Thursday, 19 April 2012

கருணாநிதி, கனிமொழி சுயசரிதை தான் சமச்சீர் கல்வியா?: அமைச்சர்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் சுயசரிதை தான் சமச்சீர் கல்வியா என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கேள்வி எழுப்பினார். 

விவாத விவரம்:
தங்கம் தென்னரசு (திமுக): திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில், சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்தியாகக் கூறுகிறேன். சமச்சீர் கல்வித் திட்டம் அமல், 53,000 ஆசிரியர்கள் நியமனம், முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 10,000 கோடியாக உயர்த்தியது. 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி: நீங்கள் பல திட்டங்களை தலைப்புச் செய்தியுடன் நிறுத்திவிட்டீர்கள். அதிமுக ஆட்சி வந்த பின்னர் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதாகக் கூறுகிறீர்கள். திமுக தலைவர், கனிமொழி இவர்களைப் பற்றிய சுயசரிதைகளை எல்லாம் படிப்பது தான் சமச்சீர் கல்வியா?. உண்மையான சமச்சீர் கல்வி இப்போது தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டதாகக் கூறுகிறார். புரட்சித் தலைவி ரூ.15,000 கோடி ஒதுக்கியுள்ளார். ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 351 ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், 53,120 ஆசிரியர்களை நியமனம் செய்ய அம்மா நடவடிக்கை எடுத்தார். தங்கம் தென்னரசு: பள்ளிக் கல்வி கொள்கை விளக்க புத்தகத்தில், "சமச்சீர் கல்வி' என்ற வார்த்தையே இல்லை. 

அமைச்சர் சிவபதி: பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தங்கம் தென்னரசு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, விதி 110ன் கீழ் முதல்வர் சட்டசபையில் பேசும்போது தரமான, உண்மையான சமச்சீர் கல்வியை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், கொள்கை விளக்க புத்தகத்தில், சமச்சீர் கல்வி என்ற வார்த்தையே இல்லை. இதன்மூலம் முதல்வரின் கருத்துக்கு மாறான நிலையை பள்ளிக்கல்வித் துறை எடுத்துள்ளதா? 

வணிகவரித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: சமச்சீர் கல்வி என்பது, வெறும் பாடத்திட்டத்தை மட்டும் கொண்டது அல்ல. தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் சமச்சீர் கல்வி என்று முத்துக்குமரன் கமிட்டியே கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது சமச்சீர் கல்வி என்ற வார்த்தை பொருத்தமானதல்ல. பொதுப் பாடத்திட்டம் என்பதே சரி என்று நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கூறினார்.

தங்கம் தென்னரசு: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே, பழைய பாடப் புத்தகங்களை அச்சடித்தீர்கள். இதில், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது? அந்த புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? 

அமைச்சர் சிவபதி: நீங்கள் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அச்சிட்டிருந்தால், அவற்றை மாணவர்களுக்கு வழங்கியிருப்போம். நீங்கள் தான் திமுக தலைவரின் வரலாறு, கனிமொழி வரலாற்றை எல்லாம் படிப்பதற்காக, ரூ. 300 கோடி செலவு செய்தீர்கள். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இல்லை: 

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வால், அவர்கள் பாதிக்கப்படுவர். வேண்டுமானால் பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து, அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளலாம் 

அமைச்சர் சிவபதி: ஆசிரியர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை, தமிழக அரசு கடைபிடிக்கும். ஆசிரியர் நியமனம் தேர்வு முறையில் தான் இருக்கும். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்.

Saturday, 11 February 2012

ஆசிரியை உமாமகேஸ்வரி படுகொலை: உரையாடல்கள் மறுக்கப்பட்ட சமூகத்தின் இன்னுமொரு பரிதாப நிகழ்வு

பொதுவாக மாலை தினசரியைத் தலைப்புச் செய்திகள் மூலமே வாசித்துவிட விரும்பும் மனிதர்களில் ஒருவனாகவே நேற்றும் பிற்பகல் பெட்டிக்கடை ஒன்றில் கொண்டு வந்து கயிற்றில் தொங்கவிடப்பட்ட மாலை இதழ் ஒன்றை வாசிக்க முற்பட்டவன் அதிர்ந்தே போனேன். அடுத்த நிமிடமே அந்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு அது தரக் காத்திருந்த கோர நிகழ்வு ஒன்றின் கொடிய கணங்களுக்குள் பயணத்தைத் தொடக்கினேன். 

அது நடந்தே விட்டது. தனது ஆசிரியை ஒருவரை அவரது மாணவன் ஒருவனே கொன்று விட்டான். வியப்பு, அச்சம், நடுக்கம், ஏக்கம் எல்லாம் தமது கண்களிலிருந்து கொட்டித் தீர்த்தும் அதன் பொருளை உணர்ந்து அதற்கு வழி கொடுக்கும் சிந்தனையே இல்லாதிருந்த ஒருவனிடமிருந்து தமக்கு தப்பிக்க ஒரு வழியும் இல்லாது போன நேரத்தில் உமா மகேஸ்வரி உயிரற்று விழுந்துவிட்டார். தனது கொடுஞ்செயலின் அடுத்தடுத்த விளைவுகள் குறித்த எண்ணங்கள் இல்லாது போயிருந்த இர்ஃபான் கால காலத்திற்குமான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு காவல் துறை வசம் பிடிபட்டு உட்கார்ந்திருக்கிறான். உலுக்கப்பட்டு திடீரென்று விழித்துக் கொண்டாற் போல சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது இந்த முப்பத்தாறு மணி நேரங்களாக.

என்ன நடக்கிறது, ஏன் இப்படியெல்லாம் ஆகிவிடுகிறது என்று யோசிக்குமுன், நமது அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சில சொல்லாடல்களை நினைத்துப் பார்த்தேன். "எவனையாவது ரெண்டு பேர போட்டுத் தள்ளினாத் தான் சரி வரும்", "உசுர வாங்குறான்"," மவன சாவடிச்சிடுவேன், "கொன்டே போடுவேன்" . 

நமக்கு ஓர் எதிரி உருவாவதும், அவரைப் பழி வாங்க அவருக்கான மரண வாசலைத் திறந்து வைக்க வேண்டுவதும் ஏதோ மானுட தருமம் போன்ற - தவிர்க்க முடியாத கடமை போன்ற - செய்தே தீர வேண்டிய தீரச் செயல் போல மண்டைக்குள் இரத்த ஆறு ஓடத் தொடங்குகிறது. முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஆயுதங்கள் வழியாகவே பேசிக் கொள்ளவும் தூண்டப் படுகிறோம். இர்ஃபான் கையில் கத்தி இருந்ததா, கத்தியின் கையில் இர்ஃபான் இருந்தாரா என்பது உள்பட விவாதிக்க வேண்டி இருக்கிறது. 

ஆசிரியர்-மாணவர் உறவு, டாக்டர்-நோயாளி உறவு, கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு எல்லாமே நெகிழ்வுத் தன்மை அற்ற - நிபந்தனைகளுக்கு உட்பட்ட அடிப்படையிலேயே இயங்குவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வழிப்பாதையான உரையாடலே எங்கும் ஒலிக்கிறது. பணத்தால் படியமைக்கப்பட்ட உறவுகளில் பரஸ்பரம் தூய்மையான இதயங்களின் உரையாடல் கேட்பதே இல்லை. அன்பின் சன்னல் வெளிச்சம் ஊடுருவாத அறைக்குள் கவ்வி இருக்கும் இருட்டில் சத்தங்கள் மட்டுமே வெளியே கேட்கின்றன, காட்சிகள் புலனை ஒரு போதும் எட்டுவதே இல்லை.

குழந்தை பிறந்த அடுத்த கணம் முதல் அதன் அடுத்தடுத்த மைல் கற்கள் பற்றிய வரைபடத்தை மருத்துவ உலகம் நமக்குக் கற்பிக்கிறது. தாலப் பருவம், முத்தப் பருவம், செங்கீரைப் பருவம்...என்று இலக்கியம் பேசுவது போலவே, தவழ்தல், நிற்றல், நடத்தல். பேசுதல்..என குழந்தையின் வளர்ச்சி குறித்த அளவீடுகள் உண்டு. காலம் தவறினால் தலையீடு தேவைப்படுகிறது. கல்விப் பயணத்திற்கும் இப்படியான படிக்கட்டுகள் இருக்கின்றன. முந்தைய மைல் கற்களைக் கடந்து வந்த விதத்தின் பிரதிபலிப்பு இதில் வெளிப்படும். அதற்கேற்ற உதவியும் தேவைப்படும். இந்த நுட்பமான விஷயத்தை மிக இலேசாக நினைத்தாலோ, எல்லாக் குழந்தைகளும் ஒன்று தான் என்று முரட்டடியாக அணுகினாலோ பிரச்சனைகளின் வேர் ஆழமாகப் போகிறது.

நூற்றுக் கணக்கில் மாணவர்கள் நிரம்பி வழியும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறை எந்த உன்னதமான கற்பித்தல் முறையையும் அனுமதிக்கவே செய்யாது. அங்கே இலக்குகள் மட்டுமே இயங்கும். பாட திட்டம் மட்டுமே நடக்கும். காகிதங்களில் வெளிப்படும் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அறிவு அளக்கப்படும். ஐம்பது அறுபது மாணவ எந்திரங்களுக்கு எதிரில், ஓர் ஆசிரிய எந்திரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும். தாழ்வு மனப்பான்மை குடியேறிவிட்ட உள்ளங்களின் கரும்பலகையில் சிலேட்டுக் குச்சியால் எழுத முடியாது, ஆணியால் கீறிக் கொண்டிருக்க வேண்டி வரும். அந்த வலியில் துளிர்க்கும் இரத்த வேதனையில் கற்பது எந்தக் காலத்தில் இனிக்க முடியும்?

வேக கதிக்கு மாற்றப் பட்ட நமது அன்றாட வாழ்க்கையில் சகிப்புத் தன்மை, பொறுமை, சிந்தித்துப் பார்த்துப் பதில் சொல்லுதல், ஒரு வேளை எதிரில் இருப்பவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று அங்கீகரித்தல்... இவை யாவும் தடை செய்யப்பட்டு விடுகின்றன. அலைபேசி உரையாடல்களில் இருந்து, ரயில் பேருந்து வழிப்பயண தள்ளு முள்ளுகளில் இருந்து, காத்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும், பணி செய்யும் இடத்திலும் எரிச்சல், ஆத்திரம், முன் கோபம், அதீத எதிர்பார்ப்பு, அடுத்தவரையே குற்றம் சாட்டுதல் இவையே ஆட்சி புரிகின்றன. இதன் பளு தாங்காமல் முறிகின்ற உறவுகளில் ஈவிரக்கம், நியாய அநியாயம், சரி தவறு இவை எதையும் பொருத்திப் பார்க்கும் மிகச் சிறிய கால இடைவெளி யாருக்கும் வைப்பதில்லை. அந்த மிகச் சிறிய கால இடைவெளியின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகத் தான் உமா மகேஸ்வரியின் மரணம் நமது கண்ணெதிரே நடந்தேறி இருக்கிறது. இரத்தம் சொட்டும் கத்தியை வைத்துக் கொண்டு பரிதாபமாக சமூகத்தைப் பார்க்கும் இர்ஃபான் குறித்து உமாவிற்கோ, உமா பற்றி இர்ஃபானுக்கோ சிந்திக்கக் கிடைக்காத மிகச் சிறு கால இடைவெளி அது.

ஓர் ஆசிரியையின் இபபடியான ஒரு மரணம் பல நூறு குழந்தைகளுக்கான கற்பித்தலின் மரணம். அடுத்திருக்கும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும் பூகம்பத்தை விதைக்கும் கொடிய மரணம். அதே பள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ வேறு பிஞ்சுக் குழந்தைகள் பலரும் இர்ஃபான்களோ என்று சந்தேகப் பார்வைக்குள் சிக்கிவிடக் கூடும் சித்திரவதையை சாத்தியமாக்கிவிட்ட மரணம்.

அன்பின் வழியது உயிர்நிலை என்றனர் நமது முன்னோர்கள். எதிர்காலத்தைப் பற்றிப் பட்டியலிடும் நிபுணர்களின் வழிகாட்டிப் புத்தகங்கள் முழுக்க முடிவற்ற பந்தயங்களும், பல முனை போட்டிகளும், வெற்றி குறித்த துரத்தல்களும், தோல்வி குறித்த மிரட்டல்களும், இலக்குகளும், குறியீடுகளும், மைல் கற்களுமே நிறைந்திருக்க நேயம், அன்பு போன்ற சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பதை நிம்மதியற்றுப் பார்க்கிறோம். 

எந்தக் குழந்தையின் போக்கு குறித்தும் அட்டையில் எழுதி அதன் கழுத்தில் தொங்கவிடுமுன் அந்தத் தீர்ப்பளிக்கும் நீதிபதியா நாம் என்று யோசிப்போம்! சமூகத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் கண்ணாடிகள் தான் அடுத்தடுத்த தலைமுறை என்பதை உணர்வோம். பள்ளிகள் வர்த்தகக் கடைகளாயிருப்பதை மாற்றி கல்வி நிலையங்களாக மீட்டெடுப்போம்.

துள்ளத் துடிக்க மரணத்தை எதிர்கொண்ட உமாமகேஸ்வரியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்போம். இர்ஃபானை இப்படி கொண்டு நிறுத்திய சூழலிடமும்!

************

நன்றி: எஸ் வி வேணுகோபாலன்
தீக்கதிர்: பிப்ரவரி 11

Tuesday, 10 January 2012

பள்ளிகளில் வகுப்பு நேரம் 35 நிமிடம் அதிகரிப்பு-சமச்சீர் கல்வி குழப்பத்தால் வந்த வினை!

சென்னை: சமச்சீர் கல்வியை அமலாக்குவதில் தமிழக அரசு செய்த குழப்படி காரணமாக, இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாகத் துவங்கின. பள்ளிகள் துவங்கினாலும் புத்தகங்களே இல்லாமல் மாணவ, மாணவிகள் மாதக்கணக்கில் பள்ளிகளுக்கு சும்மா சென்று வந்தனர். இதனால் இழக்கப்பட்ட வகுப்பு நேரத்தை ஈடுகட்ட, இனி வகுப்புகள் 35 நிமிடங்கள் கூடுதலாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 4.10க்கு பதிலாக இனி 4.45 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். இந்தத் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள், 15 நாள் தாமதமாக திறக்கப்பட்டன. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறி சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றம் கொட்டிய பிறகே சமச்சீர் கல்வி அமலுக்கு வந்தது. அதற்கான பாடப் புத்தகங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகே வழங்கப்பட்டன. இதனால் சுமார் 3 மாதம் புத்தகங்களே இல்லாமல் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போய் வந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளில் அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்களை ஈடுகட்டவும், பாடப் பகுதிகளை முடிக்கவும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரித்து தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். வழக்கமாக தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மாலை 4.10க்கு முடிகின்றன. இனி, மாலை 4.55 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 14 December 2011

அடுத்த ஆண்டில் தமிழக பள்ளிகளில் டிரைமெஸ்டர் முறை- அரசாணை வெளியீடு

சென்னை: அடுத்த கல்வியாண்டு முத்ல தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை டிரைமெஸ்டர் தேர்வு முறை பின்பற்றப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகளை தவிர்க்கவும் முப்பருவ தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. 2012-2013 கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை இந்த முறை நடைமுறைக்கு வருகிறது. மேலும், முழுக் கல்வி ஆண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது. 

மூன்று புத்தகங்கள் : முதல் பருவம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும். இதற்கேற்ப பாடப்புத்தகங்கள் 3 பாகமாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையுடன் கூடிய தேர்வு நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும். மேலும் ஆண்டு இறுதியில் பாடங்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தொடர்மதிப்பீட்டு முறைகள் : இதற்காக தொடர் மதிப்பீட்டு முறைகள் (சிசிஇ) கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 2013-2014ம் கல்வி ஆண்டிலும் கொண்டு வரப்படும். முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் கற்கும் மாணவர்களின் முழுத் திறனும் வெளிப்படும். மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும். கலந்துரையாடும் தன்மை, எளிதில் கற்கும் தன்மை, போன்றவற்றை மாணவர்கள் பெறுவார்கள். ஆசிரியர்களுக்கும் அதிக பாடங்களை நடத்த வேண்டிய சிரமம் குறைகிறது. மேலும் பருவ முறை பாடத்துடன் மாணவர்களின் தனித்திறன்களும் தொடர் மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்படுவதால், தரமான கல்வியை வழங்க முடியும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் கடந்த ஆண்டுவரை மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறையில் கல்வி கற்பிக்கும் முறை இருந்தது. இதனால் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுகிறது என்று திமுக ஆட்சி காலத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி முறை பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை முழுக் கல்வி ஆண்டும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க முப்பருவ முறையை தற்போதய அரசு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கல்வி முறை என்றாலும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டும் இல்லாமல் மாணவர்களின் வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய வகையாக இருந்தால் சரிதான் என்கின்றனர் பெற்றோர்கள்.


Monday, 24 October 2011

‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''

எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Saturday, October 22, 2011




ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்

தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?

எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா?

கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.

ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள்,தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்?

தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.

அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.

தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?

தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.

உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி?

அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.

இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா?

இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.

கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன?

இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்
ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்
நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

Sunday, 25 September 2011

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கியது

சென்னை: 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடுமையான சட்டப் போராட்டத்தை சந்திக்க வேண்டி வந்தது. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தக் குழப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு்ம், பாடத் திட்டம் வழங்குதல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு தாமதம் ஏற்பட்டன. இதனால் மிகக் குறுகிய காலத்திற்குள் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட பல பள்ளிகளில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இந்த நிலையில் செப்டம்பர் 22ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கின. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதேசமயம், தனியார் பள்ளிகளில் ஏற்கனவே தேர்வு தொடங்கி விட்டது. 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 21 August 2011

சமச்சீர் கல்வியை ஏற்க மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள்: தவிக்கும் மாணவர்கள்


நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகும் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் பழைய பாடதிட்டம பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு தேர்வு எழுதும் 10-ம் வகுப்புக்கு கூட மெட்ரிகுலேஷன் பாடம் நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை ஆங்கில வழி புத்தகங்களுக்குரிய கட்டணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக் கொள்ளலாம் அல்லது 26 பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பல பள்ளிகள் இன்னும் புத்தகங்களைப் பெறவில்லை. இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் பாடத்தையே தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுத் தேர்வு எழுதவிருக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கூட மெட்ரிகுலேஷன் பாடங்களைத் தொடர்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.