Wednesday, 13 June 2007

குழந்தைகள் தாமாகவே விரும்பி பாடம் படிக்கும் கல்வி முறை: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

குழந்தைகள் தாமாகவே விரும்பி பாடம் படிக்கும் புதிய கல்விமுறை (செயல்வழி கற்றல்) தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதுமையான கல்வி திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்( MK Stalin) நேற்று தொடங்கி வைத்தார்.

செயல்வழி கற்றல்

பள்ளிக்குழந்தைகள் தாமாகவே விரும்பி பாடம் படிக்கும் செயல்வழி கற்றல் என்ற புதுமையான கல்விமுறையை தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகத்தைக் பயன்படுத்தாமல் சார்ட்டுகள், விளக்கப் படங்கள், எளிய கல்வி உபகரணங்கள் உதவியுடன் ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு பாடத்திற்கான வகுப்பு நடைபெறும்போது அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகளும் ஒரே வகுப்பறையில்தான் இருப்பார்கள். ஆசிரியரும் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து இருந்துதான் பாடம் நடத்துவார்.

இந்த கல்வி முறையில் பரீட்சை, பாஸ்-பெயில், ரேங்க் எதுவும் கிடையாது. ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நண்பர்கள் போல் பழகுவார்கள். எனவே, குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது பயம் இருக்காது. தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்வார்கள். இந்த முறையில் ஒன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுத்தரப்படும். அனைத்து பாடங்களையும் குழந்தைகள் தாமாகவே முன்வந்து படித்து முடித்து விட்டு அடுத்த நிலைக்கு செல்வார்கள்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2003-ம் ஆண்டு சோதனை முயற்சியாக சென்னை மாநகராட்சியில் 234 தொடக்கப் பள்ளிகளிலும், பிற மாவட்டங்களில் ஒரு ஒன்றியத்திற்கு தலா 10 பள்ளிகளிலும் இந்த புதிய கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பள்ளிகளில் முன்பை விட மாணவர் வருகைப்பதிவு அதிகரித்ததையும் குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வரத்தொடங்கியதையும் ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.

ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்வழி கல்விமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த புதுமையான கல்வி திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

அனைவருக்கும் கல்வி திட்டம் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள செயல்வழி கற்றல் முறை மூலம் அடுத்த தலைமுறை கல்வியாளர்களாக உருவாவார்கள்.

கல்விக்கு முக்கியத்துவம்

தற்போது முதல்-அமைச்சர் கருணாநிதி(Karunanithi) கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறைக்கென்றும் உயர் கல்வித்துறைக்கென்றும் தனித்தனியே 2 அமைச்சர்களை கொடுத்துள்ளார். கல்லூரி கல்விக்கட்டணம் குறைப்பு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் என்று மாணவர்களுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதி நிறைய திட்டங்களை செய்து வருகிறார்.

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிக்காக பட்ஜெட்டில் ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளைத் தொடர்ந்து ஊராட்சி பள்ளிகள், பேரூராட்சி பள்ளிகள், 3-ம் நிலை நகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இங்கே அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரை பாராட்டியாக வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சென்னை மாநகராட்சி ஆணையராக அவர் இருந்தார். அதன்பின்னர் தி.மு.க. ஆட்சியிலும் தொடர்ந்து ஆணையராக இருந்தார். நல்ல அதிகாரி என்ற பெயர் பெற்றவர். அ.தி.மு.க. ஆட்சியில் ஆணையாளராக இருந்தவர் என்பதற்காக அவரை பணிமாற்றம் செய்யவில்லை.

அதிகாரிகள் மக்களுக்கு நல்லது செய்கிறார்களா? என்பதுதான் முக்கியம். குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிய விரும்புவதாக விஜயகுமார் வேண்டுகோள் விடுத்தார். அவர் விரும்பியபடியே அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு சிறப்பான முறையில் அவர் பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment