Friday, 8 May 2015

அரசுப் பள்ளி > ஐ.ஐ.எம். > விப்ரோ - ஒரு நிகழ்கால சாதனைக் கதை

அரசுப் பள்ளிகள் குறித்து இப்போது பேசினாலே ‘அதெல்லாம் அந்தக் காலக் கதை. சுகமான நினைவுகள். இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா?’ என்பது போன்ற விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்கால உதாரணம்தான் எர்நெஸ்டோ திலீபனின் சாதனைக் கதை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியுடன் போராடி, ‘இனியும் தனியார் பள்ளியில் விட்டால் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்று அரசுப் பள்ளியில் தங்கள் மகன் எர்நெஸ்டோ திலீபனை சேர்த்தார்கள் அவரது பெற்றோர் காளிதாசனும் கலைச்செல்வியும். கலைச்செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

அந்த அரசுப் பள்ளிதான் திலீபனுக்கு புதிய உலகைத் திறந்து காட்டியது. அந்த அரசுப் பள்ளிதான் இந்திய மாணவர்களின் கனவான ஐ.ஐ.எம்முக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துச்சென்றது. படிப்பை முடிக்கும் முன்பே ஆறு இலக்க ஊதியத்தில் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது.

இப்போது சென்னையில் விப்ரோ நிறுவனத்தின் வணிக ஆய்வியல் நிபுணராக இருக்கிறார் திலீபன். “கோவையில் பிரபலமான தனியார் பள்ளியில் என்னை சேர்த்தனர். 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஏனோ தெரியவில்லை பள்ளி செல்லவே அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் மக்குப் பிள்ளை நான் - ஆம், பள்ளியில் அப்படித்தான் என்னை அழைத்தார்கள். ரேங்க் பட்டியலில் கடைசியில் இருப்பேன். ஆறாவதுக்கு மேல்தான் ஓரளவு படித்தேன். தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் வறுத்தெடுப்பார்கள், அடிப்பார்கள் என்பதற்காகப் படித்தேன்.

பள்ளியே சிறையானது. காலையில் எட்டரை மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடித்துவிட்டு மாலை 7 மணிக்குதான் வீடு திரும்ப முடியும். அரட்டை கிடையாது, விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்கப் புத்தகம், நோட்ஸ் இவையே உலகமானது.

‘சொன்னதைச் செய்’

புத்தகத்தைத் தாண்டி எதுவுமே தெரியவில்லை. தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? பறவை எப்படிப் பறக்கிறது? என்பது போன்ற சிறு பொது அறிவு விஷயங்கள்கூடத் தெரியாது. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. ‘சொன்னதைச் செய்’ என்பார்கள். அங்குள்ள ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது என்பதை பின்னாட்களில் உணர்ந்தேன். மதிப்பெண் எடுப்பது தொடர்பாக அவர்களும் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் பள்ளிப் பிராயத்துக்கே உரிய சுட்டித்தனம் சுத்தமாக இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் பேச்சே குறைந்தது. யாருடனும் சகஜமாக பேச மாட்டேன். பயங்கரக் கூச்சம், தயக்கம், இனம் புரியாத பயம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்புப் பாடம் எடுத்தார்கள். இயந்திரத்தை விட மோசமாக மாறியது வாழ்க்கைச் சூழல். பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே காய்ச்சல் அடிப்பதுபோல இருந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் என்னை 90.5% மதிப்பெண் எடுக்க வைத்துவிட்டார்கள். பள்ளியில் மூன்றாவது இடம். புகைப் படம் எடுத்தார்கள். செய்தித்தாளில் போட்டார்கள். ஆனால், துளியும் மகிழ்ச்சி இல்லை அப்போது. அந்தப் பள்ளியை விட்டு சென்றால் போதும் என்றாகிவிட்டது. அங்கு செல்லவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தேசிய வங்கியொன்று நடத்தும் பிரபலமான பள்ளியில் இடம் கிடைத்தது. அட்மிஷன் போட்டாயிற்று. அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் என்றார்கள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிட்டது. படிப்பே வேண்டாம் என்றேன். என் மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என் அம்மா. “நீ வாடா, நான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன்’ என்றார்.

‘அய்யே அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியே இந்த லட்சணம் என்றால் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்?’ என்றேன். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் என எல்லோரும் ‘உங்களுக்குப் பைத்தியமா? சாதாரணமாக இடமே கிடைக்காது என்று கருதப்படும் தனியார் பள்ளியிலே இடம் கிடைத்திருக்கிறது, போயும் போயும் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமா’ என்று அம்மாவைத் திட்டினார்கள்.


அம்மா என்னிடம் கேட்டார், ‘என் மீது நம்பிக்கை இருந்தால் வா. அரசுப் பள்ளி என்றால் என்னவென்று காட்டுகிறேன், அரசு ஆசிரியர்கள் என்றால் யார் என்று காட்டுகிறேன். அரசுப் பள்ளி என்றால் அவமானம் இல்லை என்று காட்டுகிறேன்...’ என்றார். அம்மா அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை முதல்முறையாகப் பார்த்தேன். அம்மாவுக்காகச் சென்றேன்.

சுற்றுலா வந்ததுபோல் இருந்தது!

கோவை அசோகபுரம் அரசுப் பள்ளி. முதல் நாள்... பையன்கள் கிழிந்த, அழுக்கு சட்டையோடு வருவார்கள், பள்ளிக்கூடம் குப்பையாக இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். எல்லாமே நினைத்ததற்கு மாறாக இருந்தது. பெரிய மைதானம். சுற்றிலும் மரங்கள். குறிப்பாக, யாரோடும் பேசலாம், அரட்டை அடிக்கலாம் என்ற சூழல்.

முதல்முறையாக ஐந்தாறு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல இருந்தது. ஒரு பீரியடில் மணி அடிக்க... ‘எல்லோரும் மைதானத்துக்கு ஓடுங்க’ என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்தில் ஓடினேன். ‘யாருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார்கள். பேட்மின்ட்டன் கற்றேன். அங்கு விளையாடிதான் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கினேன்.

சகஜமாகப் பேசவே தயங்கிய நான் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்குவேன் என்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததே இல்லை. வினாடி-வினா போட்டி, ராமானுஜம் கணிதப் போட்டி, அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம் கிளப் போட்டிகள் என அனைத்திலும் பரிசுகள். அந்த ஓர் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான ஆண்டு. பாடங்களைக்கூட மாணவர்களை வைத்தே எடுத்தார்கள். அதாவது, கணிதத்தில் முதல் ஸ்டெப் ஆசிரியர் போடுவார்.

இரண்டாவது ஸ்டெப்பை ஒரு மாணவர் சொல்ல ஆசிரியர் போடுவார். மூன்றாவது ஸ்டெப்பை இன்னொரு மாணவர் சொல்லுவார். விளையாட்டாக எல்லாம் கற்றோம். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அப்போதும்கூட சிறப்பு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் சந்தேகம் கேட்கலாம். நண்பர்களைப் போல பழகினார்கள். பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தேன்.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதினேன். திருச்சி என்.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் கிண்டி - அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அந்த நான்கு ஆண்டுகளும் வேறு ஓர் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தின. அடுத்து, கேட் (CAT) தேர்வு எழுதினேன். தேசிய அளவில் கடும் போட்டி அது. மேகாலய மாநிலம், ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ. படிக்க இடம் கிடைத்தது.

எனது வகுப்பில் ஐ.ஐ.எம்முக்குத் தேர்வான ஒரே மாணவன் நான். அங்கு தேசிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொல்லி போட்டிகள் வைத்தார்கள். நான்கு போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றேன். படிக்கும்போதே விப்ரோ நிறுவனத்தினரின் முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் கடந்தாண்டு ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது மற்றுமொரு உலகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவை அசோகபுரம் அரசுப் பள்ளியும் அதன் அத்தனை ஆசிரியர்களும்தான்!” என்று முடித்தார் திலீபன்.

அசோகபுரம் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை திலீபன் ஒரு தொடக்கப் புள்ளி! திலீபனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் குழந்தைவேல் மகன் நவீன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

திலீபன் இந்தப் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டில், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த ஏழு மாணவர்கள் அசோகபுரம் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் இவர்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைதான் அரசுப் பள்ளிகளையும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!

- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.


மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன. காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம்

பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.”

“இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா.

தொடரும் வெற்றிப் பயணம்

2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்!

தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள். அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார்.

கைதூக்கி விட நாங்கள் தயார்

நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள்.

அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது.

- குள. சண்முகசுந்தரம், 
தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in



Thursday, 7 May 2015

உப்புச்சப்பில்லாமல் போனதா சமச்சீர் கல்வி? – மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ-க்கு மாறும் அபாயம்!

சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி 8000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில் 4800 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 3500 மெட்ரிக் 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 159 சி.பி.எஸ்.இ பள்ளிகள் அடங்கும்.தற்போது பெரும்பாலான மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன.

இதனால் 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் அளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு செல்ல என்.ஓ.சி. என்ற தடையில்லா சான்று தரக்கூடாது என பெற்றோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் கல்வியாளர்களின் பெரும் போராட்டங்களுக்குப் பின் சமச்சீர்க்கல்வி அமலானது. ஆனால் சமச்சீர்க்கல்விக்கு துவக்கத்திலேயே அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேண்டா வெறுப்பாக இந்தத் திட்டம் பெயரளவில் அமலாகிறதா என்ற சந்தேகம் கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது. சமச்சீர்க்கல்வியை அரசு வேண்டா வெறுப்பாக பெயரளவில் செயல்படுத்துகிறது. சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் அமலானாலும் உண்மையான பாகுபாடற்ற தரம் உயர்ந்த பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. வெறும் பொதுத் தேர்வும், பொதுப் பாடத்திட்டமும் தான் அமலாகியுள்ளது. இன்னும் பல இயக்குனரகங்கள் செயல்படுகின்றன. இந்தப் பாடத்திட்டத்தில் குறை இருந்தால் தரம் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அலட்சியமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களுக்கு உயர் அகாரிகள் அரசியல்வாதிகள் தரப்பில் குறுக்கீடுகள் உள்ளன என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Wednesday, 6 May 2015

கே.பி.யும், ஜி.பி.யும் இனி வருவார்களா?

ஒரு 30 வருஷங்கள் இருக்கும். அது மார்கழி மாதப் பனி இரவு. அந்தி நேரத்திலேயே குளிரின் நடுக்கம் தொடங்கிவிடும். ஆனால், அந்தக் குளிரிலும் இரவு 10 மணி வரை நாங்கள் விளையாடுவோம். ஊரே இருட்டாக இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தெரு விளக்குக் கம்பங்களில் தொங்கும் மங்கலான குண்டுபல்பு மட்டும் ஊருக்குக் கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுக்கும். தெரு விளக்குக்குக் கீழே அப்போது இருந்த மண் சாலைதான் எங்கள் விளையாட்டுக் களம். தட்டுக்கோடு, சில்லு, கபடி என மாறி மாறி விளையாடுவோம்.

அப்படி ஒருநாள் இரவு விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சந்துக்குள் அந்த சைக்கிள் நுழைந்தது. முண்டாசுவாலா சைக்கிள். உற்றுப் பார்த்தால் கே.பி. சார்போல இருந்தது. நான் விளையாட்டை விட்டுவிட்டு அந்த சைக்கிள் பின்னால் ஓட ஆரம்பித்தேன். மகேந்திரன் வீட்டை நோக்கி சைக்கிள் போக ஆரம்பித்தபோது, மனசு கொஞ்சம் படபடவென்றது. இதற்குள் அங்கிருந்த ஐந்தாறு தெரு நாய்கள் பயங்கர சத்தத்துடன் குரைக்கத் தொடங்கின. நாய்களின் சத்தம் ஊரையே கூட்டிவிடும்போல் இருந்தது. சைக்கிளை நோக்கி அந்த நாய்கள் ஓடி வந்தன. சைக்கிளில் சென்ற முண்டாசுவாலாவோ இவை எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த உருவம் அமைதியாக மகேந்திரன் வீட்டின் அருகே சென்று சைக்கிளை நிறுத்தியது.

மகேந்திரன் குரலைக் கேட்டபோது, என் சந்தேகம் சரிதான் என்று புரிந்தது. வந்திருப்பது கே.பி. சார். “சார்… சார்… வாங்க சார்… வாங்க சார்…” என்று பம்மிக்கொண்டிருந்தான் மகேந்திரன். வார்த்தைகள் எல்லாம் உளறல்கள்போல உதிர்ந்தன.

“என்னய்யா கீழப்பர்ராகுடியார… இதுதான் படிக்கிற லட்சணமா? (கீழத்திருப்பாலக்குடி என்ற எங்கள் கிராமத்தின் பெயரை இப்படித்தான் கே.பி. சார் கிண்டலாகக் கூறுவார்) இன்னும் 10 மணிகூட ஆகலை. அதுக்குள்ள தூக்கத்துக்கு ரெடியாயிட்டே போலிருக்கு” என்றார் கே.பி. சார்.

வீட்டினுள் பாய் விரித்து எல்லோரும் தூங்குவதற்குத் தயாராக இருந்தார்கள்.

“சார்… சார்… ரொம்ப நேரமா படிச்சிக்கிட்டுதான் சார் இருந்தேன். இப்பதான் சார் புத்தகத்தை மூடி வெச்சேன். எல்லாம் படுக்கலாம்னாங்க” என்றான் மகேந்திரன்.

“ஆமாம் சார். சாயந்திரத்திலேர்ந்து படிச்சுக்கிட்டுதான் இருந்தான். இப்பதான் சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மூடி வெச்சான்” என சௌந்தராசு சித்தப்பாவும் வக்காலத்துக்கு வந்தார்.

“இப்படியெல்லாம் புள்ளைக்கு சப்போர்ட் பண்ணிப் பேசாதீங்க. 10 மணி வரைக்கும் கண்டிப்பா படிக்கணும். காலையில சீக்கிரமா எழுப்பிவிட்டுப் படிக்கச் சொல்லுங்க. இந்த வருஷம் பத்தாவது பொதுப் பரீட்சை. புள்ள நல்லா வரணுமா, வேணாமா?” என்றவர் சௌந்தராசு சித்தப்பாவிடம் கொஞ்ச நேரம் பேசினார். அப்புறம் மகேந்திரனிடம் என்னவெல்லாம் படித்திருக்கிறான் என்று கேட்டவர், ‘‘கண் விழித்துப் படித்தால் உடம்பு சூடாகாமல் இருக்க வெந்தயம் கொஞ்சம் தினமும் விழுங்கு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். சைக்கிளில் ஏறும்போது, மகேந்திரன் கன்னத்தில் ஒரு செல்லத் தட்டு. “இன்னொருத்தன் இருப்பானே இங்கே, அவன் வீடு எது?” என்றார்.

சந்தோஷம் பொங்க ராஜேந்திரன் வீட்டைக் காட்டிவிட்டு, படிக்க ஓடினான் மகேந்திரன். அவனுடைய வீட்டிலிருந்து அடுத்த இரண்டாவது வீடுதான் ராஜேந்திரன் வீடு. மகேந்திரன் வீட்டில் கே.பி. சார் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ராஜேந்திரன் வீட்டுக்குள் படித்துக்கொண்டிருந்தான். அடுத்து தனது வீட்டுக்கு கே.பி. சார் வருவார் என்று தெரிந்துவைத்திருந்தானோ, என்னவோ புத்தகத்தோடு வெளியே வந்தான். “வெரிகுட்... நல்லா படிங்கடா” என்று சொல்லிக்கொண்டே அடுத்த தெரு நோக்கி சைக்கிளை விட்டார் கே.பி. சார்.


அடுத்து அவர் சென்றது, பொற்கொடி வீடு நோக்கி. அது எங்கள் பெரியப்பா வீடுதான். அவ்வளவு நேரம் படித்துக்கொண்டிருந்த பொற்கொடியக்கா அப்போதுதான் பெரியப்பாவுக்குச் சட்னி அரைப்பதற்காக எழுந்து சென்றிருந் தார். கே.பி. சார் வீட்டுக்குள் நுழையவும் அக்கா அம்மியில் சட்னி அரைக்கவும் சரியாக இருந்தது. பொற்கொடி அக்காவும் கே.பி. சாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். பயத்தில் அக்காவும் உளறித் தள்ளினாள்.

எங்கள் பெரியப்பா கணேசன், நடுநிலைப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியாக இருந்தார். கே.பி. சாரின் மரியாதைக்குரியவர். “இவ்வளவு நேரம் படிச்சுக்கிட்டுதான் இருந்துச்சு. இப்போதான் சட்னி அரைக்கப் போச்சு” என்று பெரியப்பா சொன்னதை ஏற்றுக்கொண்ட கே.பி. சார், கொஞ்ச நேரம் பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்புறம், அடுத்த கிராமம் நோக்கி நகர ஆரம்பித்தார். கே.பி. சார் எங்கள் ஊருக்கு வந்த அதே நேரத்தில், ஜி.பி. சார் பக்கத்தில் இருந்த கண்டிதம்பேட்டையில் சுற்றிக்கொண்டிருந்ததை மறுநாள் பையன்கள் பேசிக்கொண்டனர்.

யார் இந்த கே.பி. சாரும், ஜி.பி. சாரும்?

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் உள்ளது திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி. கிராமத்து மக்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமுதாயப் பள்ளி அது. சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்வி ஒளி ஏற்றிய பள்ளி அது. அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்தான் கே.பன்னீர்செல்வம் என்ற கே.பி-யும், ஜி.பாலச்சந்திரன் என்ற ஜி.பி-யும். 10-ம் வகுப்பில் அங்கு ஏ, பி என்று இரு பிரிவுகள் இருக்கும். கே.பி-யும், ஜி.பி-யும் ஆளுக்கொரு வகுப்பின் வகுப்பாசிரியர்கள்.

பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு அல்லாமல், வீட்டிலும் தம் மாணவர்கள் படிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக கே.பி-யும், ஜி.பி-யும் இரவு நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு, குளிரிலும் இருளிலும் சுற்றிவருவார்கள். 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தங்கள் மாணவர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் இப்படிப் போவார்கள், வாரத்துக்கு நான்கு நாட்கள். தம் வீட்டுக்கு ஆசிரியர்கள் வரக் கூடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் படிப்பார்கள் என்பது மட்டும் அல்ல நோக்கம்; அவர்கள் படிப்பதற்கான சூழலைப் பெற்றோர்கள் வீட்டில் தர வேண்டும் என்ற எண்ணமும் உண்டு.

இன்றைக்குத் தமிழ்நாட்டின் பல ஊர்களில் கோழிப் பண்ணைகள்போலத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இரவு நெடுநேரமும், அதிகாலையிலும் மாணவர்களைப் படிக்க வைக்கும் பல பள்ளிகள் வந்துவிட்டன. இந்தப் பள்ளிகளின் ‘நோக்கம்’ வேறு. ஆனால், கே.பி.யும், ஜி.பி.யும் இரவு நேரத்தில் வீடு வீடாக அலைந்ததன் நோக்கம் வேறு. அப்போது கே.பி.யிடமும், ஜி.பி.யிடமும் படிக்க வந்தவர்களில் பலர் முதல் தலைமுறை மாணவர்கள். ஏழ்மைப் பின்னணியைக் கொண்டவர்கள். பள்ளிக்கூடங்கள் தான் அவர்களின் பல நூற்றாண்டு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டிருந்தன. கே.பி.யும், ஜி.பி.யும் இதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட அதே அக்கறை பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கரன் உட்பட அன்றைய ஆசிரியர்கள் பலரிடமும் உண்டு.

தேர்வுக் காலம் நெருங்கிவிட்டால், உள்ளிக்கோட்டை லெட்சுமி திரையரங்கம் வாசலில் (அன்றைய காலகட்டத்தில் அந்தப் பகுதியின் ஒரே பொழுதுபோக்கு இடம்) மாலை 5.30 மணிக்கெல்லாம் கே.பி. சாரையும், குமணன் சாரையும் பல நாட்கள் பார்க்கலாம். வாசலில் அவர்கள் நின்று கொண்டிருந்தால் மாணவர்கள் யாரும் தேர்வு நேரத்தில் திரையரங்கம் பக்கம் வர மாட்டார்கள் என்பதற்காக நின்று கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் உள்ளே புகுந்தும்கூட ‘ரெய்டு’ நடத்துவார்கள். “அடேய் படிங்கடா... பரீட்சை முடிஞ்ச உடனே தெனம் வந்து பாருங்க... நானே காசு தர்றேன்” என்பார்கள்.

அது ஒரு காலம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் மாணவர் களைத் தம் பிள்ளைகளாகக் கருதி உழைத்த ஆசிரியர்கள் இருந்த காலம். இன்றைக்கும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் இருக்கின்றனர். இந்தக் காலத்தைப் பின்னாளில் எப்படி நினைவுகூர்வது?

- வி. தேவதாசன், 
தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in

போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்

முப்பதைத் தாண்டியவர்களா நீங்கள்? அப்படி யென்றால், உங்களில் பெரும்பாலானோருக்கும் இப்படிப்பட்ட பள்ளிப் பருவம் வாய்த்திருக்கும்.

காலை 8.30. இட்லியைப் பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருப் பீர்கள். வாசலிலிருந்து குரல் கேட்கும், “ஏய், மணிமாறா வாடா. பள்ளியோடத்துக்கு லேட்டாவுது.” உங்களோடு மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் குமாரின் குரல்தான் அது. “தோ வந்துட்டேன்டா” என்று எழுந்துபோய், கையைக் கழுவிவிட்டு வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் மஞ்சப் பையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சொல்லியதும் சொல்லாததுமாக ஓட்டம் பிடிப்பீர்கள். குமாரும் நீங்களும் சேர்ந்து அடுத்த தெருவில் இருக்கும் பீட்டரையும் கூட்டிக்கொண்டு நடைபோடுவீர்கள். இப்படியாக ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிடும்.


பள்ளி போய்ச் சேர்வதற்குள் பேச்சு, பாட்டு, ஓட்டம், சண்டை என்று உங்களுக்குள் பெரும் கச்சேரியே நடந்து முடிந்திருக்கும். பள்ளி முடிந்த பிறகும் இப்படித்தான். வீர சாகசங்களையெல்லாம் முடித்த பிறகுதான் வீடு திரும்பல். வீடு திரும்பியதும் அம்மா தரும் டீ, காபி, நொறுக்குத் தீனியையெல்லாம் முடித்துவிட்டு, விளையாட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியது. கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளெல்லாம் சற்று தாமதமாகத்தான் நம் பள்ளிப் பருவத்தில் நுழைந்திருக்கும். விளையாட்டென்றால், திருடன் - போலீஸ், நாடு பிடித்தல், பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்கிச்சுத் தாம்பலம், கூட்டாஞ்சோறு முதலானவைதான். சிறுவர்-சிறுமியர் எல்லோரும் கலந்துகட்டி ஆடும் விளை யாட்டுகள் இவை. தவிர, அந்தந்த நேரத்துக்கு, அந்தந்த இடத்துக்கு ஏற்றாற்போல் நீங்களே கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டுகளும் உண்டு. இருட்ட ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா சொல்லாமலேயே பாடப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பிப்பீர்கள். இதுதான் அன்றாட நிகழ்வுச் சுழற்சி.

வாழ்வின் பொற்காலம்!

குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகள், நெருக்கடிகள், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கண்டிப்பு, வீட்டுப்பாடம் போன்றவற்றைக் கழித்துவிட்டு நம்முடைய பள்ளிப் பருவத்தைப் பற்றிக் கருத்து சொல்லச் சொன்னால் என்ன சொல்வோம்? “பள்ளிப் பருவம்தான் என் வாழ்வின் பொற்காலம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று தானே பெரும்பாலானோர் சொல்வோம்! அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான பள்ளிப்பருவத்தை நாம் நம்முடைய குழந்தைகளுக்குத் தருகிறோமா என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொண்டால் எப்படிப்பட்ட துரோகத்தை நம் பிள்ளைகளுக்குச் செய்துவருகிறோம் என்பது தெரியும். சிறுவர்களுக்கு, கற்பனையூட்டத்துடன் கூடிய துடிப்பான ஒரு பொழுதுபோக்கு (என்லைட்டன்டு லெஷர்) தேவை என்பது உலகமெங்கும் உளவியலாளர்கள் முன்மொழியும் கருத்து. அந்தப் பொழுதுபோக்கை நாம் அவர்களுக்கு அனுமதிக்கிறோமா?

நம்மில் பெரும்பாலானோர் தெரிந்தே செய்கிறோம். ‘நம்ம காலத்துல எவ்வளவு ஜாலியா ஸ்கூல் போவோம். பாவம்! இந்தக் காலத்துப் பசங்க’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே காலை 7 மணிக்கே பெரிய புத்தக மூட்டை, சாப்பாடு எல்லாம் கட்டிக்கொடுத்து, வீட்டுவாசலுக்கோ தெருமுனைக்கோ வரும் பள்ளிக்கூட வேனில் நம் பிள்ளைகளை ஏற்றிவிடுகிறோம். என்ன செய்வது? போட்டி உலகம். நம் பிள்ளைகளின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இப்போதிருந்து அவர்கள் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். நம் காலம் போல இல்லையல்லவா! என்றெல்லாம் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வோம். எல்.கே.ஜி-யில் அந்தக் குழந்தைகள் ஏற ஆரம்பித்த வேன்கள் அல்லது பேருந்துகள்… 12-வது முடித்து, கல்லூரி (பெரும்பாலும் பொறியியல் கல்லூரி) முடித்து, டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர்களை வேன்களோ பேருந்துகளோ பொத்திப் பொத்தி ஏந்திச்சென்றுகொண்டிருக்கும். இப்படி ஒரு ‘பேக்கேஜ்’ வாழ்க்கையின் தொடக்கமாகவே எல்.கே.ஜி. வேன் அமைந்து விடுகிறது.

சுயகற்றலின் பரவசம்

பள்ளி மட்டுமல்ல; பெற்றோர் மட்டுமல்ல; பள்ளி போகும் வழியும் நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தரும். தாங்களாகவே வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான ஆரம்பப் பயிற்சியை அது அவர்களுக்குத் தரும். குட்டி சகாக்கள் ஒன்றாகப் பள்ளிக்குப் போவதென்பது, பெரியவர்களாக வளர்ந்த பிறகு சமூகத்துடன் உறவுகொள்வதற்கான மாபெரும் பயிற்சி. எல்லாவற்றையும்விட உலகைச் சுயமாகவே கற்றுக்கொள்ளும் பரவசம்தான் இதில் மிகவும் முக்கியமானது.

சமூகத்தின் சூழலையும் இயற்கையையும் எதிர்கொள்வது என்பது கற்றல் பருவத்தில் மிகவும் இன்றியமையாதது. சகாக்களுடன் பள்ளி செல்லும் வழியில் சாலையோரம் தென்படும் சிறு சிறு உயிரினங்கள், செடிகொடிகள், மரங்கள், வழியில் குறுக்கிடும் சிற்றாறு, ஒற்றையடிப் பாதை, தோப்பு, அஞ்சல் அலுவலகம், கடைவீதி இவையெல்லாமே பள்ளிக் கல்வியைத் தாண்டிய மகத்தான கல்வியை அவர்களுக்குத் தரும்.

சைக்கிள் சாகசம்

நடந்து செல்லும் சிறுவர்கள் ஒரு பருவத்துக்குப் பிறகு சைக்கிளில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அதுவும் ஒரு தொடர்ச்சிதான். அதுவும் பெரிய சாகசம்தான். தங்களைத் தாங்களே கையாள்வதில் வேறு ஒரு பரிமாணத்தை அடை வதன் அடையாளம். சைக்கிளில் செல்லும்போதும் கூட்டாகச் சேர்ந்துதான் செல்வார்கள். இப்படிச் செல்வது தோழமை உணர்வு, சூழலைக் கற்றல் என்பவற்றோடு பாதுகாப்பும்கூட.

இப்படி ஒன்றாக அவர்கள் செல்லும்போது, அவர் களுக்குள் சிறு சிறு பிரச்சினைகள், சண்டைகள் ஏற்படும். அவற்றைப் பெரும்பாலும் ஆசிரியர்களிடமோ பெற் றோரிடமோ எடுத்துச்செல்லாமல் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளும் திறனும் அவர்களுக்கு இயல்பிலேயே ஏற்படுகிறது. சமூகத்துடனான ஊடாட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒரு பண்பு இது.

வாழ்க்கையோடு தொடர்புபடுத்துதல்

கிராமமோ நகரமோ அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்தான் இன்னமும் தாங்களாகவே பள்ளிக்குச் செல்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்கள் இயற்கையான சூழலுடன் கைகோத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றால், நகரத்துச் சிறுவர்கள் தாங்கள் வாழும் சூழலுடன் கைகோத்துக்கொண்டு செல்கிறார்கள். இயற்கைச் சூழலாக இல்லாவிட்டாலும் வாழும் சூழலோடு சேர்ந்து செல்வது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. கிராமங்களிலும் நகரங்களிலும் தங்கள் பள்ளிக்குச் சகாக்களுடன் நடந்தோ அல்லது அரசுப் பேருந்துகளில் உற்சாகமாகப் பேசிக் கொண்டோ செல்லும் சிறுவர்கள் வாழ்க்கையோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடன் இருக்கிறார்கள்.

வாழ்க்கையுடன் குழந்தைகளைத் தொடர்புபடுத்துவதுதான் மிகவும் முக்கியமானது. உண்மையான கல்வி அதைத்தான் செய்யும். ‘பேக்கேஜ்’ கல்வி முறையோ வாழ்க்கையிலிருந்து கல்வியைப் பிரித்துவிடும். கல்வி என்பதை வெறும் அறிவாகப் பார்க்கும் கல்வி அது. அறிவும் உணர்வும் சேர்ந்ததுதான் உண்மையான கல்வி. உலகமெங்கும் ‘உணர்வுசார் அறிவு’ குறித்து (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) பேசிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் இன்னும் அறிவை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குகிறோம்.

ஆனால், குழந்தைகள் அற்புதமான திறமை கொண்டவர்கள். நாம் அவர்களை வேன்களில் கொண்டுபோய் அடைத்தாலும் அவர்கள் அதற்குள்ளும் ஒரு சிறு உலகத்தை, நட்பை சிருஷ்டித்துக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்கான இடத்தை எவ்வளவு குறுக்கினாலும் அந்தச் சிறு இடத்திலும் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடியவர்கள். ஆனால், போகப்போக அந்த உயிர்ப்பையும் அவர்களிடமிருந்து நாம் பறித்துவிடுகிறோம் என்பதுதான் வேதனையானது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் மிக எளிமையானது; பள்ளி செல்லும் வழியையும் நம் பிள்ளையின் ஆசிரியராக ஆக்கிவிடுவதுதான் அது.

‘ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னைத் தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்…

மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே’

என்று தற்காலத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான தேவதேவன் கவிதை எழுதியிருப்பார். மரத்தடி நிழலைப் போலவே பள்ளி செல்லும் வழியும் நம் பிள்ளை களுக்கு எல்லாவற்றையும் அறிமுகப்படுத்திவிடும். அவர் களை அவர்களாகவே இருக்க விடுவோமே!


- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

தப்பித்த குரங்குகள்!

வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ, அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம் என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. நாங்கள் கல்வி உரையாடலில், வேடிக்கையாக இதைத் ‘தப்பித்த குரங்குகள்’ என்று குறிப்பிடுவோம். யார் கைகளும் படாமல், யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் அசல்; வடிவமைக்கப்பட்டதெல்லாம் நகல்தான்! பள்ளிக்கூடம் - உலகின் மிகப்பெரிய நிறுவனம் - தப்பிப்பது சுலபமா? அசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம்!



இப்போது என் பள்ளிப் பருவம் ஞாபகத்துக்கு வருகிறது.1950-களின் இறுதியில் பெரியகுளம் வி.எம்.போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். வராகநதி ஆற்றங்கரையில் இருந்த பள்ளி. எந்தக் காலத்திலும் வராக நதியில் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும். வகுப்பறை ஓய்ந்த நேரங்களில் வராகநதி ஆறும் ஆற்றங்கரையும்தான் எங்கள் கல்விக்கூடம். ஆசிரியர்கள் பல மாதிரிகளில் இருந்தார்கள். ஆழ்ந்த புலமையால் எங்களை விட்டுச் சற்றுத் தள்ளி நின்ற சர்மா, சிவக்கொழுந்து; ‘அட போடா!’ என்று சொல்லி எங்களோடு எப்போதும் கலந்துநின்ற பாண்டியராஜன்; பரம சாதுவான ஓவிய ஆசிரியர், குமுறும் வார்த்தைகளில் எங்களுக்கு அரசியல் கற்றுத்தந்த கைத்தொழில் ஆசிரியர் - எனப் பலர். ஆசிரியர் பலவிதமாக இருந்தபோதும் எவரும் எந்த நிர்ப்பந்தத்தையும் அழுத்தத்தையும் எங்கள்மீது ஏற்றியதில்லை. மாணவர்களுக்குள் சாதிமத பேதங்கள் இருந்ததும் இல்லை. கவிஞர் மு.மேத்தா அன்று எங்கள் பிரியத்துக்குரிய மாணவர் தலைவர். எதிர்காலம்குறித்த கனத்த சிந்தனைகளும் அன்று கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி-யில் எங்களில் பலர் 500-க்கு 240 மதிப்பெண் வாங்கி ‘பார்டர் பாஸ்’ பண்ணுவோம். அதற்கே, “மாப்ள, புரோட்டா வாங்கிக் கொடுய்யா!” என்று மச்சான்மார்கள் ட்ரீட் கேட்பார்கள்.

என் சொந்த முகம் எங்கே?

பள்ளியை விட்டு வெளியேறும்போது வடிவமைக்கப்படாத சொந்த முகங்களோடு வெளியேறினோம். அதற்கான சுதந்திர வெளி எங்கள் பள்ளியில் இருந்தது. அந்தச் சுதந்திரவெளி முக்கியமானது. வர்த்தகமும், நிர்ப்பந்தமும் இல்லாத சுதந்திர வெளி. ஆளுமைகளைச் சிதைக்காத சுதந்திர வெளி. எந்த நேரமும் வெற்றியை நோக்கித் துரத்தி அடிக்காத பொதுவெளி!

இப்போது அது எங்கே? ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம், மத்திய வர்க்க ஆணாதிக்கப் பாடத் திட்டம் வழங்கிய முகம், வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. என் சொந்த முகம் எங்கே? எங்கே எனக்கான சுதந்திர வெளி? கல்வி உரிமைச் சட்டம் போன்றவை ‘அதட்டல் அதிகாரங்கள்’ மீது கேள்வி எழுப்பலாம். ஆனால், அக்கறை என்ற பெயரில் உலவும் ‘நுட்பமான அதிகாரங்கள்’ எப்போதும் நிலைத்திருக்கின்றன. வடிவமைத்தல், மதிப்பிடுதல், வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான அதிகாரங்கள்.

எட்டாம் வகுப்பு வரை தேர்வு வைத்து வடிகட்ட முடியாமல் போகலாம். ஆர்வத்துடன் மேடையேற வந்த முகங்களில் ‘எண்ணெய் வடியும் கறுப்பு மூஞ்சிகளை’ வடிகட்டித் துரத்து வதில் யார் குறுக்கிட முடியும்? வடிகட்டும் வேலையைச் செய்வோர் பலர் கறுப்பர்களாக இருப்பதும் ஒரு முரண்!

வெட்டிச் சாய்க்கும் வடிவமைப்பு

மதிப்பிடுவதும் அதிகாரம்தான்! விடையில் எப்போதும் நாங்கள் தேடுகிற சில வார்த்தைகள் தென்பட வேண்டும். முழு விடையையும் வாசிக்க நேரம் கிடையாது. நீ எப்படி யோசித்து விடை எழுதினாலும் ‘நாலு வரிக்கு ரெண்டு மார்க்’ என்று நான் முடிவு செய்துவிட்டால் ரெண்டு மார்க்தான். மாவட்டப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்யும்போது இயல்பாகப் பேசுகிறவனை ‘அப்படியில்ல! ஏத்த எறக்கத்தோடு பேசு!’ என்று வெட்டிச் சாய்ப்போம். அதுதான் வடிவமைத்தல்!

விளம்பரங்களை நம்பும் மூளை

எதுவும் இயல்பாக இருப்பதோ, விதவிதமாக இருப்பதோ வடிவமைக்கும் எங்கள் அதிகாரத்துக்கு எதிரானது. சிந்திக்க அனுமதிப்பதுகூட வடிவமைக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். எனவேதான், கிளப், கேம்ப், ஒர்க்‌ஷாப் என்று பிஸியாக இருக்கவும், படிப்பது என்ற பெயரில் திரும்பத் திரும்ப டிரில் பண்ணவும் பிள்ளைகளைப் பழக்கியாயிற்று. ‘பிஸி’யான பிள்ளை எதைச் சிந்தித்தது? படித்த மனிதர்கள் மத்தியில்தான் பகை வளர்க்கும் மதவாதம் நிரம்பிக் கிடக்கிறது. அவர்கள் மத்தியில்தான் உளுத்துப்போன வைதிகச் சடங்குகள் புதுப்புது ரூபம் எடுக்கின்றன. அப்படியானால், ‘படிப்பும் பள்ளிக்கூடமும்’ கற்றுத் தந்தது என்ன? வடிவமைத்தது எதை? விளம்பரங்களை நம்பும் மூளைகளைத்தானே அவை வடிவமைத்திருக்கின்றன. எங்கே பிள்ளைகளுக்கான சுதந்திர வெளி?

வகுப்பறை தாண்டிய வாசிப்பு

இன்றைக்கும் கொஞ்சம் சுதந்திரவெளி மிச்சம் இருக்கும் இடம் அரசுப் பள்ளிகள்தான். அதனால்தான் அரசுப் பள்ளி களுக்காக வாதாடுகிறோம். அரசுப் பள்ளிகளுக்காக வாதாடுவது குழந்தைகளின் சுதந்திரத்துக்காக வாதாடுவதாகும். அவர்களின் ஆளுமைக்காக வாதாடுவதாகும். பல ஆண்டு களாக ஆசிரியர், மாணவரைச் சந்தித்து வருவதன் அடிப் படையில் சில உண்மைகளை இங்கு என்னால் நம்பிக்கை யுடன் பகிர முடியும். ஒப்பிட்டுச் சொல்வதானால், அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம்தான் வகுப்பறை தாண்டிய வாசிப்பு கூடுதலாக இருக்கிறது.

மனந்திறந்த உரையாடலும் அவர்கள் மத்தியில் சாத்தியமாக இருக்கிறது. விவாதத்தின்போது அவர்கள் வாயொடுங்கி நின்று நான் பார்த்ததில்லை. அரசுப் பள்ளி மாணவர்போல வெடிப்புறப் பேசக்கூடிய, விவாதிக்கக்கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில் காண்பது அரிது. பாட்டு, நாடகம் என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள். தலையிட்டுத் தலையிட்டு வடிவமைக்கப்படாத திறமைகள். கூண்டுக்குள் சிக்காத குரங்குகள்... இந்தச் சுதந்திர வெளி, கவனிப்பும் பராமரிப்புமற்ற பாழ்வெளியாக மாறிவருவதுதான் நம் கவலை. ஆசிரியர்கள் மட்டுமே இதை ஓரளவு சரிசெய்ய முடியும். எனவேதான் அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கி அடிக்கடி பேசுகிறோம்.


நேசத்தின் வழி நெருங்குவோம்

எதையும் ஒரு நிர்ப்பந்தத்தோடு பேசியே நமக்குப் பழக்கம். அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கிப் பேசுவது ஒருபுறம் நியாயத்தின் குரலாக இருந்தாலும் மறுபுறம் அதிகாரத்தின் குரலாகவும் இருக்கிறது. தேவையில்லை. அதிகார வழியிலான நிர்ப்பந்தத்தின் மூலம் அல்ல - நேசத்தின் வழி ஆசிரியர்களை நெருங்குவோம். மாற்றம் நிச்சயம் சாத்தியமாகும்!

ச. மாடசாமி, கல்வியாளர்,
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com