Saturday, 16 July 2011

சமச்சீர் கல்வித் ரத்து செய்யப்படவில்லை, தரமான பாடத் திட்டத்துடன் அமல்படுத்துவோம்- தமிழக அரசு


சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை. இந்த ஆண்டுக்கு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரமான பாடத் திட்டத்துடன் அதை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு விளக்கியுள்ளது. 

சமச்சீர் கல்வித் திட்டம்தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் விசாரித்தது. தற்போது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது இன்று தெரிய வரும். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தாக்கல் செய்து அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், முந்தைய அரசு வகுத்த சமச்சீர் கல்வி பாடத்திட்டமும், அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களும் தரமற்றவைகளாக இருக்கின்றன. அதனால்தான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி நிபுணர் குழுவும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே, முறையான பாடத்திட்டமும், தரமான பாடப்புத்தகங்களும் தயாரித்த பிறகுதான் சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவேதான், சமச்சீர் கல்வி சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை. தற்போது ஒத்திதான் வைத்துள்ளது. முறையான பாடத்திட்டம், தரமான பாடப்புத்தகங்களை கொண்டு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றார். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து நிபுணர் குழுவை அமைத்துப் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழு தனது பரிந்துரையை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன் மீது ஒரு வாரகாலத்திற்கு விசாரணை நடந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்ட நிலையில் 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகமே இல்லாத நிலையில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 2 July 2011

செயல்வழி கற்றல் உருவானது எப்படி? புரட்சி அல்ல இது: பரிணாம வளர்ச்சி

தமிழக அரசு நடத்தும் 37 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளுள் ஏதாவது ஒன்றில் நுழைந்தால், முந்தைய பாரம்பரிய வகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் வித்தியாசமான சூழலை, இப்போதெல்லாம் உணர்கிறேன்.



தொழிற்சாலைகள் உள்ள ரோபோக்கள் போல, குழந்தைகள் எழுந்து நின்று, “குட்மார்னிங் சார்…’ சொல்வதில்லை. மாறாக, தங்கள் செயல்பாடுகளில் உன்னிப்பாக ஈடுபடுகின்றனர். இது, வகுப்பறைகளில் இரண்டு பெரிய, நல்ல மாற்றங்களை உணர்த்துகின்றன; கற்கும் முறையில் குழந்தைகள் ஆழமாக ஈடுபடுகின்றனர் என்பதும், பழைய முறையிலான அடிபணியும் கலாசாரத்திலிருந்து, பள்ளிகள் மாறிவிட்டன என்பதும்!

இந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது; பள்ளி கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும்! செயல்வழிக் கற்றல் திட்ட சீர்திருத்தம், கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவர் நடத்தும் பாடத்தை, மாணவர்கள், பயத்துடன், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத வகையில் கேட்டு கொண்டிருப்பர். செயல்வழிக் கல்வித் திட்ட வகுப்பு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு, மாணவன் தான் ஹீரோ; தன் சொந்த முயற்சியில் பாடங்களைக் கற்றுக் கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. கற்கும் முறையில் அவனுக்கு உதவுவது மட்டுமே ஆசிரியர் பணி. இது, மிகவும் நுட்பமான, ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஒரே நாளில் நிகழ்ந்ததா? இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பு? இது குறித்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இது புரட்சியல்ல; நூறு ஆண்டுகளாக முயன்று அடித்தளம் போட்டு, அதன் காரணமாக உருவான பரிணாம வளர்ச்சி என்பதை நாம் உணர்வோம்.

வளர்ந்து கொண்டிருக்கும் மரம், மண்ணுக்கு அடியில் தன் வேரை பரப்பி, பலமான அடித்தளம் அமைக்கும்; பலமான வேர் அமையும் போது தான், மரமும் செழிக்கும். நம் கண் முன் தெரிவது, மண்ணுக்கு மேல் உள்ள மரம் தான்; பலமாக அமைந்துள்ள வேரை, யாரும் காண்பதில்லை. எனவே, இந்த செயல்வழி கற்றல் திட்டத்தை உருவாக்க காரணமாக அமைந்த, சில முக்கிய வேர்கள் குறித்து நாம் இப்போது பார்ப்போம். கற்பிக்கும் அதிகார மையங்கள், கல்வி இயக்கங்கள் மற்றும் நிர்வாக/ அரசியல் அதிகார மையங்கள் என மூன்று பிரிவாக, இந்த வேர்களை பிரித்து, அறிந்து கொள்வோம். இதில் ஒவ்வொரு பிரிவும், பரிணாம வளர்ச்சி குறித்த வரலாறு சொல்லும்.

கற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி: எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பள்ளியில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர். அப்போது, பள்ளி என்பது எந்த சூழலில் அமைய வேண்டும்? குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா? குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்தியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி. “கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி’ என்று அவர் நம்பினார்.

அவருடைய பள்ளியில், பல விதமான கருவிகள் மற்றும் கைவேலைகள் மூலம், சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைந்து, குழந்தைகள் தாங்களாகவே பாடம் கற்றனர். இந்தியாவில், பிரிட்டன் நிர்வாகத்தால் துவக்கப்பட்ட, பிரதான கல்வி அமைப்பின் பொருத்தமற்ற முறையை, மகாத்மா காந்தி அடையாளம் கண்டார். 1937ல், அடிப்படை கல்வி தத்துவத்தை அவர் பரிந்துரைத்தார். கல்வி குறித்த அவரது அடிப்படை தத்துவம் என்னவெனில், செயல்முறையை அடிப்படையாக கொண்ட கல்வி; அந்த கல்வி உறுதியானதாக, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும்; தொடர்பில்லாமல், தனியாக இருக்க கூடாது; அந்த கல்வியும் தாய்மொழியிலேயே அமைய வேண்டும்; குழந்தையின் சமூக, கலாசார சூழலோடு ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டும் என்பது தான்.

காந்தியின் தத்துவமும், மான்டிசொரி கல்வி முறையும் ஒரே கொள்கையை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. 1939ல், தியாசாபிக்கல் சொசைட்டிக்கு, மாண்டிசொரி அழைக்கப்பட்டார். இரண்டாம் உலக போர் காரணமாக, அவர் இங்கு ஏழு ஆண்டுகள் தங்க நேர்ந்தது. அப்போது அவர், 16 பயிற்சி வகுப்புகள் நடத்தினார். மான்டிசொரி இயக்கத்தை இந்தியாவில் வேரூன்ற செய்தார். ஆந்திராவில், 1926, ரிஷி வேலி பள்ளி துவக்கப்பட்டது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி தத்துவத்தின் அடிப்படையில், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா (கே.எப்.ஐ.,) அமைப்பால் இந்த பள்ளி துவக்கப்பட்டது. தொழில்நுட்பத் திறனை அடிப்படையாக கொண்ட கல்வி முறையுடன் கூடிய மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே, இந்த தத்துவத்தின் அடிப்படை. போட்டிச்சூழல் அற்ற, மாணவர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்ளும் கூட்டுக் கற்றல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே, 1947ல் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே, மாண்டிசொரி, காந்தி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிந்துரைத்த, செயல்வழி கல்வி முறையை, இந்தியாவின் தென் மாநிலங்கள் பின்பற்றத் துவங்கி விட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது, டேவிட் ஹார்ஸ்பர்க் என்ற ஆங்கிலேயர், இந்தியாவில் ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். அவருக்கு பள்ளி கல்வி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ரிஷி வேலி பள்ளியில் சில ஆண்டு காலங்கள் தங்கினார். பின், ஆந்திராவிலேயே, 1972ல், நீல் பாக் என்ற பள்ளியை துவக்கினார். குழந்தைகள் தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பதற்கும், செயல்வழி கல்விக்கும், இந்த பள்ளி முக்கியத்துவம் கொடுத்தது. ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான முறையிலும், வித்தியாசமான நடையிலும் கல்வி பயில, இந்த பள்ளி அனுமதி அளித்தது. ஆசிரியர்களுக்கென, உறைவிட பயிற்சியும் நீல் பாக் பள்ளியில் அளிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போதுள்ள முன்னணி கல்வியாளர்கள் பலர், இப்பள்ளியில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். பழைய புத்தக படிப்பு முறையை விட, செயல்வழி கல்வி முறை தான், கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்தது என்பதை, நீல் பாக் பள்ளியின் அனுபவத்தின் மூலம் உணர முடிந்தது. பின், நீல் பாக் பள்ளியை, ரிஷி வேலி கிராம கல்வி மையம் எடுத்து நடத்த துவங்கியது. ஆந்திரா, மதனப் பள்ளியில் உள்ள கிராம பள்ளிகளுடன் இணைந்து செயல்படத் துவங்கியது. 1990 முதல் கிராமப்புற மாணவர்களுக்கும் பள்ளி கல்வி கிடைக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த கல்வி முறை, ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளிலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டில் இறுதியில், கர்நாடகாவிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த கல்வி முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அனைத்து பகுதிகளிலும் அல்லாமல், இங்கொன்றும், அங்கொன்றுமாகவே செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ இந்த நடைமுறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முன் வரவில்லை.

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்க வரலாறு: தமிழக்தில் முதன்முறையாக, பெரிய அளவில் துவக்கப்பட்டது வயது வந்தோர் கல்வி திட்டம் தான். 1970 – 80 ஆண்டுகளில் அறிவொளி இயக்கம் என்ற அமைப்பால், இது உருப்பெற்றது. எனவே, அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும், எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும், கற்பித்தல் முறையை கையாள்வது, இந்த திட்டத்தின் அவசியம் ஆனது. ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் கிராம திட்டங்களையும், அறிவொளி இயக்கம் செயல்படுத்தியது. தமிழகத்தில், 80 -90 ஆண்டுகளில் உருவான அடுத்த பெரிய கல்வி இயக்கம், மக்களின் அறிவியல் இயக்கம் தான். கேரள சாஸ்திரீய சஹஸ்த பரிஷத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அமைப்பு (டி.என்.எஸ்.எப்.,) ஆகியவை இணைந்து ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றின் மூலம் அறிவியல் கல்வியை போதித்தன. அறிவியல் கொள்கைகளை, செயல்வழி கல்வி மூலம் விளக்கும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இயக்கங்களுமே, தானாக முன்வந்து செயல்படும் வகையில் அமைந்தன; ஆசிரியர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து, தங்கள் திட்டங்களை செயல்படுத்தின. இந்த இயக்கங்களுக்கு, மாநிலத்தின் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவும் கிடைத்தது

கற்பித்தல் முறையில் மாற்றங்களும், கல்வி சீர்திருத்தமும் ஒருங்கிணைந்தது எப்படி? கற்பித்தல் முறையில் நடத்தப்பட்ட தனித்தனி பரிசோதனைகளால் தமிழகத்தில் கல்வி சூழலில் தேக்கம் ஏற்பட்டு, கல்வி இயக்கங்களும் பெருகிய நிலையில், பிரதான கல்வி சூழலில், குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், இந்த அடிப்படை மாற்றத்தை உருவாக்க, சிறந்த அறிஞர் தேவைப்பட்டார். அதற்கான சிறந்த உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் கிடைத்தது, தமிழகத்தின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். சமூக மாற்றத்துக்கு, சீர்மிகுந்த பள்ளி கல்வி அவசியம் என்பதை, அவர் அனுபவமாக உணர்ந்திருந்தார். முதல்வரின் தனிச் செயலர், மாவட்ட கலெக்டர் உட்பட பல பதவிகள் வகித்த அவர், பள்ளி கல்வியில் தனி ஈடுபாடு காட்டினார்.

கடந்த 90ல் வேலூரில் கலெக்டராக இருந்த போது, பள்ளி செல்ல வேண்டிய வயதை அடைந்த நிறைய குழந்தைகள், வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் பயில்வதை அறிந்தார். அவர்கள் அனைவரும், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்பதையும் அறிந்தார். இக்குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் ஈர்க்க, “யுனிசெப்’ ஆதரவுடன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஆதரவு திட்டம் (கிளாஸ்) ஒன்றை துவங்கினார். வேலூரை சேர்ந்த சண்முகம், பிச்சையா உட்பட சிறந்த ஆசிரியர்களையும் இத்திட்டத்தோடு இணைத்துக் கொண்டார். இவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாடு மாணவர் அமைப்பு மற்றும் அறிவொளி இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்களும் கூட; கற்பித்தலில் உள்ள பல முறைகளை அறிந்தவர்கள். “கிளாஸ்’ திட்டம் அரசு பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. ஆடல், பாடல் போன்ற செயல்வழிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதை நேரில் கண்ட அரசு பள்ளி மாணவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டனர். விளைவு, இவர்களுக்கான ஆசிரியர்களும், இது போன்ற கற்பித்தல் பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டிய சூழல் உருவாயிற்று.

இது தான், “மகிழ்ச்சியுடன் கற்கும் முறை’ தமிழகத்தில் உருவாக காரணம் ஆயிற்று. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. வகுப்பறையையோ, பாடத் திட்டத்தையோ மாற்ற முடியவில்லை. இதனால், இந்த முறைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. “கிளாஸ்’ திட்டத்தின் மூலம் பாடம் நடத்தியவர்கள், ரிஷி வேலி பள்ளிக்கும் சென்று, கற்பிக்கும் நடைமுறைகளை கற்று கொண்டனர். செயல்வழிக் கல்வி சூழலை உருவாக்கும் ஆசிரியர்கள், முதல் அக்கல்வி முறையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள், கற்பித்தல் அடிப்படையில் அமைந்தவையாகவும், இப்பயிற்சியை பெறுபவர்கள், செவிவழி அறிவை பெறுபவர்களாகவே மட்டும் இருந்தனர். தமிழக பள்ளி கல்வித் துறையின் கூடுதல் செயலராக இருந்த விஜயகுமார், இந்த முரண்பாட்டை நன்கு புரிந்து கொண்டார்.

சென்னையில் உள்ள ஆசிரியர் தொழிற்பயிற்சி நிறுவனமான “ஸ்கூல்ஸ்கேப்’ நிறுவனர் ஆமுக்தா மஹாபாத்ராவின் உதவியுடன், செயல்வழி மற்றும் பங்கெடுப்பு முறையிலான ஆசிரியர் பயிற்சி முறை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆமுக்தா மஹாபாத்ரா, முன்பு நீல் பாக் பள்ளியில், டேவிட் ஹார்ஸ்பர்கிடம் நேரடி பயிற்சி பெற்றவர். தொடர்ந்து, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக விஜயகுமார் பணியமர்த்தப்பட்டது, பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்தது. 300 பள்ளிகளில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்தார். ரிஷி வேலி பள்ளிக்கு சென்று, அங்குள்ள பயிற்சி முறைகளை கண்டறிந்து, அவற் றை தமிழகத்தில் செயல்படுத்த தீர்மானித்தார். மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையை கைவிட்டு, அடிப்படை மாற்றத்தையே செயல்வழித் திட்டம் போலச் செயல்படுத்தினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, 13 பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில், செயல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இப்போது இத்திட்டம், செயல்வழிக் கல்வி திட்டம் (ஆக்டிவிட்டி பேஸ்டு லேர்னிங்) என்றழைக்கப்படுகிறது. விஜயகுமாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பள்ளி ஆசிரியர்களும், ரிஷி வேலி பள்ளிக்கு சென்றனர். அங்கு நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையை பயின்று திரும்பினர். மிகுந்த போராட்டங்களுக்கிடையில், இக்கல்வி முறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினர்.

சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள மாந்தோப்பு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவர், இத்திட்டத்தில் திருப்தி அடையவில்லை. விஜயகுமாருடன் வாக்குவாதம் செய்தார். பள்ளியில் இத்திட்டத்தை அமல்படுத்தி, இத்திட்டம் ஏன் வெற்றிகரமாக செயல்படாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, தன்னிடம் தெரிவிக்குமாறு, விஜயகுமார் பணித்தார். இதை சவாலாக ஏற்ற அந்த ஆசிரியை, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர் எதிர்பாராத வகையில், இத்திட்டம் மாபெரும் வெற்றி கண்டது. உற்சாகம் அடைந்த விஜயகுமார், சென்னை கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செயல்வழிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த தயாரானார். இதற்கான உபகரணங்களை தயார் செய்ய, இந்த 13 பள்ளி ஆசிரியர்களும் பணிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்களின் திறமை மீது, விஜயகுமாருக்கு அபார நம்பிக்கை உண்டு. பள்ளி கல்வி அமைப்பின், மிக முக்கியமான அங்கம் ஆசிரியர்கள் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்த மறுமலர்ச்சியில், இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக விளங்க வேண்டுமென விரும்பினார். இவர்களை உற்சாகப்படுத்த, அரசு துறையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளையும் அழைத்து, இவர்களின் திறமையான செயல்பாடு குறித்து காட்டினார். இதனால் ஆசிரியர்கள் பெருமை அடைந்ததோடு, பள்ளி கல்வி மறுமலர்ச்சிக்கான சொந்தக்காரர்கள் என்ற கவுரவமும் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அனைத்திலும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. விஜயகுமாரின் திறமையா அல்லது விதியா என தெரியவில்லை; மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டமான, “சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்தின் தமிழக திட்ட இயக்குனராக விஜயகுமாரே பணியமர்த்தப்பட்டுள்ளார். செயல்வழிக் கல்வி திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்தக் கூடிய அனைத்து சாதனங்களும் தயார் செய்த விஜயகுமார், வேலூர் முதல் சென்னை உட்பட ஆசிரியர் குழுவையும் கைவசம் வைத்துள்ளார். கல்வியாளர்கள் ஆமுக்தா மஹாபாத்ரா, அனந்தலட்சுமி போன்றோருடன் பணி செய்யும் திறனையும் கொண்டிருக்கிறார். இதோடு, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் அமைப்பின் பள்ளியான, “தி ஸ்கூல்’ ஆசிரியர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறார். “சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்தின் துணை இயக்குனர்கள் லதா, கண்ணப்பன், இளங்கோவன் ஆகியோர், பள்ளி கல்வி மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள்; திறமையாக செயல்படக் கூடியவர்கள். ஆலோசனைக்கென, வேலூரிலிருந்து சண்முகம், பச்சையப்பன், சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியான மாலதி, ஆசிரியர் பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரி ரத்னவேல் ஆகியோரும் உள்ளனர்.

கற்பிக்கும் அனுபவம், கல்வி கோட்பாடு மற்றும் நிர்வாக அனுபவம் ஆகியவை இந்த அணியின் பலம். இந்த மறுமலர்ச்சி திட்டம் நல்ல முறையில் வெற்றி பெற, இவர்களின் அனுபவமும், முயற்சியும் இன்றியமையாதவை. புதிய முறையை அமல்படுத்த, மாடல் பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டன. பின், ஆரம்ப பள்ளி அனைத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. பயிற்சி பெற்ற 13 பள்ளி ஆசிரியர்களின் போன் எண்கள், மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் ஆதரவு இல்லையெனில், இத்திட்டம் நிறைவேறி இருக்காது. தமிழக கட்சிகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போதைய பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு பள்ளிக்கு சென்றார்; அங்கு மாணவர்கள் பயிலும் விதத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த ரவிகுமார் எம்.எல்.ஏ., இத்திட்டம் அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். குறுகிய காலத்தில், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளின் ஒத்துழைப்பினால், பள்ளிகளில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்க முடிந்தது. துவக்க நிலையில் உள்ள இத்திட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு குழப்பமாகவே தோன்றும். ஆழமாக பார்க்கும் போது, ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமையும், சக்தி வாய்ந்த, ஆரோக்கியமான திட்டம் இது என்பது விளங்கும். தொடர் மதிப்பீடுகளும், கண்காணிப்புகளும் இத்திட்டத்திற்கு இன்றியமையாதவை. அதிகார வர்க்கத்தின் மூலம், அரசு செயல்பாட்டிலேயே மாற்றம் கொண்டு வந்துள்ள, அபூர்வ திட்டம் இது. இத்தகைய மறுமலர்ச்சியின் வரலாற்று பின்னணியையும், திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டையும் பார்க்கும் போது, பள்ளி கல்வியில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்வதை விட, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதே பொருத்தம்!

Source & Thanks : dinamalar

Monday, 28 February 2011

தமிழ் கற்றல்

 

சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பள்ளித் தமிழாசிரியர்களுடன் உரையாட நேர்ந்தது அல்லது வாய்த்தது.அவர்களில் பலருக்கும் தமிழாசிரியர் என்றால் பள்ளிகளில் யாரும் மதிப்பதில்லை.அறிவியல் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் எங்களுக்கு இல்லை என்று மிக வருந்திப் பேசினார்கள்.மொழிப்பாடம் என்று வந்தாலும் ஆங்கில ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை.காலை வகுப்புக்கள் எல்லாம் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கே ஒதுக்குகிறார்கள்.தமிழ் வகுப்புக்கள் எல்லாம் மதிய நேரமே தருகிறார்கள்.கேட்டால் ’தமிழ்தானே’ என்கிறார்கள். என்று பலவிதமான மனக்குமுறல்களை அவர்கள் ’கொட்டினார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகமெங்கும் பஞ்சாயத்துக் கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் நியான் விளக்குகள் தமிழ் வாழ்க என்று மின்னிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் செம்மொழி மாநாட்டைப் பார்த்த அலுப்பே நமக்கு இன்னும் தீராத ஒரு பின்னணியில் இந்தத் தமிழாசிரியர்களின் உள்ளத்துக் குமுறல்களைக் கேட்க நேர்ந்தது.

நாம் பின்னோக்கிப் போனால் ஒரு காலத்தில் படிப்பென்றாலே அது தமிழ் இலக்கியம் படிப்பதுதான் என்று இருந்ததை அறிகிறோம்.உ.வே.சாவின் என் சரித்திரத்தில் அவர் கற்ற கதையை விரிவாகச் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆனாலும் நீண்ட்ந் நெடுங்காலமாகத் தமிழ் கற்றல் அல்லது கற்பித்தல் என்றாலே ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வாக்குண்டாம், நல்வழி,நன்னெறி போன்ற போதனா இலக்கியப்பாடங்களை நெட்டுருச்செய்யும் பணி என்றே இருந்துள்ளது.நவீன காலத்தில் இந்தியா நுழைந்தபின்னும் கூட தமிழ் கற்பித்தலில் அறிவியல்பூர்வமான மாற்றங்கள் நிகழவில்லை.

அதற்கு முக்கிய காரணம் நம் சூழல்தான். தமிழ் என்பது மொழியாக மட்டுமின்றி ஒரு அரசியல் அணிதிரட்டலுக்கான சாதனமாகவும் பயன்படுத்தப்பட்ட சூழல் இந்தக் கற்பித்தல் முறையையும் பாதித்துள்ளது. மொழி இனத்தோடும்,இன உணர்வு கொள்வதோடும் இணைக்கப்பட்டதில் மாற்றங்களை மறுத்துப மொழியின் புனிதம் / தூய்மை காக்கிற மனநிலையோடும் பிணைக்கப்பட்டது.நாங்கள் அறிவொளி இயக்கத்தில் முதல் பாடமாக ஆனா ஆவன்னா வைக்காமல் பட்டா,படி என்று வைத்தபோதும் தமிழ்சார் அறிவாளிகளிடத்திருந்து எதிர்ப்பு வந்தது.70களில் இலங்கையில் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்திய போது தமிழறிஞர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

திராவிட இயக்க அரசியலின் ஒரு பகுதியாக தமிழாசிரியர் என்பவர் இன உணர்வு மிக்கவராக /இன உணர்வை ஊட்டுகிற சமூகக்கடமையை ஆற்றுபவராக சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதராக முன்னிறுத்தப்பட்டார்.ஆகவே தமிழாசிரியர்கள் ஒரு காலகட்டம் வரை தமிழகத்தில் மதிப்புப் பெற்றவர்களாகவே இருந்தனர்என்பது உண்மை.மு.வ, நா.பார்த்தசாரதி போன்றோரின் பல நாவல்களில் கதாநாயகர்களாகத் தமிழ் படித்த இளைஞர்களும் தமிழாசிரியர்களும் நடமாடினார்கள்.

காலமாற்றத்தில் திராவிட இயக்கத்தாரின் கேமிரா தமிழாசிரியர்களை விட்டு விட்டு வேறு திசைகளை நோக்கிக் கவனம் குவிக்கப் போய்விட்ட பின்னணியில் தமிழாசான்கள் ‘கைவிடப்பட்டவர்கள்’ ஆனார்கள்.பட்டிமன்றங்களின் பேசுபொருளாக தமிழ்க் காவியங்களும் காப்பியங்களும் இருந்தவரைக்கும் அங்கேயும் தமிழாசிரியர்களின் கொடி பறந்த காலம் இருந்தது.மாமியாரா மருமகளா பழைய சினிமாவா புதிய சினிமாவா என்று பட்டிமண்டபத்துப் பாடு பொருள்களும் மாறிவிட்டபோது அவர்களுக்கு அங்கேயும் இடமில்லை.தெருக்களில் தமிழ் கேட்கக் கூட்டமுமில்லை என்றானது.எல்லாம் ஒருசேரத் தமிழகத்தில் நடந்து முடிந்த போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச மைய அரசின் கல்விக்கொள்கைகளில் மாற்றம் ஏற்பட தொழிற்கல்வி முக்கிய இடம் பிடிக்க மருத்துவம்,பொறியியல் நோக்கித் தமிழகமே தொங்கோட்டம் ஓடத் தமிழின் நிலையும் தமிழாசிரியர் நிலையும் கல்விப்புலத்துக்கு உள்ளேயும் சமூக வெளியிலும் படு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டன.ஆங்கிலத்திலும் கூட அமெரிக்கன் ஆங்கிலம்தான் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக தமிழாசிரியர்கள் பாவம் ,மரபு வழிப்பட்ட தமிழ் கற்பித்தல் மூலம் ஆசிரியர்களாகி, வேறு ஏதும் தெரியாத அப்பாவிகளாக பள்ளிகளில் உலவிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல்,கணிதம்,பொருளாதரம் கற்றோருக்குக் கொஞ்சமாவது தமிழும் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரிந்துதான் இருக்கிறது.ஆனால் தமிழாசிரியருக்கோ தமிழைத்தவிர வேறு எதுவுமே தெரியாது.தமிழிலும் நவீன இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது.70களுக்குப் பிறகுதான் நமது பல்கலைக்கழகங்கள் சிறுகதை,புதுக்கவிதை போன்றவற்றையும் இலக்கியம்தான் தமிழ்தான் என்று ஏற்றுப் பல்கலைப்படியேற அனுமதித்தன.

இன்று தமிழ் இலக்கிய உலகில் ஆண்மொழி,பெண் மொழி,உடல்மொழி,ஆதிக்கசாதி மொழி , ஒடுக்கப்பட்டோர் மொழி என்று என்னவெல்லாமோ வந்து விட்டது.அது எதுவுமே நமது தமிழாசிரியர்களுக்குத் தெரியாது.மொழியியலில் எத்தனை தூரம் சென்று விட்டார்கள்.நமக்குத் தெரிந்த நோம் சாம்ஸ்கியும் லெவிஸ்ட்ராசும் தமிழாசிரியர் யாருக்குமே தெரியாது. நாஞ்சில்நாடனைக்கூடத் தெரியாத தமிழாசிரியர்கள்தான் நம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள்.

சூழலும் சரியில்லை.தாமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நம் அன்புக்குரிய தமிழாசான்களுக்கு எவரேனும் புரியும் வகையில் எடுத்துரைத்து அவர்கள் கரை சேர வழி வகுக்க வேண்டும்.தமிழ்ப் பாடம் கற்பிப்போர் வெறும் மொழியை-அதன் கட்டமைப்பை மட்டும் கற்றுத்தருபவர்களாக அல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவராக பிள்ளைகளின் படைப்பாற்றலைத் தூண்டுபவராக வளர்த்தெடுப்பவராக சதா தன்னைத் தற்காலப்படுத்திக்கொள்பவராக சகல துறைசார் அறிவும் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியம்.வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்.மொழி ,பண்பாட்டின் விளைபொருளாகவும் பண்பாட்டை உருவாக்கும் முக்கியக் கூறாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் பண்பாட்டு அம்சங்களைத் தலைமுறை தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் சக்திமிக்க(காலத்தை ஊடறுத்துப்பாயும்) ஊடகமாகவும் திகழ்கிறது என்பதை தமிழர்களாகிய நாம் உணரவில்லை என்பதன் அடையாளமாகத்தான் இத்தனை பலவீனமான தமிழாசிரியர்களை நம் பிள்ளைகளுக்கு நாம் தந்திருக்கும் நிலை இருக்கிறது.

இது ரொம்ப ரொம்ப முக்கியமான ,கவலைக்குரிய ஒன்றாக எனக்குப்படுகிறது.
ச.தமிழ்ச்செல்வன்

Tuesday, 30 November 2010

ஒளி பிறந்திட............

அறிவொளி இயக்கம் என்ற பெயரில் தமிழகத்துக்கு எழுத்தறிவு இயக்கம் வந்தபோது நான் அதில் ஒரு தன்னார்வத் தொண்டனாக உடனே என்னை இணைத்துக்கொண்டதற்குக் காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.அப்போது நான் அஞ்சல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.திடீரென இந்தி ஒழிக.. தமிழ் வாழ்க.. என்கிற முழக்கத்தோடு ஒரு அறுபது பேர் சின்ன ஊர்வலமாக எங்கள் அலுவலகத்துக்கு முன்னால் வந்து சேர்ந்தார்கள். முழக்கம் தொடர்ந்து கொண்டிருக்க ஒருவர் கையில் தார்ச்சட்டியோடு மேலே ஏறினார்.பலகையில் இருந்த இந்தி எழுத்தைத் தார்பூசி அழிக்கத்தான் என்று புரிந்து கொண்டேன்.மேலே போனவர் அடுத்த நிமிடத்தில் கீழே இருப்பவர்களைப் பார்த்துக் கூவினார், “ ஏண்ணே இதுலே எதுண்ணே இந்தி எழுத்து?”..முதல் வரி..முதல் வரி.. என்று கீழிருந்து பதில் போனது.

நீண்ட நாட்களுக்கு இச்சம்பவம் என் மனதில் ஒருவிதக் குற்ற உணர்வைத் தந்து கொண்டிருந்தது. நம் சக தமிழனுக்குத் தமிழ் எழுத்து எது ஆங்கில எழுத்து எது இந்தி எழுத்து எது என்று பிரித்தறிகிற எழுத்தறிவு இன்னும் போய்ச்சேரவில்லையே.சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலம் ஆகி விட்டதே? தமிழனுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்கப்போவது யார்?இதில் என் பங்கு என்ன? என்கிற மன உளைச்சலுக்கு விடையாக மத்திய அரசு (மூன்றில் ஒரு பங்கு மாநில அரசு உதவி) அறிவொளி இயக்கத்தை அறிவித்தது.

ஏற்கனவே சில தலைமுறைகளாக எழுத்தறிவு பெற்றுவிட்ட நமக்கு அது ஒரு பெரிய விசயமாகத் தெரிவதில்லை-அது நம் வாழ்வின் இயல்பான அங்கமாக மாறிவிட்டபடியால்.ஆனால் முதல் முறையாக எழுத்துக்களோடு பரிச்சயமும் உறவும் கொண்ட கிராமத்து மக்கள்- குறிப்பாகப் பெண்கள் -அதை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே மகிழ்ச்சியில் மனம் விம்முகிறது.

செங்கோட்டைப் பக்கமுள்ள தவணை என்கிற கிராமத்திலிருந்து இசக்கியம்மாள் என்கிற பெண்மணி எங்களுக்கு எழுதிய (அவரது வாழ்வில் அதுதான் அவர் எழுதிய முதல் கடிதம்)கடிதத்தில் அவர் யாருடைய உதவியும் இல்லாமல் யாரிடமும் ‘இந்தப் பஸ் எங்கே போகுது ?’என்று கேட்காமல் தானே தவணையில் புறப்பட்டு செங்கோட்டை போய் அங்கிருந்து பஸ் பிடித்து மதுரைக்குப் போய் தன் மகளைப் பார்த்துவிட்டு மீண்டும் அவரே பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்த அனுபவத்தைத் தன் புதிய தமிழில்(நாங்கள் அதைக் கற்போர் தமிழ் என்போம்) எழுதியிருந்தார்.சின்னப் பிள்ளைக மாதிரி அப்படியே கீழே விழுந்து புரண்டு அழுகணும் போல சந்தோசமா இருக்கு என்று கடிதத்தை முடித்திருந்தார்.ஊத்துமலைக்கு அருகே ஒரு கிராமத்துக்கு நாங்கள் போனபோது வீட்டு வாசல்களில் அ..ஆ.. ப..பா.பட்டா..படி என்று எழுத்துக்களைக் கோலமாகப் போட்டிருந்தார்கள்.நம் பெண்களுக்குத்தான் இப்படியெல்லாம் ஒன்றைக் கொண்டாடத்தெரியும்.

உழைப்பாளி மக்களுக்கு எழுத்தறிவு நிச்சயமாக ஓர் ஆயுதம்தான்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தில் படித்த கல்லுடைக்கும் பெண்கள் , சங்கம் அமைத்துக் கல் குவாரி காண்ட்ராக்டை அவர்களே எடுத்துப் பண மூட்டைகளின் மிரட்டல்களையும் வழக்குகளையும் சந்தித்து வெற்றிகரமாகக் கல் உடைத்தார்கள். (கல்லை மட்டுமா உடைத்தார்கள்!)ஷீலா ராணி சுங்கத் ஐ.ஏ.எஸ் அவர்களின் உதவி பின்புலமாக இருந்தது என்றாலும் அப்பெண்கள் எழுந்து நிற்கக் காரணமாக அமைந்தது அவர்கள் பெற்ற எழுத்தறிவுதான்.

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் ( என்.டி.ஆர். ஆட்சியில்) அரசின் சாராயக்கடைகளை ஊர் ஊராகப் போய் உடைத்து நொறுக்கினார்களே.எழுத்தறிவின் கொண்டாட்டம்தான் அது.அரசே சாராயக்கடைகளை நடத்தியதால் அப்பெண்கள் அரசுப்பணியைத் தடுப்பதாகக் கூறிக் காவல்துறையை அவர்கள் மீது அரசு ஏவியதும் போலீஸ் ஜீப்புகளில் சாராயப்பானைகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்குக் கொண்டுபோனதும் நம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்துக்கள்.

வங்கிக் கணக்குகளில் கைநாட்டுக்குப் பதிலாகக் கையெழுத்துப்போட்ட மக்கள் அன்று அடைந்த மகிழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.எழுத்துப் பயிற்சிக்காக அம்மக்களைக் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் என்று சொன்னபோது ‘ ஒரே ஒரு கிரைண்டர் மட்டும் கிடைக்க அருள் செய்.நான் மாவாட்டிப் பிழைத்துக்கொள்வேன்’ என்றும் மாறாந்தை வரைக்கும் வரும் பஸ்ஸை எங்க ஊருக்கும் வர வைக்க மாட்டியா சாமி என்றும் எத்தனை எளிய கோரிக்கைகளை மக்கள் கடவுளிடம் வைத்தார்கள்! இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகக் கடவுள் இருக்கிறார்.ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாகக் கடவுள் இருக்கிறார் என்கிற மார்க்சின் வரிகளை நாங்கள் அக்கடிதங்களில் கண்டோம். அத்தகைய எளிய தேவைகளைக்கூட இச்சமூகம் அவர்களுக்குத் தந்திருக்கவில்லை என்கிற உண்மையும் கூடவே உறைத்தது.

இரண்டாண்டுகாலம் அறிவொளி இயக்கமாகவும் பின்னர் ஓராண்டுகாலம் தொடர்கல்வி இயக்கமாகவும் தமிழகத்தில் சமூகப்பங்கேற்புடன் எழுத்தறிவு இயக்கம் நடைபெற்றது.ஆனால் மனித இயல்பு என்னவெனில் ஐந்தாண்டுகாலம் தொடர்ந்து வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தால்தான் எழுத்தறிவு என்றும் மறக்காமல் மனசில் தங்கும்.இடையில் விட்டுவிட்டால் மீண்டும் கல்லாத நிலைக்கே(relapse) போய்விடுவோம்.நான் ராணுவத்தில் பணியாற்றியபோது இந்தி பேசவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டேன்.அங்கிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு எல்லாம் மறந்து போச்சு.இப்போது யாராவது பேசினால் புரியும் அவ்வளவுதான் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.தமிழகத்தில் அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவும் எண்ணறிவும் பெற்ற பல லட்சம் பேரின் நிலை இன்று இதுதான்.தொடர்கல்விக்குப் பிறகு வளர்கல்வி என்று ஒரு திட்டத்தை அரசு நடத்தி வருகிறது.ஆனால் அதெல்லாம் ஒரு மக்கள் இயக்கமாக இல்லாமல் அரசுத்திட்டங்களில் ஒன்றாக நடக்கிறது.ஆகவே பெரிய பலன் கிட்டவில்லை.

ஒரு கிராமம் என்றால் அந்த கிராமமே எழுத்தறிவைக் கொண்டாடிக் கற்கும் போதுதான் எல்லோருக்கும் ஆர்வமும் எழுத்தறிவு முக்கியம் என்கிற உணர்வும் வரும்.பல கிராமங்களில் அறிவொளிக்காலத்தில் நாங்கள் எதிர்கொண்ட ஒரு கேள்வி “ எங்க ஊர்லே படிச்சவுங்க எத்தனை பேர் இருக்காங்க.. அவங்க கையிலே புத்தகம் எடுத்து நாங்க பார்த்ததே இல்லை ..எங்களை மட்டும் தினமும்படி படி என்கிறீர்களே...”

வேறு எதையும் கொண்டாடுவதை விட எழுத்தறிவை மட்டும் எல்லோரும் கொண்டாடினால்தான் அந்த நாடு படித்த நாடாக மாற முடியும். அது அரசுத்திட்டமாக மட்டுமே இருக்கும் வரை ஒரு மண்ணும் நடக்காது.லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான விதையை 20-30 ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதிகளில் பாவ்லோ ப்ரையர் போன்ற மிகச்சிறந்த கல்வியாளர்களின் தலைமையில் நடந்த எழுத்தறிவு இயக்கமே ஊன்றியது.விமர்சன விழிப்புணர்வுக்கான எழுத்தறிவை அவர்கள் ஊட்டினார்கள்.இயற்கையின் படைப்பு மட்டுமல்ல மனிதன் -இயற்கையை மாற்றும் வல்லமை படைத்தவன் என்கிற உணர்வை ஊட்டுவதே கல்வி.

நம்முடைய கல்விமுறையானது தேர்வுகள் ,கட்டாயமான வீட்டுப்பாடங்கள் ,உயர்ந்த மதிப்பெண் பெற்றால் உயர்ந்த கல்வி , நிறைய காசு இருந்தால் நல்ல தரமான கல்வி என்று பலவிதமான கேடுகள்,குழப்பங்களால் பின்னப்பட்டுக் கிடக்கிறது.இந்திய தண்டனைச் சட்டத்தையும் இந்தியக் கல்விச்சட்டத்தையும் ஒரே நேரத்தில் ஒரே ஆள்தான் (மெக்காலே) எழுதினான் என்பதிலிருந்தே நமது கல்வி என்பது குழந்தைகளுக்குத் தண்டனையாக இருப்பதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.நமது கல்வி முறை கற்றவர்களையும் கற்பவர்களையும் கற்பிப்பவரையும் கல்லாதோரையும் ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ்த்தி வைத்துள்ளது.அந்த மௌனம் உடைபடும் விதமாக நாம் எழுத்தறிவை எப்போதும் வீடுகளிலும் ஊர்களிலும் குழந்தைகளோடும் மக்களோடும் விழாக்கோலமாகக் கொண்டாட வேண்டும்.வீடுகளில் கல்வி என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான போராட்டம் என்பதாக உணரப்படும் நிலையை மாற்றி அதைக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும்.கொண்டாட்ட மனநிலைதான் எழுத்தறிவுக்கேற்ற தட்பவெப்பமாகும்.
ச.தமிழ்ச்செல்வன்

Tuesday, 31 August 2010

செயல்வழி கல்வி திட்டத்தால் புது மெருகு பெறுகிறது தமிழகம்

“நாங்களே டீச்சர் ஆயிட்டோம்ல…!’ ஹிபானா (4ம் வகுப்பு): இந்த படிப்பு ரொம்ப பிடிச்சுருக்கு. ஒவ்வொரு படியாக ஏறி செல்வதில் உள்ள போட்டி பிடித்திருக்கிறது. டீச்சர் வரவில்லை என்றால் சிறு வகுப்பு குழந்தைகளுக்கும் டீச்சர் மாதிரி நாங்களே சொல்லித் தருகிறோம். இதனால் நாங்கள் படித்தது மறக்கவே மறக்காது.- இப்படிச் சொல்வது யார் தெரியுமா? கோவையில் செயல்வழி கல்வித் திட்டம் மூலம் பாடம் பயிலும் மாணவி தான்!அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறைகளின் சிறந்த தரம், துவக்க வகுப்புகளில் ஆங்கில பயிற்சிக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவம் காரணமாக, தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறும் ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்வழி கற்றல் (ஏ.பி.எல்.,) மற்றும் படைப்பாற்றல் (ஏ.எல்.எம்.,) கல்வி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களை மையமாக கொண்டிருப்பதே இக்கல்வி முறைகளின் சிறப்பு.
ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பது இங்கு நிகழ்வதில்லை. ஆசிரியர்களின் உதவியுடன் தாங்களாகவே மாணவர்கள் பாடங்களை கற்று கொள்ள முடிகிறது.வண்ணமயமான எழுத்து அட்டைகள், பொம்மலாட்டம், வில்லு பாட்டு ஆகியவற்றின் உதவியுடன், சமுதாய விழிப்புணர்வு பாடங்களை கற்று கொள்கின்றனர். விளையாட்டு போல் சிறு, சிறு குழுக்களாக பாடங்களை பகிர்ந்து கற்பதால் கற்றல் எளிதாகிறது.மெட்ரிக் பள்ளி சங்க கூட்டங்களில் பங்கேற்கும், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்புதிய கல்வி முறைகளின் சிறப்புக்கள் பற்றி, “சிலைடு ÷ஷா’ நடத்தி விளக்கி வருகின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட பல மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், ஏ.பி.எல்., கல்வி முறையை தங்கள் பள்ளிகளிலும் அமல்படுத்த அனுமதி கேட்டு வருகின்றனர்.இதன் விளைவாக கர்நாடக மாநில பள்ளிகளில் இக்கல்வி முறை “நல்லி ஹள்ளி’ எனும் பெயரில் அறிமுகமாகியுள்ளது. சத்திஸ்கர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. சீன நாட்டு கல்வியாளர்களும் சமீபத்தில் கோவை அரசு பள்ளிகளை பார்வையிட்டு பிரமித்து சென்றனர்.இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் தமிழக பள்ளிகளை பார்வையிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், புதிய கல்வி முறையை புகழ்ந்து தள்ளியதோடு, பிற மாநிலங்களிலும் பின்பற்ற பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கல்வி முறைகளின் சிறப்புக்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பொதுமக்கள், சமீபகாலமாக தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க துவங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குச்சிபாளையம், ராமநாதபுரம், தொட்டகாலம்புதூர், பெரிய குரும்பபாளையம், சூலூர் ஒன்றியத்தை சேர்ந்த எம்.கணபதிபாளையம், இலச்சிபாளையம், பல்லடம் ஒன்றியத்தை சேர்ந்த கள்ளம்பாளையம்புதூர், காரமடை ஒன்றியத்தை சேர்ந்த சின்னகல்லிபட்டி, நெல்லித்துறை, சுல்தான்பேட்டை எஸ்.அய்யம்பாளையம், வதம்பசேரி ஆகிய பல்வேறு ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 50 தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டியல் அளித்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் காளியப்பன் கூறியதாவது:தனியார் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அரசு பள்ளிக்கு வருவது உண்மை தான். நிறைய ஒன்றியங்களிலிருந்து இது குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் ரிப்போர்ட் செய்து வருகின்றனர். தங்கள் குழந்தைகள் “மம்மி, டாடீ’ என அழைப்பதை கேட்க விரும்பும் பெற்றோரில் பலர், ஆர்வமுடன் முதலில் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அதிக கல்வி கட்டணம், அதிக பாடங்கள் ஆகிய சுமைகளுடன் இரண்டாவது குழந்தையும் பிறந்தவுடன் சமாளிக்க முடிவதில்லை.தரமான கல்வியை இலவசமாக கற்று தரும் அரசு பள்ளிகளை தேடி ஓடி வருகின்றனர். திடீரென அரசு பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் சூழல் மாற்றம் காரணமாக, தமிழ்வழி கல்வியில் மாணவனால் மனதை செலுத்த முடியாது. படிப்படியாக அடுத்த வகுப்புகளிலும் படிப்பில் பின் தங்கி விடுகிறான்.இவ்வாறு அரைகுறையாக ஆங்கிலம் கற்று சிரமப்படுவதை விட, முதல் வகுப்பிலேயே அரசு பள்ளிகளில் சேர்ப்பது தான் புத்திசாலித்தனம். அரசு பள்ளிகளில் துவக்க வகுப்புகளிலேயே இப்போது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், ஆங்கில கல்வி பற்றி கவலை தேவையில்லை.பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி, “ஹலோ இங்கிலீஷ்’ ஆங்கில “டிவிடி’க்கள் மூலம் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளர்ப்பு, ஆங்கில “ரைம்ஸ்’ கற்பித்தல் என தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளை விட, இன்று அரசு ஆரம்ப பள்ளிகள் அதிக தரமுடன் உள்ளன.ஆங்கில கல்விக்கு வகுப்பறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் முதல் வகுப்பு மாணவர்கள் கூட, மே ஐ கமின் டீச்சர், ஹெள ஆர் யூ, ஐயாம் பைன், வேர் ஆர் யூ கோயிங்’ என்றெல்லாம் ஆங்கிலத்தில் அனாயாசமாக பேசுகின்றனர்.இவ்வாறு காளியப்பன் கூறினார்.
இவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை விளக்கும் வகையில் இதோ இந்தக் குழந்தைகள்:
வி.ஜானகி, மதுரை என்.எம்.ஆர்., சுப்பராமன் நினைவு பள்ளி ஆசிரியை:மாணவர்களுக்கு படிநிலைகளின் அடிப்படையில், அட்டைகள், படங்களை வைத்து, தரையில் அமர்ந்து கற்பதால் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவது, மிகுந்த பலன் தருகிறது. புத்தகங்களின் மூலம் கற்றபோது, விடுப்பில் செல்லும் மாணவர்களின் கற்றல் விடுபட்டு போனது; சில மாணவர்கள் ஒதுங்கியும் விடுவர்.ஆனால் இம்முறையில், விடுபட்ட இடத்தில் இருந்து படிப்பை தொடர முடிவதும், ஒவ்வொரு மாணவர் மீதும் ஆசிரியரின் கவனம் இருப்பதும் கற்றலில் அரிய வாய்ப்பாகும். இதனால் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் இடைவெளி ஏற்படாது.
மூர்த்திராஜன், ராஜபாளையம் ஜமீன் கொல்லங்கொண்டான் நாடார் துவக்கப் பள்ளி ஆசிரியர்: பழைய கல்வி முறையில் புத்தகச் சுமை அதிகமாக இருந்தது. ஆசிரியர் – மாணவரிடையே இடைவெளி இருந்தது. இப்போது, சிறுவர்களோடு சிறுவர்களாக அவர்களுடன் அமர்ந்து கற்றுக் கொடுப்பதால், எங்களது கற்பிக்கும் திறன் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்த முடிகிறது.
கடலூர் ஸ்ரீஜெயலட்சுமி கமிட்டி பள்ளித் தலைமை ஆசிரியை மல்லிகா:முன்பெல்லாம், ஒரு பாடத்தை நடத்தி விடுவதோடு சரி. மாணவன் படிக்கிறானா, இல்லையா என தனித் தனியாக பார்ப்பதில்லை. தற்போதைய செயல்வழி கற்றலில், 1வதுக்குரிய அட்டையை முடித்தால் தான், அடுத்த வகுப்பிற்கான அட்டைக்கு செல்ல முடியும்.மேலும், ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி கேள்வித் தாள் வழங்கப்படும். முதல் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிவப்பு நிறமும், 2வதுக்கு பச்சையும், 3வதுக்கு நீல நிறமும், 4ம் வகுப்பிற்கு மஞ்சள் நிறமும் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் ஏமாற்றுவதற்கு வழியில்லை. ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடன் மாணவர்கள் படிப்பதைப் பார்க்க முடிகிறது.
கடலூர், வேணுகோபாலபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் துரை:இந்தத் திட்டத்தில் அரசு கொடுக்கும் புத்தகத்திற்கும், அட்டைக்கும் ஒற்றுமையில்லாமல் உள்ளது. அதை அரசு மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லாத குறையும் உள்ளது. குறைபாடுகளை அகற்றினால் பிற்காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும்.
விழுப்புரம், நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் இளங்கோ:செயல்வழி கற்றல் முறை இதுவரை இருந்து வந்த மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டுள்ளது. மாணவர்களிடம் தேர்வு பயம் இல்லை, குழுவாக சேர்ந்து படிப்பதால் ஒற்றுமையை வளர்க்க உதவி செய்கிறது.எனினும், பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. மாணவர்களின் தரம் என்ன, வகுப்பில் எத்தனாவது மாணவனாக உள்ளான் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. குறைவான மாணவர்கள் இருக்கும் போது திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ஆசிரியர்கள் சரியாக கவனம் செலுத்த முடியாது.
புதுச்சேரி பீச்சவீரன்பேட்டிலுள்ள பி.ஆர்.அம்பேத்கர் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன்:ஏ.பி.எல்.,திட்டத்தின் பணியாற்றும் ஆசிரியர்களை அடிக்கடி பணிமாற்றம் செய்யாமல் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பணியாற்றும் ஆசிரியர்கள் முழு மனதுடன் பணியாற்ற வேண்டும்.இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு, அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் போதுமான அடிப்படை வசதிகளான, கழிப்பிட வசதி, குடிதண்ணீர் வசதிகளை செய்து தர வேண்டும்.
ஊட்டி மெயின் பஜார் நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேவன்: மாணவர்கள் தங்களுக்கான பாடங்களை அவர்களே தேர்வு செய்து, தாங்களே பாடங்களை பயில்கின்றனர். சுய தர மதிப்பீட்டை மாணவர்கள் செய்வதால், தாங்கள் எங்கே பின் தங்கியுள்ளோம் என்பது அவர்களுக்கு தெரிந்து, அந்த பாடத்தில் முன்னேற்றம் அடைய, ஆசிரியர் ஆலோசனை பெறப்படுகிறது. இதனால் கல்வி மட்டுமில்லாமல், பேச்சுத்திறன், வரையும் திறன் மற்றும் பிற திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது.நீலகிரியில் இந்த முறையில் ஒரு பின்னடைவு காலநிலை. செயல்முறை கல்வியில் மாணவர்களுடன் ஆசிரியர் தரையில் அமர்ந்து பாடம் நடத்த வேண்டும். இங்கே குளிரான காலநிலையால் மாணவர்கள் தரையில் அமர சிரமப்படுகின்றனர். மேலும் இந்த கல்வி முறை மூலம், 1ம் வகுப்பிலிருந்து 4ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்த வேண்டும். அதிகமான மாணவர்கள் இருந்தால் அனைத்து மாணவர்களிடமும் தனி கவனம் செலுத்த முடியாது.
வால்பாறை, உருளிக்கல் எஸ்டேட் எல்.டி., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா :கணித உபகரணங்களை கொண்டு பாடம் கற்பிப்பதால் எளிதில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
உடுமலை நெல்லுக்கடைவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலாவதி :செயல் வழிக்கற்றல் முறையினால், வகுப்பறைகளுக்கு வரும் மாணவர்கள் முதலில் ஆரோக்கிய சக்கரம், தன்சுத்தம் பேணுதல் அட்டையை பார்த்து தினசரி பின்பற்றும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின், அவர்களே வருகையை பதிவு செய்யும் வகையிலுள்ள சுய வருகை பதிவேட்டில், பள்ளிக்கு வந்ததை பதிவு செய்கின்றனர்.
சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணி:செயல்வழி கற்றல் பாடத்திட்டம் முழுமையாக செயல்படுத்தும் வகையில், வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என நியமித்தால், மேலும் சிறப்பாக பின்பற்ற முடியும்.
உமாதேவி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நல்லூர்:இந்த முறையினால், மாணவர்களின் கற்கும் திறன், முன் இருந்ததை விட 70 சதவீதம் அதிகரித்துள்ளது. நாளிதழ்களை கூட நான்காம் வகுப்பிலேயே வாசிக்கும் திறன் உருவாகுகிறது. சுதந்திரமாக செயல்பட முடிகிறது. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக இந்த முறையிலும் மாணவர்கள் பாடம் கற்கின்றனர்.
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பொண்ணு மற்றும் ஆசிரியை உலகாம்பாள்: ஒரு சிறந்த கல்வி முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பழைய கல்வி முறையில், மாணவர்கள் ஆசிரியர் அருகில் வரவே பயப்படுவர். இன்று தாங்களாகவே விரும்பி, சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர். ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க அவரது பெயரை சொல்லி கூட அழைக்கும் அளவுக்கு வகுப்பறை சுதந்திரத்தையும், தைரியத்தையும் இக்கல்வி முறை தந்துள்ளது.கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியை சுமதி: பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, வண்ணப் படங்கள், எழுத்துக்கள் அடங்கிய சிறு அட்டைகள் மூலம் இயல்பாக கற்பதால், மேலும் மேலும் கற்க மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். எதற்கும் பயன் இல்லாத மனப்பாட கல்வி முறை மாறி, புரிந்து படிக்கும் இக்கல்வி முறையால் தமிழக பள்ளிக் கல்வியின் தரம் உயரும்.உடுமலை அருகே சோமவாரபட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்தாண்டு, நாகதர்ஷினி மற்றும் கலைவாணி ஆகிய மாணவியர் சேர்ந்துள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்தவர்கள். குழந்தைகளிடம் கேட்ட போது, “முன்பு படித்த தனியார் பள்ளிக்கு செல்லும் போது, வீட்டு பாடம், டியூஷன் என கடுமையாக இருந்தது. பாடங்களும் அதிகளவு இருந்தன. ஆனால், தற்போது படித்து வரும் அரசு பள்ளியில் விளையாட்டு முறையில் எளிதாக படித்து வருகிறோம்’ என்றனர்.
தமிழ் பிரபாகரன் (5ம் வகுப்பு, கோவை மானியத் தோட்டம் அரசு மகளிர் நடுநிலைப்பள்ளி): “ஜாலி’யாக உட்கார்ந்து கலர் கலர் அட்டைகளை வைத்து படிப்பது பிடித்துள்ளது. முன் புத்தகம், வீட்டுப்பாடம் இருந்ததால் சிறிது கடினமாக இருந்தது.இப்போது ஸ்கூலுக்கு எப்போதுவருவோம் என்று இருக்கிறது.
தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் என்ன சொல்கின்றனர்?
கோவை, எஸ்.பி.ஓ.ஏ., பிரைமரி பள்ளி முதல்வர் மகாலஷ்மி: அரசுப் பள்ளியில் அமல்படுத்தப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் கல்வி முறை, மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. வண்ண படங்கள், எழுத்துக்களால் ஈர்க்கப்படும் குழந்தைகள் ஆர்வமுடன் கற்கின்றனர். எங்கள் பள்ளியில் அதே போன்ற வண்ண அட்டைகள் இல்லாவிட்டாலும், சமச்சீர் கல்வி முறையை செயல்வழியாக கற்றுத் தருகிறோம். குழந்தைகள் ஆர்வமுடன் கற்கின்றனர்.ஆசிரியை நாராயணி: செயல்வழிக் கல்வி முறையை குழந்தைகள் ஜாலியாக, “என்ஜாய்’ செய்கின்றனர். இதனால் புதிது, புதிதான ஐடியாக்களை தாங்களாகவே உருவாக்குகின்றனர். இது குழந்தைகளுக்கு பலமான அடித்தளம் அமைத்து தரும். ஆனால் அனைத்து பாடங்களுக்கும் இந்த கல்வி முறை ஒத்து வருமா என்பதை போக போகத் தான் பார்க்க வேண்டும்.
தனியார் பள்ளி “கெட்டப்’பில் படிப்பும், சீருடையும்! நாகதர்ஷினி மற்றும் கலைவாணியின் தாய் கூறுகையில், “தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயின்று வந்த நிலையில், அரசு பள்ளிகளிலும் அதே போல், சிறப்பு பாட முறைகளான செயல்வழிக் கற்றல், ஹலோ இங்கிலீஷ், வகுப்பறை சூழல், மாண்டிசோரி முறையில் கல்வி, விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி கற்பிக்கும் முறை, பள்ளி கட்டணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசு பள்ளியிலேயே சேர்க்கலாம் என முடிவு செய்து, இந்தாண்டு அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம்.”தனியார் பள்ளியில் முழுவதும் ஆங்கிலம் மட்டுமே பேசும் மொழியாக உள்ளதால், குழந்தைகள் தமிழ் பேசுவது மற்றும் படிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு பள்ளியில் சேர்த்து மூன்று மாதமான நிலையில், தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. தனியார் பள்ளிகளை போன்றே சீருடை உள்ளதால் குழந்தைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை’ என்று கூறினார்.

Friday, 30 July 2010

சமச்சீர் பாடப்புத்தகங்கள் –ஒரு பார்வை

ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது.வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது.சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும்கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை.மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது.மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக்கொண்டிருந்த்து ஆளும் வர்க்கம்.அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ’சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது.அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ’சாசன இயக்கம் ‘தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டங்களையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக்கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

“ நான் இந்தியாவின் எல்லாத்திசைகளிலும் பயணம் செய்து பார்த்துவிட்டேன்.எந்த ஒரு மூலையிலும் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ என்னால் பார்க்க முடியவில்லை.அப்படி ஒரு பொருளாதாரச்செழிப்பும் பண்பாட்டுச் செறிவும் வாழ்க்கை நியதிகளும் ஆன்மீக மதிப்பீடுகளும் ஒழுக்க நெறிகளும் மிக்கதான இத்தேசத்தை நம்மால் ஒருபோதும் அடிமைகொள்ள முடியாது. இம்மண்ணின் ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முதுகெலும்பை முறித்துப்போடாமல் இந்நாட்டை அடிமைப் படுத்த் முடியாது.ஆகவே நான் இந்நாட்டில் நிலவும் பழைய கல்விமுறை மற்றும் பண்பாட்டு அசைவுகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில் புதிய கல்வி முறையையும் அதனூடாகப் புதிய பண்பாட்டு விழுமியங்களையும் இம்மக்கள் மனங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.தங்கள் கல்வி தங்கள் மொழி இவற்றைவிட ஆங்கிலக்கல்வி,ஆங்கிலம் உயர்வானது என்று இம்மக்கள் ஒப்புக்கொள்ளும் படி இவர்கள் கற்பிக்கப்படவேண்டும்.அப்போதுதான் இவர்கள் தங்கள் சுய கௌரவத்தையும் சொந்தப் பண்பாட்டையும் இழந்து முழுமையான அடிமைகளாக ஆவார்கள் ”

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை நமது கல்விமுறையை வடிவமைத்து நம் தலையில் திணித்த மெக்காலேயின் 1835 பாராளுமன்ற உரையாகும்.மிக வெற்றிகரமாக மேற்சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இந்தியாவில் அமலாக்கப்பட்டது.நாம் அடிமைகளானோம்.1947 ஆம் ஆண்டு அரசியல் சுதந்திரம் நமக்குக் கிடைத்தபோதும் மெக்காலேயின் கல்வி வலைக்குள் 1860களில் விழுந்த நம் தேசம் இன்னும் பண்பாட்டு ரீதியாக அவ் வலையைக் கிழித்து வெளியேறவில்லை. அதன் அடையாளமாகத்தான் இன்றும் நிலவும் நம் கல்விமுறையும் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் திகழ்கின்றன.

இதில் மாற்றம் வேண்டும் என மாணவர் இயக்கங்களும் சனநாயக எண்ணம் கொண்ட கல்வியாளர்களும் காலம் காலமாக வலியுறுத்தியும் போராடியும் வந்ததன் விளைவாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியைக் கொண்டுவரச் சம்மதித்தது.ஆனாலும் இப்போது பாடப்புத்தகங்களை மட்டும் சமசீராக்குகிறோம் என்று சொல்லி இந்த ஆண்டு முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் மட்டும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது.இந்த ஆண்டு இப்புத்தகத்தயாரிப்பிலும் மேற்பார்வையிடும் பணியிலும் முற்போக்கான சிந்தனை கொண்ட பல்வேறு ஆளுமைகள் ஈடுபடுத்தப்பட்டது தமிழகப் பாடப்புத்தக வரலாற்றில் முதல் முயற்சியாகும்.அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு அழகான வடிவமைப்பில் குழந்தை மனநிலையைக் கணக்கில் கொண்டு புத்தகங்கள் வந்துள்ளன. ஆகவே இம்முயற்சியை நாம் முதலில் வரவேற்க வேண்டும்.இந்த முற்போக்கான ஆளுமைகள் சொன்னதெல்லாம் நடந்ததா என்று தெரியாது.எவ்வளவு தூரம் இவர்கள் சொன்னதற்கு மதிப்பு இருந்தது என்பதும் முழுமையாக நமக்குத் தெரியாவிட்டாலும் புத்தகங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்ட சூழலில் அவை பற்றிய கருத்துக்களை நாம் பதிவு செய்வது அவசியம்.

தமிழ்ப்பாடம் தவிர மற்ற எல்லாப்பாடங்களும் இதுவரை முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் அப்படியே அவை தமிழாக்கம் செய்யப்பபட்டு வந்ததாகவும் இந்த ஆண்டுதான் முதன் முறையாக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப்பாடங்களும் நேரடியாகத் தமிழில் எழுதப்படுகின்றன என்றும் அறிய நேர்ந்தபோது நாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மெக்காலே நம் மூளைகளில் எவ்வளவு அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறான் ! இந்த மாற்றம் வருவதற்கே –இந்தத் தன்னம்பிக்கையும் தமிழால் முடியும் என்கிற நம்பிக்கையும் வருவதற்கு- தமிழ் தமிழ் என்று முழங்கி வரும் திராவிடக் கட்சிகள் 43 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டு முடிக்க வேண்டி இருந்திருக்கிறது.அவர்தம் தமிழ் உணர்வு பாடத்திட்டத் தயாரிப்பில் இப்படியாகத்தான் இதுகாறும் பொங்கி வழிந்துள்ளது என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

ஆறாம் வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் கடவுள் வாழ்த்து என்பதற்கு பதிலாக வாழ்த்து என்று போட்டு இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம்.பேராசிரியர் சமாடசாமி அவர்களின் மேற்பார்வையில் இப்பாடப்புத்தகம் வந்துள்ளதன் அடையாளங்கள் புத்தகம் நெடுகிலும் கிடக்கின்றன.

இலக்கணத்தை அறிமுகம் செய்யும் முதல் பாடம் இவ்வாறு செல்கிறது :

“ இலக்கணம் எதற்கு?

நாம் பேசும் மொழியை,எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இலக்கணம்

தேவை.

இப்படி எழுது,அப்படி எழுது என்று கட்டளையிடுவதற்காக இல்லை.

அவன் வந்தாள் – என்று எழுதினால் யாருக்காவது புரியுமா?வந்தவர் ஆணா , பெண்ணா என்பது

எப்படித்தெரியும்?

நாம் பேசுவதும் எழுதுவதும் மற்றவர்க்கும் புரிய வேண்டும்: நமக்கும் புரிய

வேண்டும்.அதற்குத்தான் இலக்கணம் தேவைப்படுகிறது.”

இப்படி ஒரு மொழியில் குழந்தைகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்ட ஒரு பாடத்தைக்காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனாலும் துணைப்ப்பாடங்களில் நம்மூர் நாட்டுப்புறக்கதைகளை வைக்காமல் பழையபடி வெளிநாட்டுக் கதைகள்,அறுதப்பழைய அதே தெனாலிராமன் கதை என்று வைத்திருப்பது ‘ ம்கூம். இன்னும் திருந்தலே..’ என்கிற சலிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

​” தமிழ்ப் பாடநூ​லில் நாட்​டுக்கு உழைத்த தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு பாட​மாக வைக்​கப்​ப​டு​வ​துண்டு.​ ஒவ்​வொரு முறை​யும் பாடத்​திட்​டம் மாற்​றப்​ப​டும்​போது,​​ காந்​தி​ய​டி​கள்,​​ காம​ராஜ்,​​ தந்தை பெரி​யார்,​​ அறி​ஞர் அண்ணா,​​ எம்.ஜி.ஆர்.​ போன்​றோ​ருள் ஒரு​வ​ரது வாழ்க்கை வர​லாற்​றுச் செய்தி இப்​ப​கு​தி​யில் இடம்​பெற்​றி​ருக்​கும்.​ ஒரு​வ​ரைப் பற்​றிய பாடமே தொடர்ந்து பாடநூ​லில் இடம்​பெ​று​வ​தில்லை.​ ஆனால்,​​ பசும்​பொன் முத்​து​ராம​லிங்​கத் தேவர் வர​லாறு,​​ ஆறாம் வகுப்​பில் மட்​டுமே தொடர்ச்​சி​யாக மூன்​றா​வது முறை​யா​கப் பாட​மாக வைக்​கப்​பட்​டுள்​ளது.​ 1995,​ 2003-ம் ஆண்டு பாட​நூல்​க​ளைத் தொடர்ந்து இப்​போ​தும் ​(2010) இவ​ரைப் பற்​றிய பாடம் இடம்​பெற்​றுள்​ளது.​ இப்​போது வெளி​வந்​துள்ள பாட​நூல் ஆறு அல்​லது ஏழு ஆண்​டு​க​ளுக்கு நடை​மு​றை​யில் இருப்​பது உறுதி.​ அவ்​வா​றா​யின் இரு​ப​தாண்டு காலத்​தில்,​​ இடை​வெ​ளி​யின்​றித் தொடர்ந்து இரண்டு தலை​மு​றை​க​ளுக்கு ஒரே பாடப்​பொ​ரு​ளைக் கற்​றுக்​கொ​டுப்​பது ஏற்​பு​டை​ய​து​தானா?​ பாட​நூல் ஆசி​ரி​யர்​கள் இதை ஏன் கவ​னத்​தில் கொள்​ளாது புதிய சிக்​கலை உரு​வாக்​கி​யுள்​ள​னர் என்​ப​தும் தெரி​ய​வில்லை.​”



என்று தினமணியில் ஒரு கட்டுரையாளர் எழுப்பிய அதே கேள்வி நமக்கும் வருகிறது.அதுபோலவே நாட்டுப்புறத்தை நாட்டுப்புரம் என்று பாடத்தில் அச்சிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

வகுப்பறைத்திறன்கள் ,வாழ்க்கைத்திறன்கள், எது பண்பாடு என்கிற உரைநடைப்பாடம், நாட்டுப்புறப்பாடல்களை உரைநடைப்பாடத்தில் கொண்டு வந்தது எனப் பாராட்டத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.ஆர்.ராமானுஜம் வல்லுநராக இருந்து தயாரித்ததாலோ என்னவோ முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக் கணிதப் பாடப்புத்தகங்கள் அருமையாக வந்துள்ளன.முதல் வகுப்புத் தமிழில் எடுத்த எடுப்பில் அனா ஆவன்னா என்று பிள்ளைகள் கையை ஒடிக்காமல் விளையாட்டாகவே எழுத்துக்களையும் கற்றுக்கொளும் விதமாகப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆறுதலாக இருக்கிறது.

எல்லாப்பாடப்புத்தகங்களிலுமே பல பாடங்கள் குழந்தைகளுக்கான மொழியில் எழுதப்பட்டுள்ளது மிக மிக முக்கியமான முயற்சியாகும்.நம்து செம்மலரின் வடிவமைப்பு ஓவியர் மாரீஸ் பல பாடப் புத்தகங்களை அழகாக வடிவமைத்திருக்கிறார்.இளம் ஓவியர்கள் பலரையும் மணியம் செல்வம் போன்ற மூத்த ஓவியர்களையும் ஈடுபடுத்தியிருக்கிரார்கள்.வரவேற்கத்தக்க ஒன்று.

தனியார் பள்ளிநிர்வாகங்களுக்கு இப்பாடப்புத்தகங்கல் பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் பெருவாரியாக அரசுப்பளியில் பயிலும் லட்சோப லட்சமான குழந்தைகளுக்கு நியாயம் செய்ய தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரு முயற்சி நடந்துள்ளது . வரவேற்போம்.

அதே சமயம் முற்போக்கான சிந்தனையாளர்களை அவர்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவோ பி.எட். எம்.எட் என்கிற கல்வித்தகுதி இல்லாதவர்கள் என்பதற்காகவோ பயன்படுத்தாமல் விடுவது இன்னும் தொடர்கிறது.தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகள்,எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களையெல்லாம் அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு இணைத்துக்கொண்டு பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதே நாம் எதிர்பார்ப்பது.

மெக்காலே அழித்துச் சென்ற நமக்கேயான பண்பாட்டு விழுமியங்களை பாடப்புத்தகங்களின் வழி மீட்டெடுக்க வேண்டும்.அப்பணி இன்னும் தூரத்துக்கனவாகவே இருக்கிறது.

எனினும் இந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் அத்திசையை நோக்கித் திரும்ப முயற்சிக்கின்றன.
ச.தமிழ்ச்செல்வன்

Friday, 2 July 2010

செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம்: வே. வசந்திதேவி

நான் மட்டும் ஒரு கவிஞனாக இருந்தால், ஐந்து விரல்களின் அற்புதத்தைப் பற்றிக் கவிதை பாடுவேன்... கைகளின் வழி அறிவுக்குக் கல்வி புகட்ட வேண்டும். தங்கள் கைகளைப் பயிற்றுவிக்காதவர்களின் ... வாழ்வில் இசையில்லை. அவர்களது அனைத்துத் திறமைகளும் வளர்க்கப்படுவதில்லை. வெறும் புத்தக அறிவு குழந்தைக்கு ஆர்வமிக்கதாக இல்லை. வெறும் வார்த்தைகளால் மூளை களைப்படைந்து விடுகிறது; குழந்தையின் கவனம் சிதறத்தொடங்குகிறது ...
- மகாத்மா காந்தி, 1939

குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி, செயல்வழியிலேயே (activity based) நடைபெற வேண்டுமென்பது பல காலமாகக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பெரும்பாலான நாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படைக் கோட்பாடாகும். மான்டிஸோரி முறை போன்ற புகழ்பெற்ற போதனா முறைகள் இந்தக் கோட்பாட்டையே வலியுறுத்துகின்றன. மகாத்மா காந்தி இதற்கும் ஒரு படி மேலே போய், குழந்தைகள் செயல்வழி மட்டுமின்றி, உழைப்புவழிக் கற்க வேண்டுமென்றார். ஆனால் இந்திய அனுபவத்தில், தொலைநோக்குப் பார்வையுடைய சில கல்வியாளர்களின் கனவில் பிறந்த சிறிய மாற்றுப் பள்ளிகளிலேயே செயல்வழிக் கற்றல் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.


இந்திய வகுப்பறைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை; போதனா முறைகள் குழந்தைகளை மையமாகக் கொண்டவையல்ல. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் ஏழ்மையில் மூழ்கிய குடும்பத்துக் குழந்தைகள் என்பதால் அவர்களது தனிப்பட்ட தேவைகளையும் அவர்களது மொழி, சமூகப் பொருளாதாரப் பின்னணியை மனத்தில் கொண்டும் உருவாக்கப்பட்ட போதனா முறைகள் தேவை. வகுப்பறைகள் இறுகிப்போன அதிகாரக் கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. ஆசிரியர் அதிகார பீடத்தில் அமர்ந்து பிரம்பைச் சுழற்றும் சர்வாதிகாரியாகவும் மாணவர் கைகட்டி வாய் புதைக்கும் அடிமைகளாகவும் தோற்றமளிக்கின்றனர். மாணவர் என்ற காலிப் பாத்திரத்தில் விவரங்களைக் கொட்டுவதே ஆசிரியரது பணி. இந்த அவல நிலை காரணமாக ஆர்.கே. நாராயணன் நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல் புரியாமை என்ற கொடுமை இந்தியக் கல்வி அமைப்பின் சாபக்கேடாக நிலைபெற்றுள்ளது.

அனைத்துக் குழந்தைகளும் திறம்படக் கற்க வேண்டுமென்றால் இரு தளங்களில் உடனடியான ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். போதனா முறை குழந்தையை மையமாகக்கொண்டதாக, குழந்தை ஆர்வத்துடன் கற்று, சுயசிந்தனையும் படைப்பாற்றலும் மிக்க வளர்ச்சிபெற உகந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அனைத்துக் குழந்தைகளும் கற்றல் திறன்களை அடைய வேண்டும். அதாவது, போதனா முறை (teaching process), திறனடைதல் (learning outcome) இரண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்தியாவில் குழந்தைகள் கற்றல் திறன்களை அடைவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ASER (Annual Status of Education Report) என்ற தேசிய அளவிலான ஆய்வு, பள்ளிச் சிறார்களின் தாழ்ந்த கற்றல் திறமைகள் குறித்த அதிர்ச்சி அளிக்கும் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைகளின்படி நாடு முழுவதும் உள்ள ஐந்தாம் வகுப்பு மாணவரில் 59 சதவீதத்தினர்தாம் இரண்டாம் வகுப்பிற்குரிய பாடத்தைத் தங்கள் தாய்மொழியில் வாசிக்கும் திறமை பெற்றவர்கள். தமிழ்நாட்டில் 35 சதவீத மாணவர்தாம் இத்திறமை பெற்றவர்கள். கணிதத்தில் தேசிய அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவரில் 42 சதவீதத்தினர் மட்டுமே எளிய கழித்தல் கணக்குச் செய்ய இயன்றவர்கள்; தமிழ்நாட்டில் 18 சதவீத மாணவரே இந்தத் திறமை பெற்றவர்கள். கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று கொண்டாடிக்கொண்ட பெருமை காற்றில் பறந்து விட்டது. தமிழ்நாடு தேசிய சராசரியைவிடவும் தாழ்ந்துகிடக்கிறது.

வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய இத்தகைய நிலை மாறக் கல்வியில் உடனடித் தேவைப்படும் மாற்றங்களில் ஒன்றுதான் செயல்வழிக் கற்றல். இதனை ஒரு மாநிலத்தின் பெரும்பாலான குழந்தைகள் கற்கும் அரசு-பொதுப் பள்ளிகளில் நடைமுறைபடுத்தும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் 'நல்லி கல்லி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் விரைவில் கைவிடப்பட்டது. இன்று தமிழ்நாட்டின் அனைத்து அரசு-பஞ்சாயத்து, உதவி பெறும் பள்ளிகளில் செயலில் உள்ளது. ஆங்காங்கே சிறிய அளவில் மட்டும் நடந்துகொண்டிருந்த ஒரு சிறந்த கற்றல் முறையை 70 லட்சம் குழந்தைகள் பயனடையும் வண்ணம் பிரம்மிக்கத்தக்க விரிவாக்கம் செய்திருக்கும் தமிழக அரசும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் (சர்வ சிக்ஷா அபியான்) பாராட்டுதலுக்கு உரியவை.

செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகரப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனக் கொண்டு செல்லப்பட்டு, 2007-2008ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து அரசு-உதவி பெறும் பள்ளிகளுக்கும் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவில் புகழ்பெற்ற ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளியினால் நடத்தப்பெறும் கிராமப்புறப் பள்ளிகள் தமிழகத்திற்கு மாதிரியாகக் கொள்ளப்பட்டன.

இம்முறை சில வகுப்பறை உத்திகள், உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புவரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அடைய வேண்டிய திறன்கள் ஒரு ஏணி வடிவில் அமைக்கப்பட்டு, அதில் பல மைல்கற்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஏணியின் ஒவ்வொரு படிக்கும் உரிய பல செயல்முறைகளும் அவற்றிற்கான குறியீடுகளும் (logos) வகுக்கப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்ட குழந்தை ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்கிறது. வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்புவரையிலான குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள்; பல குழுக்களாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து, ஆசிரியரின் துணையுடனோ சக மாணவர் துணையுடனோ தாமாகவோ கற்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்குச் சமமாகத் தரையில் அமர்ந்து கற்பிக்கிறார். பாடப் புத்தகத்திற்குப் பதிலாகப் படங்களும் சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.


செயல்வழிக் கற்றல் வகுப்பறைச் சூழலில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது. அடக்குமுறையின் வடிவமாக இருந்த வகுப்பறை மறைந்துவிட்டது. இத்தனை நாட்களாகக் குழந்தைகளின் மென்மையான தோள்களின் மீது சுமத்தப்பட்டிருந்த அச்சத்தின் சுமை அகன்றிருக்கிறது. பிரம்பும்கூடக் காணாமல் போய் விட்டது. சலனமற்ற சவத்தன்மை கொண்ட வகுப்பறை, குழந்தைகளின் ஆர்வக் குரல் ஒலிக்கும் உயிரோட்டம் கொண்டதாக மாறியிருக்கிறது. ஆசிரியரின் சர்வாதி காரமும் சட்டாம்பிள்ளைத் தனமும் மறைந்து விட்டன.

கற்றல் என்பது அச்சுறுத்தல், மூச்சுத் திணறவைத்தல், மனப்பாடம் செய்து கொட்டுதல், ஆசிரியரின் பிரம்படிக்கு அடிபணிதல் என்ற புரிதல் மாறி, கற்றல் என்பது குழந்தைகள் பங்கேற்கும் குழந்தைகளை மதிக்கும் இனிய அனுபவம் என்ற புதிய பொருள் பெற்றுள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்புக்கு மாறாக, நாள் முழுவதும் ஒரு இடத்தில் கட்டிப்போட்டுக் கிடக்கும் நிலை மாறி, சுதந்திரமாக வகுப்பறை முழுதும் நடமாடுகின்றனர். குழந்தைகள் நேசிக்கும் இடமாக வகுப்பறை மாறியிருக்கிறது. கற்றல் அட்டைகள் நிரம்பிய பெட்டிகள், கூரையிலிருந்தும் சுவர்களிலிருந்தும் தொங்கும் குழந்தைகள் வரைந்த படங்கள் என வகுப்பறை வண்ணமயமாக விளங்குகிறது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருந்த தடுப்புச் சுவர் உடைந்திருக்கிறது. ஆதிக்க பீடமான நாற்காலியிலிருந்து ஆசிரியர்கள் இறங்கிவந்து, தரையில் குழந்தைகளுடன் அமர்ந்திருப்பதே ஒரு ஜனநாயகச் சூழலை உருவாக்கியுள்ளது. காலங்காலமாக வகுப்பறை கட்டிக்காத்துவந்த ஆண்டான்-அடிமை உறவை அடித்து நொறுக்கிவிட்டது. இதுவரை மாணவருக்கு மறுக்கப்பட்ட கரும்பலகை அவர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சிறிய கரும்பலகை மழலை எழுத்துகளால் நிரம்பிவழிகிறது.

ஒவ்வொரு குழந்தைக்குமான வெளியும் தன் வேகத்தில் முன்னேறுவதற்குமான சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை கற்றல் ஏணிப்படியில் குறிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிப்பது, தன்னுடைய வேகத்தில் ஏணியில் மேலே ஏறுவது, மைல்கற்களைத் தாண்டிச்செல்வது, ஒவ்வொரு கட்டத்திலும் தான் கற்றுக்கொண்டதை மதிப்பிடுவது எனத் தன்னிலை விளக்கம் பெறுவதும் அதனை ஆசிரியரும் சக மாணவரும் சகஜமாக ஏற்றுக்கொள்வதும் வியப்பிற்குரிய மாற்றங்களாகும். மேற்கண்ட மாற்றங்களின் விளைவாகக் குழந்தை தன் சக்தியை உணர்கிறாள். உயிர்த்துடிப்புள்ள, மகிழ்ச்சியான இடமாக வகுப்பறை உருவெடுத்துள்ளது.

செயல்வழிக் கற்றல் பற்றி ஆய்வு மேற்கொண்ட எங்கள் குழு தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கு இம்முறை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுகிறது. பழைய முறைக்கு மாறிப்போய்விடா வண்ணம் இது கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அரசின் நிதி நிலை, அரசியல் நிர்ப்பந்தங்கள், அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றிற்குச் செயல்வழிக் கற்றல் பலியாகிவிடக் கூடாது. எங்கள் வலிமையான முதல் பரிந்துரை செயல்வழிக் கற்றல் தொடர வேண்டும்; வலிமைப்படுத்தப்பட வேண்டும்; பழமைக்குச் சரிந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். செயல்வழிக் கற்றல் மேலும் உயிரோட்டம் உள்ளதாகவும் குழந்தைகளுக்குக் கூடுதல் பயனுள்ளதாகவும் சிக்கல் குறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும். இதனை மனத்தில் கொண்டு அறிக்கை பல பரிந்துரைகளை அளித்துள்ளது. மிகவும் முக்கியமானவை மட்டும் இங்கு அளிக்கப்படுகின்றன.

பிரச்சினைகளும் பரிந்துரைகளும்


செயல்வழிக் கற்றல் மாற்றுப் பள்ளிகளில் சிறிய அளவில், சிறு எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு, தீவிரக் கண்காணிப்புடன், அதன் தத்துவார்த்த அடிப் படைகளைப் புரிந்து உள்வாங்கிய, அர்ப்பணங்கொண்ட, பல கட்டப் பயிற்சிபெற்ற ஆசிரியராலேயே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு மாநிலம் முழுதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு, குறுகிய காலத்திற்குள் விரிவுபடுத்துவது பெரும் சவாலுக்குரியது. சர்வ சிக்ஷா அபியானின் தலைமை கண்ட கனவு, மாநிலத்தில் பரந்து கிடக்கும் லட்சக்கணக்கான மாணவர்களைச் சென்றடைவதற்குள் ஏற்படும் சிதைவுகளும் திரிபுகளும் இழப்புகளும் ஏராளம்.

அத்துடன், மாநிலத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்கனெவே இருக்கும் பெரும் பிரச்சினைகளைத் தொடாமல் இந்தப் புரட்சிகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது பிரச்சினையின் ஆழத்தை அதிகரித்துள்ளது.

இத்தகைய முன்கூட்டிய பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஆசிரியர் பற்றாக்குறை. இன்று செயல் வழிக் கற்றல் வேண்டாமென எதிர்க்கும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டும் முதல் காரணம் இதுதான். இன்று தமிழக ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகள்ளே. ஐந்து வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள்; பல நாட்கள் பல காரணங்களால் பெரும்பாலும் ஓராசிரியரே அனைத்து வகுப்புகளையும் நடத்துவார். கட்டணம் வசூலிக்கும் எந்தப் பள்ளியாவது ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியரின்றி நடைபெற இயலுமா? கதியற்ற ஏழைக் குழந்தைகளுக்குத்தான் இந்நிலை. செயல்வழிக் கற்றல் பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகிறது. பல வகுப்பு மாணவர் ஒன்றாகக் கற்கும் Multigrade System ஆனதால், ஒரு ஆசிரியரே போதுமானது என்பது பொய்யான வாதம்; அரசு தன் பொறுப்பை உதறும் கண்டனத்திற்குரிய போக்கு. செயல்வழிக் கல்வியில் ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அவளது பலம்-பலவீனங்கள் குறித்தும் சரியான கணிப்பு தேவை. ஆகவே இத்திட்டத்திற்குத் தேவைப்படுவது முன்னைவிட அதிக ஆசிரியரேயன்றிக் குறைவாக அல்ல. செயல்வழிக் கற்றல் கல்வி நடைபெறும் ரிஷி பள்ளத்தாக்கு முதலான பள்ளிகள் எதிலுமே 30 மாணவருக்கு ஓராசிரியர் என்ற விகிதம் மீறப்படுவதில்லை. ஆகவே எங்கள் குழுவின் மிக அழுத்தமான பரிந்துரை இத்திட்டத்தின் முதல் தேவை வகுப்பிற்கு ஓராசிரியர், ஓர் ஆசிரியருக்கு 30 மாணவருக்கு மிகைப்படாத விகிதம்; பள்ளி நாட்கள் அனைத்திலும் ஆசிரியர் வகுப்பில்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கண்காணிப்பு. கல்வி மறுக்கப்பட்ட குடும்பக் குழந்தைகளுக்கு இது ஆதாரத் தேவை என்பதையும் இன்று அமெரிக்காவில் கறுப்பு-லத்தீன் இனக் குழந்தைகள் கற்கும் பள்ளிகளில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற கோரிக்கை எழுந்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.

அடுத்து, இத்திட்டம் குழந்தைகள் நான்காம் வகுப்பு முடிக்கும்போது குறிக்கப்பட்ட திறமைகளைப் பெறுவர் என்ற உத்திரவாதம் ஏதும் அளிக்கவில்லை. இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்திலேயே கற்க முடியும் என்றாலும், ஒரு ஆண்டிலோ அல்லது நான்கு ஆண்டுகள் முடியும்போதோ குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை அனைத்துக் குழந்தைகளும் அடையச்செய்ய வேண்டும். மூன்றாம், நான்காம் வகுப்புகளிலுள்ள குழந்தைகள் சுயமாகக் கற்கும் திறமைகளை அடைந்துவிட வேண்டுமென்று திட்டம் எதிர்பார்க்கிறது. நாங்கள் ஆய்வுசெய்த சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இம்முறை நான்காண்டுகளாக நடைபெறுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளின் திறமைகளைத் தேர்வுசெய்தோம். அதிர்ச்சியே காத்திருந்தது. மூன்று அல்லது நான்காம் வகுப்பு மாணவர்களில் பாதிக்குக் குறைவாகத்தான் ஒரு எளிய கதை வாசிக்கும் திறமை பெற்றவர்களே; 25 சதவீத மாணவர் வார்த்தைகள் வாசிப்பதைத் தாண்டி, அடுத்த படிக்கு முன்னேறவில்லை. கணிதத்திலும் இதே நிலைதான். தாழ்வுற்ற இந்தத் திறமை நிலைக்குச் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று சொல்லவில்லை. நிலைமை குறித்த baseline study, மாற்றத்திற்கு முந்தைய நிலை குறித்த ஆய்வு ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் செயல்வழிக் கற்றல், கற்றல் திறமை அடைவுகளில் முன்னேற்றம் எதையும் உண்டாக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலை நீடிக்குமென்றால் சமுதாயத்தின் பெரும்பாலாரான பொதுப் பள்ளி மாணவருக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தின் பள்ளிக்கல்வி பெருமளவு தனியார்மயமாக்கப்பட்டதின் விளைவாக அரசுப் பள்ளிகள் பெரும் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.

இதை ஒட்டி எழுந்திருக்கும் ஒரு விமர்சனத்தை இங்கே குறிப்பிட வேண்டும். செயல்வழிக் கற்றல் கல்வி அரசு-உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே ஏன் நடைபெறுகிறது? மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? வசதிபடைத்த குழந்தைகள் ஏன் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்? பெரும் பயனளிக்கும் சிறந்த திட்டமென்றால் அப்பள்ளிகள் இதனை அரசுப் பள்ளிகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருப்பார்களே! இலவசப் பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் என்பது ஏற்கெனவே இருவகைப் பள்ளிகளுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகரிக்குமோ? வசதியற்ற குழந்தைகள் போட்டிக் களத்தில் முன்னைவிட வலுவிழந்தவர்களாக ஓரங்கட்டி ஒதுக்கப்படும் நிலை ஏற்படுமோ! நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் மூர்க்கமடையச் செய்யுமோ? பல ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரிக்கைவைத்துள்ளனர். அதிலும், சமச்சீர் கல்வி குறித்துப் பேசிவரும் தமிழக அரசு முதல் கட்டமாகத் திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கட்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் மெதுவாகக் கற்கும் குழந்தைகள், ஒரு கட்டத்தில் தேக்கமடைந்திருப்போர் கணிசமான எண்ணிக்கையிலுள்ளனர். இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் வீடுகளில் உதவிபெற இயலாதவரானதால், மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கும் பின்தங்கிய குழந்தைகளுக்கும் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்கள் தேங்கிவிடும் குழந்தைகளுக்கும் திருத்தச் செயல்பாடுகள் (Remedial Programme), கூடுதலாகச் சில வேறுபட்ட பயிற்சிகள் மூலம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான எந்த ஏற்பாடும் இப்பொழுது செய்யப்படவில்லை. திட்டத்தின் மிகப் பெரும் பலவீனம் இது. செயல்வழிக் கற்றல் திட்டத்தினுள்ளேயே திருத்தச் செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது சரியல்ல.

கவலைக்குரிய மற்றொரு அம்சம் ஆசிரியரின் சுதந்திரம் தன் வகுப்பறையை வடிவமைத்துக்கொள்ளும் உரிமை, புதிய போதனா முறைகளை மாணவருக்கு ஏற்றவண்ணம் உருவாக்கும் பெருமை இவற்றிற்கெல்லாம் இத்திட்டத்தில் இடமிருப்பதாகத் தெரியவில்லை. இக்குறைகளுக்கெல்லாம் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று சொல்ல இயலாது. இந்தியக் கல்வியின் இரு பெரும் சீர்கேடுகள், சர்வநாசினிகள் வணிகமயமான தனியார் கல்வியும், அதிகாரமய மாக்கப்பட்ட பொதுக் கல்வியும்தான் இரண்டாவதின் காரணமாக ஆசிரியர் ஒரு அதிகார அமைப்பின் கடைநிலை ஊழியராக மாற்றப்பட்டிருக்கிறார். தனது வகுப்பறையைத் தனக்கே உரிய பெருமைமிகு படைப்புக்களமாக ஆசிரியர் கருத வேண்டும்; அதற்குரிய சுதந்திரம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தச் சுதந்திரத்தின் மறுபக்கம் ஆசிரியரின் கடப்பாடும், தன் மாணவருக்கான பொறுப்புணர்வும். ஆசிரியருக்கு இத்தகைய மதிப்பும் மரியாதையும் மறுக்கப்பட்டதன் விளைவு சமுதாயத்திலும் ஆசிரியருக்கு இருந்த ஏற்றம் இன்று மறைந்துவிட்டது. ஆசிரியருக்குத் தன் மாணவரின் பெற்றோருடனும் அவர் வழியே சுற்றிலுமுள்ள சமுதாயத்துடனும் இருக்க வேண்டிய உயிர் பந்தங்கள் அறுபட்டன; அல்லது உருவாகவே இல்லை.

செயல்வழிக் கற்றல் இந்த வேதனைமிகு போக்கினை இன்னும் தீவிரப்படுத்தி, அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக ஆசிரியரை மாற்றியிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் செயல்வழிக் கற்றல் ஒரு நுணுக்க நிர்வாக அமைப்பு (micro-managed system). இத்திட்டத்தின் ஒவ்வொரு ஏணியின் ஒவ்வொரு மைல்கல்லும் ஒவ்வொரு மைல்கல்லின் ஒவ்வொரு படியும் ஒவ்வொரு படியின் ஒவ்வொரு செயல்பாடும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இறுக்கமாக வரையறுக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. கற்பித்தலின் ஜீவனையே இது கொன்றுவிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கண்காணிப்பு அமைப்பின் ஒவ்வொரு மட்டத்து அதிகாரியும் குறிப்பிட்ட செயல்பாடுகள் முடிக்கப்பட வேண்டுமென்பதையே இலக்காக வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.

இத்தகு அதிகார அமைப்பின் காரணமாக ஆசிரியர் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் குறித்துப் பேசவே அஞ்சுகிறார்கள். நாங்கள் சென்ற பள்ளிகளில் எந்தப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கும் ஆசிரியர் அஞ்சியதை நன்கு உணர முடிந்தது. பள்ளியில் பல மணி நேரம் செலவழித்த பின், மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டு, விமர்சித்த ஆசிரியர் பெயரோ பள்ளியின் பெயரோ வெளியில் சொல்லப்படாது என்ற உத்திரவாதத்தைப் பலமுறை அளித்த பிறகே வாய் திறந்து குறைகூறத் தொடங்கினர். வேறு பணிக்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல ஆசிரியரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது, எடுத்துக் கொண்ட பொருளையே விட்டுவிட்டு, இரண்டு மணி நேரம் செயல்வழிக் கற்றல் குறித்த ஆதங்கங்களை ஆசிரியர் கொட்டுவதைக் கேட்க நேர்ந்தது. உங்களது கவலைகளையும் ஆலோசனைகளையும் தலைமை அதிகாரிகளுக்குத் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்குக் கிடைத்த பதில்: "கூட்டங்களில் எங்களை வாய் திறக்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. செயல்வழிக் கற்றல் குறித்துப் புகழ வேண்டுமென்றால் பேசுங்கள்; இல்லா விட்டால் சும்மா இருங்கள்" என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறினர். இத்தகைய ஆதங்கங்களைக் கடந்த சில மாதங்களில் பலமுறை கேட்டிருக்கிறோம். இந்நிலைக்கு ஆசிரியரும் கல்வியும் தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்து விமர்சிக்கத் தேவையில்லையென்று நினைக்கிறேன்.

திட்டத்தின் வடிவமைப்பில் பல குறைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிரியருடன் கலந்து ஆலோசித்துத் திருத்திக்கொள்ளக்கூடிய குறைகள்தாம். அவற்றில் ஒரு சில:

செயல்வழிக் கற்றல் ஏணி என்பது இம்முறையின் மிக முக்கிய வடிவமைப்பு. சொல்லப்போனால் ஏணிப்படியின் சர்வாதிகாரம் இன்று வகுப்பறைகளில் கோலோச்சுகிறது. ஆனால் ஏணி-திறன் சமன்பாடு தெளிவாகப் புலப்படவில்லை. ஏணியின் எந்தப் படியை முடித்தால் குழந்தை எந்தத் திறமை அடையும் என்று சொல்ல இயலவில்லை. ஏணியின் ஒரு கட்டம் குழந்தை கற்றுக்கொண்ட ஒரு திறமையைக் குறிக்கிறதா அல்லது குறிப்பிட்ட சில செயல்பாடுகளைக் குறிக்கின்றதா என்பதும் தெளிவாக இல்லை. ஏணிப்படி முறை மிகவும் சிக்கலானது; அதனைக் குழந்தைகள் புரிந்துகொள்ள மூன்று மாத காலமாயிற்று என ஆசிரியர்கள் கூறினர். விலை மதிப்பற்ற மூன்று மாதங்களை இதற்குச் செலவிட வேண்டுமா? ஏணியின் படிகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது சீரமைக்கப்பட வேண்டும்.

பாடப் புத்தகத்திற்குப் பதில் படங்களும் சொற்களும்கொண்ட வண்ண அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை மாணவர் தாமாகக் கற்கும் உபகரணங்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாடப் புத்தகம் அப்படியே அட்டைகளாக மாற்றப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் சொல்கின்றனர். அட்டைகளை உருவாக்க வேறு அணுகுமுறை பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பாடப் புத்தகங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. பெரும் குழப்பம் நிலவுகின்றது. பயன்படுத்தும் உபகரணங்கள் dynamic materialஆக இல்லை; static materialஆக இருக்கின்றன. இதனால், அட்டைகளைப் பல வகைகளில் பயன்படுத்திக் கிடைக்கக்கூடிய நன்மையை இழக்க நேரிடுகிறது.

குழந்தைகள் குழுக்களாகப் பிரிந்து, வட்டமாக அமர்ந்து கற்பது இத்திட்டத்தின் புதுமைகளில் ஒன்று. குழுவழிக் கற்றலில் குழந்தைகள் குழுக்களில் இணைந்து, பகிர்ந்து, விளையாட்டுகள் போன்றவை மூலம் கற்பது அவர்கள் ஆர்வத்துடன் எளிதாகக் கற்க ஏதுவாகிறது. ஆனால் இன்றைய செயல்வழிக் கற்றலில் குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து, ஆனால் அவரவர் தனித்தனியாகத் தங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனரே அன்றி இணைந்து கற்பதில்லை. இதுவல்ல குழுவழிக் கற்றல்.

சக மாணவரிடமிருந்து கற்றல் ஆசிரியரிடமிருந்து கற்பதைக் காட்டிலும், குழந்தைகள் ஆர்வமுடன், அச்சமின்றிக் கற்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் கற்கும் குழந்தைகள் மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்குக் கற்றுத்தரல் வேண்டும். இதன் மூலம் ஆசிரியரின் சுமையும் குறையுமென்று சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வகுப்புகளில் அத்தகைய கற்றல் நடைபெறுவதாகத் தோன்றவில்லை. முன்னேறிய குழந்தைகள் பின்தங்கியோருக்குக் கற்றுத்தரும் திறமையும் பொறுமையும் கொண்டவரல்ல.

இவை போன்ற திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஏராளமான குறைகளும் குழப்பங்களும் உள்ளன. ஒரு பிரம்மாண்ட திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடக்கக் காலத்தில் எதிர்பார்க்கக் கூடிய பிரச்சினைகள்தாம் இவை. விவரங்களில் சைத்தான் ஒளிந்துகொண்டிருக்கிறது (Devil is in the detail) என்று சொல்வார்கள். நுணுக்கங்களில் கவனம் செலுத்தாவிட்டால் திட்டமே நொறுங்கிவிடும்.

இன்று திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. ஒரு ஆரோக்கியமான விவாதம் தேவை. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கல்வியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அதன் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் குறித்து, அறிவுபூர்வமாக, அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க அரசை வற்புறுத்த வேண்டும்.

திறந்த மனத்துடன், விமர்சனங்களை ஏற்று, தேவையான மாற்றங்களைச் செய்யும் மனப்போக்கும் முதிர்ச்சியும் கல்வித் துறைக்குத் தேவை. மேலிருந்து திணிக்கும் திட்டங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை. அனைத்து வகைப்பட்ட பள்ளிகளிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பெரும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த அமைப்பில், வசதியற்ற குழந்தைகளைக் கொடுமையான புறக்கணிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் அமைப்பில், இதன் மூலம் இடைவெளிகள் இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாகக் கல்வி அமைப்பைச் சீரழித்துக்கொண்டிருக்கும் பல்வகைப் பள்ளிகள், ஆசிரியர் பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளைத் தொடாமல் போதனாமுறை மாற்றத்தினால் மட்டும் முன்னேற்றம் காண இயலாது.

அனைத்திற்கும் மேலாக போதனாமுறையும் வகுப்பறைக் கலாச்சாரமும் ஆசிரியரின் சுதந்திரத்தில், திறமையில், படைப்பாற்றலில், அனுபவ முதிர்ச்சியில், பொறுப்புணர்வில் வேர் கொண்டவை. இவை அனைத்தும் மதிக்கப்படும் சூழலில் ஆசிரியர் தம் வகுப்பறை தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடித் தனது மாணவரின் திறமையில் தன் வாழ்வின் அர்த்தத்தைக் காண்பார். அந்தச் சூழலை உருவாக்கக் கல்வித் துறை முயல வேண்டும்.

இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். அனைத்துப் பயனாளிகளும் பங்கும் பொறுப்பும் ஏற்கும் அற்புதமான மாற்றம் உருவாகும் என்று நம்பலாம்.


குறிப்பு: 2008 சனவரியில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசுவும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் அன்றைய இயக்குநரும் இந்தக் கட்டுரையாளரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்கச் செயல்வழிக் கற்றல் குறித்த ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. கட்டுரையாளருடன், கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். இராஜகோபாலன், அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஆர். ஜெயகுமார் ஆகியோர் இணைந்த குழு, சர்வ சிக்ஷா அபியான் இயக்குநர் பரிந்துரைத்த சென்னை மாநகரப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசிடம் மார்ச்சு மாதம் ஓர் அறிக்கை அளிக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் கழிந்த பின்னும் அறிக்கை வெளியிடப்படாததால், 'கல்வி' என்ற அமைப்பின் மூலம் ஆகஸ்ட் 31ஆம் நாள் அது வெளியிடப்பட்டது.