Sunday, 30 November 2014

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டம் முடக்கம்

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டம் முடக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டத்தை அனைவருக்கும் கல்வி இயக்கம் அறிமுகம் செய்தது. பள்ளி மாணவர்கள் சிறப்பானவராகவும், கற்பனைத் திறன் மிக்கவராகவும் உருவாக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 4ம் வகுப்பு வரையிலான மாண வ, மாணவிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பு கல்வியாண்டில் தேவைப்படும் கற்றல் அட்டைகள் தொடர்பான எண்ணிக்கைக்காக பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதில் தமிழ்வழி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் கணக் கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்தனர். இதில் 1,838 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2,765 செட் கற்றல் அட்டைகள் தேவைப்பட்டது. ஆனால், தற்போது வரை 100 தொடக்கப்பள்ளிகளுக்கு 120 செட் கற்றல் அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,738 பள்ளிகளுக்கு 2,635 செட் கற்றல் அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தொடக்க பள்ளி மாணவர்களிடம் கல்வித்தரம் குறைந்துள்ளது எனவும், இதனால் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டம் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்எஸ்ஏ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது“, சென்னை மைய அலுவலகத்தில் இருந்து 120 செட் கற்றல் அட்டைகள் மட்டும் வந்துள்ளது. மீதமுள்ள கற்றல் அட்டைகள் வந்தவுடன் அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்“, என்றார்.

Monday, 3 November 2014

செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டி முடிவுகள்-2014

அன்புடையீர், வணக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. 

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, மதுரை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்குரிய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த அக்.11,12 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. 

தேர்வான படைப்பாளிகளுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்டத்தின் அறிவியல் இயக்கச் செயலாளர்கள் மூலம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வானவர்கள் விபரம் வருமாறு:

9-12 வகுப்பு மாணவர்களுக்கான என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் கட்டுரைப்போட்டியில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பொ.பொன்மணி (+2) முதலிடத்தையும் தேனி மாவட்டம் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.கிருபமதிவதனி இரண்டாம் இடத்தையும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.திவயதர்ஷினி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 

ஆசிரியர்களுக்கான வகுப்பறையில் வசந்தம் கட்டுரைப்போட்டியில் சேலம் மாவட்டம், ஆத்தூர்,புதுப்பேட்டை, சின்னச்சாமி அய்யா நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் நண்பர்.பெ.பழனி முதலிடத்தையும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நண்பர்.சி.வீரப்பன் இரண்டாமிடத்தையும் நாமக்கல் மாவட்டம் குருசடிப்பாளையம் ஸ்ரீபாரதீய வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் நண்பர்.ஏ.சீனிவாசன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற கவிதைப்போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி செ.ஜான்சிராணி, M.Sc முதலிடத்தையும் நெல்லை மாவட்டம், வெய்காளிபட்டி, புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மாணவி இரா.அந்தோணி புனித பிரபா இரண்டாம் இடத்தையும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, டாக்டர் உமையாள் இராமநாதன் பெண்கள் கல்லூரி மாணவி அ.ரிஸ்வானா பர்வின், B.Sc. , மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆர்வலர்களுக்கான அரசுப்பள்ளிகள்: நேற்று இன்று நாளை கட்டுரைப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம், தெருக்கால்புதூர், என்.ஆறுமுகம்(9442127247) முதல் இடத்தையும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆர்.ஜெயப்பிரகாஷ் இரண்டாம் இடத்தையும் கன்னியாகுமரி மாவட்டம் முல்லாங்காவிளை டாக்டர். என்.விஜய ஷோபா, நூலகர் (9688477506) திண்டுக்கல்லை சேர்ந்த ஜோ.குணவாளன் (9500569345) ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்ற, போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரா.என்.மணி, மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், மாநிலச்செயலாளர் தே.சுந்தர் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.