Monday, 7 October 2013

அறிவியல் இயக்கம் கருத்து அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விமுறை தேவையற்றது

பதிவு செய்த நேரம்:2013-06-13 14:08:49
சிவகங்கை, :

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விமுறை தேவையற்றது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம் கூறியதாவது:

இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்திற்கும், உலகளாவிய தொடர்பிற்கும் ஆங்கிலமொழி தேவைப்படுகிறது. அதற்காக தாய் மொழிக்கல்வியை புறக்கணித்துவிட்டு, மாணவர்களை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றலும், புத்தாக்கத் திறனும் தாய்மொழி வழிக்கல்வியில் தான் மேம்பாடு அடையும். பெரும்பாலான நாடுகளில் தாய்மொழி வழியாகத் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் அமைக்கப்பட்ட அனைத்து கல்வி குழுக்களும் பள்ளிகல்வியை தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளன. நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிக் கல்வி முழுவதும் தாய்மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி முதல் உயர்க்கல்வி வரை தமிழ்மொழியில் தான் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த அரசு ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்கள் மிக குறை வாகவே சேர்ந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு 3,200 பள்ளிகளில் ஆங்கில வழி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆங்கில வழி கல்விமுறை கொண்டு வந்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இருக்காது.

மெட் ரிக் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியாது. கடந்த ஆண்டு தேசிய அளவில் எடுக்கப்பட்ட கல்வி நிலை அறிக்கையில் தமிழகத்தில் 5ம் வகுப்பு வரை பயிலும் 56 சதவீத மாணவர்களுக்கு தமிழ் கூட படிக்க தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியே சரியாக தெரியாத நிலையில் ஆங்கில வழி கல்வி கொண்டு வருவது தேவையற்றது. ஆங்கி லத்தில் அரசு பள்ளி மாணவர்கள் புலமை பெற வேண்டுமென்றால், ஆங்கில பாடத்திற்கு தனியாக புலமை பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். தவிர ஆங்கி லத்தில் நன்றாக பேச, எழுத, படிக்க தேவை யான பயிற்சிகளை தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment