Thursday, 23 October 2014

பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்

பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிமுகமான பெயராக இருக்கிறார். வாழ்த்துக்கள். அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி நூலினை தொடர்ந்து அவர் இந்தியாவில் எப்போதோ நிகழ்த்திய உரையாடலினை (கவனிக்கவும், உரையல்ல!) சற்றும் சளைக்காமல், ஒரே நேரத்தில் தமிழிலும், அதன் ஆங்கில மூலத்தினையும், விற்பனை சந்தை குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல், சமூக கடமையாக மட்டுமே கருதி அச்சிட்டு வெளியிடும் அவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் அப்புத்தகங்களை, “இருளும் ஒளியும்” நூலில் தோழர் ச. தமிழ்செல்வன் சொல்வதைப் போல தோள் வலிக்க ஏந்தி பொதுவெளியில் சேர்ப்போம். அது ஒன்றே நம் கடமை. நிற்க.


பாவ்லோ பிரையரே குறித்து இன்னமும் இன்னமும் ஏதாவது செய்திகள் கிடைக்காதா, அவை நமக்கு ஏதேனும் சொல்லிச் செல்லாதா என ஒரு அதிகாலை வேளையில் இணையத்தை துழாவிய போது ஒரு அதிசயமான, ஆச்சரியமான செய்தி கிடைத்தது. இன்னமும் மாறா புல்லரிப்போடே தொடர்கிறேன். 


ஆண்டு 1962, இடம் பிரேசில் நாடு. MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும் எழுத்தறிவிற்கான ஒரு இயக்கம் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது. துணைக்கு நம்மவர் (நம்மவர்தானே!) பாவ்லோ பிரையரேவை நாடுகிறது. உடனே அதற்கு ஒத்திசைத்து அவரும் 300 விவசாய கூலி மக்கள் மத்தியில் கற்பிக்கத் தொடங்குகிறார். வெறும் 45 நாட்களுக்குள்ளாகவே அவர்களை வாசிக்கவும், எழுதவும் வைத்துவிடுகிறார். அரசுக்கு ஆச்சரியம். எப்படி? பாவ்லோ பிரையர் அக்கூலி மக்களோடே தங்கியிருந்து அவர்களுக்கு அவர்களுடைய அன்றான வாழ்வோடு இயைந்து வருகிற வார்த்தைகளையும், அவர்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் விஷயங்களை தொட்டு செல்லும் வார்த்தைகளையும், அவர்களுடைய ஏழ்மைக்கான சமூக, அரசியல் காரணிகளை அடையாளம் காட்டும் எளிதான வார்த்தைகளையும் சொல்லி அவர்கள் எழுத்தறிவினை தூண்டிவிட்டு அவர்கள் படிக்க, எழுத வழி காண்கிறார். (கவனிக்கவும், பாவ்லோ பிரையரே எப்போதும் READING AND WRITING – வாசித்தல் மற்றும் எழுதுதல் என்றே சொல்கிறார், நாம் அன்றாட வழக்கத்தில் சொல்வது போல எழுத, படிக்க என்ற வரிசையில் அல்ல). அக்கூலி மக்கள், எழுத்தறிவித்தல் பணியில் உதவி செய்த ஆசிரியர்கள் ஆகிய இருவரையும் ஒரு குழுவாக பாவித்து அக்குழுவினை ‘கலாச்சார வட்டம்’ என்றே அழைக்கிறார். 



இவ்வாறாக எழுத்தறிவில்லாத மக்கள் பாவ்லோ பிரையரேவின் வார்த்தைகளில் சொல்வதானால் அமைதி கலாச்சாரம் என்ற ஒன்றை உதறி தள்ளி சமூக, கலாச்சார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான கருவிகளாக உருமாறிய நிகழ்வு தொடர்ந்தது. பிரேசிலில் சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான எழுத்தறிவில்லாதோர்க்கு உதவி செய்ய 24000 கலாச்சார வட்டம் தொடங்குவதற்கான பணிகள் 1964 ஆண்டில் திட்டமிடப்பட்டன. அப்போது அங்கும் ஜனநாயகத்தை நசுக்கி எழுந்த ராணுவ அரசு அத்திட்டத்தை கைவிட்டதோடு மட்டுமல்லாது பாவ்லோ பிரையர் கடவுளுக்கும், பிரேசில் மக்களுக்கும் எதிரானவர் என்று கூறி அவர்மீது கைது நடவடிக்கை தொடர்ந்தனர். மேலும், அவர் பிரேசில் நாட்டினை மற்றுமொரு “போல்ஷெவிக்” நாடாக மாற்ற முனைந்தார், என்றும் அவரது கல்வி முறை என்பது “ஸ்டாலின், ஹிட்லர், முசோலினி” போன்றவர்களுடையது போல் உள்ளது என்றும் குற்றம் சாட்டியது. (மதி கெட்ட இராணுவம் யாரை யாரோடு முடிச்சு போடுகிறது பாருங்கள், இராணுவம் மட்டுமல்ல, இன்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அதையே செய்து வருகின்றன)


இப்போது காலம் : 1990களின் முற்பகுதி. இடம்: தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலம். இந்திய அரசின் எழுத்தறிவிற்கான அறைகூவலினை சிரமேற்று உண்மையான உணர்வோடும், கடைமையாக கருதி உரிய உழைப்பினை செலுத்தி அறிவொளி இயக்கத்தில் நமது தோழர்கள் பலரும் எழுத்தறிவித்தல் பணியில் ஈடுபட தொடங்கினர். எழுத்தறிவில்லாத பாமர மக்களுக்கு பள்ளிகளில் கற்கும் முறை கொண்டே கற்பிக்க முனைந்து அது தோல்வியுற்று அடுத்து என்ன செய்யலாம் என்று வருந்தியிருந்தனர். தொடர்ந்த விவாதங்களுக்கு பின்னே அவர்கள் அம்முறையினின்று விலகி அம்மக்களுக்கு அன்றாட வாழ்வில் புழங்குவதும், அவர்கள் வாழ்விற்கு தேவையான வார்த்தைகளை சொல்லி அவர்கள் அவ்வார்த்தைகளோடு சிநேகம் கொள்ளச் செய்து கற்பித்தல் பணியில் வெற்றி காண துவங்கினர். உதாரணத்திற்கு : “பட்டா “ போன்ற வார்த்தைகள். மக்களும் விரைவாக விருப்பத்துடன் கற்கத் தொடங்கினர். எழுத்தறிவித்தல் பணி வெற்றியின் திசை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது. சிறிது காலத்திற்குள்ளாகவே இந்திய அரசு அத்திட்டத்தை கைவிட்டது. அறிவொளி இயக்கப் பணியும் முடங்கியது. இவ்விஷயங்களை மிக சுவையாக, விமர்சனத்தோடு அவருக்கே உரித்தான பாணியில் இருளும் ஒளியும் நூலில் சொல்லியுள்ளார் நமது தோழர் ச. தமிழ்செல்வன் அவர்கள். அப்புத்தகத்தினையும் பாரதி புத்தகாலயமே வெளியிட்டு மகிழ்ந்தது. 



என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள். 1964வில் பிரேசில் நாட்டில் பாவ்லோ பிரையரே செய்த விஷயங்களை எவ்வாறாகவும் அறிந்திராத 1990களில் (இணையம் அப்போதில்லை) இங்கே தென் தமிழகத்தில், புதுச்சேரியில், வேலூரில் அறிவொளி இயக்கத் தொண்டர்கள் செய்தனர் என்பது பாவ்லோ பிரையரேவினைப் போல் ஒத்த சிந்தனை, நுண்ணறிவு கொண்டு உழைத்த எத்தனை அருமை நெஞ்சங்கள் இங்கே இருந்திருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது. பாவ்லோ பிரையேரே எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு தெரியும் அவருடைய கல்வி குறித்த, சமூகம் குறித்த அறிவு என்பது எத்துனை ஆழமானது என்பது. அதற்கும் ஈடு கொடுத்து இங்கேயும் நம்மோடு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பது எத்துனை பெருமைபடக்கூடிய, ஆச்சரியப்படக்கூடிய விஷயம். பாவ்லோ பிரையரே 1997இல் இறப்பதற்கு சற்று முன்னதாக சொன்னதாக சொல்லப்படுவது, “அன்பில்லாமல் கல்வியினை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, நான் அன்பினை உணர்கிறேன், பகிர்ந்தளிக்க நினைக்கிறேன், அதனாலேதான் நான் கல்வியாளனாக இருக்கிறேன்”. பாருங்கள் அதே அன்போடு, நம்மிடையே எத்துனை தோழர்கள் அறிவொளி இயக்க தோழர்கள் பாமர மக்கள் மீது மாறாக அன்பு கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்குத்தான் எனக்கு புல்லரிப்பு. தோழர்கள் தமிழ்செல்வன், ச.மாடசாமி, அருநந்தி, ஜெ.கே, சசிதரன் உள்ளிட்ட பலருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். 



ஆயினும், ஆச்சரியத்தினூடே எனக்கு ஒரு கவலையும், குற்ற உணர்வும் எழுகிறது. தோழர் ச. தமிழ்செல்வன் எழுதிய இருளும் ஒளியும் நூல் ஒன்று மட்டுமே அறிவொளி இயக்கத்தின் மொத்த செயல்பாடு, சமூகத்தின் மீதான அதன் பாதிப்பு, அது உண்டாக்கிய கலாச்சார மாற்றங்கள் என அனைத்தும் பதிவு செய்ய போதுமானதா? அந்த ஒற்றை நூலில் மட்டுமே அத்தனையும் அடக்கி விடுதல் சாத்தியமா? நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும், முடியாது, இயலாது. இன்னும் எவ்வளவோ இருக்கிறது பதிவு செய்ய, நினைவுகளின் அடுக்குகளில். சமச்சீர் கல்வி, பயிற்றுவித்தல் முறையில் கேலிச் சித்திரங்களை (அவற்றில் ஒன்றிரண்டு மிக அபத்தமாக, ஆபத்தாக இருந்த போதிலும்) உள்ளடக்கி பாடத்திட்டங்கள் மாணவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் மாற்றம் கண்டுவரும் இச்சூழலில், அன்று அறிவொளி இயக்கத்தினரால் மிகவும் விவாதிக்கப்பட்டு, பெருமுயற்சியுடன் வெளியிடப்பட்ட கருத்துத்தாள்களின் பாத்திரம் எத்துனை முக்கியமானது? அக்கருத்து தாள்களில் சாதியின் கொடூரத்தை, சாதியாக வாழ்ந்த மக்கள் முன்பே வைத்து அவர்களுள் அவர்கள் அறியாமல் இலாவகமாக ஒரு மாற்றத்திற்கான வித்தை விதைத்ததே அது இப்போது தேவைப்படவில்லையா? பெண்களின் மாத விடாய் பிரச்சனை மற்றும் அடலன்ஸி எனப்படும் விடலைப்பருவ விஷயங்களை அழகான அறிவியல் கதைகள் மூலம் சொல்லி மக்கள் கண்திறந்த அக்கருத்துதாள்களினை நாம் மீள் பதிப்பு செய்யவேண்டாமா? மதத்துவேஷம், சுரண்டல், பாலின சமன்பாடு ஆகியவற்றையும் கதையாக்கி, கேலிசித்திரங்களாக்கி கணிப்பொறியின் ஒத்துழைப்பு இல்லாமலே பல்லாயிரக்கணக்கான பிரதிகளை கண்டு மக்கள் கைகளில் தவழ்ந்த அக்கருத்துதாள்கள் இப்போது எங்கே? அறிவொளி இயக்கத்தில் எத்தனையோ அனுபவங்கள், அவர்களுக்கு கற்பிக்கப் போய் நாம் கற்றுக் கொண்டு வந்தது, பாவ்லோ பிரையரே சொல்வது போல் வகுப்பில் ஆசிரியர் மாணவர் இடைவெளி மறைந்து இருவரும் ஆசிரிய-மாணவராக ஒன்றாக மாறிய நம் அறிவொளி இயக்கத் தொண்டர்களின் அனுபவங்கள் ஆகியவை பதிப்பில் காண வேண்டாமா? குரல் வளமில்லை, பாடல் பாடும் தொழில்நுட்பம் தெரியாது, பெரிய இலக்கண அறிவு கொண்ட கவிஞர்கள் இல்லை, என்றாலும் அறிவொளி இயக்கப் பாடல்களை உரத்த குரலோடும், தயக்கத்தினை துடைத்தெறிந்து உணர்வோடு நாம் பாடிச் சென்ற அப்பொழுதுகள், கடினமான விஷயங்களை எளிய வார்த்தைகளில் சாறு பிழிந்து சந்தமிக்க பாடல்களாக மாற்றிய வித்தையினை இக்காலத்திய தமிழ் சமூகம் அறிய வேண்டாமா?



என்னுடைய அவா எல்லாம், அக்காலத்திய அறிவொளி இயக்கப் பணிகளை, அனுபவங்களை, கருத்துத்தாள்களை, பாடல்களை, ஏழை மக்கள் நமக்கு நன்றி சொல்லி அவர்களுடைய அழகான கிறுக்கல் கையெழுத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட வேண்டும். நிச்சயமாக என்னால் சொல்ல முடியும், அப்புத்தகம் பாவ்லோ பிரையரேவின் கற்பித்தல் முறைகளை பலபொழுதும் ஒத்தே இருக்கும், அவருடைய கல்வி சித்தாந்தங்களுக்கு ஒத்திசைவாக செல்லும், வலுசேர்க்கும், ஒரு பயிற்சி புத்தகமாக இருக்கும். பாவ்லோ பிரையரேவின் புத்தகத்தினை தொடக்கமாக கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் வாசிப்பு முகாமிற்கு நிச்சயமாய் அது துணை புரியும். உலகமய சூழலில் தமிழ்ச்சமூகத்தில் ஒற்றை கலாச்சாரத்தை, ஒற்றை பண்பாட்டினை முறியடிக்க, சுரண்டலுக்கு எதிரான மக்களை அணிதிரட்டும் பணியை அத்தொகுப்பு செய்யும். பாவ்லோ பிரையர் சொல்கிறார், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எடுக்கப்படும் கல்வி மற்றும் கலாச்சார தலையீடுகளின் வெற்றி என்பது அவர்களின் சங்கிலிகளை நாம் அறுத்தெறிவதில் அல்ல, அவர்களாகவே அவர்களது சங்கிலிகளை அறுத்தெறிய அவர்களை தயார் செய்வதிலேயே உள்ளது. அத்தயாரிப்பிற்கு நிச்சயமாக அறிவொளி இயக்கத்தின் அனுபவங்கள், கருத்துத்தாள்கள் பலன் தரும். பாரதி புத்தகாலயத்தினர் இந்தக் கடமைக்காக ரொம்ப நாட்களாகவே காத்துக் கிடக்கின்றனர். 


நகைச்சுவை நடிகர் வடிவேலு மூலம் சிம்புதேவன் சொல்வதற்கு முன்பே நமக்கு தெரியும், “வரலாறு மிக முக்கியம்”, அப்படித்தானே?


என்ன செய்ய வேண்டும்?


‘நீண்ட காலத்துக்குப் போராட வேண்டி இருக்கிறது. உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறையப் படி’
-சேகுவாரா ( தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் )

அரசுப் பள்ளிகளை மூடுவிழா நடத்தும் அழிவிலிருந்து மீட்க ஒரு பிரமாண்ட இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கையெழுத்து இயக்கமாக வாசிப்பு இயக்கமாக 25 மாவட்டங்களில் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. முற்றிலும் வணிக மயமாக்கப்பட்டுவிட்ட வியாபார கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதே குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தை முன்மொழிந்து போராடிப் பெற்ற நமது இறுதி இலக்கு. அருகாமைப் பள்ளி பொதுப்பள்ளி இவையே நாம் முன்வைக்கும் மாற்றுக் கல்வியாகும். அதை அரசுதான் திறம்பட நடத்தமுடியும். பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி சிங்கப்பூர் ஹவாய் தீவுகள், கனடா ஆகிய அதி முதலாளித்துவ நாடுகள் உட்பட 62 நாடுகளில் சாத்தியமாகி இருக்கிறது. இங்கிலாந்தில் இன்றும் பிறக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்விச் செலவுக்கு மகாராணியே பொறுப்பு. ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிகள் வீதம் அதிவேகமாக மூடப்பட்டு வரும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மீட்பு இயக்கம் மூன்று முக்கிய அம்சங்களை முன்மொழிகிறது. அதை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். முதலாவது மூன்று வயதில் இன்று குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இது கோத்தாரி கமிசன் முன்மொழிந்து தொடர்ந்து ஜனார்த்தனரெட்டி கல்விக்குழு ஆதரித்த மாற்றம். அது அரசுப் பள்ளிகளில் இல்லை. ஆனால் அங்கன்வாடி என தனியே உள்ளது.

ஒரு தனியார் பள்ளியே எல்கேஜி தொடங்கி நடத்துகிறது. மூன்று வயதில் சேர்க்க வேறு இடமின்றிப் பெற்றோர் அங்கே சென்று விடுகிறார்கள். பிறகு மாற்றாமல் அங்கேயே கல்வியைத் தொடர்கிறார்கள். அரசுப் பள்ளிகள் அனைத்திலுமே முதல் வகுப்பாக எல்.கே.ஜி. தொடங்கப்பட வேண்டும். இதுவே பல இடங்களில் மாணவர் சேர்க்கையை பலப்படுத்திவிடும். இரண்டாவது தனியார் பள்ளிகள் போலவே அனைத்து அரசுப் பள்ளிகளுமே அனைத்து வகுப்புகளும் இடம் பெறும்படியான முழுமை கல்விச் சாலைகளாக மாற வேண்டும், தவிர முக்கியத் தேவை ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எனும் விஷயம். அரசுப் பள்ளிகள் பல தரம் இழந்து இருப்பதற்கு இங்கே ஆசிரியர் பணி இடங்கள் பலவும் நிரப்பப்படாமல் இருப்பதுதான். சரியான விகிதாச்சாரம் எது என்று குழந்தைகள் கல்வி உரிமை சட்டம் (RTE) சொல்லி இருப்பதை நாம் அமல்படுத்த அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அனைத்து வகை மக்களது பிள்ளைகளும் கல்வி கற்கும் ஊரின் ஒரே இடமாக அதாவது ஒரு பொதுப்பள்ளியாக அரசுப் பள்ளிகள் மாறிட இந்த விகிதாச்சாரப் படிநிலை மிகவும் அவசியம். இன்று வழங்கப்படும் பதினாறு வகையான இலவசங்களை ஒப்பிடும்போது இத்தனை ஆசிரியர்களை நியமிப்பது அரசுக்குப் பெரிய செலவல்ல. நாம் மக்கள் நலத் திட்டமான கல்வியின் விலையற்ற பொருட்களை குழந்தைகள் பெறுவதை எதிர்க்கவில்லை.

அரசுப் பள்ளியின் அருமை தெரிந்து தன் பிள்ளைகள் தனியார் பள்ளி எனும் ‘காசு கொடுத்து சூடு வைத்துக் கொள்ளும்’ கொடுமையை உணர்ந்து எத்தனையோ பேர் மாற்றத்தை தங்கள் குடும்பங்களில் கொண்டு வந்து கொண்டிருப்பதை இந்த இயக்கத்தின் வெற்றி பறைசாற்றுகிறது. ஆங்கில வகுப்புகளைத் தொடங்குவதை ஒரு தீர்வாக ஏற்பதைவிட முன்பருவப் பள்ளி (pre school) மற்றும் முழுமைப் பள்ளி (complete schooling in one place) என்பதையும் கூடவே ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் இவை மூன்றும் அரசுப் பள்ளிகளைக் கண்டிப்பாக மீட்கும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்கும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் மாற்றுக் கல்வி வாசிப்பு இயக்கத்தையும், அதன் வழியில் களத்தில் நிற்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தையும் புத்தகம் பேசுது இதழ் முழுமையாகப் பாராட்டுகிறது. அரசுப் பள்ளி மீட்போம், கல்வியில் தனியார் மயத்தை எதிர்ப்போம்… பொதுப்பள்ளி இயக்கத்தின் துணை நிற்போம். அனைவருக்கும் நன்றி

- ஆசிரியர் குழு­­, (புத்தகம் பேசுது மாத இதழ், அக்.2014 தலையங்கம்)

கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துக : அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்


ல்வி உரிமைச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக அமுல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அறிவியில் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து, பொருளாளர் க.ஜெயபாலன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் சி.எஸ்.வள்ளல் நன்றி கூறினார்.

மங்கள்யான் சாதனை குறித்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.கவனகன் நழுவுப் படக்காட்சிகள் மூலம் விளக்கிப் பேசினார். முன்னதாக, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் துளிர் இல்லக் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. 

கூட்டத்தில் கல்வி உரிமைச்சட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக அமுல்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும். செவ்வாய்க் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கோளை அனுப்பி சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மங்கள்யான் சாதனை குறித்து மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்வது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டன.

நன்றி: நக்கீரன்

தேர்வு மதிப்பெண்கள் என்ன தரக் குறியீடுகளா?

