அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ், புதிய விளக்க அட்டைகள் தயாரிக்கப்பட்டு செயல்வழி கற்றல் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி(‘சர்வ சிக்ஷ அபியான்’) திட்டத்தின் கீழ் செயல்வழி கற்றல் முறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தால், மாணவர்கள் கல்வியிலிருந்து இடை நிற்றல் வெகுவாக குறைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய கல்வி முறையில் இருந்த ஆண்டுத் தேர்வுகள், தேர்ச்சி பெறுதல் போன்றவற்றிற்கு பதிலாக, மாணவர்களுடன் மாணவர்களாக ஆசிரியர்களும் இணைந்து கற்றுத் தரும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. பாடங்கள் விளக்க அட்டைகளாக தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் தாங்களாகவே புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் இப்பாடத்திட்டம் உள்ளது.
சிக்கல்: இந்நிலையில், மெட்ரிக் மற்றும் மாநில கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறையை, நடப்பாண்டில் முதல் கட்டமாக ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அரசு கொண்டு வந்துள்ளது. இவ்விரு வகுப்புகளுக்கும் கண்கவர் வண்ணத்தில் புதிய பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, முதல் வகுப்பில் தற்போதுள்ள செயல்வழி கற்றல் முறை தொடருமா அல்லது மெட்ரிக் பள்ளிகளைப் போல் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் பழைய முறைப்படி கல்வி கற்பிக்கப்படுமா என்ற சிக்கல் நிலவியது.
மாற்றம்: இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் தற்போது முதல் வகுப்பில் செயல்வழி கற்றல் முறையிலேயே தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய விளக்க அட்டைகளுக்கு பதிலாக, தற்போதுள்ள சமச்சீர் பாடப் புத்தகங்களின் அடிப்படையில் செயல்வழி கற்றல் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கென, புதிய விளக்க அட்டைகளை தயார் செய்வது குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் அந்தந்த தாலுகாக்களில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்டம் வட்டார வள மையங்களில், இப்பயிற்சி முகாம்கள் நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment