ஆம். இது கதைதான். ஆனால், நிஜக் கதை. ‘சே... இப்படியொரு நூல் பள்ளிப் பருவத்தில் கிடைத்திருந்தால் அறிவியலில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கலாமே...’ என்று ஏங்க வைக்கிறது ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு: மனித அறிவுத் தேடலின் முழுக்கதை’ என்ற தமிழாக்க நூல். ‘A Short History of Nearly Everything’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் 2003ல் வெளியான இந்த நூலை எழுதியவர் பில் பிரைசன்.
வெளிவந்த ஒரே வருடத்தில் ஒரு மில்லியன் பிரதிகள் வரை விற்றுத் தீர்ந்ததுடன், இன்றும் ஹாட் சேல் ஆக பட்டையை கிளப்பி வருகிறது. இருக்காதா பின்னே? அறிவியலின் வரலாற்றை இந்தளவுக்கு யார் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள்? புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப்படவும், வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ளவும், நெகிழும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதுமாக அல்லாடுவதை புனைவுகளை வாசிக்கும்போதுதான் அனுபவிக்க முடியும் என்று எந்தப் புண்ணியவானோ சொன்னானோ?
அவன் தலையில் இடி விழ. அந்த ஆசாமி மட்டும் பில் பிரைசனின் இந்த நூலை வாசித்தால், பின்னங்கால் பிடறியில் தெறித்து ஓடிவிடுவான். சும்மா சொல்லக் கூடாது. மனிதர் வீடு கட்டி அடித்திருக்கிறார். ஆறு பாகங்கள். 30 அத்தியாயங்கள். 640 பக்கங்கள். இதற்குள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்கள் குறித்த வரலாற்றையும், மனிதனின் சரித்திரத்தையும் சரியான அறிவியலின் பயணத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்.
இதையெல்லாம் சும்மா டீ குடித்தபடியே அறையில் உட்கார்ந்து அவர் எழுதவில்லை என்பதுதான் முக்கியம். ஆதி மனிதர்கள் குறித்து முதல் இரண்டு அத்தியாயங்கள் விவரிக்கின்றன. இதற்காக 19 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து, 17 அகழ்வாராய்ச்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு அதன் பின்னரே பதிவு செய்திருக்கிறார். டார்வின் பற்றி எழுத அவரைப் போலவே காலோப்பாகஸ் தீவில் 178 நாட்கள் அலைந்திருக்கிறார்.
நியூட்டன் குறித்த விவரங்களுக்காக கேம்பிரிட்ஜ் பயணம், கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு, 200 வாழும் விஞ்ஞானிகளிடம் பேட்டி... ஆயிரக்கணக்கான நூல்களை வாசித்து குறிப்புகள் எடுத்தல்... ம்ஹும். பில் பிரைசன் ஒரு ராட்சஷன்.சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், வாயுவையும் தூசியையும் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2 ஆயிரத்து 400 கி.மீ. குறுக்காக எப்படி திரண்டு, ஒருங்கிணைந்து பூமியாக மாறியது...
440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிடம் ‘கா’ விட்டுவிட்டு சந்திரன் தனியாக சென்றக் கதை... ஆகியவற்றை சுவாரஸ்யத்துடன் முதல் பாகம் விவரிக்கிறது. சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படி சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தது என்பதை இரண்டாம் பாகம் பொட்டில் அறைந்து சொல்கிறது.
நிலவியலும், வேதியியலும் எப்போது அறிவியலில் முன்னணிக்கு வந்தன, டைனோசரை கண்டுபிடிக்க நடந்த போராட்டம், தோல்விகளும், ஏமாற்றங்களும், பலிகளும், பழிவாங்கலும் அறிவியல் வரலாற்றில் வேர்விட்ட காலம்... என சகலமும் இதில் உண்டு.
மூன்றாம் பாகம் நெகிழவும், பதறவும் வைக்கிறது. ஆங்கிலம் தெரியாமல் ஸ்வீடன் மொழியில் தன் கண்டுபிடிப்பை எழுதியதால் ஆக்சிஜனை ஷீலே கண்டறிந்தபோதும் அவருக்கு புகழ் கிடைக்க வில்லை.
குளோரினையும் இவரேதான் கண்டறிந்திருக்கிறார். ஆனால், அந்தப் பெருமையையும் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஹம்ப்ரிடேவே தட்டிச் சென்றார்... என்ற உண்மை முகத்தில் அறைகிறது. நியூட்டன் உட்பட பல மேதைகளின் மறுபக்கத்தை இந்த மூன்றாம் அத்தியாயம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தனிப்பட்ட பலகீனங்களை மீறி அறிவியல் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது இந்தப் பகுதியில்தான்.
டால்டனின் அணுக்கொள்கை எப்படி அடுத்தடுத்து வந்த கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன, ஒரு நூற்றாண்டுக்கும் குறைந்த காலம் வரையில் எப்படி பூமிக்குள் இருக்கும் பொருட்கள் குறித்த விவரங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரியாமல் இருந்தன, சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி அவர்களை விட எப்படி அதிகம் தெரிந்து வைத்திருந்தார், எரிமலையின் உள்ளே இருப்பது என்ன... என்பதையெல்லாம் பருந்துப் பார்வையில் நான்காம் பாகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஐந்தாம் பாகம் ஏற்படுத்தும் தாக்கம் இருக்கிறதே... வயிறு பிசைகிறது. காரணம், கடல் ஆராய்ச்சி குறித்து இந்தப் பகுதிதான் புட்டுப் புட்டு வைக்கிறது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் 130 கோடி கி.மீ. அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. ஆனால், கி.பி.1872 வரை கடல்கள் குறித்த முறையான ஆய்வு நடக்கவேயில்லை. 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு, மூன்று ஆண்டுகளுக்கு கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
70 ஆயிரம் மைல்கள் கடலில் பயணம் செய்து, நான்காயிரத்து 700 கடல் உயிரிகளை சேகரித்திருக்கின்றனர். 19 ஆண்டுகள் இப்படி விடாமல் ஆராய்ந்த பிறகே ஐம்பது தொகுதிகளாக தங்கள் அறிக்கையை சமர்பித்திருக்கிறார்கள்.ஆனால் -இந்தப் பணியில் ஈடுபட்ட பல விஞ்ஞானிகள், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். நான்கில் ஒருவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார்கள். இப்படி உயிரைக் கொடுத்துத்தான் கடல்சார் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்பதை அறியும்போது மனம் பதறுகிறது.
ஒரு பேச்சுக்குத்தான் இப்படி தனித்தனி பாகங்கள். ஆனால், அறிவியலின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் ஒரே காலத்தில் நடப்பவைதானே? என்ன கொஞ்சம் முன்பின்னாக அளவீடு இருக்கும். அவ்வளவுதான். ஸோ, பாகத்துக்கு ஒரு மையப் பொருள் இருந்தாலும், பிறச் செய்திகளையும், விவரங்களையும் கையோடு பதிவு செய்திருக்கிறார். ராபர்ட் ஓவன் இவான்ஸ் என்னும் பாதிரியாரை குறித்த அத்தியாயம் சிலிர்க்க வைக்கிறது.
காரணம், இவான்ஸ் தொழில் முறை விஞ்ஞானி அல்ல. ஏழ்மையான குடும்பம். ஆனால், இவர்தான் தட்டுமுட்டு சாமான்களுக்கு மத்தியில், டப்பா தொலைநோக்கியைக் கொண்டு 42 பெரு நட்சத்திர வெடிப்பை பார்த்த சாதனையாளர். ஒரு நட்சத்திரம் வெடித்து சிதறுவதைத்தான் பெரு நட்சத்திர வெடிப்பு என்கிறார்கள். இதை 42 நாட்களில் இவர் பார்க்கவில்லை. பதிலாக 55 வருடங்கள் கிட்டத்தட்ட தினமும் விண்வெளியை ஆராய்ந்து இதை தரிசித்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.
இப்படி நெகிழவும், உருகவும், பதறவும் வைக்கும் இந்த நூல் இந்திய அளவில் முதல் முறையாக தமிழில் வந்திருக்கிறது. ப்ரவாஹன் இதை தமிழாக்கம் செய்திருக்கிறார். Don’t miss it!
- கே.என்.சிவராமன், தினகரன் நாளிதழில் இருந்து........
No comments:
Post a Comment