Saturday, 11 April 2015

அறிவொளி இயக்க நினைவுகள் – 4

தன்னார்வலர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை கேம்ப் இருக்கும். எங்களை உற்சாகமூட்டி எங்கள் மனம் மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.

எப்படின்னா கீதாவின் கணவர் என்னிடம் கேட்பார்
“ஏங்க படிப்பு சொல்லித்தர்றீங்களே மாத சம்பளம் ஏதாவது தர்றாங்களா?”
“இல்லங்க.”
“சும்மா சொல்லாதீங்க. யாரு இந்தக் காலத்துல ப்ரீயா சொல்லித் தர்றாங்க?”
“உண்மையிலயே சும்மாதாங்க சொல்லித் தர்றேன்.”
“நான் நம்ப மாட்டேன்.”
“……..”
அதே தெருவில் இருக்கும் இன்னொரு பெண்மணி என்னிடம் கேட்டார்,
“ஏங்க சும்மாவா பாடம் சொல்லித் தர்றீங்க”
“ஆமாங்க”
“அதுக்கு பத்துப் பேருக்கு டியூசன் சொல்லிக்குடுத்தீங்கன்னா ஏதாவது செலவுக்காவது ஆகும்.”
“………”
“ஃபேன் வேற போடுறீங்களா? அது வேற எதுக்கு உங்களுக்கு வெட்டிச் செலவு”
நான் பதிலே பேசாமல் வந்துவிடுவேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனம் மாறிவிடும்தானே?

இந்த கேம்ப்களில் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களும் தெரியவரும். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் உள்ள மையம் தெரு விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். தன்னுடைய மனைவி படிக்கக்கூடாது என்று நினைத்த ஒரு குடிகாரக் கணவன் தெரு விளக்கை கல்லால் அடித்து உடைத்து விடுவாராம். வேறு லைட் மாற்றியுள்ளனர். திரும்பவும் உடைத்துவிட்டாராம்.

வேறொரு சம்பவம். ஒரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஊரில் நடுவே இருந்த கட்சிக்கொடி ஊரை அசிங்கப்படுத்துவதாக நினைத்த இளைஞர்கள் அனைத்துக் கட்சிக்கொடியையும் அகற்றியுள்ளனர். அவ்வளவுதான் அடுத்த நாள் போலீஸ் அந்த இளைஞர்களைத் தேடி வந்துவிட்டது. அப்பறம் அறிவொளி இயக்கத்தினர் சென்று அவர்களுக்கு உள் நோக்கமெல்லாம் கிடையாது என்று விளக்கி அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
இது போலெல்லாம் நிறைய நடக்கும்.

மாதம் ஒருமுறை நடக்கும் கேம்ப்புக்கு என்னுடன் அலமேலு என்ற பெண்ணும் வருவாள். வேலப்பாடிக்கு அருகில்தான் சங்கரன் பாளையம். அங்குள்ள ஒரு தன்னார்வலர்தான் அலமேலு. அந்த ஏரியாவுக்கு என் கணவர்தான் பிபிசி. அவர் சொல்லி அனுப்பியிருந்தார். அவளும் மாதா மாதம் என்னுடன் கேம்ப்புக்கு வருவாள். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து விடுவாள். நானும் நேரம் கிடைக்கும்போது அவள் வீட்டிற்குச் செல்வேன். அவர்கள் நிறைய மாடு வைத்து பால் வியாபாரம் செய்பவர்கள்.

கலைச்செல்வியும் மையத்தைப் பார்க்க அடிக்கடி வருவாள். மையம் இல்லாத நேரங்களிலும் வருவாள். அவள் சொன்னது, எவ்வளவு மனக்கஷ்டத்தோட இங்க வந்தாலும் இங்க வந்தவுடனே மனசு ரிலாக்ஸ் ஆகிடுது. மனசு ஒரு மாதிரி ஆனா ஒடனே இங்கதான் வருவேன் என்பாள்.

ஒரு முறை பாண்டிச்சேரியில் இருந்து ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது கணவர் ஒரு எழுத்தாளர். எனது கணவரும் எழுத்தாளர் ஆகையால் அவளது கணவரைத் தெரியும். அதை வைத்து எங்கள் வீட்டில் இரண்டு நாள் தங்கினாள். அவள் கிளம்புவதற்கு முன் அவள் பேசிய விஷயம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவர்கள் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார்களாம். அதன் நோக்கம் என்னன்னா மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டுமாம். அதற்கு மக்கள் செய்ய வேண்டியது என்னன்னா, ஒரு நாலு ஆண்களும், நாலு பெண்களும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். கல்யாணம் எல்லாம் கிடையாது. பிறக்கும் குழந்தைகள் யார் யாருக்கு பிறக்கிறார்கள் என்று தெரியாததால் நான்கு பேரின் குடும்பமும் ஒன்றாக இருக்கும். சொத்தும் ஒன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு சமமாக கிடைக்குமாம்.

எவ்வளவு நல்ல ஸ்கீம். இதைக் கேட்டவுடன் நான் ஆடிப்போய்விட்டேன். அவள் சென்றவுடன் கணவரிடம் கேட்டேன்,
“என்ன இந்தப் பெண் இப்படி சொல்கிறாளே? இது உண்மைதானா? இப்படியெல்லாம் கூட நடக்குமா?”

“ஆமா பாண்டிச்சேரியில சாரு நிவேதிதா குரூப் ஒன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

“என்ன இப்படிச் சொல்றீங்க இது எப்படி சாத்தியமாகும். எப்படி சரியாகும். சும்மாவே எய்ட்சு கியிட்சுன்னு என்னென்னெவோ வந்துக்கிட்டிருக்கு. இதெல்லாம் என்ன பேச்சு. #$%^&*#$%@!#$%&*……”

“இங்க பாரு யாரோ என்னவோ பேசிக்கிட்டுத் திரியறாங்க. நான் என்னவோ அத ஆதரிக்கிற மாதிரி என்னயப் போட்டு ஏன் திட்டற?”
சரி பாவம் இவரைத் திட்டி என்ன பிரயோஜனம்.

ஆனா அந்த பெண் பேசியதில் இருந்து ஒன்று தெரிந்தது. அந்த குரூப்பில் உள்ளவர்கள் எல்லாம் திருமணமாகி தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஊருக்கு உபதேசம். யாரோ குட்டிச்சுவராப் போகட்டும்னு எண்ணம் போல.

இரண்டு மூணு நாள் கழித்து கலைச்செல்வி வந்தாள். பாண்டிச்சேரிப் பெண்ணின் பெயரைச் சொல்லி அவள் வந்தாள் வீட்டுக்குள்ளேயே விடாதீங்க என்றாள். நான் கலைச் செல்வியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முகத்தில் அவ்வளவு கோபம். 
மேலும் சொன்னாள் அவ போற எடத்துல எல்லாம் செருப்படிதான் கெடைக்குது…….. என்று பொரிந்து தள்ளினாள்.
பாண்டிச்சேரி பெண் பேசிய விஷயத்தை என்னிடம் கலைச்செல்வி சொல்லவில்லை. அவளால் என்னிடம் அதைச் சொல்லக்கூட வாய் வரவில்லை. மக்களே அந்த பாண்டிச்சேரிப் பெண்ணை விரட்டி விட்டனர்.

(இன்னும் இருக்கு)


அருகிலிருக்கும் பூந்தோட்டத்திற்கு ஒரு விசிட். சூடிதாரில் கலைச்செல்வி.

என் மடியில் இருப்பது உமாவின் அக்கா குழந்தை.

No comments:

Post a Comment