Saturday, 11 April 2015

ஆள்பவரின் தேவையை மையமாகக் கொண்டு கட்டப்பட்டதே இன்றைய கல்வி முறை: ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல்


ச. தமிழ்ச்செல்வன் சிறுகதையாசிரியராக மலர்ந்தவர். 

அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு "வெயிலோடு போய்' 1984-ல் வெளிவந்தபோது, எல்லாருடைய கண்களிலும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியைக் காண முடிந்தது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியரான தமிழ்ச்செல்வன், வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராக அவர் ஆற்றிய பணிகள் முற்போக்கு இலக்கிய உலகில் முத்திரை பதித்தவை. தொழிற்சங்க அனுபவமுள்ள தமிழ்ச்செல்வன் அந்த அனுபவங்களை "ஜிந்தா பாத் ஜிந்தாபாத் - தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள்' என்ற நூலாக எழுதியிருக்கிறார். பெண் விடுதலை, கல்வி ஆகிய துறைகளிலும் தமிழ்ச்செல்வனின் பணிகள் அளவிட முடியா தவை. "பூ' திரைப்படத்துக்கான சிறந்த கதாசிரியர் விருது தமிழக அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஓர் அற்புதமான தோழர்; மனிதர். அவரிடம் பேசியதிலிலிருந்து...

எழுத்துலகுக்கு வந்தது எப்படி?. தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ், அப்பா மே.சு. சண்முகம், தம்பிகள் கோணங்கி, முருக பூபதி என தலைமுறை தாண்டி கலை, இலக்கிய ஈடுபாடு வந்ததற்கு சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

""வீட்டுச் சூழல் நிச்சயமாக தூண்டுதலாக இருந்தது. தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நான் பிறந்த ஆண்டில் இறந்து விட்டார். அவரை நான் புரிந்து கொண்டது ரொம்பப் பின்னாடிதான். சொல்லப் போனால் தாத்தாவின் இலக்கிய முகத்தை சரியாகவும் முழுமையாகவும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என் கடைசித் தம்பி முருக பூபதிதான். அவன்தான் ஊரெல்லாம் தேடி தாத்தாவின் எழுத்துக்களையும் டைரிகளையும் வீட்டுக்குக் கொண்டு சேர்த்தவன்.

என்னை ஈர்த்த முதல் எழுத்தாளர் என் அப்பாதான். "புரட்சி' என்கிற பேரில் அவர் பள்ளிக்காலத்தில் நடத்திய கையெழுத்து இதழும், அதில் அவர் எழுதிய கட்டுரைகளும்தான் முதல் தூண்டுதல். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று கலந்து கொண்டதும், அதற்கு அப்பாவும் சித்தப்பாவும் ஒத்தாசையாக இருந்ததும் இந்த மாதிரி வேலையெல்லாம் முக்கியம் என்கிற உணர்வை ஏற்படுத்தின. பெரிய எழுத்தாளனாகிப் பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற ஆசை சின்ன வயசிலேயே ஏற்பட்டது. இன்று திரும்பிப் பார்க்கையில் என்னை கதைகள் எழுதத் தூண்டிய முக்கிய காரணியாக நான் உணர்வது- சிறு வயதில் என் அப்பாவும் அம்மாவும் வேறு வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போய்க்கொண்டே இருந்ததால், நெடுங்காலம் இளவயதில் மனதில் தேங்கியிருந்த அப்பா, அம்மாகூடச் சேர்ந்து வாழ்வதற்கான ஏக்கம்தான் என்பேன். கொஞ்ச காலம் கவிதைகள் எழுதினேன். அது கைவராது என்று உணர்ந்தபோது அதைக் கைவிட்டேன். அச்சான கவிதைகளைக்கூட சேர்த்து வைக்கவில்லை. பின்னர் கொஞ்சம் கதைகள் எழுதினேன். அதுவும் சரியாக வரவில்லை என்று தோன்றியது. பிறகு கொஞ்ச காலம் நாடகம் போட்டோம். சப்தர் கொலையை அடுத்து வீச்சோடு பலப்பல கிராமங்களுக்கும் சென்று நாடகங்கள் போட்டோம்.

இதற்கிடையில் நான் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு "தமுஎச'வில் முழுமையாகக் கரைந்தேன். அது வளர்த்த சமூக அக்கறையால் கதையல்லாத எழுத்துகளின் பக்கம் திரும்பினேன், அதைத்தான் இப்போது விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். கதைகள் எழுதும் மனநிலை இருந்தும் போதிய அவகாசம் இல்லாததால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. 

அப்பா எங்கள் எழுத்தை ஆதரித்ததாலும், நான் அவனைப் புறக் கணித்ததாலும் கோணங்கி எழுத வந்தான். முருகபூபதி நாடகத்தின் மீது அவனுக்கே ஏற்பட்ட ஆர்வத்திலிலிருந்து எழுத வந்துவிட்டான்.

எங்கள் அப்பாவின் நாவல்கள் "பெரிய வயல்', "நிலம் மறுகும் நாடோடி' இரண்டும், "பூட்டுப் பாம்படம்' சிறுகதைத் தொகுப்பும் இப்போது வந்துள்ள "மண்ணின் கதைகள்' கவிதைத் தொகுப்பும் மற்றவர்களுக்கு எப்படியோ எங்களுக்கு மிக முக்கியமான புத்தகங்கள்.''

எல்லாரையும்போலவே முதலிலில் கவிதை எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து கவிதை எழுதாமற் போனது ஏன்?

""அது ரொம்பக் கஷ்டமான வேலை என்பதைப் புரிந்து கொண்ட தால் விட்டுவிட்டேன். தவிர, நான் முதலில் எழுதியது கவிதை அல்ல. முதலில் அச்சானதுதான் கவிதை. கதைகள்தாம் முதலில் எழுதினேன். பல பத்திரிகைகளுக்கு அனுப்பி சோர்ந்து விட்டேன். அப்புறம் தான் கவிதைகள் எழுதினேன். ரொம்ப நாள் கழித்து என் முதல் கதையை "தாமரை' வெளியிட்டது.''

உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான "வெயிலோடு போய்' யதார்த்த வகை எழுத்தாக இருந்தது. ஆனால் அடுத்த சிறுகதைத் தொகுப்பான "வாளின் தனிமை'யில் உள்ள சில கதைகள் அவ்வாறில்லை. எழுத்து தொடர்பான உங்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்பட்டது காரணமா? அல்லது அன்று தமிழ் எழுத்துலகில் புதிதாகத் தோன்றி வளர்ந்த போக்கில் உங்களை அடையாளம் காணும் முயற்சியா?

""அன்று இலக்கிய உலகில் நடந்த யதார்த்தவாதம் பற்றிய மோசமான உரையாடல்களால் பாதிக்கப்பட்டேன் என்பதுதான் உண்மை. எல்லா வகையிலும் எழுதிப்பார்க்கும் ஆசையும் காரணம். "வாளின் தனிமை'யில் ஐந்து கதைகள் மட்டுமே அப்படி இருக்கும். மற்ற எல்லாம் "வெயிலோடு போயின்' தொடர்ச்சியாகத்தான் இருந்தது.''

சிறுகதைகளில் அழுத்தமாகக் கால் பதித்த நீங்கள், படைப் பிலக்கியம் சாராத கட்டுரை நூல்களில் அதிகக் கவனம் செலுத்துவதேன்?

""இயக்கத்தின் பகுதியாகிவிட்ட என் மனதில் இன்று இது தேவை என்கிற உணர்வு அழுத்தமாக இருப்பதால் எளிய சிறுநூல்களை எழுதலானேன். என் இளம் தோழர்களுக்கும் பரந்துபட்ட உழைப்பாளி மக்களுக்கும் கல்வி புகட்டும் பணி நம்போன்ற படித்த மத்தியதர வர்க்கத்தின் முக்கியமான கடமை என்று கருதுகிறேன். இந்திய தொழிலாளி வர்க்கம் இன்னும் வர்க்க உணர்வு பெறாத நிலை நீடிப்ப தற்கு மத்தியதர வர்க்கம் ஆற்றத் தவறிய இக்கடமை யும் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன். சிறுகதையிலும் ரொம்ப அழுத்தமாக நான் கால் பதிக்க வில்லை. சில நல்ல முயற்சிகளாக என் கதைகள் இருந்தன.''

இடதுசாரி இயக்கத் தொடர்பு உள்ளவர் நீங்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்திருக்கிறீர்கள். இது உங்கள் படைப்பு முயற்சிக்கு எந்த அளவுக்குத் துணை செய்திருக்கிறது?

""தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு பூந்தோட்டம். அங்கே செடிகள் வளர்வதற்கான நல்ல சூழலும் தண்ணீரும் காற்றும் தட்ப வெப்பமும் இருக்கும். ஒரு செடி வளர்வது என்பது முழுக்க முழுக்க அச்செடி பூமியிலிலிருந்தும் சூழலிலிலிருந்தும் எடுக்க வேண்டியவற்றை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது. எழுத்து பெரிதும் தனி முயற்சி அல்லவா? சங்கம் கொட்டு அடிக்கும். பீப்பீ ஊதும். சாமி ஆட வேண்டியது அவனவன் -அவளவள் பிரச்சினை.''

தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எந்த அளவுக்கு உதவியிருக்கிறது?

""பொதுவான இலக்கிய வளர்ச்சிக்கும் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கும் தமுஎகச ஆற்றியுள்ள- ஆற்றி வரும் பங்கு குறிப்பிடத் தக்கது. புறக்கணிக்க முடியாதது. எல்லாத் துறைகளிலும் தடம் பதித்த படைப்பாளிகள் தமுஎகசவின் தலைவர்களாக இருக்கிறார்கள். எந்தப் பட்டியலிலிலும் இடம் பெறும் நாவல்களைத் தந்தவர்களான கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், சாகித்ய அகாதமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, அருணன், சோலை சுந்தர பெருமாள், தேனி சீருடையான், ம. காமுத்துரை, கீரனூர் ஜாகீர்ராஜா, சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் எனப் பலரும் தமுஎகசவின் தலைவர்கள். நாவலை அடுத்து சிறுகதையை எடுத்துக் கொண்டால் கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச் செல்வன், உதயஷங்கர், பவா. செல்லதுரை, ஆதவன் தீட்சண்யா, கீரனூர் ஜாகீர்ராஜா, போடி மாலன், காமுத்துரை, சீருடையான், வெண்ணிலா, நாறும்பூ நாதன், இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றுள்ள பாரதி கிருஷ்ணகுமார், எஸ். லட்சுமணப் பெருமாள், சுப்பாராவ் என்று ஒரு மிகப்பெரிய பட்டியல் இருக்கிறது. கவிதை உலகில் கந்தர்வன் துவங்கி சமீபத்தில் விருது பெற்ற சபரிநாதன் வரை ஏராளமான கவிஞர்கள் தமுஎகசவைச் சேர்ந்தவர்கள். பிரளயன் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற நாடகக்காரர்கள் தமுஎகசவின் நிர்வாகிகள். கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி, கலைமாமணி புரிசை சம்பந்தன், புதுகை பூபாளம் குழு, திண்டுக்கல் சக்தி போர்ப்பறை உள்ளிட்ட கூத்துக் கலைஞர்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இன்னும் கரிசல் குயில்கள் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, கின்னஸ் சாதனை புரிந்துள்ள புதுவை சப்தர் ஹாஷ்மி குழு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இசைக் குழுக்கள் எம் அமைப்பில் இயங்கி வருகின்றன. ஸ்ரீரசா, வெண்புறா உள்ளிட்ட நல்ல ஓவியர்கள் பலரும் இருக்கிறார்கள்.





மேடைப்பேச்சை எடுத்துக்கொண்டால் இன்று தமுஎகசவில்தான் பேச்சாளர்களே இருக்கிறார்கள் என்று சொல்லுமளவுக்கு பாரதி கிருஷ்ணகுமார், நந்தலாலா, மதுக்கூர் ராமலிலிங்கம், முத்துநிலவன், ஜீவி என்று பெரும்படையே இங்குதான் இருக்கிறது. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் கலை இலக்கிய இரவுகள் நடத்தி, விடிய விடிய மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்க வேறு எந்த கலை இலக்கிய அமைப்பால் முடியும்? என்ன துறையானாலும் அதில் தமுஎகச படைப்பாளிகளை யாரும் புறக்கணித்துவிட முடியாது. ஆகவே முற்போக்குக் கலை இலக்கியத்துக்கும் பொதுவாக தமிழ்க் கலை இலக்கிய உலகுக்கும் தமுஎகச அளப்பரிய பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது. மற்றவர்கள் மனம் திறந்து இவர்களைப் பாராட்டப் பழகாததால் வெளிச்சம் போதிய அளவுக்கு இவர்கள் மீது விழவில்லை.''

இன்று தமிழ் இலக்கியத்தில் பல போக்குகள் நிலவுகின்றன. முன்பு ஒரு குழுவினர் கலை கலைக்காகவே என்று சொல்லிலிக் கொண்டிருந்தபோது, இடதுசாரி கருத்துள்ளவர்கள் கலை மக்களுக்காகவே என்று பரப்புரை செய்து வந்தனர். அந்த நோக்கில் தீவிரமான விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் கைலாசபதி, கோ. கேசவன், அருணன், கே. முத்தையா போன்றவர்கள் முன்வைத்தனர். ஆனால் இன்று மார்க்சிய அடிப்படை யிலான இலக்கிய விமர்சனங்கள் அருகி வருகின்றன. இதற்கு என்ன காரணம்? இதன் விளைவாக மக்களுக்கு எதிரான கருத்தியல் சார்ந்த பல இலக்கியப் படைப்புகளும், படைப் பாளிகளும் எழுதிக் குவித்து வருகின்றனர். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

""அருணன் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் ஆய்வுத்துறையில் மிகப்பெரிய பங்களிப்புகளைச் செய்து வருகிறார். அவருடைய "தமிழரின் தத்துவ மரபு' நூலுக்கு ஈடாக வேறொன் றைக் குறிப்பிட முடியாது என்று எஸ்.வி. ராஜதுரை குறிப்பிடுகி றார். அவருடைய "காலந்தோறும் பிராமணியம்' என்கிற எட்டு நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வுலகுக்கு அவர் அளித்துள்ள கொடை என்பேன். ஆ. சிவசுப்பிரமணியன், ந. முத்துமோகன், பா. ஆனந்த குமார், குமரி சொக்கலிலிங்கம், பா. செயப்பிரகாசம், அ. மார்க்ஸ், மணி மாறன் போன்றோரும் இடதுசாரிப் பார்வையோடு விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். மக்களுக்கு எதிரான எழுத்துகள் அல்லது பிற்போக்கு எழுத்துகள் இன்றல்ல- என்றுமே அரசு மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் உதவியோடு தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். நாம் விமர்சனத்தால் மட்டும் அவற்றை வீழ்த்த முடியாது. படைக்க வேண்டும். பரந்துபட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்க வேண்டும். இன்று தமிழகத்தில் பரவலாகி வரும் புத்தகக் கண்காட்சிகள் இடதுசாரிகள் இல்லாமல் இவ்வளவு ஊர்களில் நடத்தியிருக்கவே வாய்ப்பில்லை. வாசிப்பு இயக்கம், புத்தக விற்பனை இயக்கம் போன்றவற்றை தமுஎகசவும் எங்கள் பாரதி புத்தகாலயமும் திட்டமிட்ட முறையில் எல்லா மாவட் டங்களிலும் செய்து வருகிறோம். இதன் விளைவுகளைத் தமிழகம் நிச்சயம் விரைவில் காணும் என்று நம்புகிறேன். கலையையும் இலக்கியத்தையும் இயக்கமாக மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம்தான் நச்சிலக்கியத்தின் வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள முடியும். மக்களுக்கு கல்வி அறிவும் வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கம் தமுஎகச மற்றும் எமது சகோதர அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (நானும் அதில் பொறுப்பாளராக இருந்தவன்) இணைந்து நடத்திய இயக்கமாகும். அரசு மட்டும் அதை நடத்தியிருக்க முடியாது. நாங்கள் இணைந்ததால்தான் அது மக்கள் இயக்கமாக மாறியது. எழுத்தறிவு இயக்கம் இலக்கிய வாசிப்புக்குமுன் தேவை என்பதால் நாங்கள் அதில் இறங்கினோம். இப்படித் தொலைநோக்கோடு பல காரியங்கள் ஆற்றி நீங்கள் குறிப்பிட்ட மக்கள் விரோத இலக்கியங்களை எதிர் கொள்வோம்.''

உங்களுடைய இலக்கிய நண்பர்களைப் பற்றி "சக பயணிகள்' என்று தொடர் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய கூர்மையான விமர்சனப் பார்வை அவற்றில் தென்பட வில்லை. நட்புதான் மேலோங்கியிருக்கிறது. உங்களுடைய இந்தப் பண்புதான், மக்கள் நலன் சாராத பல படைப்பாளி களுடனான நல்லுறவுக்குத் துணை நிற்கிறதா?

""என் சக பயணிகள் என்கிற தலைப்பில் நான் "புத்தகம் பேசுது' இதழில் மாதம்தோறும் எழுதிவரும் தொடர், என்னை பாதித்த- என் மன வளர்ச்சியில் பங்காற்றிய படைப்பாளிகள் பற்றி இளம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கம் கொண்டது. அதற் கேற்ற வகையில் அது எழுதப்படுகிறது. இலக்கிய விமர்சனமும் ஆய்வு செய்வதும் என் வேலை அல்ல. இத்தொடரில் அது நோக்க மும் அல்ல. எனக்கு கூர்மையான விமர்சனப் பார்வை இல்லை என்கிற குற்றம் சாட்டும் தொனியும் இக்கேள்வியில் அடங்கி இருக்கிறது. விமர்சிக்க வேண்டியவர்களைக்கூட நட்பு காரணமாக நான் விமர்சிக்காமல் விடுகிறேன் என்கிற குற்றச்சாட்டும் இக்கேள்வி யில் அடங்கியிருக்கிறது. ஓர் இடதுசாரி பழகக்கூடாத மனிதர்களோடு எல்லாம் நான் நட்பு பாராட்டுகிறேன் என்கிற விமர்சனமும் இக் கேள்வியில் இருக்கிறது. ரொம்ப சரி. நான் அப்படித்தான் இருக்கி றேன் போலும். என்னால் இப்படித்தான் இருக்க முடியும். இதுதான் எனக்குச் சரி என்று தோன்றுகிறது. காகம் குயிலாக முடியாது. குயில் புறாவாக முடியாதில்லையா? புறாக்கூட்டில் போய் உட்கார்வ தால் மட்டும் குருவி புறாவாகி விடாதல்லவா? நான் என்னவாக இருக்கிறேனோ அப்படிப்பட்டவனாகவே என்னை ஏற்றுக்கொள்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். அது போதும் நமக்கு. இன்னொருவர் எதிர்பார்ப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது.''

ஒரு படைப்பாளி என்பதையும் தாண்டி தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர் நீங்கள். இன்றைய தொழிற்சங்கங் களின் நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

""இன்றைய தொழில் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தொழிற்சங்க நிலையும் இருக்கும். இன்று நிரந்தரத் தொழிலாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து விட்டது. எல்லாம் தற்காலிலிக ஊழியர், காண்ட்ராக்ட் ஊழியர், அவுட்சோர்சிங் முறை என்று வந்துவிட்டது. ஆகவே பழைய பாணி யிலேயே தொழிற்சங்க இயக்கத்தை நடத்திச் செல்ல முடியாது என்கிற புதிய நிலை உருவாகியுள்ளது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்குள் இந்திய தொழிற்சங்க மற்றும் தொழில் தகராறு சட்டமெல்லாம் செல்லாது என்று நாம் தேர்ந்தெடுத்த அரசுகளே அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளன. அதை மீறி அக்கம்பெனிகளுக்குள் சி.ஐ.டி.யு சங்கம் துவக்கப்பட்டதும், போராட்டங்கள் நடைபெற்றதும், தோழர் ஏ. சவுந்திரராசனை கைவிலங்கு பூட்டிக் கைது செய்து அழைத்துச் சென்றதும் சமீபத்திய வரலாறு. பன்னாட்டுக் கம்பெனி களுக்கு எதிராக தமிழ்நாடு சிஐடியு நடத்திவரும் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் உடையவை. சமூக ஆய்வாளர்கள்கூட அதை இன்னும் சரியாக கவனிக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது. திருப்பூரில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் ஒரு மில்லை முற்றுகையிட்டு உடைத்து நொறுக்கியது அதைவிடச் சமீபத்திய செய்தி. போலீஸ் அனுமதிபெற்ற உண்ணாவிரதம், தர்ணா போன்ற வடிவங்களும் தொடர்கின்றன. அவை போதாது என்கிற யதார்த்த நிலையும் வளர்ந்து வருகிறது. ஆள் நடமாட்டமிலாத சந்து பொந்து களில்தான் ஆர்ப்பாட்டங்கள் நடத்த போலீஸ் அனுமதி தருகிறது. இது காலப்போக்கில் காவல்துறையின் ஆணையை மதிக்காமல் தொழிலாளி வர்க்கம் தெருவில் இறங்கும் சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகிறேன். 

மிக அதிகமான தொழிலாளர் இயக்கங்கள் தேவைப்படுகிற இக் காலத்தில், தொழிலாளிகள் அந்த அளவுக்கு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாத மனநிலைக்குத் தயாரிக்கப்பட்டு வருவது ஆபத்து. பண் பாட்டுத் தளத்தில் தொழிலாளி தனக்கே எதிராகத் தயாரிக்கப்படுகி றான். அதை தொழிலாளர் இயக்கம் போதிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கிருக்கிறது. மத்தியதர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு முன்னுதாரணமான இயக்க மாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது. ஒரு சமூகப் பார்வையோடு தன் ஊழியர்களை அது வளர்க்கப் போராடுகிறது''. 

பெண் விடுதலை நோக்கிலான நூல்களும் எழுதியிருக்கிறீர்கள். பெண் விடுதலை என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை- சமைப்பது உட்பட- ஆண்கள் செய்யும் நிலை வந்தால் பெண் விடுதலை சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

"""ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' என்கிற என் நூலை வைத்தும் ஆண்கள் வீட்டு வேலைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நான் பேசி வருவதை வைத்தும் இக்கேள்வி எழுப்பப்படுவதாக புரிந்துகொள்கிறேன். ஆண்கள் சமைத்துவிட்டால் போதும்; எல்லாம் சரியாகப்போகும் என்பது என் பார்வையல்ல. நான் அப்படி பேசவும் இல்லை; எழுத வும் இல்லை. "பெண்மை என்றொரு கற்பிதம்', "நமக்கான குடும்பம்' போன்ற என் பிற நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டுகிறேன். நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுபடாமல் மனிதகுல விடுதலை சாத்தியமில்லை என்பது தோழர் லெனின் கூற்று. மனித குலத்தில் சரிபாதியான பெண்கள் காலம் காலமாக அடுப்படியில் புகைந்து கொண்டிருப்பது பற்றி எந்த அக்கறையுமற்ற நம் சமூகம் எப்படி விடுதலை பெறும்? "பொங்கவும் தெரியும் திங்கவும் தெரியும் பெண்களுக்கு. ஆனால் ஆண்களுக்கு திங்க மட்டும் தான் தெரியும்' என்பது ஆணாகிய எனக்குக் கேவலமாகப்படுகிறது. ஆகவே பொங்காமல் திங்க மட்டும் செய்யும் ஆண்கள் பற்றிஎனக்குக் கேவலமான பார்வை மனதில் ஆழமாக உருவாகி விட்டது. ஆகவே அதுபற்றிக் கூடுதலாகப் பேசிவருகிறேன் என நினைக் கிறேன்.

வீட்டில் சக மனுஷியான என் அம்மா, என் சகோதரி, என் வாழ்க்கைத் துணைவி இவர்களின் வேலைகளைக்கூடப் பகிர்ந்து கொள்ளாமல் என்ன பெரிய சமூக மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும் என்னால்? ஆண் - பெண் சமத்துவத்தை நான் (ஒய் டழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங்) கொள்கைரீதியான பிரச்சினையாக விளங்கிக் கொள்ள மறுக்கிறேன். அது மிகப் பிரதானமாக நடைமுறைரீதியான ஒன்று என்று மாற்ற விரும்புகிறேன். நம் அன்றாட வாழ்வின் பகுதியாக பெண்ணியம் மாறியாக வேண்டும். கொள்கை மாற்றத்துக்கான போராட்டத்தோடு அதைப் பின்னர் இணைத்துக் கொள்ளலாம்.''

ஒருகாலத்தில் சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் அரசியல் பாடல்களைப் பாடினாலே, அதற்கு இடதுசாரிகளிடம் எதிர்ப்பு இருந்தது. அரசியல் கருத்துகள் நிற்காது; சினிமா மெட்டுகளே நிற்கும் என்பதுதான் அதற்குக் காரணம். ஆனால் இன்று கலை இரவு நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்கு ஆடும் போக்கு உள்ளது. அதை இயக்கம் சார்ந்தவர்களே ரசிக்கவும் செய்கிறார்கள். இந்த நிலை எப்படி வந்தது? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? 

""இப்போதும் சினிமா மெட்டு இல்லாத பாடல்களையே கலை இரவு மேடைகளில் பாடி வருகிறோம். எங்கேனும் ஓரிரு நிகழ்ச்சி களில் நீங்கள் சொன்ன நிலை இருந்திருக்கலாம். அது எந்த ஊர் என்று சொன்னால் திருத்திக்கொள்ளலாம். பெரும்போக்காக இருப்பதும், எமது கொள்கை நிலைப்பாடாக இருப்பதும், கருத்தும் கலையழகும் சேர்ந்த பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே. ஏதேனும் ஒருசில சினிமாப் பாடல் மெட்டுகள் அதற்கு உதவினால் பயன்படுத்திக் கொள்வோம். சினிமாவுக்கும் சினிமாப் பாடல்களுக்கும் நாம் எதிரிகள் அல்ல. சினிமா மெட்டில் பாடினால் கேட்பவர் மனதில் அந்த சினிமா காட்சிதான் ஓடும்- நம் பாடலிலின் கருத்து சென்று சேராது என்பதால்தான் சினிமாப் பாடல் மெட்டுக்களைத் தவிர்க்கிறோம். பாவலர் வரதராசன் உள்ளிட்ட அன்றைய இயக்கப் பாடகர்கள் முழுக்கவும் சினிமாப் பாடல் மெட்டிலேயே பாடி வெற்றிகண்ட வரலாறும் இருக்கிறது. எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளலாம். நம் நோக்கம் சிதையாவண்ணம் பயன்படுத்தலாம். இறுக்கமான சட்டகமாக எதையும் மாற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து.''

அறிவொளி இயக்க அனுபவங்கள் உங்களுக்கு எவற்றைக் கற்றுத் தந்தன? இன்றைய கல்விமுறையைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

""அறிவொளி இயக்கம் என்னை இன்னும் நல்ல மனிதனாக மாற்றியது என்று நம்புகிறேன். "இருளும் ஒளியும்' என்றொரு புத்தகத்தில் விரிவாக என் அனுபவங்களை எழுதியிருக் கிறேன். மக்களிடம் வேலை செய்வது எப்படி என்பதற்கான சில முன் மாதிரிகளை அறிவொளி இயக்கம் எங்களுக்குத் தந்து சென்றுள்ளது. மக்களிடம் கற்றுக் கொள்வது என்றால் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக நான் புரிந்து கொண்ட இடம் கிராமப்புற அறிவொளி மையங்கள் என்பேன். பேராசிரியர் ச. மாடசாமி, டாக்டர் ராமானுஜம், டாக்டர் ஆத்ரேயா, டாக்டர் சுந்தர்ராமன், த.வி. வெங்கடேஸ்வரன் போன்ற மகத்தான மனிதர் களை என் வாழ்வில் கொண்டுவந்து சேர்த்த இயக்கம் அறிவொளி இயக்கம். இலக்கியம் பற்றிய எனது பார்வையைத் தலைகீழாக மாற்றியதும், என் எழுத்து மொழியைப் பெரிதும் மாற்றியமைத்ததும் அறிவொளி இயக்கம்தான். இதுபோக ஆயிரக்கணக்கான என் போன்ற சக தொண்டர்களை எனக்குப் பெற்றுத் தந்ததும் அந்த இயக்கம்தான். 

இன்றைய கல்வி முறை பற்றி தனியாக பத்து இருபது பக்கமாவது பேச வேண்டிய விஷயம் இருக்கிறது. இன்றுள்ள கல்வி முறை தலை கீழாக மாற்றப்பட வேண்டும். இது ஆள்பவரின் தேவையை மையமா கக் கொண்டு கட்டப்பட்ட கல்விமுறை. நாம் கோருவது குழந்தை களை மையமாகக் கொண்ட கல்வி முறை. ஏகலைவனின் கட்டை விரல் துண்டாடப்பட்டதுபோல நம் குழந்தைகளின் சுய அறிவை- எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் திறனை வெட்டி எறியும் (ஈர்ய்ற்ழ்ர்ப்ப்ங்க் கங்ஹழ்ய்ண்ய்ஞ்) கல்வி முறையே இன்று நம் தலையில் கட்டப் பட்டுள்ளது. இதை ரிப்பேர் செய்து பயன்படுத்த முடியாது. வெட்டி எறிந்துவிட்டுப் புதிய விதைதான் நட வேண்டும்.

சமச்சீர் கல்விக்கான எமது போராட்டங்களும், "ஆளும் வர்க்கம் தரும் கல்வியையே சமசீராகத் தா' என்பற்கான போராட்டமாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்ல... அல்ல. நாம் கோருவது முற்றி லும் வேறான ஒரு கல்வி முறை- உருவத்தாலும், உள்ளடக்கத்தாலும்.''

ஒரு படைப்பாளி கட்சி சார்ந்து இயங் கும்போது அவனுக்கு ஏற்படுகிற நன்மை- தீமைகள் எவை? கட்சி சில நேரங்களில் மக்கள் நலனுக்கு முரணாகச் செயல்படும் போது, ஒரு மக்கள் நலன் சார்ந்த படைப்பாளி அதை நியாயப்படுத்த முடியாமல் தவிக்க நேர்கிறது. படைப்பு முயற்சிகள் தடைப்படுகின்றன. கட்சி சார்ந்து இயங்குவதேஅவனை முடக்கிப் போட்டுவிடாதா?

""நான் கட்சி ஊழியனாகக் கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன். தொடர்ந்து எழுதிக்கொண்டும் வருகிறேன். எனக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. எழுத முடிவதும் எழுத முடியாமல் போவதும் என் பிரச்சினை. என் கட்சி எப்போதும் மக்கள் நலனுக்கு விரோதமாகப் போனதில்லை. ஆகவே இந்தக் கேள்விக்கு இடமில்லை. அப்படி மக்களுக்கு விரோதமாகப் போகும் கட்சியில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு அது பிரச்சினைதான்.''

"பூ' திரைப்படத்துக்காக உங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோடிக்கணக்கான முதலீட்டுடன் இன்று செயல்படும் தமிழ்த்திரைப்பட உலகில் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் எப்படி இடம் பெற முடியும்? அப்படியே முயற்சி செய்தாலும் வணிகவிதிகளுக்கு உட்பட்டுத்தானே இயங்க முடியும்?

""கிடைக்கிற வெளியைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்கி றோம். அதை மட்டும் நம்பிக்கொண்டு இருந்தால் தப்பு. அதன்மீது எந்த பிரேமையோ மயக்கமோ நமக்கில்லை. தெருக்களில் சினிமாக் களைத் திரையிடும் மக்கள் திரைப்பட இயக்கத்தில்தான் தமுஎகச இப்போது அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 500 மையங்களின் தெரு சினிமா இயக்கத்தைக் கட்டும் கனவோடு இயங்கி வருகிறோம். மாவட்டம் தோறும் சொந்த டிவிடி புரொஜெக் டர்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் தயாரிப்பு எனப் பெரும் கனவுகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறோம். இடையில் "பூ', "அரவான்' போல கிடைக்கும் தொடர்புகளை என்ன செய்யலாம் என யோசிக்கிறோம். எதையும் புறக்கணிக்க இப்போது நாங்கள் தயாராக இல்லை. ஆரம்பக் கட்டத்தில் நிற்கிறோம். இன்னும் கொஞ்சம் நகர்ந்த பிறகு பரிசீலனை செய்து பார்ப்போம். தவறுகள் ஏற்பட்டால் சரி செய்து கொண்டு முன்னேறுவோம். திரைப்படத் துறைக்குள்ளும் சமூக அக்கறையும் எங்களைப்போல கனவு களும் உள்ள எண்ணற்ற சக பயணிகள் இருக்கிறார்கள். சினிமாக் காரர்கள் என்று கேலிலிப் புன்னகை செய்து அந்தப் பொக்கிஷங்களைப் புறக்கணிக்க நாங்கள் தயாராக இல்லை.''

கருத்துருவாக்கத்தில் இதழ்களுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஆனால் இடதுசாரி இயக்கத்தினர் தமிழகத்தில் பெரிய அளவுக்கு இந்தத் துறைகளில் பங்களிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

""பணம் இல்லாததுதான்.''

உங்களுடைய குடும்பத்தினரைப் பற்றி...

""என்னுடைய துணைவியார் வெள்ளத்தாய் முதுநிலைப் பட்டதாரி. கணித ஆசிரியையாகப் பத்தமடையில் பணியாற்றுகிறார். என் 
அராஜகமான வாழ்முறையைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு தன் அளவற்ற அன்பால் எங்கள் குடும்பத்தை நடத்திச் செல்கிறார். ஒரே மகன் சித்தார்த்- மருமகள் மகாலட்சுமி என்கிற பிரதீபா கோவையில் வசிக்கிறார்கள். அவர்களும் பொதுவாழ்வோடு குடும்ப வாழ்வை இணைக்கும் ஆர்வமுள்ள தம்பதிகள். 31 ஆண்டு கால எங்கள் குடும்ப வாழ்க்கை என் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு உரமாகவும், ஊக்கம் தருவதாகவும் அமைந்ததால்தான் நான் இப்படியாக இருக்க முடிகிறது.''

சந்திப்பு : எழில்முத்து
படங்கள்: அண்ணல்
நன்றி:  நக்கீரன்

ஆண்கள் சமைத்தால் வேகாதா என்ன?”

”வாசிக்க வாசிக்க, எழுத்து மறைந்து, அதில் சொல்லப்பட்டு இருக்கும் வாழ்க்கை மட்டுமே மனதில் நிற்க வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. உணர்வுமயமான எழுத்துதான் என்னை வசீகரிக்கிறது. நான் நெகிழ்ச்சியானவனாக இருப்பதால் என் எழுத்தும் நெகிழ்ச்சியானதாகவே இருக்கிறது!” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். சிறந்த சிறுகதை ஆசிரியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக, சமூகம், கலை, பண்பாடு குறித்துத் தீவிரமாகச் செயல்படுபவர்…

”இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு அரசியல் பார்வை இருக்கா? பெரும்பாலான பிரச்னைகளில் எழுத்தாளர்கள் மௌனம் சாதிக்கிறார்களே, ஏன்?”
”அரசியல் இல்லாமல் இந்தப் பூமியில் எதுவும் இல்லை. எனக்கு அரசியல் வாடையே ஆகாது என்று சொல்வதே ஒரு அரசியல்தான்! 1940களில் தஞ்சாவூர் பகுதியிலிருந்து மிகப் பெரிய எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சாவூர் பகுதிகளில் விவசாயக் கூலிகள் செய்கிற சிறு தவறுக்குக்கூட சாட்டை அடியும் சாணிப்பாலை வாயில் ஊற்றுகிற கொடுமைகளும் நடந்திருக்கின்றன. அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல், ஆண்பெண்ணுக்கு இடையில் உள்ள காதலை நுட்பமாக விவரிக்கிற எழுத்தையே அந்த மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நடக்கிற அநியாயங்களைப் பார்த்து அமைதியாக இருப்பதும் அரசியல்தான். பெண்ணுடல் பற்றியும் காதலைப் பற்றியும் எந்தக் காலத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம் என்பதிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் ஒகேனக்கல் பிரச்னைக்கு அறிக்கைவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதைச் சக மனிதர்களின் ஜீவாதாரப் பிரச்னையாக, அவலமாகத் தனது எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய தார்மிகப் பொறுப்பு இருக்கிறது!”
”அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் நீங்கள். பாலியல் கல்வி, மாற்றுக் கல்வியின் அவசியங்கள் குறித்த விவாதங்கள், ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குமா..?”
”நம் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை மாற்றி சமத்துவமான சமூகத்தை உருவாக்க, ஒரு கோடி விஷயங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. அதில் ஒரு சிறு முயற்சிதான் பாலியல் கல்வி!
ஆண் குழந்தைகள் 12 வயது வரை அம்மாவின் நெருக்கமான அரவணைப்பில் வளர்கிறார்கள். அதன் பிறகு, திருமணமாகி மனைவி வரும்போதுதான் அவனுக்குப் பெண்ணின் அரவணைப்பு கிடைக்கிறது. 12க்கும் 25க்கும் இடைப்பட்ட இந்த வருடங்களில்தான் ஒருவன் மனிதனாக மாறுகிறான். இந்தக் காலத்தில் ஆண், பெண் உறவு குறித்துச் சரியான புரிதல்கள் நம்மிடையே ஏற்படுவதில்லை. ஆண், பெண் உறவு குறித்த உரையாடல்களை மறுக்கிற சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. இயல்பாக ஓர் ஆணும் பெண்ணும் பேசுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் ஆண்பெண் உடல் குறித்துத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைச் சொல்லாமல் விடும்போதுதான் பாலியல் குறித்த வக்கிரமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. வக்கிரமான சிந்தனை கள் பதிவான பிறகுதான், நாம் பாலியல் குறித்துப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லித் தருகிறோம். இது தவறான வழிமுறை. சிறு வயதிலேயே பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதுதான் சமூகத்தை ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
குழந்தைகளின் மூளைகளை காலியான பாட்டில்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. அந்த பாட்டில்களை நிரப்பி அனுப்பும் வேலையையே பள்ளி, கல்லூரிகள் செய்கின்றன. ஆனால், உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் குழந்தைகள் ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆள்பவர்களுக்குத் தேவையான அலுவலர்களையும் அதிகாரிகளையும் உருவாக்குவதையே நோக்கமாகக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. குழந்தைகளின் தனித் திறன்கள் அடையாளம் காணப்பட வேண்டும். மாற்றுக் கல்வி முறை அதற்கு வழி செய்யும்!”

”ஒருவழியாக உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது… ‘க்ரீமிலேயர்’ நிபந்தனையோடு! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
”வருட வருமானம் இரண்டரை லட்சம் உள்ளவர்களைத்தான் ‘க்ரீமிலேயர்’ என்கிறார்கள். சாதாரணமாக ‘ஐ.ஐ.டி’, ‘ஐ.ஐ.எம்’ நுழைவுத் தேர்வுப் பயிற்சிகளுக்கே 80 ஆயிரம் வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்கூட இவ்வளவு தொகை செலவழிக்க முடியாது. ‘க்ரீமிலேயர்’ என்பது ஏமாற்று வேலை!
உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதற்குள் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. 27 சதவிகிதத்தையும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து நிரப்ப முடியாது. எனவே, மீதமிருப்பவற்றையும் பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கே வழங்க வேண்டும், பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை.”

”ஆண்களும் சமையல் கட்டுக்குப் போக வேண்டும் என்று நீண்ட காலமாகச் சொல்லிவருகிறீர்களே… நம் சமூகத்தில் இது சாத்தியமா?”
”சமைப்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்பதைக் கேள்விக்குள்ளாக்கத்தான் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்ற புத்தகத்தை எழுதினேன். உலகிலேயே சமைப்பதுதான் அதிமுக்கியமான வேலை. கவனம், உடல் உழைப்பு, தொழில் நுட்பம், அக்கறை எல்லாம் சேர்ந்தது சமையல் வேலை. இப்படி பெரும்சுமையான வேலையை ஆயிரம் ஆண்டுகாலமாக பெண்கள் தலையிலேயே சுமக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குல விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். வீட்டு வேலை செய்து பார்த்தால்தான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரியும். வியாபார ரீதியான எல்லா இடங்களிலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள். வீட்டில் சமைத்தால் மட்டும் வேகாதா என்ன?”

”எழுத்தாளர் என்பதையும் தாண்டி பண்பாட்டுத் தளத்திலும் செயல்பட்டு வருகிறீர்கள். பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்கான தேவை இங்கே இருக்கிறதா?”
”அரசியல், பொருளாதாரம், பண்பாடு என மூன்று தளங்களில் இயங்குகிறது சமூகம். அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பண்பாட்டுத் தளத்திலிருந்துதான் தொடங்குகின்றன. ஆனால், அந்த மாற்றங்கள் பற்றிய அக்கறையே இல்லாத சமூகமாக இருக்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மதச் சார்புள்ள விஷயங்கள் பயங்கரமாக வளர்ந்திருக்கின்றன. மக்களை மதவாதிகளிடம் சுலபமாகத் தள்ளுவதற்கான சூழல் இங்கே உருவாகியிருக்கிறது. இதைத் தடுக்க பண்பாட்டுத் தளத்தில் நாம் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், நாளை தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!”

நன்றி: ஆனந்த விகடன்

அறிவொளி இயக்க நினைவுகள் – 4

தன்னார்வலர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை கேம்ப் இருக்கும். எங்களை உற்சாகமூட்டி எங்கள் மனம் மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.

எப்படின்னா கீதாவின் கணவர் என்னிடம் கேட்பார்
“ஏங்க படிப்பு சொல்லித்தர்றீங்களே மாத சம்பளம் ஏதாவது தர்றாங்களா?”
“இல்லங்க.”
“சும்மா சொல்லாதீங்க. யாரு இந்தக் காலத்துல ப்ரீயா சொல்லித் தர்றாங்க?”
“உண்மையிலயே சும்மாதாங்க சொல்லித் தர்றேன்.”
“நான் நம்ப மாட்டேன்.”
“……..”
அதே தெருவில் இருக்கும் இன்னொரு பெண்மணி என்னிடம் கேட்டார்,
“ஏங்க சும்மாவா பாடம் சொல்லித் தர்றீங்க”
“ஆமாங்க”
“அதுக்கு பத்துப் பேருக்கு டியூசன் சொல்லிக்குடுத்தீங்கன்னா ஏதாவது செலவுக்காவது ஆகும்.”
“………”
“ஃபேன் வேற போடுறீங்களா? அது வேற எதுக்கு உங்களுக்கு வெட்டிச் செலவு”
நான் பதிலே பேசாமல் வந்துவிடுவேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனம் மாறிவிடும்தானே?

இந்த கேம்ப்களில் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களும் தெரியவரும். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் உள்ள மையம் தெரு விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். தன்னுடைய மனைவி படிக்கக்கூடாது என்று நினைத்த ஒரு குடிகாரக் கணவன் தெரு விளக்கை கல்லால் அடித்து உடைத்து விடுவாராம். வேறு லைட் மாற்றியுள்ளனர். திரும்பவும் உடைத்துவிட்டாராம்.

வேறொரு சம்பவம். ஒரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஊரில் நடுவே இருந்த கட்சிக்கொடி ஊரை அசிங்கப்படுத்துவதாக நினைத்த இளைஞர்கள் அனைத்துக் கட்சிக்கொடியையும் அகற்றியுள்ளனர். அவ்வளவுதான் அடுத்த நாள் போலீஸ் அந்த இளைஞர்களைத் தேடி வந்துவிட்டது. அப்பறம் அறிவொளி இயக்கத்தினர் சென்று அவர்களுக்கு உள் நோக்கமெல்லாம் கிடையாது என்று விளக்கி அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
இது போலெல்லாம் நிறைய நடக்கும்.

மாதம் ஒருமுறை நடக்கும் கேம்ப்புக்கு என்னுடன் அலமேலு என்ற பெண்ணும் வருவாள். வேலப்பாடிக்கு அருகில்தான் சங்கரன் பாளையம். அங்குள்ள ஒரு தன்னார்வலர்தான் அலமேலு. அந்த ஏரியாவுக்கு என் கணவர்தான் பிபிசி. அவர் சொல்லி அனுப்பியிருந்தார். அவளும் மாதா மாதம் என்னுடன் கேம்ப்புக்கு வருவாள். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து விடுவாள். நானும் நேரம் கிடைக்கும்போது அவள் வீட்டிற்குச் செல்வேன். அவர்கள் நிறைய மாடு வைத்து பால் வியாபாரம் செய்பவர்கள்.

கலைச்செல்வியும் மையத்தைப் பார்க்க அடிக்கடி வருவாள். மையம் இல்லாத நேரங்களிலும் வருவாள். அவள் சொன்னது, எவ்வளவு மனக்கஷ்டத்தோட இங்க வந்தாலும் இங்க வந்தவுடனே மனசு ரிலாக்ஸ் ஆகிடுது. மனசு ஒரு மாதிரி ஆனா ஒடனே இங்கதான் வருவேன் என்பாள்.

ஒரு முறை பாண்டிச்சேரியில் இருந்து ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது கணவர் ஒரு எழுத்தாளர். எனது கணவரும் எழுத்தாளர் ஆகையால் அவளது கணவரைத் தெரியும். அதை வைத்து எங்கள் வீட்டில் இரண்டு நாள் தங்கினாள். அவள் கிளம்புவதற்கு முன் அவள் பேசிய விஷயம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவர்கள் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார்களாம். அதன் நோக்கம் என்னன்னா மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டுமாம். அதற்கு மக்கள் செய்ய வேண்டியது என்னன்னா, ஒரு நாலு ஆண்களும், நாலு பெண்களும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். கல்யாணம் எல்லாம் கிடையாது. பிறக்கும் குழந்தைகள் யார் யாருக்கு பிறக்கிறார்கள் என்று தெரியாததால் நான்கு பேரின் குடும்பமும் ஒன்றாக இருக்கும். சொத்தும் ஒன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு சமமாக கிடைக்குமாம்.

எவ்வளவு நல்ல ஸ்கீம். இதைக் கேட்டவுடன் நான் ஆடிப்போய்விட்டேன். அவள் சென்றவுடன் கணவரிடம் கேட்டேன்,
“என்ன இந்தப் பெண் இப்படி சொல்கிறாளே? இது உண்மைதானா? இப்படியெல்லாம் கூட நடக்குமா?”

“ஆமா பாண்டிச்சேரியில சாரு நிவேதிதா குரூப் ஒன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

“என்ன இப்படிச் சொல்றீங்க இது எப்படி சாத்தியமாகும். எப்படி சரியாகும். சும்மாவே எய்ட்சு கியிட்சுன்னு என்னென்னெவோ வந்துக்கிட்டிருக்கு. இதெல்லாம் என்ன பேச்சு. #$%^&*#$%@!#$%&*……”

“இங்க பாரு யாரோ என்னவோ பேசிக்கிட்டுத் திரியறாங்க. நான் என்னவோ அத ஆதரிக்கிற மாதிரி என்னயப் போட்டு ஏன் திட்டற?”
சரி பாவம் இவரைத் திட்டி என்ன பிரயோஜனம்.

ஆனா அந்த பெண் பேசியதில் இருந்து ஒன்று தெரிந்தது. அந்த குரூப்பில் உள்ளவர்கள் எல்லாம் திருமணமாகி தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஊருக்கு உபதேசம். யாரோ குட்டிச்சுவராப் போகட்டும்னு எண்ணம் போல.

இரண்டு மூணு நாள் கழித்து கலைச்செல்வி வந்தாள். பாண்டிச்சேரிப் பெண்ணின் பெயரைச் சொல்லி அவள் வந்தாள் வீட்டுக்குள்ளேயே விடாதீங்க என்றாள். நான் கலைச் செல்வியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முகத்தில் அவ்வளவு கோபம். 
மேலும் சொன்னாள் அவ போற எடத்துல எல்லாம் செருப்படிதான் கெடைக்குது…….. என்று பொரிந்து தள்ளினாள்.
பாண்டிச்சேரி பெண் பேசிய விஷயத்தை என்னிடம் கலைச்செல்வி சொல்லவில்லை. அவளால் என்னிடம் அதைச் சொல்லக்கூட வாய் வரவில்லை. மக்களே அந்த பாண்டிச்சேரிப் பெண்ணை விரட்டி விட்டனர்.

(இன்னும் இருக்கு)


அருகிலிருக்கும் பூந்தோட்டத்திற்கு ஒரு விசிட். சூடிதாரில் கலைச்செல்வி.

என் மடியில் இருப்பது உமாவின் அக்கா குழந்தை.

அறிவொளி இயக்க நினைவுகள் – 3

மையம் துவங்கியது

வீடு திரும்பியதும் அடுத்த வாரம் திங்கள் கிழமை அன்று எங்கள் மையம் தொடங்கப்பட்டது. எங்கள் ஏரியா பிபிசி கஸ்தூரி ரங்கன் (பள்ளி ஆசிரியர்), கலைச்செல்விதான் எங்கள் ஏரியா சிபிசி, இளவழகன், படிக்க வந்த பத்துப் பேர். குத்துவிளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்தனர். ஏற்கெனவே ப்ளாக் போர்ட் சுவரில் மாட்டுவது போன்றது. பலப்பம், சிலேட், அறிவொளி தீபம்-1 புத்தகம், சாக்பீஸ் எல்லாம் இளவழகன் கொடுத்திருந்தார்.

அடுத்து அறிமுகப்படலம். நான் முதலில் என் பெயர் ஜெயந்தி உங்கள் பெயரை ஒவ்வொருவராக சொல்லுங்கள் என்றவுடன் மாணவிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். செல்வி, சுதா, ஜெயா, தேன்மொழி, உமா, ராஜேஜ்வரி, புவனேஷ்வரி, குமுதா, லலிதா, சாந்தி. இதில் சாந்தி மட்டும் திருமணமானவர். மற்றவர்களெல்லாம் 18-22 வயதுள்ள பெண்கள். இதில் செல்வி, சுதா, ஜெயா, லலிதா, உமா இவங்களெல்லாம் அங்குள்ள தோலினால் ஆன ஷு, ஹேண்ட் பேக் போன்ற பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ராஜேஜ்வரியும், புவனேஷ்வரியும் வீட்டு வேலை செய்தனர். குமுதா பூக்கட்டிக்கொடுக்கும் வேலை செய்தாள். இதில் பெரும்பாலோர் வீடுகளில் அவங்க அம்மாக்கள் பீடியில் லேபிள் சுற்றும் வேலை செய்தனர்.

என் வீடு இருந்த தெரு, குறுக்குத் தெருக்களில்தான் இவர்கள் அனைவரும் இருந்தனர். எங்க வீடு எப்டின்னா ஒரு கதவுக்குள்ள இரண்டு வீடு. இதுக்கு முன்ன நாங்க இருந்த வீடு ஒரு கதவுக்குள்ள ஐந்து வீடு. பக்கத்தில் கீதா இருந்தாள். என் தோழிதான். ஒரு ரூம் ஒரு சமையலறை மட்டும்தான். கீதா வீடும் அதே போலதான். ரெண்டுமே சின்னச் சின்னது. ரூமுக்குள்ள பத்து பேரு நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தனர். நல்ல வேளை எங்க வீட்டுல கட்டில், பீரோ எதுவுமில்லை. மூலையில் இரண்டு டிரங்க் பெட்டி, அதன் மேல் இரண்டு தலையணை ஓரமாக ஒரு பாய் அவ்வளவுதான்.

அவ்வளவுதானா? எங்க வீட்டுல இருக்கற புத்தகங்கள நீங்க பாத்திக்கீங்களா? எங்க வீட்டுல புத்தகம் இருக்காது. புத்தகத்துக்குள்ள எங்க வீடு இருக்கும். இந்த வீட்டைப் பொறுத்தவரை யாரோட நல்ல நேரமோ தெரியல ஒரு பரண் ஒன்னு இருந்துச்சு அதுல போயி சேர்ந்திருச்சு. இந்தப் புத்தகக் கதைய நான் தனியா ஒரு பதிவே போடுறேன்.

வகுப்பு தொடங்கி ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து, எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த காயத்திரி என்பவர் என்னிடம் வந்து “எனக்கும் தமிழ் சொல்லித்தருவீங்களா?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அவங்க கேட்டது எனக்கு கிண்டல்போல தோணுச்சு. ஏன்னா அவங்க டிகிரி முடிச்சவங்க. வேலைக்கு வேற போறாங்க.
“என்ன சொல்றீங்க” என்றேன்.
“நான் பெங்களூருல படிச்சவ. எனக்கு கன்னடம், ஹிந்தி, இங்கிலீஸ் எல்லாம் தெரியும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. சொல்லிக்குடுப்பீங்களா?” ன்னு கேட்டாங்க.
“வாங்க வாங்க அதுக்குத்தான நான் இருக்கேன்” என்று அழைத்தேன்.
மேலும் ஒரு மூன்று பேரை இளவழகன் கொண்டு வந்து சேர்த்துவிட்டார். 
எங்கள் மையத்தில் எப்போதும் 13, 14 பேர் இருந்தார்கள்.

கற்க வந்த அந்தப் பெண்களில் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள். குமுதா, உமா இவர்களின் அப்பாக்கள் குடிகாரர்கள். ராஜேஜ்வரி, புவனேஸ்வரிக்கு அப்பா இல்லை. சுதாவின் தந்தை நோயாளி. ஜெயாவுக்கு அப்பா உடன் இல்லை. அம்மாவும் மனநோயாளி. இவர்களின் சம்பாத்தியம் அவர்களின் வீட்டுக்கு அவசியமான ஒன்று. ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் கவலைகள்.

சாயங்காலம் ஆறு மணியானால் போதும் பட்டாம்பூச்சிக்கள் போல் சிறகடித்து வந்து விடுவார்கள். எங்கள் வகுப்பு தொடங்கியது முதல் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பாடங்களை ஆர்வமாக கற்றுக்கொண்டார்கள். பாடங்களின் ஊடே பாட்டு, கதை, பொது விஷயங்கள் எல்லாம் இருக்கும். இளவழகன் சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் எல்லாம் எங்கள் வகுப்பு முடியாது. 6 மணிக்குத் துவங்கினால் 8 மணிக்கு மேல் அந்தப் பிள்ளைகள் போனால் போகிறதென்று கிளம்பிப்போவார்கள்.



படத்தில் வைலட் கலர் சேலைதான் நான். பக்கத்தில் பட்டுச்சேலையில் காயத்திரி. இது காயத்திரி வீடு. அவர்கள் கேமராவில் எடுத்த படம். இதில் ஜெயா, தேன்மொழி, ராஜேஸ்வரி, உமா முதலியோர் உள்ளனர்.

(இன்னும் இருக்கு)

அறிவொளி இயக்க நினைவுகள் – 2

ஏலகிரி மலை

எங்கள் வீடு வேலூரில் வேலப்பாடி என்ற இடத்தில் இருந்தது. பிள்ளைகளை கணவர் வசம் ஒப்படைத்துவிட்டு நான் மட்டுமே கிளம்பிவிட்டேன். வேலூர் பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்ந்தேன். அங்கு நின்றிருந்த இளவழகன் அருகிலிருந்த சிலரை அறிமுகப்படுத்தினார். இவங்க உங்க வீட்டுலயிருந்து இன்னும் உள்ளே போனா பூந்தோட்டம்னு ஒரு இடம் வரும் அங்கேயிருக்கிற லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. இவங்க பேரு ராஜ திலகம், அவங்க பேரு மைத்ரேயி. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவங்க கூட விஜயன் என்ற அவங்களுடன் படிக்கும் இன்னொருவரும் இருந்தார். இன்னும் சிலர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம். அந்த நிமிடத்தில் இருந்து அந்த மூன்று நாட்களும் எனக்கு புதியதான ஒரு உலகம் திறந்து கொண்டநாட்கள்.



ஏலகிரி மலைக்கு எங்களைப்போல் நிறையப்பேர் வந்திருந்தனர். கலைச்செல்வி, மலர், உமா, தேன்மொழி, சிவராமன், பப்லு (சிவ சங்கர்), சீனிவாசன், ஆனந்தன்… இவங்கெல்லாம் ஏபிசி-ங்க.

அது எப்படின்னா அறிவொளி இயக்கத்துக்கு தலைவர் கலெக்டர். அவருக்கு அடுத்து டிபிசி, அவர் ஒருவர்தான். அவருக்கு அடுத்த நிலையில் பிபிசி இவங்க ஆறேழு பேர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் சிபிசி எனப்படுபவர்கள். இவங்க நிறையப் பேர் இருந்தனர். இவர்களுக்கு அடுத்து அமைப்பாளர் எனப்படும் இளவழகன் போன்றோர். அவர்களுக்கு அடுத்து என்னைப்போன்ற தன்னார்வலர் என்கிற வாலண்டியர்ஸ். இந்த சிபிசிக்கள் எங்களோடு (தன்னார்வலர்கள்) நேரடி தொடர்பில் இருப்பார்கள். சிபிசிக்களை இயக்குவது பிபிசிக்கள். அவர்களுக்கு மேல் உள்ளவர்தான் டிபிசி.

எங்கள் மாவட்டத்துக்கு வந்திருந்த கலெக்டர் அப்போதுதான் டிரெயினிங் முடித்துவிட்டு வந்திருந்த இளைஞர் ராமசுந்தரம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர். அவரது காதல் மனைவி அர்ச்சனா. இரண்டுபேரும் டிரெயினிங் பீரியடின்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவரது அழகான மனைவி அர்ச்சனா ஐபிஎஸ் அதிகாரி. அவர் வேறு மாவட்டத்தில் பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.

டிபிசியாக இருந்தவர் செந்தமிழ்ச் செல்வன். வங்கி மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அறிவொளி இயக்கப் பணிக்கு அனுப்பியிருந்தது. இவர் அறிவியல் இயக்கம் மூலமாக வந்திருந்தார். அறிவொளி இயக்கத்தை நடத்துவது அறிவியல் இயக்கம்தான். அவர்கள்தான் அந்த புத்தகம் வடிவமைப்பிலிருந்து, படிக்காதவர்களை கணக்கெடுப்பதிலிருந்து, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது வரை சிந்தித்து செலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் செயல்படும் விதத்தை நேரில் பார்த்திருந்ததால் அவர்கள் செலாற்றிய விதம் எனக்கு பிரமிப்பைக் கொடுத்திருந்தது. எப்படி எல்லாவற்றையும் மிகச் சரியாக யோசனை செய்து செயல்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு இப்போதும் அந்த பிரமிப்பு உண்டு.

ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்க்கிறேன். கலைக்குழுக்கள் உருவாக்கியிருந்தார்கள். கலைக்குழுவினருடன் நானும் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கலைக்குழுவில் ஆறேழு பேர் இருப்பார்கள். அப்புறம் அந்த ஏரியா சிபிசி, அமைப்பாளர், தன்னார்வலர் எல்லோரும் சேர்ந்து ஒரு பத்துப் பேருக்கு மேல் இருப்பார்கள். முதலில் தவிலை அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார்கள். ஊரே ஒன்றுதிரண்டு பின்னால் வரும். நடுமையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே நாடகம் போடுவார்கள், பாட்டுப் பாடுவார்கள். படிக்காததுதால என்ன கஷ்டம் வருது அதுனால படிக்கணும்னு வழியுறுத்தும் நாடகங்களும் பாட்டுக்களும் இருக்கும். அது முடிந்தவுடன் அனைவரும் ஒவ்வொரு வீடாக உள்ளே சென்று அந்த மக்களுடன் பேசுவார்கள். அந்த மக்களுக்கு வெளியாட்கள் வந்து அவர்களுடன் இவ்வளவு உரிமையாக பாசமாக பேசுவது புதுமையாக இருக்கும். உடனேயே அவர்கள் நம்மோடு ஒன்றிவிடுவார்கள். அவர்களை படிக்க வைப்பது எளிதாகிவிடுகிறதல்லவா?



அப்பறம் இந்த டிபிசி, பிபிசி, சிபிசி ங்கற வளைபோன்ற அமைப்பு. பிபிசிங்க ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் கவர்ன்ெம்ண்ட் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அனுப்பி இருக்கும். இந்த வேலையால இவங்களுக்கு ப்ரமோஷன் கிடையாது, இன்கிரிமெண்ட்டும் கிடையாது. ஏன்னா அந்த நாட்கள் லீவு நாட்களாக கணக்கு வைக்கப்படுமாம். அடுத்து வர்ற சிபிசிங்கள அவங்க எப்படித் தேர்ந்தெடுத்திருந்தாங்கன்னா அவங்க எல்லோரும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள். அவர்களுக்கு போக்குவரத்திற்கு மட்டும் டிஏ போல கொடுத்திருந்தார்கள். எங்களைப்போன்ற தன்னார்வலர்கள் பேரே தன்னார்வலர் தன் ஆர்வத்தினால் வருபவர்கள். அவர்கள் இலவச சேவைதான். ஒன்று இந்த ஸ்கீமிற்கு கொடுக்கும் பணம் மிகவும் குறைந்த அளவானதே. அதை வைத்து சிறப்பாக செய்ய வேண்டும். இரண்டாவது பணத்திற்காக வேலைக்கு வருகிறவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள் அல்லவா? இதில் செயல்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி தோழர்கள்தான். அவர்களின் இயல்பான சேவை எண்ணம் மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது.

அடுத்து இந்த புத்தகம் வடிவமைப்பு. பள்ளிக்கூடப் புத்தகம் போல அம்மா ஆடு என்று இருக்காது. எடுத்தவுடன் பட்டா படி என்றுதான் ஆரம்பிக்கும். நான் பாடம் சொல்லிக்கொடுத்திருந்ததனால் அது எவ்வளவு எளிமையாக கற்பவருக்கு இருந்தது என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதான் நெனச்சேன் இவங்ககிட்ட பாடப்புத்தங்கள வடிவமைக்க கொடுத்திருந்தா ஒருவேள என்னப்போன்றவங்க நல்லா படிச்சிருப்போமோ?

கிராமங்கள் தோறும் அறிவொளி மையங்களுக்கு தினத்தந்தி பேப்பர் போடச் செய்தார்கள். அதுதான் எளிமையாக செய்தி கொடுக்கும் பத்திரிகை.

கிராமங்கள் தோறும் லைப்ரரி அமைத்தார்கள்.

புதிதாக கற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர். அவற்றை கற்போர் படிக்கும் முறையில் சின்னச் சின்ன வாக்கியங்களாக, எளிமையான வாக்கியங்களாக, பாராக்களும் சின்னச்சின்னதாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள் சா.தமிழ்ச்செலவன், கமலாலயன் (கணவர்), முகில் போன்றோர். அவைகள் சிறிய புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் படங்களுடன் படிக்க சுவாரசியமாக வந்தது.

எனக்குத் தெரிந்து இவைகள். இன்னும் எனக்குத் தெரியாதவைகள் எவ்வளவோ.

சரி எங்க விட்டேன். ஏலகிரிமலையா? மூணு நாளும் எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?” இந்த பாட்டு படத்துக்கு எப்படி போச்சுன்னு தெரியல. “காலம் மாறும் மாறுமுன்னா மாறுமா ஒரு கையெழுத்து போடத்தெரியல, கவல தீரும் தீரும்னா தீருமா ஒரு கடுதாசி படிக்க முடியல…” அப்புறம் ஒரு பாட்டு நடுவுலதான் ஞாபகம் இருக்கு அப்போதெல்லாம் இளம் வயது திருமணங்கள் கிராமங்களில் நிறைய நடக்கும். அதைப்பற்றி “……..உடம்பு வளரும் முன்னால அவ பிள்ள பெறுவதும்…”ன்னு வரும்.

அப்பறம் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பக்கத்தில் இருப்பவர் காதில் ஒன்று சொல்ல அவர் அடுத்தவரிடம் சொல்ல இப்படியே கடைசியாக விஷயத்தைச் சொன்னவரிடம் அவர் சொன்னதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வாக்கியம் வரும். அப்பறம் வந்து ஒருவர் ஒரு கதையை ஆரம்பிப்பார் அடுத்தவர் அதைத் தொடர வேண்டும். இது ரெண்டு வெளையாட்டுமே விளையாடுறப்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதுபோல விளையாட்டுக்கள் சிலவும் சொல்லிக்கொடுத்தார்கள்.

எங்களுக்கு டிரெயினர்களாக வந்தவர்கள் ராமானுஜம் (சென்னை மேக்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சயின்டிஸ்ட்), ஜே.கிருஷ்ணமூர்த்தி, முகில் பரமானந்தம் (பிஎச்இஎல்-லில் ஆபீசர், ராணிப்பேட்டையில் பிபிசியாகவும் இருந்தார், எழுத்தாளரும் கூட) சுதா சுந்தரராமன் (அஇஜமாச), நிலவு குப்புசாமி (எழுத்தாளர்), த.வி.வெங்கடேஸ்வரன் (இவர் இப்போது டில்லியில் கவர்ன்மென்ட் சயின்ஸ் சென்டர்ல பணியாற்றுகிறார்.)

இந்த சிபிசி டீம் வந்து காலேஜ் படிக்கிற பசங்கன்னு சொன்னேன்னில்லையா? அந்த டீம் எப்படி இருக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை. சரி ஜாலியான டீம். அதுலயும் இந்த கலைச்செல்வி இருக்குதே வாய் மூடவே மூடாது. சரியான அரட்டை. நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்னால இந்த மாதிரி பேசறவங்கள பாத்துக்கிட்டே இருப்பேன். எப்படித்தான் பேசுறாங்களோ?

மூணு நாளும் போனதே தெரியல. அந்த மலைப் பிரதேசத்தின் பசுமையும், அந்த கேம்ப்பு கொடுத்த உற்சாகமும், அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் என்னை புது மனுசியாக்கியது.

(இன்னும் இருக்கு)

அறிவொளி இயக்க நினைவுகள் – 1



“அம்மா உன்னய யாரோ கூப்புறாங்க” மகள் வந்து சொன்னதும் வெளியே சென்று பார்த்தேன். அங்கே ஒருவர் நின்றிருந்தார். சிவந்த நிறம். சுருள் முடி. சற்று குள்ளமான உருவம்.

“என்னங்க”
“என் பெயர் இளவழகன். நான் கவர்ன்மெண்ட் அச்சகத்துல வேல பார்க்கறேன். உங்ககூட கொஞ்சம் பேசனும்” என்றார்
“என்ன விஷயம் சொல்லுங்க” என்றேன்
“அரசாங்கத்துல அறிவொளி இயக்கம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உங்களால ஒரு பத்து பேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க முடியுமா?”
அவர் கேட்டதும் எனக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.

எனக்கு அறிவொளி இயக்கம் பற்றி முன்பே தெரியும். கணவர் அறிவொளி இயக்க வேலைன்னு சொல்லிக்கிட்டு ஒரு மூன்று மாதங்கள் கழித்து அப்போதுதான் வீட்டிற்கே வந்திருந்தார். அவர் மூலமாக அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் தெரியும். கடைசி இரண்டு மாதம் உள்ளூரிலேயே கேம்ப் மேனேஜராக இருந்தார். கேம்ப்பில் கலைக்குழுவினர், ஏபிசி, பிபிசி, ஒருங்கிணைப்பாளர் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தனிதனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வீட்டிற்கு வரமுடியாது.



இளவழகன் கேட்டவுடன் எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியல. ஏன்னா ஸ்கூலுக்குப் போயி பாதியிலேயே படிப்ப விட்டவுங்க, ஸ்கூல் பக்கமே போகாதவங்க இவங்களுக்காக எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்கற ஒரு இயக்கம்னு தெரியும். ஆனா நம்ம பொது புத்தியில எப்பவுமே ஒன்னு இருக்கும். யாரோ யாருக்காகவோ என்னவோ செய்யப்போறாங்கன்னு இருக்கும். நாமலும் செய்யலாம்னு நமக்குத் தோணாது. நீங்க சொல்லிக்கொடுக்கறீங்களான்னு கேட்டவுடன் ஆஹா நம்மளும் செய்யலாமான்ற நெனப்பே வரும்.

அதுவுமில்லாம எனக்கு வந்து எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் சுமாராக அல்லது அதற்கும் கீழேயான படிப்பு. அதுனால நான் எல்லாரையும் விட மட்டம்ன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை என் மனசுல எப்பவுமே இருக்கும்.

“நான் பத்தாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சிருக்கேன்” என்றேன்.
“உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமில்ல” என்றார்
“ம் அது மட்டும்தான் தெரியும்” என்றேன்.
“அதுபோதும்” என்றார்
“எப்டி சொல்லித்தர்றதுன்னு தெரியாதே?”
“அதுக்கு பயிற்சி வகுப்பு நடக்கும் அங்க சொல்லிக்குடுப்பாங்க”
“சரி படிக்காதவங்க யாருன்னு எனக்குத் தெரியாதே” என்றேன்
“அதப்பத்தியெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் நான் அவங்கள உங்க வீட்டுக்கே வரவச்சிர்றேன். ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம்னு நேரம் ஒதுக்குனா போதும். ஆறு மாசம் பாடம் சொல்லிக்கொடுத்தாப் போதும். ரெண்டு நாள் கழிச்சு வர்றேன் யோசிச்சு முடிவ சொல்லுங்க” என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார்.

அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கட்டுமா என்று கணவரிடம் கேட்டேன்.
உனக்கு விருப்பமிருந்தா தாராளமா எடுக்கலாம் என்றார்.

இரண்டு நாள் கழித்து வந்தவரிடம் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்தவாரம் உங்களுக்கு ஏலகிரி மலையில மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு இருக்கு தயாராகிகங்க என்றார்.

அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?

இந்தியா விடுதலை அடைந்தது முதல் வயதுவந்தோர் கல்விக்காக (ஆரம்பத்தில் முதியோர் கல்வி என்று பெயர் இருந்து) எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ட்டிருக்கின்றன. ஆனால், முழு எழுத்தறிவு இயக்கம் என்ற மக்கள் இயக்கம்தான் அகில இந்திய அளவில், வயது வந்தவர்கள் அனைவரும் கல்வி பெற்றே தீர வேண்டியதன் அவசியத்தை மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உட்பட ஒவ்வோர் அணுவிலும் கொண்டு சென்று சேர்த்த மாபெரும் இயக்கம்.

இது ஒரு கவர்ண்மென்ட் ஸ்கீமாக இருந்தாலும் இதை வழி நடத்தியது அறிவியல் இயக்கம் என்ற மக்கள் இயக்கம். அறிவொளி இயக்கத்தையும் மக்கள் இயக்கமாகவே எடுத்துச் சென்றது. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களாலேயே மக்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கமாக மாற்றியது. இதில் அரசு அதிகாரிகளையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது. அரசாங்க மக்கள் நலத்திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை எப்படி எடுத்துச்செல்வது என்பதற்கு அறிவொளி இயக்கம் ஒரு முன் மாதிரியாக இருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை தென் மாநிலங்களில்தான் முழு வீச்சில் அறிவொளி நடைபெற்றது. இதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் உள்ள பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் உள்ளதுதான். வட இந்தியாவைப் பொருத்தவரை தன்னார்வம் மிகவும் குறைவு என்பதால் இத்திட்டம் போதுமான அளவு செயல்படவில்லை என்பது த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து.

சாதாரண மக்களும், பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களும் அரசாங்கம் அறிவொளி இயக்கத்திற்காக செலவிட்டதைவிட இரண்டு மடங்குத் தொகை செலவு பண்ணியிருக்காங்க. எப்படின்றீங்களா? அறிவொளி இயக்கத் தொண்டர்கள், வீதி நாடகக் கலைஞர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுப்பது, மேடை, மைக் செட் ஏற்பாடு செய்து கொடுப்பது, நோட்டீஸ் போடுவது போன்ற உதவிகளைச் செய்தனர். அப்பறம் நம்ம கற்போர் எப்ப வேணா நமக்கு எதுக்கு படிப்பு, இனிமே படிச்சு என்னாத்த கிழிக்கப்போறோம்ன்னு சோர்ந்து போயிடுவாங்க. அவங்கள திரும்பவும் உற்சாகமா படிக்க வைக்க அவங்களுக்கு பரிசளிப்பதன் மூலமாக செய்ய முடியும். அந்தப் பரிசுகளை வாங்கித் தருவார்கள்.

முன்னயெல்லாம் பிள்ளைகளை ஏதாவது ஒர்க் ஷாப்பில் விட்டால் பெரிதாகும்போது பெரிய மெக்கானிக்காக வருவான் என்று பெற்றோர் சின்னப்பிள்ளைகளை ஒர்க் ஷாப், கடைகள் என்று வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். ஆனா இந்த அறிவொளி இயக்கம் செயல்பட ஆரம்பித்த பிறகு சுமார் 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில் பார்த்தால் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பிய அளவு மிக அதிகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை குமரி மாவட்டம்தான் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தின் மலைவாழ் ம்ககளாகக் கருதப்படும் காணிக்காரர்கள் மத்தியில் கூட இன்று எழுத்தறிவு பரவ முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அறிவொளி இயக்கம்தான் என்று தச்சமலை என்ற மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஈஸ்வரி கூறியுள்ளார்.

என்னய மாதிரி பத்தாம் வகுப்பு பாசானவங்க எட்டாம் வகுப்பு பாசானவங்க கிட்ட இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி எங்களாலயும் படிப்பு சொல்லிக்கொடுக்க முடியும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டிய இயக்கம். வீட்டு சமையல் அறைகளிலும் கூடங்களிலும் தேங்கிக்கிடந்த லட்சக்கணக்கான பெண்களை முதல் முறையாக வீடுகளை விட்டு பொது வெளிக்கு அழைத்து வந்தது அறிவொளி.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் அறிவொளி இயக்கத்தினால் தெளிவடைந்த பெண்கள் குடியும் தங்கள் வறுமைக்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்து சாராய பானைகளை உடைத்து, சாராயம் விற்பவர்களையே விரட்டிவிட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து செய்ததால் சாராய வியாபாரிகளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தச் செய்தி அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அறிவொளி மூலம் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் இப்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தலைவர்கள், பிரதிநிதகள், ஊக்குநர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவொளி இயக்கம் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

படிப்பு சொல்லித்தர தன்னார்வலர்களாக வந்தவர்களையும் அவர்களும் மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி அவர்களும் மேற்படிப்பு படித்து முன்னேறினார்கள். அதுவுமில்லாம அறிவொளி இயக்கத் தொண்டர்களாக இருந்தவர்களின் திறமைகளை வளர்த்தது. அவர்கள் பின்னர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக, தலைவராக, ஒன்றியப் பிரதிநிதியாக, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உயர்த்தியது. கேரளாவில் ஒரு அறிவொளி இயக்கத் தொண்டர் சட்ட மன்ற உறுப்பினராகவே ஆகியிருக்கிறார்.

பட்டப்படிப்பு, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தாழ்வு மனப்பான்மையோடு ஒதுங்கியிருந்தவர்களை 10 அறிவொளி மையங்களை மேற்பார்வை செய்யும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக (APC), ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக (BBC), மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர்கள் (CPC) வரை உயர்த்தியது அறிவொளி.

மக்களிடம் இருந்த நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள், இதைப்போன்ற வடிவங்களை மக்களிடம் இருந்து திரட்டி தொகுத்துள்ளது. நானும் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்றை எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் இருந்து சேகரித்துக்கொடுத்துள்ளேன். இதுவுமில்லாமல் மறைந்துபோன கிராமப்புற பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், உணவுகள் இப்படி ஏராளமான நாட்டார் கலைச்செல்வங்களையும் திரட்டி தொகுத்துள்ளது அறிவொளி இயக்கம்.

எல்லாவற்றையும் விட, அரசு உயர் அதிகாரிகளை சாதாரண ம்ககளோடு தயக்கமின்றிக் கலந்து பழகச் செய்தது-இவர்கள் இருவருக்குமிடையிலிருந்த பெரும் இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக்கியது அறிவொளிதான்.

அறிவொளியை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு சென்றதால் கிடைத்த வெற்றிகள்-அநுபவங்களின் பின்னணியில்தான் இப்போது முழு சுகாதாரத் திட்டம், வாழ்வொளி-கண்ணொளித் திட்டங்கள், ஊரக நலவாழ்வு இயக்கம், ராஜீவ் காந்தி குடிநீர் இயக்கம் போன்ற திட்டங்கள் வடிவம் பெற்றுள்ளன.

1966-ல் கல்வித் தீர்க்கதரிசி டி.எஸ்.கோத்தாரி கூறியது "கட்டாயக் கல்வியால் மட்டும் நம் நாட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக ஆக்கிவிட முடியாது. கட்டாய இலவச கல்வி ஒரு சர்வரோக நிவாரணி அன்று. எழுதப் படிக்கத் தெரிந்த எல்லா ஆண்களும், பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும். இதனைவிடக் குறைவான எந்த முயற்சியாலும் தேவையான ஆர்வத்தைத் தூண்டவும் வலுவான வேகத்தைத் தட்டி எழுப்பவும் முடியாது."
7/05/2010 | Author: ஜெயந்தி
உதவி: கமலாலயன்