை... மக்களுடைய பள்ளிகள்... குறைகளிலிருப்பின் சரிசெய்வதும் தேவைகளிருப்பின் போராடிப் பெறுவதும் மக்களின் கடமை...

என பல அம்சங்களை முன்வைத்து பிரச்சார இயக்கத்தினை செப்.8 உலக எழுத்தறிவு தினத்தன்று மாநில அளவில் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் துவங்கி இந்தக் கல்வியாண்டு முழுவதும் விரிவான அளவில் கொண்டுசெல்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது..

.

கீழ்கண்டவாறு பிரச்சாரம் இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது:

v பிரச்சாரத்தை செப்டம்பர் 8ல் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தோடு மாநில மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் துவங்குவது ...

v செப்டம்பர் 19ல் பாவ்லோ பிரைரே பிறந்த நாளில் அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படைத்த அரசுப்பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்துவது...

v நவம்பர் 11- தேசிய கல்வி நாளில்.... கல்வி உரிமைக் கருத்தரங்குகள் நடத்துவது...

v பிப்ரவரி 21- உலகத்தாய்மொழி தினத்தில் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கைவிடக்கோரியும் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுப் படிப்புகள் வரையிலும் அனைத்து நிலைகளிலும் அன்னைத் தமிழை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் தாய்மொழிவழிக் கல்விக்கான மண்டல மாநாடுகள்

v மேற்கண்ட கருத்துகளை மையப்படுத்தி ஆவணப்படங்கள், பிரசுரங்கள், பாடல் ஒலிப்பேழைகள் கொண்டுவருவது, ஆய்வுகள் நடத்துவது



பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு ஆய்வுகள்:

v அடைக்கப்படும் நிலையிலுள்ள பள்ளிகளைக் கண்டறிதல்..

v ஓராசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகளைக் கண்டறிதல்..

v அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான தடைகளாய் மக்கள் கருதுவது என்ன?

v அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர் நேர்காணல்

v தற்போதும் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப்பள்ளிகள், அதன் தன்மைகள் ஆய்வு

v ஆங்கிலவழிப் பிரிவு துவங்கிய அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்


ஜனவரிக்குப் பின்பு தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து கலைப்பயணம் மேற்கொள்வது:

ஆய்வுகள், கலைப்பயணம், மக்கள் சந்திப்பின் மூலம் கிடைத்த முடிவுகளை அரசிடம் வலுயுறுத்துவது...

தேனி.சுந்தர், 
பிரச்சார இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், 

9488011128 / 9047140584

Tuesday, 26 August 2014

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிப்பு

அன்புடையீர்

வணக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.. அதேபோல படைப்பாற்றலை வளர்ப்பதாகவும் எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்ப்பதாகவும் கல்வி இருக்கவேண்டும்.. வகுப்பறைகள் பதில்சொல்லும் வகுப்பறைகளாகவே இருக்கின்றன.. கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் குழந்தைகள் பெரும்பாலும் கவனிக்கும் பங்கேற்பாளராக இருக்கின்ற நிலைமை மாறவேண்டும்.. கேள்விகள், விவாதங்கள் மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படவேண்டும்.. அதற்கு வகுப்பறை ஜனநாயக உணர்வு தேவை.. ஆசிரியர்-மாணவர் உறவு மேம்படுவது அவசியம்..

எனவே அத்தகைய வகுப்பறைகளை உருவாக்குவதற்கான முயற்சியாக உலக அளவில் சிறந்த கல்வியாளர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம்கள், ஆசிரியர் இணையம் போன்ற முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது..

போட்டி விபரங்கள்

9-12 வகுப்பு மாணவர்கள் கட்டுரை என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் A4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமல் 
 
ஆசிரியர்கள் கட்டுரை வகுப்பறையில் வசந்தம் A4 தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் 
 
ஆர்வலர்கள் கட்டுரை அரசுப்பள்ளிகள்: நேற்று.. இன்று.. நாளை..? A4 தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல்

கல்லூரி மாணவர்கள் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் வகுப்பறை.. 25 வரிகளுக்கு மிகாமல்


போட்டி விதிமுறைகள்:
செப்.10ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்..

சொந்த படைப்பாக இருக்கவேண்டும்..

தெளிவான கையெழுத்தில் இருக்கலாம்.. தட்டச்சு செய்வது சிறப்பு.

பங்கேற்பாளர்களின் தொடர்பு முகவரி, அலைபேசி, மின்னஞ்சல் அவசியம்..

மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகும் முதல் மூன்று படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறும்.. செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்...

மாநில அளவில் தேர்வான படைப்புகள் விஞ்ஞானச்சிறகு, விழுது, துளிர், அறிவுத்தென்றல் போன்ற இதழ்களில் வெளியிடப்படும்.. தனிப்புத்தகமாகவும் கொண்டுவரப்படும்..


தே.சுந்தர்
மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி: 9488011128