Saturday, 6 August 2011

10-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வினியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துமாறும், ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசராணை நேற்றுடன் முடிந்தது. 

இதையடுத்து சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகடங்களை மாணவர்களுக்கு வினியோகிக்க வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. நேற்று நடந்த இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் கூறியதாவது, சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதலேயே அதை இந்தாண்டு நடைமுறைபடுத்தவில்லை. சமச்சீர் கல்வியை செயல்படுத்த தகுந்த விதிமுறைகள், தரமான பாடப்புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அடுத்தாண்டு அல்லது அதன் பின்னரோ அமல்படுத்த வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படாததால் இந்தாண்டு அமல்படுத்தவில்லை. முந்தைய அரசு அவசர அவசரமாக சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதே தவிர அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

தமிழக அரசு திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ எதிரானது அல்ல. சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் கருணாநிதி புகழ்பாடப்பட்டுள்ளது. அவரது புகழை நிலைநாட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பயன்படுத்தியுள்ளனர். தமிழக அரசு தரமான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இதை அடுத்த ஆண்டிலோ அல்லது வரும் ஆண்டுகளிலோ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சமச்சீர் கல்வி திட்டத்திற்கு முந்தைய அரசு வெறும் அரை மணி நேரத்திலேயே ஒப்புதல் அளித்தது என்று தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் தெரிவித்தார். ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்தன. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து ஆட்சேபம் இருப்பின் இரு தரப்பினரும் அதை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் என்றனர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
நன்றி:tamil.oneindia.com

No comments:

Post a Comment