Tuesday, 15 October 2013

தாய்மொழி வழிக்கல்வி ஏன்? எப்படி?

தாய்மொழி வழிக் கல்வி எனப் பொதுவாகச் சொன்னாலும் தமிழ் பயிற்றுமொழி என குறிப்பாகச் சொன் னாலும் பலருக்கு முகம் சுளிக்கிறது. ஆங்கிலம் இல்லாமல் அகிலத்தில் ஏதும் செய்ய இயலாது. ஆங்கில வழிக் கல்வியே அறிவின் திறவுகோல் என்று மக்கள் நம்பவைக்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இது. இது சரியா? உண்மையா? என்கிற கேள்விகளை உணர்ச்சி நிலையில் நின்று அல்ல; அறிவுப்பூர்வமாக சிந்திக்கத் தூண்டுவது மீண்டும் மீண்டும் தேவையாய் இருக்கிறது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சுமார் 40 ஆண்டுகளுக்குமுன் சில அரசியல் இயக்கங்கள் ஆவேசத்துடன் பேசி, எழுதி இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது அதிலே உணர்ச்சிப் பிழம்பாக நின்றது ஒரு தலைமுறை. அந்தத் தலைமுறைக்கு நியாயம் வழங்கப்படவில்லை. மத்திய ஆட்சி மொழிச் சட்டம் பற்றி 1968ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது,“நீதி, நிர்வாகம், கல்வி என்ற மூன்று நாற்காலிகளிலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால் தமிழ் மக்களுக்கு பீதி இருக்காது; பயம் இருக்காது”என்று தோழர்கள் ஏ. பாலசுப்ரமணியம், என். சங்கரய்யா, திரு. மா.பொ.சி. ஆகியோர் வலியுறுத்தினார்கள். ஆனால் நடந்தது என்ன?“மழை பெய்கிறபோது குடை கிடைக்காவிட்டால் மேல்துணியை (தலையில்) வைத்துக்கொள்வது போல உடனடியாக இந்தி வந்துவிடாமல் ஆங்கிலத்தை வைத்துத்தடுக்கிறோம்” என்று அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா தமக்கே உரிய பாணியில் இலக்கிய நயத்தோடு பதில் சொல்லி ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளித்தார்.

அப்போது விரிக்கப்பட்ட குடை இன்றுவரை மடக்கப்படவே இல்லை. மாறாக ஆரம்பக் கல்வியிலும் ஆங்கிலம் பயிற்றுமொழி என மேலும் விரிந்திருக்கிறது.தமிழுக்கு உரிய இடம் நீதியில், நிர்வாகத்தில், கல்வியில் வழங்கப்படாத தால் இரண்டு தலைமுறைகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்தியை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றதன் இடத்தில் தமிழை வைத்துப் பார்க்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள். மாறாக ஆங்கிலமே எப்போதும் என் பதற்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவு அதிலிருந்து விட்டு விடுதலையாக முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது.“இவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும் அறிவு, ஒழுக்கம், ரசனை, கருத்து போன்றவற்றில் ஆங்கி லேயர்களாகவும் இருக்க வேண்டும்” என்று பிரிட்டிஷ் காலனிய கல்விக் கொள்கையை உருவாக்கிய மெக்காலேயின் எண்ணம் ஈடேறிக்கொண்டே இருக்கிறது.“ஆங்கில மோகம் என்பது வெறும் மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது ஓர் பண்பாட்டுத் தாக்கம். காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கிய அரசியல் அம்சத்தைவிட அதன் கலாச்சார அம்சம் இன்னும் பயங்கரமானது. அதனால்தான் இன்றைக்கும் தாய் மொழியைக் கூட புறக்கணித்து அடிமை தன் விலங்குகளைத் தானே தழுவி கட்டிக் கொள்வதுபோல ஆங்கிலத்தைக் கட்டித் தழுவும் அளவுக்கு ஆங்கில மோகம் நம்மை ஆட்கொண்டுள்ளது”என்று அண்ணல் காந்தியடிகள் எழுபது ஆண்டுகளுக்கு முன் சொன்னது இன்றும் எதார்த்தமாக இருக்கிறது.

உலக நாடுகளோடு தொடர்பு கொள்ளவும் அறிவியல் நூல்களைக் கற்கவும் ஆங்கிலம் தேவைப்படும்போது, அம்மொழியை நாடிச் செல்வது எப்படி மோகமாகும் என்ற எதிர் கேள்வி எழுகிறது. 600 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் தொகை வெறும் 47 கோடிதான் என்பது கசப்பான உண்மை. பிரிட்டிஷ் காலனியம் பல நாடுகளைக் கவ்வியதால் முற்காலத்தில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றது. நவீன காலனியம் மூலம் அமெரிக்கா தற்போது அதே வேலையைச் செய்வதால் மீண்டும் ஆங்கிலம் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வளவே! 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் மாண்டரின் என்கிற அவர்களின் தாய்மொழிதான் ஆட்சி மொழி. நீதியில், நிர்வாகத்தில், கல்வியில் அதற்குத்தான் அரியணை.ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழியும் அல்ல; பயிற்று மொழியும் அல்ல. சிறுசிறு நாடுகளின் கொத்தாகத் திகழ்கிற தென் அமெரிக்க நாடுகளிலும் ஆங்கிலம் இல்லை; ஆங்கிலத்தைவிட அதிக மக்களால் பேசப்படுவதும் பயிலப் படுவதும் ஸ்பானிஷ் மொழி என்பது வியப்பளிக்கும் செய்தி.

இத்தனைக்குப் பிறகும் தாய் மொழியைத் தவிர்த்து ஆங்கிலம் அவ சியம் என்று கருதப்படுவதற்குக் காரணம் அம்மொழியில் பயின்றால் வேலை வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணம்தான். வெறும் மொழித்திறன் மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கிவிடாது. சிந்தனைத் திறனும் அவசியம். மொழியை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் சிந்தனை ஊற்றினை இளம் வயதில்தான் பெறமுடியும்.“நான் ஆரம்பக் கல்வியைத் தமிழ் வழியிலேயே கற்றேன். பிற்காலத்தில் அறிவியல் துறையில் சாதித்திட எனக்கு இது மிகவும் ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சேமிப்புக் கிடங்கு; தகவல் சுரங்கம். காலம், தலைமுறையைக் கடந்து நிற்பது தாய்மொழிதான்”என்கிற ஏவுகணை தொழில்நுட்ப சாதனையாளரும் முன்னாள் குடி யரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாக்குமூலத்தை நாம் புறந் தள்ளிவிடப் போகிறோமா?நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சந்திராயனின் திட்ட இயக்குநராக இருக்கும் மயில்சாமி அண்ணாதுரை தமிழ்வழி பயின்று அறிவியல் துறையில் முன்னேறி மிளிர்கின்ற மேலும் ஒரு உதாரண மனிதர் அல்லவா?உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள பி. சதாசிவம் அவர் களின் தாயார் “தமிழ் வழியில் படித்து இன்று நம் நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டது எனது அளவில்லாத சந் தோஷமாக உள்ளது” என்று கூறுவதில் உள்ள பூரிப்பு தாய்மொழி வழி கல்விக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தானே!சென்னை உயர்நீதிமன்றத் தலை மை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்றுள்ள நீதிபதி கே. சந்துரு, வரலாற்றுப் பேராசிரியர் முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி போன்று தாய்மொழி வழி பயின்று புகழுச் சியைத் தொட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.“தாய்மொழி வழியில் கல்வி கற் பிக்கப்படும் பள்ளிகளில் அறிவு என்பது வகுப்பறையில் உருவாக்கப்படுகிறது. அதன் பின் அந்த அறிவை குழந்தைகள் ஆங்கிலத்திற்கோ வேறு மொழிகளுக்கோ மாற்றிக்கொள்ள முடியும்”என்ற பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியின் கருத்துக்கு எடுத்துக்காட்டுகளாக இன்னும் எத்தனையோ பேர் திகழ்கின்றனர்.

அமெரிக்காவின் தெற்குக் கரோலினா பகுதியைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் 160 மொழிக் குடும்பங்களைக் கொண் டுள்ள 22 நாடுகளில் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை இவ்வாறு கூறுகிறது!“தாய்மொழி வழிக் கல்வியால் குழந்தைகள் விரைவாக வாசிக்கப் பழகுகின்றனர். அதற்குக் காரணம் அந்த மொழியின் கட்டமைப்பு பற்றிய அறிவு அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது. எனவே சரியான முறையில் அவர்களால் ஒலிக்க முடிகிறது. மேலும் நிறைய சொற்களை அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் உரிய வயதில் பள்ளியில் சேர விரும்புகிறார்கள்.தாய்மொழியில் கற்பிக்கும்போது கல்விக்கான செலவு குறைகிறது. தாய்மொழியை நன்கு கற்று, தேர்ச்சி பெறுபவர்களால் மிக எளிதாக இன்னொரு மொழியைக் கற்க முடிகிறது.தாய்மொழிவழி பயிலும் குழந்தை களுக்கு சொந்த பண்பாட்டு அறிவும் பாரம்பரிய அறிவும் கிடைக்கிறது. சொந்த அடையாளம் பற்றிய வலுவான புரிதல் உண்டாகிறது. இத்தகைய குழந்தைகள் முன்பின் அறியாத மொழியில் பயில்பவர்களைவிட பள்ளியில் மட்டு மின்றி வாழ்க்கையிலும் சாதனை படைப்பவர்களாக இருக்கிறார்கள்.”1937ஆம் ஆண்டு வார்தாவில் காந்தி தலைமையில் நடைபெற்ற அடிப்படைக் கல்வி தொடர்பான அகில இந்திய மாநாடு, 1952ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஏ.எல். முதலியார் ஆணையம் 1964 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டி.எஸ்.கோத்தாரி ஆணையம் - 1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய கல்விக்கொள்கை - 1989ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந் தை உரிமைகளுக்கான ஐ.நா. சபை யின் தீர்மானம். 2005ம் ஆண்டு வெளி யிடப்பட்ட யுனெஸ்கோ அறிக்கை என அனைத்திலும் தாய்மொழிவழிக் கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறை இவற்றுக்கு நேர்மாறானதாக இருக்கிறதே ஏன்?இதற்கு மிக முக்கியமான காரணம் தாய்மொழி வழிக்கல்வி வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கவில்லை; உயர்கல்வி தமிழில் இல்லை, தமிழில் தேவையான நூல்கள் இல்லை என்பது தான். கணினி பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அதற்கான தமிழ் அகராதியை மணவை முஸ்தபா என்ற தனி நபரால் உருவாக்க முடிந்துள்ளது. மிகப்பெரிய அரசு நிர்வாகம் இதைச் செய்ய முடியாதா? முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுடன் படிப்பை நிறைவு செய்யும் முதல் தொகுப்பில் உள்ள 120 மாணவ-மாணவியருக்கு அரசு வேலை உறுதி என்று சொல்லப்படுகிறது. (தி இந்து செய்தி 19.9.13-பக். 3). தமிழ்வழி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அரசாணைதான் (எண். 45, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தேதி 30.9.2010) இதற்குக் காரணம். இந்த ஆணை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அரசுப்பணிகளுக்கும் பொருந்தும்.

எனவே தாய்மொழி வழி பயில்வதற்கு ஊக்குவிப்பும், தேவையான நூல்கள் உருவாக்கமும், பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழி என்ற உறுதிப்பாடும் இதற்கேற்ப பொதுப்பள்ளிகள் - அருகாமைப் பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுப்பதும், அறிவியல் மொழியாகத் தமிழையும் மற்றவர்களின் தாய் மொழிகளையும் வளர்ப்பதும், தமிழ் பயிற்றுமொழி என்பதோடு ஆங்கிலம் ஒரு பாடமொழியாக்கப்படுவதும், அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமனமும்தான் இப்போதைய தேவை.மனப்பாடக் கல்வி முறையை மாற்றி சிந்தனைத் திறன்மிக்க புதிய தலைமுறையை உருவாக்க தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம். இது மொழி சார்ந்த உணர்ச்சிப்பூர்வ விஷயம் அல்ல; அறிவியல்பூர்வமான அக் கறையின்பாற்பட்டது.நாடு விடுதலையடைந்து கல்விபரவலாகி உள்ளது. கல்வித் தாகம் கொண் டவர்களாக மக்கள் மாறி இருக்கிறார்கள். எனினும் விடுதலைக்குப் பிறகும் மெக்காலேயின் ஆங்கிலக் கல்விமுறை மீது எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்றைய கல்விமுறை வரலாற்றுப் பூர்வமாக கடந்த இருநூறு ஆண்டுகால காலனி ஆட்சியின் ஓர் இறுகிய கட்டுமானமாகவே திகழ் கிறது. தாய்மொழிவழிக் கல்வி எனும் கோரிக்கை இக்கட்டுமானத்திற்கு எதிரான தாக்குதலாகவும் கல்வியில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக நட வடிக்கையின் ஓர் அம்சமாகவும் அமையும்.மேலும், 1990களுக்குப் பிறகான தீவிர உலகமயம், தனியார் மய காலத்தில் பொருளாதாரம், தகவல் தொடர்பு, நிர்வாகம் சார்ந்த தேவைகளுக்காக ஒற்றை மொழியை, ஒற்றை அரசை முன்வைக்கும் ஒருமைப் போக்கு தொடர்கிறது.

தாய்மொழிவழிக் கல்விக்கான இயக்கம் ஒற்றை மொழியை நிறுத்தும் கார்ப்பரேட் அமைப்புகளை எதிர்த்த இயக்கமாக, தனியார் மயத்தை ஆதரிக்கும் அரசுகளை எதிர்த்த இயக்கமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.இந்த நோக்கத்தோடு சென்னையில் அக். 16ல் நடைபெறும் தமுஎகசவின் தாய்மொழிவழிக் கல்விக்கான மாநில சிறப்பு மாநாட்டில் அணிதிரள்வதும் அதன் தீர்மானத்தைப் பரவலாக்குவதும் அவசியம், அவசரம்.
எழுத்தாளர்.மயிலைபாலு
நன்றி: தீ.ர்

Monday, 7 October 2013

இன்றைய பாடப்புத்தகங்கள் உலகை அந்நியப்படுத்துகின்றன

சென்னை, செப். 30

‘‘இன்றைய பாடப்புத்தகங்கள் மாணவர்களிடம் இருந்து உலகை அந்நியப்படுத்துகின்றன’’ என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாற்றுக் கல்விக்கான 8வது வாசிப்பு முகாம் செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னைகிழக்கு தாம்பரத்தில் நேசனல் பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.நீலா தலைமை தாங்கினார். கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வாசிப்பு முகாமினைத் துவக்கி வைத்துப் பேசினார்.

‘‘ ஆசிரியரின் மாணவர், மாணவரின் ஆசிரியர் என்ற நிலை மாறி ஆசிரிய மாணவர், மாணவ ஆசிரியர் என்ற புதிய வகுப்பறை உறவை அறிமுகம் செய்கிறது. இன்றைய பாடப்புத்தகங்கள் உலகை அந்நியப்படுத்துகின்றன. உலகப் பொருட்களை, பிரச்னைகளை மாணவர்களின் உணர்வு நிலைக்குள் கொண்டு செல்ல மறுக்கின்றன’’ என கல்வி குறித்த பல்வேறு புதிய சிந்தனைகளையும் கல்வியின் அரசியலையும் இந்த புத்தகம் முன்வைக்கிறது.

இதில், எழுத்தாளர் ஆயிசா நடராஜன், பேராசிரியர்கள் ராஜூ, சிவக்குமார், விஜயகுமார், பொன்ராஜ் ஆகியோர் புத்தகத்தின் பல்வேறு அத்தியாயங்களுக்கான கருத்துரையாற்றினார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்விமுறையின் இன்றைய பொருத்தப்பாடும் நமது செயல்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாநிலத் தலைவர் பேராசியர்.மணி மாற்றுக் கல்விக்கான எதிர்காலத் திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நிறைவுரையாற்றினார்.

மண்டல அளவிலும் மாவட்ட அளவிலும் வாசிப்பு முகாமினை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாநில வாசிப்பு முகாம் டிசம்பர் 28, 29 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் உதயன் நன்றி கூறினார்.

நன்றி: தின இதழ்

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வி அவசியம் அறிவியல் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-28 11:49:55

கூடலூர், : அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு, தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: 

இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்புக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும், ஆங்கில மொழியின் தேவை உள்ளது. அதற்காக தாய்மொழிக்கலவியை புறக்கணித்து, ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும் தாய்மொழி கல்வி வழிதான் மேம்பாடு அடையும். உலக நாடுகள் பலவற்றிலும் தாய்மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. 

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிக்கல்வி முழவதும் தாய்மொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும், தமிழ்வழி படிப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இச்சூழலில் வரும் கல்வி ஆண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3 ஆயிரத்து 200 பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கிலவழி பிரிவுகள் தொடங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல.

தொடர்ந்து ஆங்கில வழி பிரிவு தொடங்கினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளிகளில் தமிழகத்தில் தமிழ்வழி கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது. ஆங்கிலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் புலமை பெற வேண்டுமென அரசு கருதினால், ஆங்கிலமொழிப்பாடத்தை திறம்பட கற்பிக்கின்ற வகையில் ஆசிரியர்களை நியமிக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் பேச எழுத புதிய வழிமுறைகளை கண்டறியலாம். எனவே அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி கற்பிக்க வைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’ இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினகரன்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம்: கைவிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

புதுக்கோட்டை
First Published : 27 May 2013 04:57 AM IST

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தலைவர் லெ. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழுவின் சிறப்புக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்பிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஆங்கில மொழியின் தேவை இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது. அதற்காக தாய் மொழிக் கல்வியை புறக்கணித்து, தாய் மொழி வழியாகக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் புறக்கணித்து ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும், புத்தாக்கத்திறனும் தாய் மொழி வழிக் கல்வி மூலம்தான் மேம்பாடு அடையும் என்பது உலக கல்வியாளர்களின் ஒட்டு மொத்தக் கருத்தாகும். 

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம்-2009-ம் தாய் மொழிக் கல்வியையே வலியுறுத்துகிறது.குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தாய் மொழியே கற்பிக்கும் மொழியாக இருக்க வேண்டும். இந்த சூழலில் தமிழக அரசு வரும் கல்வியாண்டில் 1.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3,200 அரசுப்பள்ளிகளில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்படும் என முடிவு செய்து அறிவிப்பு செய்திருப்பதைக் கைவிட வேண்டும்.

ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டில் 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்கள் சேரவில்லை என்ற நிலை உள்ளது. தொடர்ந்து ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது.

தினமணி

அறிவியல் இயக்கம் கருத்து அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விமுறை தேவையற்றது

பதிவு செய்த நேரம்:2013-06-13 14:08:49
சிவகங்கை, :

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விமுறை தேவையற்றது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம் கூறியதாவது:

இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்திற்கும், உலகளாவிய தொடர்பிற்கும் ஆங்கிலமொழி தேவைப்படுகிறது. அதற்காக தாய் மொழிக்கல்வியை புறக்கணித்துவிட்டு, மாணவர்களை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றலும், புத்தாக்கத் திறனும் தாய்மொழி வழிக்கல்வியில் தான் மேம்பாடு அடையும். பெரும்பாலான நாடுகளில் தாய்மொழி வழியாகத் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் அமைக்கப்பட்ட அனைத்து கல்வி குழுக்களும் பள்ளிகல்வியை தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளன. நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிக் கல்வி முழுவதும் தாய்மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி முதல் உயர்க்கல்வி வரை தமிழ்மொழியில் தான் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த அரசு ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்கள் மிக குறை வாகவே சேர்ந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு 3,200 பள்ளிகளில் ஆங்கில வழி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆங்கில வழி கல்விமுறை கொண்டு வந்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இருக்காது.

