Sunday, 12 April 2015

கடவுள் மறுப்பின் விஸ்வரூபம்


ஏற்கெனவே ஆதி மனிதன் யுகம், ஆண்டான் யுகம், நிலப்பிரபு யுகம் எனும் யுகங்களை உலகம் கண்டுவிட்டது. தற்போது முதலாளி யுகத்தைக் கண்டுகொண்டிருக்கிறது. அப்படியெனில் இதனினும் ஒரு சிறந்த யுகம் வரத்தானே செய்யும். அதைக்காண மனிதர்கள் இருப்பார்கள், ஆனால் கடவுள் இருக்க மாட்டார். அவர் கதை முடிந்திருக்கும்“- அறிஞர் அருணன் எழுதிவந்த கடவுளின் கதை ஐந்தாவது பாகத்தை இவ்வாறு முடித்திருக்கிறார்.இப்போது வரை கடவுளின் கதை முடியவில்லை.

அது மேலும் மேலும் விரிந்து கொண்டே இருக்கிறது. வெளிச்சம் வந்தால் இருள் தொலையும் என்பது அறிவியல். ஆனால் அறிவியல் தொழில்நுட்பம் என்ற வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டும் கடவுள் பற்றிய கதைகள் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடவுளின் கதை என்கிற இந்தப் பெருநூல் முடிவடைந்தாலும், கடவுளின் கதையும் ஒரு நாள் உண்மையில் முடியத்தான் செய்யும் என்ற நம்பிக்கையோடு அருணன் இந்த நூலை முடித்திருக்கிறார். கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதம் முடிவின்றி நடந்து கொண்டே இருக்கிறது.

உண்டு என்று சொல்பவர்கள் பதில் சொல்வது எளிது. பகுத்தறிவு அடிப்படையில் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் பதற்றமடையும் நம்பிக்கையாளர்கள் புலனறிவால் கடவுளைக் கண்டறிய முடியாது. அது ஒரு நம்பிக்கை என்று முடித்துவிடுவார்கள். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் என்று கடவுளின் இருப்பு குறித்து புரியாமல் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் கண்ணதாசன்.கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்கிறார் திருமூலர். ஆனால் கடவுள் இல்லை என்பதைக் கண்டறிந்து விண்டுரைத்திருக்கிறார் பேராசிரியர் அருணன்.

இந்த ஐந்தாவது பாகம் முதலாளித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. இரண்டு உலகப்போர்களை மனிதகு லம் சந்தித்துள்ளது. இந்த இரண்டு போர்களிலும் வென்ற நாடுகள் சில. தோற்ற நாடுகள் சில. ஆனால் அன்பையும் சமாதானத்தையும் போதிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் மதங்கள் இரண்டு போர்களிலும் பரிதாபமாக தோற்ற கதையை, மத குருபீடங்களே யுத்தங்களில் ஒரு சார்பு எடுத்து நின்ற நிலையையும் விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். மார்க்சும் ஏங்கெல்சும் கடவுள், மதம் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்கினார்கள் என்றால் அதை நடைமுறைப்படுத்துகிற வாய்ப்பும்,கட்டாயமும் லெனினுக்கு வாய்த்தது என்று கூறும் ஆசிரியர் உலகின் முதல் சோசலிச நாட்டில் கடவுள் கோட்பாடு எவ்வாறு அறிவியல் பூர்வமாக எதிர்கொள்ளப்பட்டது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார். மரணித்தபிறகு மகத்தான சொர்க்கம் காத்திருக்கிறது என்று அனைத்து மதங்களும் அல்லலுறும் மனிதர்களுக்கு ஆசை காட்டிக்கொண்டே இருக்கிறது.

லெனின் கூறுகிறார்: “மோட்ச உலகை பாதிரியார்களுக்கும், குருமார்களுக்கும், முதலாளித்துவ மதவெறியர்களுக்கும் அவன் (உணர்வு பெற்ற தொழிலாளி) விட்டுவிடுவான் தனக்கு இங்கேயே, இந்த உலகிலேயே நல்வாழ்வு கிடைக்கப் போராடுவான்.” ஆத்திக, நாத்திக விவாதத்தை அறிவுசார் விவாதமாக மட்டும் லெனின் கருதவில்லை. மனிதகுலத்தை அழுத்திக்கொண்டிருக்கும் மதம் எனும் நுகத்தடி இந்த சமுதாயத்திற்குள்ளேயே இருக்கிற பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு. முதலாளி வர்க்கத்தின் இருண்ட சக்திகளுக்கு எதிரான போராட்டமின்றி பாட்டாளி வர்க்கத்திற்கு விழிப்புணர்வு கிடைக்காது என்பது லெனின் கருத்து. கடவுள் மறுப்பை கட்சியில் சேர்வதற்கு முன்நிபந்தனையாக மாமேதை லெனின் முன்வைக்கவில்லை.

ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர் கட்சியில் சேர்ந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மாற்றுவதற்கான போதனை நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதெளிவாகக் கூறிய லெனின், அரசு என்று வருகிற போது ஒரு நாட்டின் குடிமக்கள் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அரசு என்பது அவர்கள் அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டுமானால், மத விவகாரத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும். மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று தெளிவாக பிரகடனப்படுத்திவிட வேண்டும். அரசு பொது விவகாரங்களை மட்டுமே கவனிப்பது அதாவது கறாரான மதச்சார்பற்ற அரசு எழ வேண்டும் என்று லெனின் கூறியுள்ளதைத் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

மதம் குறித்த மானுடவியல், சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மதம் பற்றிய உளவியல் ஆய்வும் இடம்பெற்றுள்ளது. சிக்மண்ட் ஃபிராய்டு குறித்து தமிழில் எழுதும்பலரும் அவரது கனவு கோட்பாடு குறித்தும் செக்ஸ் கோட்பாடு குறித்தும் மட்டுமே விரிவாக பேசுகின்றனர். ஆனால் ஃபிராய்டு கடவுள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளதை அருணன் விளக்கியுள்ளார். பரலோக ராஜ்ஜியம் என்பதெல்லாம் மனிதர்களுடைய ஆசையே அன்றி வேறல்ல என்று கூறும் ஃபிராய்டு மதம் எனும் மாயையின் இடத்தில் அறிவியல் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். கிறிஸ்துவம் சொல்லும் ஆதிப்பாவம் குறித்த ஃபிராய்டின் ஆய்வு சுவாரஸ்யமானது. பெட்ரண்ட் ரஸ்ஸல் கருத்துப்படி மதம் என்பது பயத்தில் தோன்றிய ஒரு வியாதி.

ஆனால் அவரும் கூட ஒரு நிலையில் கடவுள் இல்லை என்று நிரூபிக்கக்கூடிய இறுதியான வாதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சறுக்கியதையும் அருணன் எடுத்துக்காட்டியுள்ளார். இஸ்லாம் பூமியில் முற்றிலும் செயற்கையாக யூத அரசு இஸ்ரேல் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட விநோதத்தையும் இந்நூல் விவரிக்கிறது. இந்துமதப் பழமைவாதிகளோடு போராடிக் களைத்த டாக்டர் அம்பேத்கர் நான்கு லட்சம் நேசர்களோடு புத்தமதத்தைத் தழுவினார். பவுத்தத்தின் ஹீனயானம், மகாயானத்தை நிராகரித்து நவயானம் என்பதை அவர் உருவாக்கினார். ஆனாலும் அவரது நோக்கம் நிறைவேறியதா என்றால் “மார்க்சியத்திற்கு மாற்றானது புத்தமதம் என்று கூறுவதோ உலகை உய்விக்க வல்ல தத்துவம் அது என்பதோ காலத்திற்கு ஒவ்வாதது மட்டுமல்ல.

கற்பனை மிகுந்த உயர்வு நவிற்சியாகும்” என்று ஆனந்த் டெல்டும்ப்டே கூறியதை மேற்கோள் காட்டுகிறார் அருணன். இந்து மதம் எதிர்நோக்கிய நவீன இயக்கங்கள் குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியார், சிங்காரவேலர் ஆகியோர் மதத்தை எதிர்த்து நடத்திய தத்துவப்போர்கள் விளக்கப்பட்டுள்ளன. நாத்திகப் பேராசிரியர்களின் புறப்பாடு ஆத்திக உலகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.இந்து மதம் பின்னோக்கி ஓடும் வண்டி எனும் அத்தியாயத்தில் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் தகிடுதத்த வேலைகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் கல்வி பரவலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும் அவை மதச்சீர்திருத்தத்திற்கு இட்டுச்செல்லவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் இந்த நாட்டு முதலாளித்துவம், பிராமணிய மதப்பழமைவாதத்துடன் செய்துகொண்ட சமரசம்-உழைப்பாளர்களை ஒதுக்கிவைக்க. அதனால்தான் இங்கே கல்வி அமைப்பும், நவீன ஊடகங்களும் அதற்கான அறிவு ஜீவிகளையும் உருவாக்கவில்லை. பகுத்தறிவு பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. நாளது தேதிவரை இந்துப்பழமைவாதம் இங்கே சமாளித்து நிற்பதன் ரகசியம் இதுதான் என்று இந்துப்பழமைவாதம் வேர் கொண்டிருக்கும் இடத்தை சரியாகச் சுட்டிக்காட்டுகிறார் அருணன். வேரை வெட்டுகிற அறிவு ஆயுதமாக இந்த நூல் விளங்குகிறது. பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இளைஞர்களின் பொறுப்பு. தொழில் வளர்ச்சியும், தனிமனிதர்களின் பொருளியல் வாழ்வும் மேம்பட மேம்பட நாத்திகம் மேலும் மேலும் உயரக்கிளம்பும் எனக்கணிக்கிறார் ஆசிரியர். தத்துவம் விஞ்ஞானத்தோடு கைகோர்த்துக்கொண்டு மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும். சொல்லப்போனால் கலை இலக்கியம் போன்ற இதர அறிவுத்துறைகளும் கூட்டுச்சேர வேண்டும். யுகம் யுகமாக வளர்த்தெடுக்கப்பட்ட மத உணர்வுகளையும், கடவுளையும் மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவது சமானியமான வேலையல்ல என்று கூறுகிறார் பேராசிரியர் அருணன்.அந்தப் பெரும் பணியை செய்வதற்கு இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. கடவுள் கோட்பாடு குறித்து இவ்வளவு விரிவாக சமகாலத்தில் இந்திய மொழிகள் எதிலும் இவ்வளவு பெரிய நூல் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அதைத் தமிழில் சாத்தியமாக்கியிருக்கும் அருணனின் உழைப்பும், தத்துவத்தெளிவும் வணக்கத்திற்குரியது.கடவுள் விஸ்வரூபம் எடுப்பார் என்று புராணிகர்கள் சொல்வார்கள். ஆனால் அருணன் எடுத்திருக்கிற கடவுள் மறுப்பு விஸ்வரூபமே இந்த நூல்.
நன்றி: மதுக்கூர் ராமலிங்கம்

No comments:

Post a Comment