"நமது பள்ளியில் படிக்கும் 90 சதவிகித மாணவர்கள் 60 சதவிகித மதிப்பெண்ணுக்கு மேல் வாங்குகிறார்கள். 60 சதவிகித மாணவர்கள் 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள்...."எனப் அப்பள்ளி நிர்வாகி பேசிக் கொண்டே வந்தார். "பின்ன ஏன் நம்ம ஸ்கூலில் இருந்து ஸ்டேட்ரேங்க் வரலைன்னு கேக்கறீங்களா?"என்று கேள்வியைக் கேட்டு நிறுத்தினார். "என்னாலெல்லாம்பணத்தை சாக்குப் பையில கட்டிக்கிட்டு போய் கியூவுல நிற்க முடியாது. எனக்குன்னு கெளரவம்இருக்கு" எனப் பதில் கூறிவிட்டு அடுத்த விசயத்துக்கு நகர்கிறார். அவர் கூற்றில் உண்மையுண்டோஇல்லையோ அப்பள்ளிக்கு வயது 35. இன்று வரை ஒரு கால் பக்க பத்திரிகை விளம்பரம் கூட பள்ளிசேர்க்கைக்காக செய்ததில்லை. அப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் வேலை கிடைத்தாலும் இதை விட்டுச் செல்வதில்லை.


"என்னம்மா உங்க கல்வி மாவட்டத்தில் உள்ள அந்த (பள்ளியின் பெயரைக்
குறிப்பிட்டு) ஸ்கூல் தான் ஸ்டேட் ஃபஸ்ட்டா வரப்போகுதா ?", ஒரு மாவட்ட கல்வி அதிகாரியிடம்இன்னொரு அதிகாரி கேட்ட கேள்வி இது. அதே போல அந்தக் கல்வி நிறுவனமே அவ்வாண்டுமாநிலத்தில் முதல் இடம் பெற்றது. "இதுவெல்லாம் நிஜமா?" என்று ஒருவரிடம் கேட்டால் "பள்ளிக்கல்வி இயக்குநராகவும் தேர்வுத் துறை இயக்குனராகவும் யார் வர வேண்டும் என தனியார் கல்வி நிறுவனங்கள் தானே முடிவு செய்கிகின்றன " என அடுத்த குண்டைத் தூக்கிப் போடுகிறார்.இவையெல்லாம் உண்மையா? பொய்யா? இத்தகைய கேள்விகளும் விவாதங்களும் மனசாட்சி உள்ளகுடிமக்களை நிலை குலையவே செய்யும். பள்ளிக் கல்வியின் தரத்தை, கல்வி கலாச்சாரத்தைதலைகீழாக புரட்டிப்போட்டுவிட்ட மதிப்பெண்கள், கற்றல் அடைவுகளை அளந்து பார்க்கும் கருவிஎன்ற கருத்தும் காலமும் காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.

அதிக மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் கல்வித் தொழிற்கூடங்கள் மட்டுமே சிறந்த கல்விநிறுவனங்களாக கல்விச் சந்தையில் உலாவருகிறது. இவற்றின் மதிப்பு என்பது சந்தை மதிப்பு. 'சந்தை'என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடக்கம். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களால் மட்டுமே பன்னிரெண்டாம் வகுப்பின் சந்தை மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.பள்ளிக்கூடம் மாணவர்களை சந்தைப் பொருளாக பாவிக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளையும்பள்ளிகளையும் இலாபத்தை உச்சப்படுத்தும் பொருட்களாக அணுகுகின்றனர்.
இவ்வாறு கல்வி என்பது சந்தைப் பொருளாக மாற்றம் அடைந்த பின், இலாபத்தை உச்சப்படுத்துதலேமைய நோக்கமாக மாறிவிடுகிறது. இலாபத்தைத் தீர்மானிக்கும் கருவிகளாக பள்ளியின் விளம்பரம்,முதலீட்டின் அளவு, தங்கள் பள்ளியே சிறந்த பள்ளி என தரத்தை வேறுபடுத்திக்கட்ட (product differentiation) எடுக்கும் முயற்சிகள், அரசியல் சமூகப் பொருளாதார காரணிகள் போன்றவைஅமைந்துவிடுகிறது.

தங்களுடைய பள்ளிதான் சிறந்த பள்ளி எனக் காட்டிக் கொள்ள விண்ணை முட்டும் விளம்பரங்கள். பள்ளிக் கட்டடங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வண்ணப் பூச்சு. செயற்கை நீரூற்றுகள், நீச்சல் குளங்கள், பூச்செடிகள், குளிர்சாதன வகுப்பறைகள், குளிர்சாதனப் பேருந்துகள் எனநீண்டு கொண்டே செல்கிறது இவர்களது யுத்திகள். மதிப்பெண்ணை பண்ட வேறுபாட்டுக்கானஅடிப்படையாக பார்ப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களுக்குத்தான் தற்போதைய நிலையில்சந்தை மதிப்பு மிக மிக அதிகம். இங்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதைக் கூட யாரும் பார்ப்பதில்லை. குழந்தைகள் உரிமையும், மனித உரிமையும், கற்றல் என்பதன் அடிப்படை விதிகளும்அப்பட்டமாக மீறப்படும் இடம் இவை. இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத பெற்றோர்கள்'எதிர்கால நன்மை' என்ற ஒற்றை எண்ணத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளிவருவதில்லை.இப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. திருப்பதி கோவில் தரிசனத்திற்கு தவம் கிடப்பதைப் போல தவம் கிடக்கின்றனர். "லாரிகளில் பிரம்பு வந்து இறங்குகிறது"என்பதைக் கூட பெருமை(!) பேசினார்கள்.

இத்தகைய பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் மட்டும் படையெடுக்கவில்லை. பிற தனியார் பள்ளிகள் அனைத்தும் இத்தகைய பள்ளிகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன.இதனால் மேல்நிலைக் கல்வி என்பது 'ஓராண்டுப் பாடம் ஈராண்டுக் கல்வி' எனச் சுருக்கிவிட்டது.பதினொன்றாம் வகுப்பில் பாடம். பன்னிரெண்டாம் வகுப்பில் மனப்பாடம் என்பது வழக்கமாகிவிட்டது.ஒரு பாடத்தை எத்தனை மனப்பாடம் செய்வது? எத்தனை முறை எழுதிப்பார்ப்பது? பாத்ரூம்போகும்போது கூட புத்தகமும் கையுமாக இருக்க வேண்டுமென நிர்பந்திக்கப்படுகிறார்கள். பள்ளியில்சேர்க்கும் போது 50க்கு 50 செய்முறைத் தேர்வு மதிப்பெண் எல்லாத் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உத்தரவாதம் செய்யப்பட்டுவிட்டது. தேர்வு மேற்பார்வைக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாதுஎன்பதும் திட்டமிட்டவாறு செய்து முடிக்க முடிகிறது. தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்எடுப்பதற்கு மீத்திறன் குறைந்த மாணவர்கள் 'பிட்' அடித்த காலம் போய், 490க்கு மேல் வாங்கும்மாணவர்களை ஒரு வகுப்பறையில் அமர்த்தி, பிட் அடிக்கவும் பார்த்து எழுதவும் பகிரங்கமாகஅனுமதிக்கும் செயல் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு தயவு காட்ட, எல்லாப் பக்கமும் நிறைந்திருக்கும் சாதிய சாய்மானமும் அதிகாரிகளிடத்தில் சேர்ந்து கொள்கிறது.

இத்தகைய ஆயகலைகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகள் செய்ய முடியாதென்றாலும்மதிப்பெண்களை நோக்கி ஓடியே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பள்ளிகளின் தலைமை ஆசிரியர் முதல் பள்ளிக் கல்வி இயக்குனர் வரை மதிப்பெண் என்னும் மந்திரச் சொல்லுக்கு அடிமையாகிவிட்டனர். தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுத்து, மதிப்பெண் பந்தயத்தில் ஐக்கியமாகிதன்னால் இயன்ற வேலைகளை அரசுப் பள்ளிகளிலும் செய்யத் தலைப்பட்டுவிட்டது. மதிப்பெண்பிரச்சனை மதிப்பெண்ணோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. கற்றல் செயல்பாடுகளை மொத்தமாக பாதிக்கிறது. அத்திபூத்தாற்போல் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக இருக்கும் சமூக அக்கறை உள்ளவர்கள் தொடங்கி நடத்தி வரும் சின்னஞ்சிறிய தனியார் பள்ளிகளின் பாடுதான் பெரும்பாடு.மதிப்பெண்ணும் பெறச்செய்து, சமூக கரிசனம், இதர கற்றல் செயல்பாடுகள் ஆகியவற்றை வளர்த்தெடுக்க அவர்கள் எடுக்கும் பெருமுயற்சிகள் சொல்லிமாளாது. மதிப்பெண் என்னும்அளவுகோலின் குறைபாடுகளை விமர்சிக்காத கல்வியாளர்கள் இல்லை. அதற்கு மாற்றானஅளவுகோல் உருவாக்கப்படவும் இல்லை. இளநிலை வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தொடர்மற்றும் முழுமையான மதிப்பெண் முறை, அதன் நடைமுறை செயலாக்கம் ஆகியவை, "தலைவலிபோய் திருகுவலி வந்ததை நினைவூட்டுகிறது". ஒட்டுமொத்தமாக கல்வியாளர் பாவ்லோ பிரைரேசொன்னதை விடவும் மிக மோசமான ஒரு கல்விச் சூழலில் கால் பதித்து நிற்கிறது நம் பள்ளிக் கல்வி. "இன்றைய கல்வி வங்கிமுறைக் கல்வி. வங்கியில் எவ்வளவு போட்டு வைத்திருக்கிறோமோ அவ்வளவே எடுக்க முடியும். அதைப்போல எவ்வளவு மனப்பாடம் செய்கிறோமோ அவ்வளவுதான்மதிப்பெண் எடுக்க முடியும்" என்றார். அவர் விமர்சித்த வங்கி முறைக் கல்வியை விடவும் கூடுதலாக,மனப்பாடம் செய்வித்தலும், மனப்பாடம் செய்விக்க புதிய யுக்திகளையும், புதிய தண்டனைமுறைகளையும் கைக்கொள்வதன் மூலமாக, எவ்வளவு போட்டு வைக்கிறோம் என்பதற்கு பதிலாக,எவ்வளவு திணிக்க முடியுமோ அவ்வளவு திணிக்கவும் எவ்வளவு பிடுங்க முடியுமோ அவ்வளவுபிடுங்கவுமான மிக மிக மோசமான கல்வி முறையாக மாறிவிட்டது.

கற்றல் என்பது முற்றிலும் இற்றுப் போய், பத்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் உலகத்திலேயே மிகவும் கடினமான பணியாக மாறிவிட்டது. 2014ஆம் கல்வி ஆண்டில் 8,26,000 பேர்தேர்வு எழுதினர். இவர்களில் 2,900 பேருக்கு மட்டுமே மருத்துவம் கிடைக்கப் போகிறது. அரசு மற்றும்அரசு உதவி பெரும் பொறியியல் கல்லூரிகளில் 12,131 இடங்களும் வேளாண்மை, கால்நடைமருத்துவம் என்று சேர்த்தால் கூட மொத்தம் 1400 இடங்களுக்கு மிகாது. +2 படித்த மொத்தமாணவர்களில் 1.98 விழுக்காடு இதனைக் காட்டிக் காட்டியே மொத்த கல்வி சந்தையும்இயக்கப்படுகிறது. இவ்விடங்களைக் காட்டியே மொத்த மாணவர்களையும் பொறியில் தள்ளுகிறார்கள்.இந்தக் கல்வி முறை மக்களின் வருமானத்தை இலட்ச, இலட்சம் கோடியாக காவு கேட்கிறது. மதிய தரவர்க்கத்தின் வருவாய் உயர்வில் எத்தனை சதமானத்தை கல்விச் சந்தை பிடுங்கிக் கொண்டது என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லை. "பெட்ரோல் பேங்க் தொழிலாளி ஒருவர், "இந்தஒருவாரமாய் தூக்கமில்லை. கேட்ட பக்கம் எங்கும் கிடைக்கவில்லை. அடுத்த வருடம் முதல் மாதம்500, 600 எனச் சேர்த்து இந்த இம்சையில் இருந்து விடுபட வேண்டும்" என கருவிக்கொண்டு இருந்தார்.தங்கள் சக்திக்கு மீறி பணத்தைத் திரட்டி கொட்டித் தீர்க்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் குறைவாகஇருந்த காலகட்டத்தில் கூட கல்வி என்பது இவ்வளவு காசு கேட்கும் பூதமாக மக்களைமிரட்டியதில்லை. கட்டணமில்லாக் கல்வியாக இருந்தது. அருகமைப் பள்ளியாக இருந்து, பொதுப்பள்ளியாக இருந்தது. அரசுப் பணத்தில் பள்ளிக் கல்வி மொத்தமும் இயங்கியது.


இதைசின்னாபின்னமாக்கி, காசு பார்க்கும் இவ்வளவு பெரிய சந்தைப் பொருளாக மாற்றியதுயார்? ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஏன் ஒவ்வொரு வருவாய் பிரிவினருக்கும் ஒரு பள்ளி என்றுகட்டமைத்தது யார்? இந்த நாட்டின் சாதியக் கட்டமைப்பை தலைவிதியாக பண்படுத்தியதைப் போல்,ஏற்றத்தாழ்வான கல்வி முறையையும் ஏற்கும்படி கட்டமைத்தது எது? முப்பது ஆண்டுகளுக்கு முன்புமொத்தப் பள்ளிக் கல்வியும் அரசின் பொறுப்பில் இருந்ததை கணப்பொழுதில் மறந்தது போல் மறந்ததுஎங்கனம்?? ஜனநாயக நாட்டில் இலவச கட்டாய தரமான கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதைபடித்தவர்கள் கூட மறந்து போனது எப்படி? இலவசமாக தரமான கல்வி நமது சட்டபூர்வ உரிமை.அதற்கு இவ்வளவு பெரிய தொகையை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்னும் சிந்தனையைத்தூண்டாமல் அல்லது கேள்வி எழுப்பாதபடி நம்மைக் கட்டுப்படுத்துவது எது? நாம் கற்றுக் கொண்ட கல்வி என்ன மாதிரியான கல்வி? பாவ்லோ பிரைரே கூறும் வங்கி முறைக் கல்விதானோ?வகுப்பறையில் பங்கேற்பாளனாக இல்லாமல் பார்வையாளர்களாக மாணவர்களை அமர வைத்திருந்தகல்விதான் முறையா? ஆசிரியருக்கு எல்லாம் தெரியும், மாணவனுக்கு எதுவும் தெரியாது என்றுஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை பக்குவப்படுத்திவிட்ட கல்வி முறையா? கல்வியில்ஒரு அரசியல் இருப்பதை ஆளுவோர் முதல் கல்வி வணிகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள்புரிந்துகொண்ட அளவிற்கு, மக்கள் புரிந்து கொள்ளாமல் போனதன் விளைவா? சிந்திக்க வேண்டியதருணம் எப்போதோ வந்துவிட்டது. சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையால் மக்கள் சிந்தனையால்ஒன்றிணையாமல் சிதறிக்கிடக்கின்றனர்.

கல்வி என்றும் நடுநிலையானதல்ல....

170 மீட்டர் நீளம், 60 செண்டிமீட்டர் அகலம் கொண்ட கொடுஞ்சிறைக் கொட்டடியில் அந்த மனிதன் சிந்தித்து கொண்டிருந்தான். தான் பிறந்த நாட்டில் தன் குடிகளுக்கான எழுத்தறிவு இயக்கத்தில் 30 நாளில் சுமார் 500க்கும் அதிகமான கரும்பு விவசாயிகளுக்கு எழுத்தறிவித்ததுதான் அம்மனிதர் செய்த குற்றம். எழுத்தறிவித்ததற்காக நாடும் கடத்தப்பட்ட அம்மனிதர் பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லோ பிரையரே. “இன்றைய கல்வி முறை எடுத்துக்கூறுதல் என்னும் நோயால் அவதியுறுகிறது? என்றவர். மூன்றாம் உலக நாடுகளில் மாற்றுக் கல்விக்கான தந்தை எனவும் இவர் புகழப்படும் இவரது கூற்று, இன்றும் உண்மையாக இருக்கிறது, வெளிவந்த சில ஆண்டுகளிலேயே 13 மறுபதிப்புகள், ஏழரை இலட்சம் பிரதிகள் என விற்றுத் தீர்ந்த இன்று பொன்விழாவை எட்டும்“ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை (PEDAGOGY OF THE OPPRESSED) என்னும் நூலாசிரியர். இந்நூல் மாற்றுக் கல்வி வேண்டுவோரின் வேத நூல் என்று வர்ணிக்கப்படுகிறது.


இன்றைய கல்வி முறையில் ஆசிரியர் பேசிக் கொண்டேயிருப்பார். மாணவர்கள் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். மாணவனுக்கு எதுவும் தெரியாது. ஆசிரியர் சிந்திப்பவர். மாணவர் சிந்திக்க வைக்கப்படுபவர். மாணவன் எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை ஆசிரியரே தீர்மானிப்பார். ஆசிரியர் தகவல் களஞ்சியம், அதனைத் தவணை முறையில் பெறக் கடமைப்பட்டவர் மாணவர். மாணவனின் சிந்தனைத் திறனுக்கும், படைப்பாற்றல் திறனுக்கும், கேள்வி கேட்கும் மனப்பாங்குக்கும் இன்றைய கல்வி முறை எதிரானது. உரையாடலுக்கு இடம் கொடாதது. இதனால் வகுப்பறைகளில் ஒரு மௌனம் குடிகொண்டிருக்கிறது. இந்த மௌனம் ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துவிட்டது. ஒழுங்கின் வடிவமாகவும் உள்ளது. இவ்வாறு அமைந்துள்ள வகுப்பறைகளில் கொடுங்கோலாட்சியே நடைபெறும். இன்றைய கல்வி முறை “ வங்கி கல்வி முறை கல்வியாக” உள்ளதன் விளைவு இது என்கிறார் பாவ்லோ பிரையரே. வங்கியில் எவ்வளவு பணம் ஒருவர் வைத்திருக்கிறாரோ, அவ்வளவு பணமே அவர் எடுக்க முடியும். அது போல் ஆசிரியர், தான் சேகரித்து வைத்துள்ள தகவல்களை எடுத்துக் கூறுதல் மட்டுமே அவரது கடமை.  எந்த அளவு மாணவனுக்கு சென்று சேர்கிறது என்பதற்கு இதில் எந்த உத்தரவாதமும் இல்லை. மொத்தத்தில் இன்றைய கல்வி ஒரு ஒடுக்குமுறைக்கான கருவி”  என்றார் அவர்.

        இன்றைய கல்வி முறையின் மீது கடும் விமர்சன்ங்களை மட்டும் வைத்தவர் அல்ல, அவர். அதற்கு ஓர் மாற்றத்தையும் முன் வைத்தவர். அதற்காக கடுமையாக உழைத்தவர்; கள ஆய்வுகளையும் மேற்கொண்டவர். பிரேசில் நாட்டின் கல்வி கற்றிராத கரும்பு விவசாயிகளிடம், உரையாடல் வழியாக, சிந்திக்கத் தூண்டும் எழுத்தறிவினை எப்படிப் போதிப்பது என்றும் கண்டறிந்தார். தனது மாற்றுக் கல்வி முறைக்கு “பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறை (Critical pedagogy)”  என பெயரிட்டார்.


        பிரையரேவின் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர் உறவுமுறை கூட அடிப்படையிலேயே வேறுபடுகிறது. இக்கல்வித் திட்டத்தில் ஆசிரியர் பாடம் நடத்துபவராகவும், மாணவர் அதை கேட்பவராகவும் இருக்க முடியாது. மாறாக இருவரும் இணைந்து ஒரு பிரச்சனைக்கு தீர்வை தேடுவர். வகுப்பறைக்குள் எடுத்து இயம்புதல் என்பதற்கு பதிலாக, கலந்துரையாடல் நிகழும். இதில் ஆசிரியர் மாணவராகவும், மாணவர் ஆசிரியராகவும் இருப்பார். ஆசிரியர் தன்னைத்தானே 50 விழுக்காடு தற்கொலை செய்து கொண்டு, மாணவராக விளங்க வேண்டும். மாணவரும் 50 விழுக்காடு ஆசிரியராக இருக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் வெறும் ஆசிரியர் அல்ல, ஆசிரிய – மாணவர். அதே போல மாணவனும், மாணவ- ஆசிரியனே. இத்தகைய வகுப்பறயில் அதிகாரம் இற்று வீழவும், தோழமை கோலோச்சவும் காணலாம். கற்பித்தலும்-  கற்றலும் வேறு வேறு நிகழ்வாக இல்லாததையும் காணலாம். இத்தகைய வகுப்பறையில் மௌனக் கலாச்சாரம் இயல்பாக உடைபடும். மௌனக் கலாச்சாரம் நொருங்கும் இடத்திலிருந்தே கற்றல் தொடங்கும் என்கிறார் பாவ்லோ பிரையரே. மௌனக் கலாச்சாரம் உடைபடும் புள்ளியில்தான் வகுப்பறை சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும், அன்னியத்தன்மைபயம் நீங்கவும் பெறும்.

பாவ்லோ பிரையரேவின் 15 ஆண்டு கடும் உழைப்பில் உருவான பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறைதான் உலக எழுத்தறிவு இயக்கத்திற்கு வித்திட்டது எனலாம். உலகின் பல நாடுகளின் எழுத்தறிவுக்கான சட்டங்கள் இயற்றப்படக் கூட இவரது ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை நூல் அடிப்படையாக அமைந்தது. தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் பற்றிப் படரவும் கூட பாவ்லோ பிரையரேவின் கல்வி முறை பயன்பட்டது. எழுத்தறிவு அற்ற மக்களிடம், “பட்டா படி போன்ற எளிமையாக எழுதக் கூடிய, வாசிக்க கூடிய, அவர்களது வாழ்க்கையோடு ஒட்டிய விழிப்புணர்வை  தூண்டக்கூடிய வார்த்தை வடிவமைப்புகளுக்கு பிரையரேவே வெளிச்ச ரேகைகளைப் பாய்ச்சினார்.

நம்மில் பலரும், நமது கல்வி முறை நடுநிலையோடுதான் இருக்கிறது, ஆசிரியரும் நடுநிலையோடுதான் இருக்கிறார் என நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் “கற்றல் ஒரு அரசியல் செயல்பாடு. ஆசிரியர் நடுநிலையோடு இருக்க முடியாது” என ஓங்கி ஒலித்தவர். அதுமட்டுமல்லாது அறிதல் என்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதான் என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவிற்கு ஒரு முறை வந்திருந்த அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கினார். “ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கணக்குப் பாடத்தில் பயிற்சி அளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்; உன் கையில் ரூ.100 இருக்கிறது. அதை வங்கிக் கணக்கில் போட்டு வைக்கிறாய்3 சதவீத வட்டிக்கு 6 மாதம் வங்கியில் போட்டு வைத்தால், ஆறு மாதம் கழித்து எவ்வளவு பணம் கிடைக்கும்” என்கிறார். இந்தக் கணக்கின் மூலம் முதலாளித்துவ பொருளாதார முறைமையையும் சேர்த்துத் தானே சொல்லித் தருகிறீர்கள் என கேட்டார். ஆசிரியர் ஒரு கலாச்சார செயல்பாட்டாளர் என்பதையும் வலியுறுத்தி“TEACHERS ARE CULTURAL WORKERS” என்ற நூல் ஒன்றையும் எழுதினார்.

எழுதுதல், வாசித்தல், மறுவாசிப்புச் செய்தல், எழுதியதை மீண்டும் திருத்தி எழுதுதல் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தவர் பாவ்லோ பிரையரே. இன்றைக்கும் பலர் வகுப்பறையில் சிற்சில உரையாடல்கள் நிகழ்த்துவதையோ, நகைச்சுவையை அள்ளித் தெளிப்பதையோ, ஆரோக்கியமான உரையாடல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், பாவ்லோ பிரையரே சொன்ன வழி எனக் கூறிக்கொண்டும் இதே வழியான செயல்பாடுகளை அரங்கேற்றுகின்றனர். இவை இரண்டுமே பாவ்லோ பிரையரே முன்மொழியும் உரையாடல் வழிமுறையல்ல. ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது பிரச்சனையை எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான கலந்துரையாடல் வழியாக இலக்கு மாறாமல் அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதே பிரையரே முன்வைக்கும் உரையாடல்.

தமிழ்நாட்டில் பாவ்லோ பிரையரேயும் அவரது கோட்பாடுகளையும் அறிந்திருப்போர் மிகவும் குறைவுதான். பாவ்லோ பிரையரேவின் கல்வி சிந்தனைகள் மனசாட்சி உள்ளோரைப் பிடித்து உலுக்குவன. சிலவற்றை ஆசிரியர் நினைத்தால் உடனடியாக நடைமுறைப் படுத்த முடியும். சிலவற்றை நடைமுறைப்படுத்த ஒத்த கருத்துள்ளோரிடம் விவாதம் தேவைப்படும். சிலவற்றை தற்போது இருக்கும் அரசாங்கங்களை நடைமுறைப்படுத்தலாம். சிலவற்றை அரசுகளும் கொள்கைகளும் மாறினாலே நடைமுறைப்படுத்த முடியும்.

பாவ்லோ பிரையரே வழியில் ஆரோக்கியமான உரையாடல் மூலம் வகுப்புகளை எப்படிக் உயிரோட்டமாக மாற்றுவது என்பதற்கு ஒரு பெரும் வழிகாட்டி நூல் பேரா.ச மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கே” என்னும் ஒரு நூல். தமிழாசிரியராக தனது வாழ்நாள் பயிற்சியின் அனுபவ சாரத்தை தொகுத்துக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என பாடவாரியாக கூடி விவாதிக்க வேண்டும். கையேடுகள் தயார் செய்யப்பட வேண்டும். அல்லது இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நடைமுறையை அமுல்படுத்தி வருபவர்கள் மாடசாமியைப் போல் எழுதத் தூண்ட வேண்டும்.


கல்வி முறையை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியை பல அமெரிக்க கல்வியாளர்கள் முன்னிறுத்தினர். ஆனால், அத்தகைய கல்வி முறை, விவாதம் மூலம் ஆட்சி அதிகாரத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் பாவ்லோ பிரையரே முன்மொழிந்த கல்வி முறை கல்வி சிந்தனைகள், விவாதங்கள் வழியே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களுக்கு பிரையரேவின் கல்விச் சிந்தனைகளும் கூட ஒரு காரணம் என்கிறார்கள். இயற்பியல் உலகை எப்படி ஐன்ஸ்டீனுக்கு முன், பின் என பிரித்தல் இயலுமோ, அவ்வாறே கல்வி சிந்தனைகளையும் பிரையரேவுக்கு முன், பின் என பிரிக்கலாம்.


கஞ்சி குடிப்பதற்கிலார், காரணம் இதுவென்னும் அறிவிலார் என்னும் நம் பாரதியின் ஏக்கப் பெருமூச்சிற்கு விடை காணும் அவரது புரட்சிகர கல்வி சிந்தனைகளை நடைமுறைக்கு கொண்டுவருதல் சாத்தியமா என அவரையே கேட்டபோது “நாம் நடந்து நடந்தே சாலை அமைத்துவிட முடியும்” என பாவ்லோ பிரையரே கூறினார். எழுத்து என்பது அரசியல் திட்டம் சார்ந்த பணி” என்று வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த பாவ்லோ பிரையரே பிறந்தது, 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 19.

நன்றி:http://tnsfnmani.blogspot.in/2014/09/blog-post_18.html

அரசுப்பள்ளி மக்கள்பள்ளி, பாதுகாப்போம், பலப்படுத்துவோம். தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளில் அறிவொளிஇயக்கம்கற்றல் திறன் மேம்பாடுஆசிரியர்களுக்கான இணைசெயல்பாடுகள் உருவாக்குதல்,சமச்சீர் பாடத்திட்ட நூல்கள் குறித்த ஆய்வுகள்போன்ற குறிப்பிடத்தகுந்த பணியைதமிழகத்தில் அடிப்படைக் கல்வியில் மேற்கொண்டுள்ளது.

தற்போதும் ஆசிரியர்களுக்கான பல்வேறுதிறன் மேம்பாட்டு பயிற்சிகள்ஆசிரியர்இணையம்வாசிப்பு இயக்கம் என தனது பணியை தொடர்ந்து நடத்தி வருகிறதுஅரசின்கொள்கைகளாலும்புற்றீசல் போன்ற தனியார் பள்ளிகளின் வளர்ச்சியாலும் காமராஜர் கட்டமைத்த பொதுப்பள்ளி முறைமை என்னும் அரசுப்பள்ளி முறைமை முற்றிலும் செயல்இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுஒரு நாட்டின் சமூக பொருளாதார அரசியல்நடவடிக்கைகளின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமையவேண்டியவலுவான அரசுப்பள்ளிகள் முற்றிலும் செயல் இழக்கும் நிலையில் உள்ளதுதன்கொள்கைகளாலும் தனியர்மயமாதலாலும் தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறைந்துள்ளது என்பதை மறந்துசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  மாணவர் சேர்க்கைகுறைவாக  உள்ள ஆறு பள்ளிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நிலைக்கு சென்றுள்ளதுதமிழக அரசு .இத்தகைய போக்கு மேலும் மேலும் அரசுப் பள்ளிகளை சீரழிக்கவே பயன்படும்.உலகமயமாக்கலுடன் ஒட்டிப் பிறந்த தனியார்மயத்திற்கு முன்பே தமிழகத்தில் மெட்ரிக்பள்ளிகள் என்ற பெயரில் தனியார்மயம் தொடங்கிவிட்டது .கடந்த முப்பது ஆண்டுகளில்தனியார் பள்ளிகள் முற்றிலும் லாபத்தை முன்னிறுத்தும் வழியில் செயல்பட்டுஉண்மையானகல்வியியல்கற்றல் நோக்கங்கள் நிராகரிக்கப்பட்டுமதிப்பெண்களே கல்விஅல்லது அதுவேதரம் என நிலைநிறுத்திதனியார் - அரசு என எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாப்பள்ளிகளும் மதிப்பெண் பின்னால் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுதொடக்க நடுநிலைப்பள்ளிகள் சில ஆயிரம் வரை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்மூடப்படும் நிலையில்உள்ள கிராமங்களில் வாழும் ஏழைக் குழந்தைகள் மீண்டும் எழுத்தறிவு அற்ற ஒரு சமூகம்உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

             தாய் மொழி வழிக் கல்வியிலேயே கற்றல் மேம்பட்டுபடைப்பாற்றல் திறன்அத்துடன் ஆங்கில மொழிப் புலமையும் அதிகரிக்க செய்ய முடியும் என்பதற்கு தமிழகமே மிகச்சிறந்தமுன் உதாரணமாக விளங்கியதுசர் சி வி ராமன்ராமானுஜன்சிங்கரவேலர் எனத் தொடங்கிமுன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்மயில் சாமி அண்ணாதுரை என பலஉதாரணங்களை கூறிக் கொண்டே செல்லமுடியும்.  ஆனால் ஆங்கிலம் கற்கவே அனைத்துப்பாடங்களையும் குருட்டு மனப்பாடம் செய்யும் நிலைக்கு தமிழகம் வந்துவிட்டதுமாணவர்சேர்க்கைக்காக ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்த பின்னர் இது பற்றியும்பேசியாக வேண்டும்எனவே தமிழக பள்ளிக் கல்வியை சீரழித்துள்ள அரசின் கொள்கைகள்தனியார் பள்ளிகளின் வணிகமயம்என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி தமிழகபள்ளிக் கல்வியை காக்கும் ஒரு பேரியக்கத்தை சர்வதேச எழுத்தறிவு தினமான 08.09.2014ன்று தொடங்கியது.

இந்த இயக்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "அரசுப் பள்ளி மக்கள் பள்ளி.பாதுகாப்போம்பலப்படுத்துவோம்என்னும் பெயரைச் சூட்டி உள்ளதுதமிழக மக்களிடம்இச்செய்தியை கொண்டு சேர்க்க ஐந்து பிரசுரங்களை வெளியிட உள்ளோம்.  மேலும் அரசுப்பள்ளிகளை காக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிடவேண்டும்தனித்தனி வகுப்பறைகள்வகுப்பிற்கொரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.சுத்தமான குடிநீர்சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்திட வேண்டும்,செயல்வழிக்கற்றல்தொடர்மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்த வேண்டும்நலத்திட்டஉதவிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்திடவும்கல்வியில் தனியார்மயத்தைக் கைவிடவேண்டும்அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்திட வேண்டும்.உண்மையான சமச்சீர் கல்விமுறையினை அமல்படுத்திட வேண்டும்மத்திய அரசின் “அரசுதனியார் கூட்டுமாதிரிப் பள்ளித் “திட்டத்தை நிரந்தரமாக நிராகரிதத்திட வேண்டும் போன்றகோரிக்கைகளை அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி  பத்து லட்சம் கையெழுத்துக்களைபெற்று அரசுக்கு சமர்பிக்க உள்ளோம்அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க  அனைத்துதரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும்ஆசிரியர்மக்கள் பங்கேற்பை உறுதிசெய்திடவும்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல்கட்சிகளும்அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவாக இணைக்கவேண்டும் என்பதும் இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.

இவ்வியக்கத்திற்கு வலு சேர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் என இக் கொள்கைக்கு உடன்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி செயலாற்ற திட்டமிட்டுள்ளோம். மாவட்டங்களில்கையெழுத்து இயக்கம், நூல்விற்பனை கருத்தரங்குகள்மண்டல மாநாடுகள் எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அரசுப் பள்ளி அவலத்திற்குகாரணமானவற்றை கண்டறிய கள ஆய்வுகள் நான்கு தலைப்புகளில் நடத்தப்படும்டிசம்பர்மாதத்தில் ஆய்வு முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும்அரசுக்கு சமர்ப்பிப்பதுஅதனை நடைமுறைப்படுத்தக் கோருவதுஅதனை வீதி நாடகங்கள்,பாடல்கள் உள்ளிட்ட கலைப்பயணம் வழியாகவும் மாநிலம் முழுக்க எடுத்துச் செல்வது எனஇந்தப் பிரச்சார இயக்கத்தில் திடமிடப்பட்டுள்ளது.


அதில் முதல் கட்டமாக பேரா.நா.மணி எழுதிய ’மீண்டெழும் அரசு பள்ளிகள்’ என்னும்நூலை பேரா.வசந்தி தேவி வெளியிட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்அருமைநாதன் பெற்றுக்கொண்டார். ’இவைகளா கனவுப் பள்ளிகள்’ என்னும் தலைப்பில்வணிக மய பள்ளிகளின் செயல்பாட்டை விமர்சித்து பேராராஜமாணிக்கம் எழுதிய நூலைமுனைவர். ச. முத்துகுமரன் முன்னாள் துணைவேந்தர் வெளியிட இந்திய மாணவர் சங்கமாநில துணைத்தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.  பத்து லட்சம் கையெழுத்து பெரும்இயக்கத்தை பேரா...அறவாணன் துவக்கி வைத்தார்இந்த மாநில அளவிலான பிரச்சாரதுவக்கவிழா நிகழ்வில்  இவ்வியக்கத்தின் மாநில தலைவர் மணி, மாநிலஒருங்கிணைப்பாளர் தேனி.சுந்தர்மாநில நிர்வாகிகள் உதயன், சி. இராமலிங்கம், சென்னைமாவட்ட அறிவியல் இயக்க செயலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்நிகழ்ச்சிஏற்பாடுகளை  சென்னை மாவட்ட அறிவியல் இயக்க குழுவினர் செய்திருந்தனர்.