மெட் ரிக் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியாது. கடந்த ஆண்டு தேசிய அளவில் எடுக்கப்பட்ட கல்வி நிலை அறிக்கையில் தமிழகத்தில் 5ம் வகுப்பு வரை பயிலும் 56 சதவீத மாணவர்களுக்கு தமிழ் கூட படிக்க தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியே சரியாக தெரியாத நிலையில் ஆங்கில வழி கல்வி கொண்டு வருவது தேவையற்றது. ஆங்கி லத்தில் அரசு பள்ளி மாணவர்கள் புலமை பெற வேண்டுமென்றால், ஆங்கில பாடத்திற்கு தனியாக புலமை பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். தவிர ஆங்கி லத்தில் நன்றாக பேச, எழுத, படிக்க தேவை யான பயிற்சிகளை தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்

ஆசிரியர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பினால் வகுப்பறை மாற்றம் வசந்தமாகும்: பேராசிரியர் என். மணி

திருச்சி,
First Published : 08 August 2013 06:43 PM IST

ஆசிரியர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பினால் வகுப்பறை மாற்றம் வசந்தமாகும் என்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என். மணி.

திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேருக்கு நீர் என்ற ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் அவர் மேலும் பேசியது:

அநீதிகளுக்கு எதிராக ரௌத்திரம் பழகச் செய்வதாகத்தான் கல்வி முறை இருக்க வேண்டும். சமூக மாற்றத்தை இந்தக் கல்வி முறை சொல்லித் தர வேண்டும். அவ்வாறு இருக்கிறதா? என்றால், பாடத் திட்ட முறையில் ஓட்டை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதி தேவை, மதம் தேவை, பேதங்கள் தேவை என்று இந்தச் சமூகத்தை அப்படியே வைத்திருக்கிற மனோபாவத்தை அரசு கொண்டிருக்கிறது. அதனால், அரசு தனக்கேற்ற கல்வி முறையை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்துக்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. அது வந்துவிடாமலும் பாதுகாக்கப்படுகிறது. நீண்டநெடிய முயற்சிகளுக்குப் பிறகு, செயல்வழிக் கற்றல் போன்ற சின்னச் சின்ன மாற்றங்கள் வந்துள்ளன.

பெற்றோர்கள் வெறுமனே அன்பு, பாசத்தை மட்டும் செலுத்தினால் போதாது. எல்லா பெற்றோர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி தர வேண்டும். ஏன், எதற்கு? என்ற கேள்விகளுடன் வரும் குழந்தைகள், பள்ளியில் சேர்ந்த பிறகு, கல்லூரிப் படிப்பு முடியும் வரை அவ்வாறு கேட்பதை மறந்துவிடுகின்றன. இந்த மௌன கலாசாரத்தை உடைக்க வேண்டும். அப்போதுதான் கற்றல் விசாலப்படும்.

வகுப்பறைக்குள் கற்பித்தல் குறித்து பல்வேறு பரிசோதனைகளை ஆசிரியர்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு பரிசோதனைகளையும் டைரி எழுதி பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தப் பதிவுகள் ஆய்வுக்கும்- பரிசீலனைக்கும் மட்டுமல்ல, பிற்காலத்தில் நல்ல நூலாகவும் வாய்ப்பிருக்கிறது.

மாணவர்களுக்கு நாம் சரியாக சொல்லித் தரவில்லையானால் அது தேசதுரோகத்துக்கு ஒப்பானது. ஆசிரியர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிவிட்டால் வகுப்பறை வசந்தமாகும்.

வியாபாரிகளையும், அரசியல்வாதிகளையும் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் இருந்து விலக்கினால் பெரும் பாதகம் தவிர்க்கப்படும் என்றார் மணி.

இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் இணைச் செயலர் ப.சத்தியமூர்த்தி, முதல்வர் க. துளசிதாசன் ஆகியோர் பேசினர். பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி