Sunday, 21 June 2015

மழலையர் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்: 2015

புற்றீசல் போல பெருகிவிட்ட மழலையர் பள்ளிகளுக்கென எந்தவித வழிகாட்டுதலும் இல்லை... அங்கீகாரம் பெற்றும் பெறாமலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் வீட்டின் கொல்லைப்புறங்களில் கூட நடந்துவருகின்றன. இப்பள்ளிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்னும் நண்பர் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. "நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்ட பிறகும், அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசுத் தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள்) இந்த விதிமுறைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வருகிற 22-ஆம் தேதிக்குள் "இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வரைவு குறிப்பிடும் சில முக்கிய அம்சங்கள் இவைதான்.. நாம் இது குறித்து விவாதித்து விரைவில் நமது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்..

ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகள் இவ்விதிமுறைகள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த 3 மாதங்களுக்குள் பள்ளி அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளித்திருக்க வேண்டும். 

புதிதாகத் தொடங்கப்படக் கூடிய பள்ளிகள் தொடங்குவதற்கு முன் அங்கீகாரம் பெற வேண்டும்..

அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்திற்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) மற்றும் அந்தந்த வட்டாரத்திற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அடங்கிய குழு அப்பள்ளியை பார்வையிட்டு அங்கீகாரம் வழங்கலாமா கூடாதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யும்.. 

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரிந்துரை கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்திற்குள் அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான/ நிராகரிக்கப்பட்டதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும்..


வழங்கப்படும் அங்கீகாரமானது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.. மூன்று ஆண்டுகள் முடிவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலருக்கு அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்..

பள்ளிக்கட்டிடம் சொந்தமானதாகவோ அல்லது குத்தகையெனில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.. கண்டிப்பாக சிமெண்ட் காண்கீரீட் கட்டிடமாக இருக்க வேண்டும்.. இரும்பு முள்வேலி கூடாது. குழந்தைக்கு 10 ச.அ. என்ற அளவில் இருக்கவேண்டும்.. வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.. இருவாசல்கள் கொண்டதாக இருக்கவேண்டும். போதிய அளவிலான கழிப்பறைகள் மற்றும் விளையாடுவதற்கான மைதான வசதிகள் இருக்கவேண்டும்.. 

ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 15:1 என்ற அளவில் இருக்கவேண்டும். பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கல்வியியல்/ மனையியல் பட்டய/ பட்டப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

ஜூலை 31 அன்று ஒன்றரை வயது முடிந்துள்ள குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும்.. வகுப்பிற்கு 15 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். பள்ளியிலிருந்து 1 கி.மீ.க்குள் வசிப்பிடம் உள்ள குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். ஒரு குழந்தை 20-30 நிமிடங்களுக்கு மேல் பயணிக்காத அளவில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment