“அம்மா உன்னய யாரோ கூப்புறாங்க” மகள் வந்து சொன்னதும் வெளியே சென்று பார்த்தேன். அங்கே ஒருவர் நின்றிருந்தார். சிவந்த நிறம். சுருள் முடி. சற்று குள்ளமான உருவம்.
“என்னங்க”
“என் பெயர் இளவழகன். நான் கவர்ன்மெண்ட் அச்சகத்துல வேல பார்க்கறேன். உங்ககூட கொஞ்சம் பேசனும்” என்றார்
“என்ன விஷயம் சொல்லுங்க” என்றேன்
“அரசாங்கத்துல அறிவொளி இயக்கம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உங்களால ஒரு பத்து பேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க முடியுமா?”
அவர் கேட்டதும் எனக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.
எனக்கு அறிவொளி இயக்கம் பற்றி முன்பே தெரியும். கணவர் அறிவொளி இயக்க வேலைன்னு சொல்லிக்கிட்டு ஒரு மூன்று மாதங்கள் கழித்து அப்போதுதான் வீட்டிற்கே வந்திருந்தார். அவர் மூலமாக அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் தெரியும். கடைசி இரண்டு மாதம் உள்ளூரிலேயே கேம்ப் மேனேஜராக இருந்தார். கேம்ப்பில் கலைக்குழுவினர், ஏபிசி, பிபிசி, ஒருங்கிணைப்பாளர் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தனிதனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வீட்டிற்கு வரமுடியாது.
இளவழகன் கேட்டவுடன் எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியல. ஏன்னா ஸ்கூலுக்குப் போயி பாதியிலேயே படிப்ப விட்டவுங்க, ஸ்கூல் பக்கமே போகாதவங்க இவங்களுக்காக எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்கற ஒரு இயக்கம்னு தெரியும். ஆனா நம்ம பொது புத்தியில எப்பவுமே ஒன்னு இருக்கும். யாரோ யாருக்காகவோ என்னவோ செய்யப்போறாங்கன்னு இருக்கும். நாமலும் செய்யலாம்னு நமக்குத் தோணாது. நீங்க சொல்லிக்கொடுக்கறீங்களான்னு கேட்டவுடன் ஆஹா நம்மளும் செய்யலாமான்ற நெனப்பே வரும்.
அதுவுமில்லாம எனக்கு வந்து எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் சுமாராக அல்லது அதற்கும் கீழேயான படிப்பு. அதுனால நான் எல்லாரையும் விட மட்டம்ன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை என் மனசுல எப்பவுமே இருக்கும்.
“நான் பத்தாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சிருக்கேன்” என்றேன்.
“உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமில்ல” என்றார்
“ம் அது மட்டும்தான் தெரியும்” என்றேன்.
“அதுபோதும்” என்றார்
“எப்டி சொல்லித்தர்றதுன்னு தெரியாதே?”
“அதுக்கு பயிற்சி வகுப்பு நடக்கும் அங்க சொல்லிக்குடுப்பாங்க”
“சரி படிக்காதவங்க யாருன்னு எனக்குத் தெரியாதே” என்றேன்
“அதப்பத்தியெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் நான் அவங்கள உங்க வீட்டுக்கே வரவச்சிர்றேன். ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம்னு நேரம் ஒதுக்குனா போதும். ஆறு மாசம் பாடம் சொல்லிக்கொடுத்தாப் போதும். ரெண்டு நாள் கழிச்சு வர்றேன் யோசிச்சு முடிவ சொல்லுங்க” என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார்.
அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கட்டுமா என்று கணவரிடம் கேட்டேன்.
உனக்கு விருப்பமிருந்தா தாராளமா எடுக்கலாம் என்றார்.
இரண்டு நாள் கழித்து வந்தவரிடம் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்தவாரம் உங்களுக்கு ஏலகிரி மலையில மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு இருக்கு தயாராகிகங்க என்றார்.
நன்றி: பாடினியார் வலைப்பக்கம்
No comments:
Post a Comment