ஓவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும் 5,10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வை எப்படி எழுதபோகிறோம் என்ற கவலையில் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களோ தம் குழந்தையை எந்த ‘ தனியார்’ பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ப்பது என பார்ப்பவர்கள் அனைவருடனும் விவாதம் நடத்துவர். இதில் ஏதோ ஒரு பள்ளி அல்லது கல்லூரியின் பெயரை பலர் சொல்லியிருப்பர். உடனே இந்தப் பள்ளியில் தான் குழந்தையை சேர்க்க வேண்டும் என மனக் கோட்டை கட்டிவிடுவர். இந்தக் கோட்டை சிலருக்கு கிடைக்கிறது.
பலருக்கு இடிந்துவிடுகிறது. “எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! எதுக்கெடுத்தாலும், ‘அதெல்லாம் அந்தக் காலம். அப்படீன்னு சிலர் சொல்லிட்டே இருக்காங்களே...’ அது ஏண்டா?’’“அவங்களோட வாழ்க்கை முறையைப் பற்றி சொல்றாங்கடா?’’“எனக்குப் புரியுற மாதிரி நச்சுன்னு நாலே வரியில சொல்லுடா.’’“வீட்டுல ஒருத்தர் சம்பாதிச்சு டாக்டருக்கு படிக்க வெச்சது அந்தக் காலம். வீட்டுல ரெண்டு பேர் சம்பாதிச்சு எல்.கே.ஜி படிக்க வெக்கிறது இந்தக் காலம். இப்போ புரியுதா?”இந்த நகைச்சுவை வசனத்தைச் படித்தாலே கல்வியின் வியாபாரத்தை தெரிந்து கொள்ளலாம்.குழந்தையை எல்கேஜி படிக்க வைப்பதற்கே பலரால் முடியாத நிலை இங்கு உள்ளது.
இப்படி இருந்தும் ஏன் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்கின்றனர். இப்படி பெற்றோர்கள் நினைப்பதற்கு வேறு யார் காரணம்? அரசாங்கத்தைத் தவிர. அரசுப் பள்ளிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்தால் ஏன் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் இப்படி ஓடப்போகின்றனர். அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதையும், தனியார் பள்ளியின் கொள்ளைகளுக்கு துணை போவதையும், தனியார் பள்ளியின் பொய் கவர்ச்சியையும் “எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க” என்ற நூலில் இல. சண்முகசுந்தரம் பேச்சு மொழியில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை இந்திய மாணவர் சங்கம், பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது.பள்ளிப் படிப்பின் போதே சில மாணவர்கள் ‘மது’ பழக்கத்தில் சிக்குகின்றனர்.
இதற்கு யார் காரணம் என்று நாம் யோசிக்காமல் வீணாக அவர்களை திட்டி கொண்டிருப்போம். நம் மூளையை சிறிது யோசிக்க வைத்தால், பள்ளியின் அருகிலேயே ‘டாஸ்மாக்’ கடைகளை வைக்க விட்டிருப்போமா?. இதில் கிடைக்கும் காசில் தானே அரசின் கஜானா நிரம்புகிறது. அப்புறம் எப்படி இவர்கள் கல்விக்கு செய்யும் சேவையின் அழிவை தடுக்க முடியும் என்பதை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவரும் போது ஊடகங்கள் அனைத்தும் தனியார் பள்ளி மாணவர்களின் வெற்றியை அப்படியே தூக்கி வைத்துக் கொண்டாடிடுகின்றன. ஆனால், ஆசிரியர்களே இல்லாத அரசு பள்ளிகளில் படித்து வெற்றி பெற்ற மாணவர்களை கண்டுகொள்ளக் கூடமாட்டார்கள். இதனால் பலர் அரசுப் பள்ளி சரிஇல்லை என நினைத்துவிடுகின்றனர்.
2013 -14 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்தின் முதல் மூன்று இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள் தானே பெற்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களும் பலர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்பெற்றுள்ளனர். 27 பேர் ஆங்கிலத்திலேயே சதம் அடித்துள்ளனர். 6 ஆயிரத்து 712 பேர் அறிவியலிலும், 2ஆயிரத்து 129 மாணவர்கள் சமூக அறிவியலிலும், 1056 மாணவர்கள் கணிதத்திலும் சதம் அடித்துள்ளனர். இப்படி பல புள்ளி விவரங்களுடன் தனியார் பள்ளியை விட அரசு பள்ளி தான் சிறந்தது என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது இந்நூல்.தமிழகத்தில் 2012 -13ம் ஆண்டில் 2ஆயிரத்து 253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான். இந்தப் பள்ளிகளில் மட்டும் 83 ஆயிரத்து 641மாணவர்கள் படிக்கிறார்கள். 16 ஆயிரத்து 421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள் தான்.
மேலும் 16 அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. இப்படிஇருந்தால் எப்படி மாணவர்கள் படிப்பார்கள்; உயர் கல்விக்கு செல்வார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டிய அவல நிலை தான் வரும் என்பதை நூல் பதிவு செய்துள்ளது.20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் காற்றோட்டமாக போதிய வெளிச்சத்துடன் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணை நிலை எண் 270 கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் 5 ஆயிரத்து 720 பள்ளிகளில் கழிப்பறை வசதிகளே இல்லை. அதிலும் 1442 பள்ளிகள் பெண்கள் பள்ளி என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. அரசாங்கம் திட்டமிட்டுள்ளதையாவது செய்தாலே அரசு பள்ளிகள் தனியார் பள்ளியை மிஞ்சிவிடுமே!நான்காண்டில் மட்டும் ரூ. 4 கோடி செலவில் 22ஆயிரம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கமுடியும் என்றால் ஏன் அனைத்து வகுப்புகளையும் கணினிமயமாக்க முடியாது. இப்படி நூல் நெடுக அரசாங்கத்தின்வீண் செலவுகளை சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.அரசுப் பள்ளிகள் தரமற்றதாக இருக்கிறதா, அங்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதில்லையா? தனியார் பள்ளி அனைத்தும் தரமானதா? தனியார் பள்ளி 90 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்களா? தனியார் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிவிடுகிறார்களா? இப்படியான பல கேள்விகளை பெற்றோர்கள்கேட்டுக் கொண்டால் ‘ எது நல்ல பள்ளி’ என்று அவர்களே தெரிந்து கொள்ள முடியும்.
எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!
ஆசிரியர்: இல. சண்முகசுந்தரம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,சென்னை - 600 018
044 24332924
பக்: 47, விலை ரூ. 25/-
நன்றி : தீக்கதிர்
No comments:
Post a Comment