திருச்சி,
First Published : 08 August 2013 06:43 PM IST
ஆசிரியர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பினால் வகுப்பறை மாற்றம் வசந்தமாகும் என்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என். மணி.
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேருக்கு நீர் என்ற ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் அவர் மேலும் பேசியது:
அநீதிகளுக்கு எதிராக ரௌத்திரம் பழகச் செய்வதாகத்தான் கல்வி முறை இருக்க வேண்டும். சமூக மாற்றத்தை இந்தக் கல்வி முறை சொல்லித் தர வேண்டும். அவ்வாறு இருக்கிறதா? என்றால், பாடத் திட்ட முறையில் ஓட்டை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சாதி தேவை, மதம் தேவை, பேதங்கள் தேவை என்று இந்தச் சமூகத்தை அப்படியே வைத்திருக்கிற மனோபாவத்தை அரசு கொண்டிருக்கிறது. அதனால், அரசு தனக்கேற்ற கல்வி முறையை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்துக்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. அது வந்துவிடாமலும் பாதுகாக்கப்படுகிறது. நீண்டநெடிய முயற்சிகளுக்குப் பிறகு, செயல்வழிக் கற்றல் போன்ற சின்னச் சின்ன மாற்றங்கள் வந்துள்ளன.
பெற்றோர்கள் வெறுமனே அன்பு, பாசத்தை மட்டும் செலுத்தினால் போதாது. எல்லா பெற்றோர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி தர வேண்டும். ஏன், எதற்கு? என்ற கேள்விகளுடன் வரும் குழந்தைகள், பள்ளியில் சேர்ந்த பிறகு, கல்லூரிப் படிப்பு முடியும் வரை அவ்வாறு கேட்பதை மறந்துவிடுகின்றன. இந்த மௌன கலாசாரத்தை உடைக்க வேண்டும். அப்போதுதான் கற்றல் விசாலப்படும்.
வகுப்பறைக்குள் கற்பித்தல் குறித்து பல்வேறு பரிசோதனைகளை ஆசிரியர்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு பரிசோதனைகளையும் டைரி எழுதி பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தப் பதிவுகள் ஆய்வுக்கும்- பரிசீலனைக்கும் மட்டுமல்ல, பிற்காலத்தில் நல்ல நூலாகவும் வாய்ப்பிருக்கிறது.
மாணவர்களுக்கு நாம் சரியாக சொல்லித் தரவில்லையானால் அது தேசதுரோகத்துக்கு ஒப்பானது. ஆசிரியர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிவிட்டால் வகுப்பறை வசந்தமாகும்.
வியாபாரிகளையும், அரசியல்வாதிகளையும் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் இருந்து விலக்கினால் பெரும் பாதகம் தவிர்க்கப்படும் என்றார் மணி.
இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் இணைச் செயலர் ப.சத்தியமூர்த்தி, முதல்வர் க. துளசிதாசன் ஆகியோர் பேசினர். பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment