First Published : 06 September 2013 02:41 AM
அரசு-தனியார் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட உள்ள புதிய மாதிரிப் பள்ளிகள் கல்வியை தனியார்மயமாக்கிவிடும் என கல்வியாளரும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வி.வசந்திதேவி கூறினார
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட உள்ள மாதிரிப் பள்ளிகள் தொடர்பான கலந்துரையாடல் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று வி.வசந்திதேவி கூறியது:
அரசு-தனியார் ஒத்துழைப்புடன் இந்தியா முழுவதும் புதிதாக 2,500 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் கல்வியில் பின்தங்கிய வட்டங்களில் இந்த மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பள்ளிகளில் 40 சதவீத மாணவர்களின் கல்விச் செலவை அரசும், 60 சதவீத மாணவர்களுக்கான கல்விச் செலவை தனியாரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த 60 சதவீத மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
மேலும், இந்தப் பள்ளிகளுக்கான மத்திய அரசின் உதவி 10 ஆண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு, இந்த மாதிரிப் பள்ளிகள் முழுவதும் தனியார்வசமாகிவிடும் நிலை உள்ளது.
எனவே, அரசு-தனியார் ஒத்துழைப்புடன் கூடிய மாதிரிப் பள்ளிகள் கல்வியை தனியார்மயமாக்கும் முயற்சிதான் என்றார் வசந்திதேவி.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்: கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த ஏழை மாணவர்கள் பாகுபாடில்லாமல் நடத்தப்படுகின்றனரா என்பதை கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர ஏழைகளுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஏழைகளுக்கு உதவாது. புதிய மாதிரிப் பள்ளிகளால் யாருக்கு நன்மை எனப் புரியவில்லை. பொதுப்பள்ளிகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு இத்தகைய விஷயங்களுக்கு மக்களின் பணத்தை வீணடிப்பது நியாயமா என யோசிக்க வேண்டும் என்றார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சிறுபான்மையின பள்ளிகளுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்திருப்பது தவறானது. இதை தனியார் பள்ளிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏழைகள், நலிவடைந்த பிரிவினர் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள்தான் கல்வி வழங்கின. ஆனால், இன்று சில நிறுவனங்கள் லாப நோக்கில் தவறுகளைச் செய்கின்றன.
அனைவருக்கும் கல்வி உரிமையை தனியார் பள்ளிகள் மூலம் வழங்க முடியாது. அதைப் பொதுப்பள்ளிகள் மூலமாக மட்டுமே வழங்க முடியும் என்றார் அவர்.
மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ஓ.பெர்னாண்டஸ், கல்வி உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.மூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment