எந்தவித வழிகாட்டுதலும் வரையரையும் இல்லாமல் மாநிலம் முழுவதும் புற்றீசல் போல பெருகிவிட்ட மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்.பாலசுப்பிரமணியன் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. இந்த விதிமுறைகளை விரைவில் இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு மழலையர் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்-2015 ஐ இணையதளத்தில் வெளியிட்டு மக்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தது. தமிழகத்தில் மழலையர் பள்ளிகள், மழலையர் முன்பருவப் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை ஜூலை 22-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவாதித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பின்வரும் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
ஏற்கனவே இயங்கி வருகின்ற மழலையர் பள்ளிகள் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 மூன்று மாதங்களுக்குள் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அப்பள்ளிகள் பூர்த்திசெய்திட வேண்டும் எனவும் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.. தேவையான வசதிகளைப் பூர்த்தி செய்யாத, பூர்த்தி செய்ய இயலாத, ஏற்கனவே இயங்கி வருகின்ற பள்ளிகளுக்கான அங்கீகாரம் / அனுமதி மறுக்கப்படுதல் வேண்டும் ; குழந்தைகளின் நலனில் எவ்வித சமரசமும் கூடாது. அல்லது என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையேனும் தெளிவுபடுத்திட வேண்டும்.
விண்ணப்பித்துள்ள பள்ளிகளை பார்வையிடும் குழுவில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமின்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தன்னார்வ மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்கள், குழந்தை உரிமை ஆர்வலர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அங்கீகாரம் வழங்குதல், புதுப்பித்தல் ஆகிய நடைமுறைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
ஒரு மழலையர் பள்ளி இயங்குவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு பரப்பளவிலான இடம் தேவை என்பது தெளிவாக வரையறுக்கப்படவேண்டும்.. இத்தனை குழந்தைகளுக்கு இத்தனை கழிப்பறைகள் தேவை எனவும், இவ்வளவு பரப்பளவிலான விளையாட்டு மைதானம் தேவை என்பதையும் திட்டவட்டமாக வரையறுக்க வேண்டும்.
ஒன்றரை வயதுக் குழந்தைகள் தேவைப்படும் வேளைகளில் தூங்குவதற்கு இரண்டடி உயரத்திலான தொட்டில்கள் அவசியம் அமைக்கப்படுதல் வேண்டும்.. வீட்டில் இருக்கின்ற பாதுகாப்பு உணர்வுடன் குழந்தைகள் தூங்கமுடியும்.
மழலையர் பள்ளிகளில் பயிலக்கூடிய குழந்தைகளைப் புரிந்துகொள்ள, அவர்களுக்கான திறன்களை வளர்த்தெடுக்க ஆசிரியர் பயிற்சி / இளங்கலை கல்வியியல் ஆகிய படிப்புகளுடன் மாண்டிசோரி பயிற்சி முடித்தவர்களாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
பயிற்றுமொழி குறித்து அவசியம் வரையறுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
-நன்றி: தீக்கதிர் நாளிதழ்
No comments:
Post a Comment