Monday, 11 November 2013

PPP மாதிரிப்பள்ளிகள் திட்டம்- அறிவியல் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

கடந்த அக்டோபர் இறுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் PPP திட்டம் குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்:

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையானது தன்னிச்சையாக மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் PPP என்ற வடிவில் அரசு-தனியார் கூட்டின் அடிப்படையில் கல்வியில் பின்தங்கிய மற்றும் பின்தங்காப் பகுதிகளில் மாதிரிப்பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. இதனடிப்படையில் அக்.28,2013க்குள் மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கவேண்டுமென்றும் அக்.30ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறியவருகிறோம். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடு கீழ்க்காணும் காரணங்களுக்காக வன்மையாக கண்டிக்கத்தக்கவை. மறுபரிசீலனைக்கும் உட்படுத்தப்படவேண்டியவை எனக் கருதுகிறோம்.

1. பள்ளிக்கல்வியில் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் மத்திய அரசு தன்ன்னிச்சையாக எடுக்கின்ற முடிவுகளை அமல்படுத்தும் ஏதுவாளரைப் போல, உதவியாளரைப்போல மாநில அரசுகளைக் கருதுவது.

2. PPP திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசின் CBSE கல்வித்திட்டத்தின்படியே இருக்கும், இயங்கும் என மத்திய அரசு கூறுகிறது. இதன் மூலம் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையையும் பன்முகக் கலாச்சாரத்தினையும் பிராந்திய வேறுபாடுகளுக்கு தக்கவாறு கல்வித்திட்டத்தை அமைத்துக்கொள்ளுதல் என்ற நடைமுறைக்கு முரணானது.

3. PPP என்ற திட்டம் மறைமுகமாக தனியார்மயத்தை ஊக்குவிப்பதே ஆகும். குறிப்பாக PPP திட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வியை முழுவதுமாக கார்ப்ரேட் நிறுவனங்களின் வணிக லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. ஏற்கனவே தனியார்மயத்தால் கல்வித்தரம் சீரழிந்துபோயுள்ள இந்திய சமூகத்தில் மேலும் சீரழிவையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் எனவே தமிழக அரசு நாளை நடக்க இருக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு தன்னிச்சையானதும் கூட்டாட்சிமுறைக்கு விரோதமானதுமான இச்செயல்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்னர் தமிழக மக்களின் நலனையும் தமிழக பள்ளிக்கல்வி நலனையும் கருத்தில்கொண்டு இத்திட்டத்தினை ஆழமாகப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறது. 

மாநிலப்பொதுச்செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

No comments:

Post a Comment