Thursday, 10 June 2010

கற்றது கைம்மண்ணளவு

மே மாதத்தில் வழக்கத்தை விட அதிகமான அலைச்சல்தான். செம்மொழிக்கான மக்கள் இயக்கம் என்றபேரில் 300 இடங்களில் பொதுக்கூட்டம்,கருத்தரங்கு என்று களம் இறங்கியதில் சுற்று அதிகமாகிவிட்டது.சுற்றுக்கு நடுவே மதுரையில் சுவர் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.கோவையில் செம்மொழி மாநாடு முத்தமிழ் அறிஞர் மு.க.அழகிரி அழைக்கிறார் என்று மாபெரும் எழுத்துக்களில் அவ்விளம்பரம் என்னை ஈர்த்தது.கோவையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் முழு உருவப்படம் திருவள்ளுவர் கெட்-அப்பில் வரைந்து வைத்திருக்கிறார்கள்.மாநாடு நெருங்க நெருங்க எல்லாத்தமிழ் அறிஞர்களின் கெட் அப்பிலும் ஏன் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து,நடராசன்,சின்னச்சாமி ஆகியோரின் கெட்-அப்பிலும் கூட கலைஞர் மற்றும் அவரது குடும்பத்தாரின் படங்களை வரைந்து வைத்துத் தாகமெடுத்த தமிழ் நெஞ்சங்களில் பால் வார்ப்பார்கள் என்று தோன்றுகிறது. எதையும் செய்துவிட்டுப்போங்க சாமிகளா .தமிழ் மொழிக்காகவும் இம்மாநாட்டில் ஏதாவது சில உருப்படியான திட்டங்களை அறிவிப்பு அளவிலாவது செய்துவிடுங்கள் போதும் என்று எனக்குள்ளே பேசிக்கொண்டேன்.


சரி.போகட்டும்.இப்போது நான் பேச வந்த விசயம் அதுவல்ல.தினசரி பஸ்ஸிலோ ரயிலிலோ மே மாதத்தின் எல்லா இரவுகளையும் வியர்வைக் கசகசப்போடு தூங்கியும் தூங்காமலும் கழித்துக்கொண்டிருந்த என்னைச் சிறைப்பிடித்துத் திருச்சிப்பக்கம் சமயபுரத்தில் இயங்கும் எஸ்.ஆர்.வி.மெட்ரிக் பள்ளியில் 5 நாள் அடைத்துப்போட்டார் அதன் முதல்வரும் என் இனிய நண்பருமான துளசிதாசன்.பிளஸ் டூ செல்லும் மாணவ-மாணவிகளுக்கு நான்கு நாட்கள் பயிலரங்கு ஒன்றை நடத்தித்தரும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார்.ஞாநியும் நானும் சேர்ந்து ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து அதை நடத்தித்தரணும் என்று கேட்டிருந்தார்.80 மாணவிகள்,40 மாணவர்கள் என 120 பேருக்கான பயிலரங்கு அது.ஓரளவு வசதியான குடும்பப்பின்னணியிலிருந்து வந்துள்ள மாணவர்கள் அவர்கள்.வறுமையின் ரேகை படியாத முகங்கள்தாம்.




’வெளிக் காற்று உள்ளே வரட்டும் ’என்று அப்பயிலரங்கிற்கு ஒரு முழக்கத்தை வைத்தோம். பாடம்,பாடத்திட்டம் சம்பந்தமாக அப்பயிலரங்கில் எதுவும் இருக்காது.வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட சமூக யதார்த்தங்களின் ஈரம் பாரித்த காற்று இம்மாணவர்களின் மனங்களைத் தழுவிட வேண்டும் என்று திட்டமிட்டோம்.ஓரிருவரைத்தவிர அநேகமாக கல்விப்புலம் சாராத கருத்தாளர்களையே இப்பயிலரங்கிற்கு அழைத்தோம்.சமூக நீதி, பெண்ணுரிமை,சுற்றுச்சூழல், அறிவியல் பார்வை,சினிமாவைப்புரிந்து கொள்ளுதல், படைப்பாற்றலைக் கிளர்த்துதல் என்று கட்டாயமாகச் சென்று சேர வேண்டியவை எனச் சிலவற்றைத் தீர்மானித்தோம்.பாரதி கிருஷ்ணகுமார்,எஸ்.ராமகிருஷ்ணன்,வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ், கல்பாக்கம் அணு விஞ்ஞானி சு.சீனிவாசன்,நாவலாசிரியர் சு.வெங்கடேசன், பேச்சாற்றல் மிக்க நந்தலாலா,மக்கள் அறிவியல் இயக்கத்தோழர்கள் இராதா (சமம்-மாநிலச்செயலர்),ரத்தின விஜயன்(வாசல் பதிப்பகம்)அமல்ராஜ்,காடு வா வா என்றழைப்பதைக் கூற முகம்மது அலி, மனித குல வரலாற்றைக்கூற எஸ்.சகஸ்ரநாமம் , வசனகர்த்தா பாஸ்கர்சக்தி,அப்புறம் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா,எழுத்தாளர் ஏஸ்.பத்மாவதி ,பதிவு செய்ய புகைப்படக் கலைஞர் எஸ்.ஆர்,எழுத்தாளர் ஆரிசன் என ஒரு பெரும்படையே வந்து இறங்கியது. கல்விப்புலத்தில் சிறப்பாக மின்னுகிற அம்மாணவ நண்பர்களுக்கு இச்சமூகத்தை அறிமுகம் செய்ய ஒவ்வொருவரும் முயன்றோம்.முறைசார் கல்விமுறை தீட்டியிருந்த அவர்களின் புத்திசாலித்தனத்தின் மீது சமூகப்பிரக்ஞை என்னும் உள்ளுறை கவியுமாறு செய்தோம்.அல்லது முயன்றோம். நிறைவுவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பேச அழைத்தோம்.

அம்முகாம் பற்றி முழுசாக இங்கு எழுதப்போவதில்லை.இரண்டு நிகழ்வுகள் அம்முகாமில் என்றும் மறக்க முடியாத நினைவுகளாக என் மனதில் ஆழப்பதிந்து நிற்கின்றன. அவை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1.வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் என்னும் மாமனிதன்




’அம்பேத்கரைப்படித்தேன் ஐ.ஏ.எஸ் ஆனேன் ’என்று பத்திரிகைகளில் பேட்டிகள் கொடுத்த மனிதர் வீரபாண்டியன் என்று மட்டுமே அறிந்திருந்த நான் இப்பயிலரங்கில் மாணவர்களோடு பேச வந்திருந்த அவரை நேரில் சந்திக்கும் பேறு பெற்றேன்.என் மகன் வயதை ஒத்த ஓர் இளைஞர்.இவர் இப்படியான மனிதராக இருப்பார் என்று மனம் வரைந்து வைத்திருந்த சித்திரங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டார் வீரபாண்டி.அவர் பேசப்பேச ஒவ்வொரு சித்திரமாக அழிந்துகொண்டே வந்தது.

மதுரையில் ஒரு அருந்ததியர் சமூகக் குடும்பத்தில் துப்புரவுப்பணியாளர்களான பெற்றொருக்கு மகனாகப் பிறந்து ஐந்தாம் வகுப்புப்படித்த நாள் முதல் (11 வயது) தினசரி கூலி வேலைக்குப் போய்க்கொண்டே படித்த மாணவர்.சிறிய ஓட்டல்களில் துப்புரவுப்பணி,கொஞ்சம் வளர்ந்ததும் மாட்டுக்கறிக்கடையில் கசாப்பு வேலை,புரோட்டாக் கடைகளில் ராத்திரி ஷிப்ட் என்று என்ன வேலை கிடைத்தாலும் செய்து கொண்டே படித்தவர்.படிக்க வேண்டாய்யா ராசா வேலை மட்டும் பாரு என்று சதா சொல்லிக்கொண்டே இருந்த தாயின் அறியாக்குரலைப் புன்னகையோடு புறக்கணித்துப் படித்த மாணவர்.ராத்திரி வீட்டுப்பாடம் என்று படித்ததே இல்லை.பள்ளிக்கூடத்தில் கேட்கும் பாடம் மட்டும்தான்.ராப்பாடமே கிடையாது என்னும்போது ப்ளஸ் டூ மாணவர்களுக்குக் கிட்டும் எக்ஸ்ட்ரா ட்யூஷன் என்பதெல்லாம் கற்பனையே செய்ய வாய்ப்பில்லை.அவர்களுடைய காலனியில் இருந்த மதிமுக அலுவலகம,விடுதலைச் சிறுத்தைககள் அலுவலகம் போன்ற இடங்களில் கிடைத்த பத்திரிகைகள்,புத்தகங்களைப் படித்துப் பெற்ற பொது அறிவு இவற்றோடு ப்ளஸ் டூ வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவராக முதல்வரிடம் ஒரு லட்சரூபாய் பரிசு பெற்ற வெற்றி.ஆங்கிலம் ஒரு வார்த்தை கூடப் பேசத்தெரியாது.புரியாது.மதுரை மாநகராட்சிப் பள்ளிப் படிப்பு முடித்து தோழர்.தொல்.திருமாவளவன்,அகரம் பவுண்டேஷன் சென்னை ,மற்றும் சில திராவிடர் கழகத் தோழர்களின் உதவியோடு சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் பட்டம் பெற்று வீதி நாடகக்குழுக்க்களோடும் தொண்டு நிறுவனங்களோடும் தலித் அமைப்புகளின் போராட்டங்களோடும் சிலகாலம் கழித்து தன் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.இது நாலு வரியில் சொல்லப்பட்ட கதைச்சுருக்கம்.

ஆனால் இந்த ஒவ்வொரு நாளையும் அவர் கடந்து வந்த கணங்களின் ரணங்கள் பற்றி அவர் சொல்லாமலே நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததில் கண்ணீர் பெருகியது.அவர் எனக்கு முன்னால் நின்று மாணவர்களோடு பேசிக்கொண்டே இருக்க நான் பின்னால் உட்கார்ந்து மாணவர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கண்களைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டும் செருமிக்கொண்டும் பின் பக்கம் திரும்பிக்கொண்டுமாக அந்தப் பையனின் வார்த்தைகளில் விரிந்த வாழ்க்கையைச் செரிக்க முடியாமல் கண்ணீரால் என் குற்ற மனதைக் கழுவிக்கொண்டிருந்தேன்.ப்ளஸ் டூ படிக்கும்போது மதுரை அரவிந்த் மருத்துவமனையில் அம்மாவோடு கக்கூஸ் கழுவும் பணியில் இருந்தேன் என்று அவர் சொன்ன போது உடைந்துபோனேன். அவர் கக்கூஸ் கழுவிய அதே ஆண்டில் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த என் மகனை வண்டியில் அழைத்துக்கொண்டு திருநெல்வேலியில் சிறப்பு ட்யூஷனுக்கு அழைத்துப்போன பொறுப்புணர்ச்சி இப்போது பெரும் பாரமாக மனதை அழுத்தத்துவங்கியிருந்தது. என் இன்னொரு மகன் இப்படி கக்கூஸ் கழுவியபடி பாடம் படித்திருக்கிறான் என்கிற தகவல் கூடத்தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயலக்கூட இல்லாமல் ஒரு அவமானகரமான வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேனே.இத்தனை நாள் கழித்தும் இவ்வரிகளை எழுதும் இத்தருணத்திலும் கூடக் கண்ணீரைக் கட்டுப்படுத்திட முடியவில்லை. எங்கே போய் இப்பாவத்தை நாம் கழுவப்போகிறோம்? நாம் அறியாத இத்தேசத்தின் எத்தனை ஓரங்களில் நம் பிள்ளைகள் வீரபாண்டியனைப்போல ஏதோ ஒரு உடல் உழைப்புடனும் சாதியம் தரும் அவமானங்களோடும் பாடப்புத்தகங்களைக் கையில் பிடித்திருக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனரோ என்கிற எண்ணமே அவர் பேசிக்கொண்டிருந்தபோது என் மனதில் கண்ணீராய் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு வீரபாண்டி ஜெயித்து விட்டார்.இன்னும் எத்தனை எத்தனை......

நம் பள்ளிக்கூடங்களும் கல்விமுறையும் முக்கியம் முக்கியம் என்று வற்புறுத்தி நம் பிள்ளைகளைச் சித்ரவதை செய்யும் எதையும் எல்லாவற்றையும் நிராகரித்து அதே கல்விப்புலத்தில் தன் சொந்த சொந்த சொந்த உழைப்பால் மட்டுமே வென்று நாம் கட்டமைத்த கல்விசார்ந்த எல்லாம் பொய்பொய்பொய் என்று நிரூபித்த ரத்த சாட்சியாக வீரபாண்டியன் இச்சமூகத்தின் முன் கம்பீரமாக நிற்கிறார்.

சமீப ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் அதன் அங்கமாக எனக்கும் அவர்களின் வாழ்நிலை பற்றிச் சில நேரடி அனுபவங்களும் பார்வைகளும் உண்டு.என்றாலும் என் 55 வயது அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களிலேயே மகத்தானவராக வீரபாண்டியன் இன்று என் மனதில் அழுந்தக்கால் ஊன்றி நிற்கிறார்.காரணம் -அவரது இத்தகைய வாழ்க்கை – அதில் இன்று அவர் பெற்றுள்ள ஒரு வெற்றி - என்று மட்டும் கூற முடியாது.

தான் யார் ? தான் யாரின் பிரதிநிதி ? காலம் தன்னை ஏன் இப்படியாக வடிவமைத்திருக்கிறது? தன் வாழ்க்கை எதற்காக? தன் வாழ்வின் அர்த்தம் என்ன? நான் எதன் சாட்சியாக இங்கே நிற்கிறேன்? என்பது பற்றிய முழுமையான சுய பிரக்ஞையோடு வீரபாண்டியன் இருக்கிறார்.உலகத்தின் எந்தப் பெரும் ஞானியும் அடைய முடியாத தன்னை உணர்ந்த நிலை இது.அப்பா! அதிர்ந்து போனது.அதிர்ந்து கொண்டே இருக்கிறது மனது.எதையும் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவயப்பட்டு பேசிவிடுகிற ஆள்தான் நான்.ஆனாலும் வீரபாண்டியனை நான் சந்தித்தபின் அடைந்த மனநிலையை மேலே நான் கொட்டியுள்ள வார்த்தைகளால் முழுமையாகப் படம் பிடிக்க முடியவில்லை என்றே சொல்லுவேன்.

அவர் பேசி முடிக்கையில் தங்கை கே.வி.ஷைலஜா எழுந்து சென்று வீரபாண்டியனின் கையைப்பற்றிக்கொண்டு ( மாணவர்களை நோக்கி ) இந்தக்கை டேபிள் துடைத்தது இந்தக்கை கக்கூஸ் கழுவியது இந்தக்கை மாட்டுக்கறி வெட்டியது இனிமேல் இந்தக்கை அரசாங்கத்தின் கோப்புகளில் அர்த்தமுள்ள கையெழுத்தை இடப்போகிறது.எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்று சொன்னார்.அந்த நிமிடம் துளசிதாஸ் உள்ளிட்ட பலர் கண் கலங்கியதைக் கண்டேன். ஷைலஜாவின் அந்த dramatic finishing அன்று அவசியமானதாகவும் கச்சிதமாகவும் அமைந்தது.

அவர் விடைபெற்றுக்காரில் ஏறியபோது என் மனதில் ஓடிய வார்த்தைகள் “ உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாத மனிதன் இவன்”


வாழ்வாரை வாழ்த்துகிற இந்த உலகம் வெற்றி பெற்றுவிட்ட வீரபாண்டியனை இனிப் போற்றத்தான் செய்யும்- ஒரு அளவுக்கு. நம் கவனம் (நம் என்பதில் இப்போது வீரபாண்டியனும் அடக்கம்) இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஆயிரமாயிரம் வீரபாண்டியன்களைத் தேடிக்கண்டுபிடித்துக் கை கொடுப்பதை நோக்கி இனியாவது திரும்ப வேண்டும்.

2. மக்கள் சந்திப்பு இயக்கம்.

மிக முக்கியமான ஆளுமைகளின் உரைகள் அவர்களோடு மாணவர்களின் கலந்துரையாடல்கள் இவற்றோடு ஒரு மாலைப்பொழுது முழுவதையும் ஒரு எளிய கிராமத்து மக்களோடு மாணவ/மாணவியர் கழிக்கும்படியாகப் பயிலரங்கை வடிவமைத்தோம்.

சமயபுரத்தை அடுத்த ஊத்தங்கால் என்னும் கிராமத்துக்கு மாணவர்களை அழைத்துச்சென்று இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என்கிற விதமாக மூன்று மூன்றுபேர் கொண்ட 40 குழுக்களாக அவர்களைப் பிரித்து ஒவ்வொரு குழுவும் அக்கிராமத்தின் ஒரு குடிசைக்குள் சென்று அவர்களோடு இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு வரவேண்டும் என்று அனுப்பினோம்.(எல்லாம் அறிவொளி இயக்கம் கற்றுத்தந்த பாடம்தான்).கேள்வித்தாள் மாதிரியோ பேட்டி எடுப்பது மாதிரியோ இருக்கக்கூடாது.நம் சொந்த மக்களோடு கலந்துறவாடி வரவேண்டும் என்று சொல்லி அனுப்பினோம்.இரவு வெகுநேரம் வர நீடித்தது அந்தச் சந்திப்பு.


மறுநாள் தங்கள் மனப்பதிவுகளை மாணவர்களும் மாணவிகளும் வெளிப்படுத்தியபோது பலர் உடைந்து அழுதார்கள்.பலர் வார்த்தைகளை அழுத்தும் மன உணர்வால் தடுமாறினார்கள். நாங்களும் பிறரும் நான்குநாட்களில் வகுப்பில் எண்ணற்ற உரைகளின் மூலம் கற்றுக்கொடுக்க முடியாத பல சமூக உண்மைகளை இம்மக்கள் சந்திப்பு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்ததைக் கண்டோம்.இம்மாணவர்கள் எல்லோருமே மத்தியதர வர்க்கத்து-உயர் மத்திய தரவர்க்கத்து வீட்டுப்பிள்ளைகள்.எல்லோருமே நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்.கஷ்டம் தெரியாமல் வளர்ந்த பிள்ளைகள் என்று சொல்லலாம்.அவர்கள் கண்ட முதல் கிராமத்து வாழ்க்கை அனுபவம் இதுவாகத்தான் இருந்தது.

ஒரு குழுவினர் தாங்கள் சென்ற வீட்டுப் பெண்களும் குழந்தைகளும் தினசரி இரவில் தெருவில்தான் படுத்துறங்குவார்கள் என்கிற யதார்த்தம் கண்டு மனம் கலங்கி வந்தார்கள். அடிக்கடி ஈரம் பாரித்து விடும் தன்மை கொண்ட தங்கள் வீட்டு மண் தரையை விட ஊராட்சி போட்டுள்ள சிமிண்ட் தெருவில் படுப்பது உயர்ந்தது அல்லவா என்கிற அவர்களது கேள்வி தங்களை நிலைகுலையச்செய்ததாகக் கூறினார்கள்.வீட்டை விட தெரு நல்லது என்கிற ஒரு நிலைமை எவ்வளவு மோசமானது.அந்தக் குடிசையில் ஒரே ஒரு இலவச பல்பு எரிந்து கொண்டிருக்கிறது.அந்த வீட்டுக் குழந்தைகள் அந்த வீட்டில் அந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து எப்படி ஹோம் ஒர்க் செய்து எப்படிப் படித்து எங்களை மாதிரி மாணவர்களோடெல்லாம் போட்டி போடுவார்கள்?

இன்னொரு வீட்டில் ஆண்கள் எல்லோருமே குடிகாரர்கள்.அப்பெண்களின் கண்ணீர்க்கதையை முழுசாகக் கேட்க முடியாத மனநிலையுடன் அழுதபடி ஓடி வந்திருந்தது ஒரு குழு. கடன்பட்டுப் படிக்க வைத்து பொறியியல் பட்டதாரியாகிவிட்ட தன் மகன் அன்றாடம் குடித்துவிட்டுத் தெருவில் கிடப்பதையும் அவனைத்தூக்கிக் கொண்டு வந்து சேர்ப்பதே வாழ்வாகிப்போன ஒரு தாய்க்கு என்ன ஆறுதலும் சொல்ல முடியாமல் துக்கத்துடன் திரும்பியிருந்தது ஒரு குழு. அந்தக் குடிகார பொறியியல் பட்டதாரி அல்ல வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் தான் தங்கள் ரோல் மாடல் என்றார்கள்.

கல் உடைக்கும் தொழிலாளியான குடும்பத்தலைவர் கல் தெறித்து இரு கண்களும் குருடாகிப்போக எந்த சேமிப்புக்கும் வழியற்ற அவர்கள் வாழ்க்கை வறுமையின் கோரப்பிடிக்குள் சிதைந்து கொண்டிருப்பதைக் கண்ணாரக்கண்டு திரும்பிய குழு இப்படியெல்லாமா வாழ்கிறார்கள் எங்கள் சக மனிதர்கள் என்று விம்மியது.

நம்முடைய பாடத்திட்டத்தில் அருமைத் தம்பி வீரபாண்டியனின் வாழ்க்கையைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது.அதே போல கிராமத்துக்கு அழைத்துச்சென்று அசலான வாழ்க்கையை மாதம் ஒருமுறையேனும் மாணவமணிகள் கண்டுணர்ந்து திரும்புவதையும் எல்லா உயர்வகுப்புப் பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றுவதும் எவ்வளவு முக்கியமான தேவை என்று அம்முகாமின்போது உணர்ந்தேன்.ஆனால் அதையெல்லாம் செய்ய ஒரு அரசியல் மன உறுதியுள்ள அரசாங்கம் நாட்டில் இருக்க வேண்டும்.நினைத்தால் பெரும் ஏக்கப்பெருமூச்சே மிஞ்சுகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இதுபோன்ற மக்கள் சந்திப்பு அவசியம் . சாய்நாத் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகள் வாயிலாக மட்டுமே நம் சக மனிதர்களின் அவலவாழ்வை ’அறிந்து’ வரும் நாம் சில மணி நேரம் அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்களோடு வாழ்ந்து பார்த்தால் மட்டுமே நம் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகும் நிலையை ‘ உணர’ முடியும்.பிறர் வலியை உணரவும் நமக்குப் பயிற்சி அவசியம்.

இப்படி ஒரு பயிலரங்கை நடத்தக் கனாக்கண்ட நண்பர் துளசிதாசும் எங்களுக்கு முழுச்சுதந்திரம் அளித்து எங்கள் விருப்பம்போல இப்பயிலரங்கை வடிவமைக்கச் சம்மதித்த நிர்வாகமும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். அறிவுலகிலிருந்து ஞானியும் தெருப்புழுதியிலிருந்து நானும் என இருவரும் கூட்டாக இப்பயிலரங்கை வடிவமைத்தது மிக முக்கியமான ஒன்றாக எனக்குப்படுகிறது.இரண்டும் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவை என்று அவர்கள் நினைத்தது பெரிது.
ச.தமிழ்ச்செல்வன்

No comments:

Post a Comment