Monday, 7 October 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம்: கைவிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

புதுக்கோட்டை
First Published : 27 May 2013 04:57 AM IST

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தலைவர் லெ. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழுவின் சிறப்புக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்பிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஆங்கில மொழியின் தேவை இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது. அதற்காக தாய் மொழிக் கல்வியை புறக்கணித்து, தாய் மொழி வழியாகக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் புறக்கணித்து ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும், புத்தாக்கத்திறனும் தாய் மொழி வழிக் கல்வி மூலம்தான் மேம்பாடு அடையும் என்பது உலக கல்வியாளர்களின் ஒட்டு மொத்தக் கருத்தாகும். 

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம்-2009-ம் தாய் மொழிக் கல்வியையே வலியுறுத்துகிறது.குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தாய் மொழியே கற்பிக்கும் மொழியாக இருக்க வேண்டும். இந்த சூழலில் தமிழக அரசு வரும் கல்வியாண்டில் 1.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3,200 அரசுப்பள்ளிகளில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்படும் என முடிவு செய்து அறிவிப்பு செய்திருப்பதைக் கைவிட வேண்டும்.

ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டில் 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்கள் சேரவில்லை என்ற நிலை உள்ளது. தொடர்ந்து ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது.

தினமணி

No comments:

Post a Comment