Thursday, 23 October 2014

பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்

பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிமுகமான பெயராக இருக்கிறார். வாழ்த்துக்கள். அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி நூலினை தொடர்ந்து அவர் இந்தியாவில் எப்போதோ நிகழ்த்திய உரையாடலினை (கவனிக்கவும், உரையல்ல!) சற்றும் சளைக்காமல், ஒரே நேரத்தில் தமிழிலும், அதன் ஆங்கில மூலத்தினையும், விற்பனை சந்தை குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல், சமூக கடமையாக மட்டுமே கருதி அச்சிட்டு வெளியிடும் அவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் அப்புத்தகங்களை, “இருளும் ஒளியும்” நூலில் தோழர் ச. தமிழ்செல்வன் சொல்வதைப் போல தோள் வலிக்க ஏந்தி பொதுவெளியில் சேர்ப்போம். அது ஒன்றே நம் கடமை. நிற்க.


பாவ்லோ பிரையரே குறித்து இன்னமும் இன்னமும் ஏதாவது செய்திகள் கிடைக்காதா, அவை நமக்கு ஏதேனும் சொல்லிச் செல்லாதா என ஒரு அதிகாலை வேளையில் இணையத்தை துழாவிய போது ஒரு அதிசயமான, ஆச்சரியமான செய்தி கிடைத்தது. இன்னமும் மாறா புல்லரிப்போடே தொடர்கிறேன். 


ஆண்டு 1962, இடம் பிரேசில் நாடு. MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும் எழுத்தறிவிற்கான ஒரு இயக்கம் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது. துணைக்கு நம்மவர் (நம்மவர்தானே!) பாவ்லோ பிரையரேவை நாடுகிறது. உடனே அதற்கு ஒத்திசைத்து அவரும் 300 விவசாய கூலி மக்கள் மத்தியில் கற்பிக்கத் தொடங்குகிறார். வெறும் 45 நாட்களுக்குள்ளாகவே அவர்களை வாசிக்கவும், எழுதவும் வைத்துவிடுகிறார். அரசுக்கு ஆச்சரியம். எப்படி? பாவ்லோ பிரையர் அக்கூலி மக்களோடே தங்கியிருந்து அவர்களுக்கு அவர்களுடைய அன்றான வாழ்வோடு இயைந்து வருகிற வார்த்தைகளையும், அவர்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் விஷயங்களை தொட்டு செல்லும் வார்த்தைகளையும், அவர்களுடைய ஏழ்மைக்கான சமூக, அரசியல் காரணிகளை அடையாளம் காட்டும் எளிதான வார்த்தைகளையும் சொல்லி அவர்கள் எழுத்தறிவினை தூண்டிவிட்டு அவர்கள் படிக்க, எழுத வழி காண்கிறார். (கவனிக்கவும், பாவ்லோ பிரையரே எப்போதும் READING AND WRITING – வாசித்தல் மற்றும் எழுதுதல் என்றே சொல்கிறார், நாம் அன்றாட வழக்கத்தில் சொல்வது போல எழுத, படிக்க என்ற வரிசையில் அல்ல). அக்கூலி மக்கள், எழுத்தறிவித்தல் பணியில் உதவி செய்த ஆசிரியர்கள் ஆகிய இருவரையும் ஒரு குழுவாக பாவித்து அக்குழுவினை ‘கலாச்சார வட்டம்’ என்றே அழைக்கிறார். 



இவ்வாறாக எழுத்தறிவில்லாத மக்கள் பாவ்லோ பிரையரேவின் வார்த்தைகளில் சொல்வதானால் அமைதி கலாச்சாரம் என்ற ஒன்றை உதறி தள்ளி சமூக, கலாச்சார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான கருவிகளாக உருமாறிய நிகழ்வு தொடர்ந்தது. பிரேசிலில் சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான எழுத்தறிவில்லாதோர்க்கு உதவி செய்ய 24000 கலாச்சார வட்டம் தொடங்குவதற்கான பணிகள் 1964 ஆண்டில் திட்டமிடப்பட்டன. அப்போது அங்கும் ஜனநாயகத்தை நசுக்கி எழுந்த ராணுவ அரசு அத்திட்டத்தை கைவிட்டதோடு மட்டுமல்லாது பாவ்லோ பிரையர் கடவுளுக்கும், பிரேசில் மக்களுக்கும் எதிரானவர் என்று கூறி அவர்மீது கைது நடவடிக்கை தொடர்ந்தனர். மேலும், அவர் பிரேசில் நாட்டினை மற்றுமொரு “போல்ஷெவிக்” நாடாக மாற்ற முனைந்தார், என்றும் அவரது கல்வி முறை என்பது “ஸ்டாலின், ஹிட்லர், முசோலினி” போன்றவர்களுடையது போல் உள்ளது என்றும் குற்றம் சாட்டியது. (மதி கெட்ட இராணுவம் யாரை யாரோடு முடிச்சு போடுகிறது பாருங்கள், இராணுவம் மட்டுமல்ல, இன்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அதையே செய்து வருகின்றன)


இப்போது காலம் : 1990களின் முற்பகுதி. இடம்: தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலம். இந்திய அரசின் எழுத்தறிவிற்கான அறைகூவலினை சிரமேற்று உண்மையான உணர்வோடும், கடைமையாக கருதி உரிய உழைப்பினை செலுத்தி அறிவொளி இயக்கத்தில் நமது தோழர்கள் பலரும் எழுத்தறிவித்தல் பணியில் ஈடுபட தொடங்கினர். எழுத்தறிவில்லாத பாமர மக்களுக்கு பள்ளிகளில் கற்கும் முறை கொண்டே கற்பிக்க முனைந்து அது தோல்வியுற்று அடுத்து என்ன செய்யலாம் என்று வருந்தியிருந்தனர். தொடர்ந்த விவாதங்களுக்கு பின்னே அவர்கள் அம்முறையினின்று விலகி அம்மக்களுக்கு அன்றாட வாழ்வில் புழங்குவதும், அவர்கள் வாழ்விற்கு தேவையான வார்த்தைகளை சொல்லி அவர்கள் அவ்வார்த்தைகளோடு சிநேகம் கொள்ளச் செய்து கற்பித்தல் பணியில் வெற்றி காண துவங்கினர். உதாரணத்திற்கு : “பட்டா “ போன்ற வார்த்தைகள். மக்களும் விரைவாக விருப்பத்துடன் கற்கத் தொடங்கினர். எழுத்தறிவித்தல் பணி வெற்றியின் திசை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது. சிறிது காலத்திற்குள்ளாகவே இந்திய அரசு அத்திட்டத்தை கைவிட்டது. அறிவொளி இயக்கப் பணியும் முடங்கியது. இவ்விஷயங்களை மிக சுவையாக, விமர்சனத்தோடு அவருக்கே உரித்தான பாணியில் இருளும் ஒளியும் நூலில் சொல்லியுள்ளார் நமது தோழர் ச. தமிழ்செல்வன் அவர்கள். அப்புத்தகத்தினையும் பாரதி புத்தகாலயமே வெளியிட்டு மகிழ்ந்தது. 



என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள். 1964வில் பிரேசில் நாட்டில் பாவ்லோ பிரையரே செய்த விஷயங்களை எவ்வாறாகவும் அறிந்திராத 1990களில் (இணையம் அப்போதில்லை) இங்கே தென் தமிழகத்தில், புதுச்சேரியில், வேலூரில் அறிவொளி இயக்கத் தொண்டர்கள் செய்தனர் என்பது பாவ்லோ பிரையரேவினைப் போல் ஒத்த சிந்தனை, நுண்ணறிவு கொண்டு உழைத்த எத்தனை அருமை நெஞ்சங்கள் இங்கே இருந்திருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது. பாவ்லோ பிரையேரே எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு தெரியும் அவருடைய கல்வி குறித்த, சமூகம் குறித்த அறிவு என்பது எத்துனை ஆழமானது என்பது. அதற்கும் ஈடு கொடுத்து இங்கேயும் நம்மோடு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பது எத்துனை பெருமைபடக்கூடிய, ஆச்சரியப்படக்கூடிய விஷயம். பாவ்லோ பிரையரே 1997இல் இறப்பதற்கு சற்று முன்னதாக சொன்னதாக சொல்லப்படுவது, “அன்பில்லாமல் கல்வியினை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, நான் அன்பினை உணர்கிறேன், பகிர்ந்தளிக்க நினைக்கிறேன், அதனாலேதான் நான் கல்வியாளனாக இருக்கிறேன்”. பாருங்கள் அதே அன்போடு, நம்மிடையே எத்துனை தோழர்கள் அறிவொளி இயக்க தோழர்கள் பாமர மக்கள் மீது மாறாக அன்பு கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்குத்தான் எனக்கு புல்லரிப்பு. தோழர்கள் தமிழ்செல்வன், ச.மாடசாமி, அருநந்தி, ஜெ.கே, சசிதரன் உள்ளிட்ட பலருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். 



ஆயினும், ஆச்சரியத்தினூடே எனக்கு ஒரு கவலையும், குற்ற உணர்வும் எழுகிறது. தோழர் ச. தமிழ்செல்வன் எழுதிய இருளும் ஒளியும் நூல் ஒன்று மட்டுமே அறிவொளி இயக்கத்தின் மொத்த செயல்பாடு, சமூகத்தின் மீதான அதன் பாதிப்பு, அது உண்டாக்கிய கலாச்சார மாற்றங்கள் என அனைத்தும் பதிவு செய்ய போதுமானதா? அந்த ஒற்றை நூலில் மட்டுமே அத்தனையும் அடக்கி விடுதல் சாத்தியமா? நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும், முடியாது, இயலாது. இன்னும் எவ்வளவோ இருக்கிறது பதிவு செய்ய, நினைவுகளின் அடுக்குகளில். சமச்சீர் கல்வி, பயிற்றுவித்தல் முறையில் கேலிச் சித்திரங்களை (அவற்றில் ஒன்றிரண்டு மிக அபத்தமாக, ஆபத்தாக இருந்த போதிலும்) உள்ளடக்கி பாடத்திட்டங்கள் மாணவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் மாற்றம் கண்டுவரும் இச்சூழலில், அன்று அறிவொளி இயக்கத்தினரால் மிகவும் விவாதிக்கப்பட்டு, பெருமுயற்சியுடன் வெளியிடப்பட்ட கருத்துத்தாள்களின் பாத்திரம் எத்துனை முக்கியமானது? அக்கருத்து தாள்களில் சாதியின் கொடூரத்தை, சாதியாக வாழ்ந்த மக்கள் முன்பே வைத்து அவர்களுள் அவர்கள் அறியாமல் இலாவகமாக ஒரு மாற்றத்திற்கான வித்தை விதைத்ததே அது இப்போது தேவைப்படவில்லையா? பெண்களின் மாத விடாய் பிரச்சனை மற்றும் அடலன்ஸி எனப்படும் விடலைப்பருவ விஷயங்களை அழகான அறிவியல் கதைகள் மூலம் சொல்லி மக்கள் கண்திறந்த அக்கருத்துதாள்களினை நாம் மீள் பதிப்பு செய்யவேண்டாமா? மதத்துவேஷம், சுரண்டல், பாலின சமன்பாடு ஆகியவற்றையும் கதையாக்கி, கேலிசித்திரங்களாக்கி கணிப்பொறியின் ஒத்துழைப்பு இல்லாமலே பல்லாயிரக்கணக்கான பிரதிகளை கண்டு மக்கள் கைகளில் தவழ்ந்த அக்கருத்துதாள்கள் இப்போது எங்கே? அறிவொளி இயக்கத்தில் எத்தனையோ அனுபவங்கள், அவர்களுக்கு கற்பிக்கப் போய் நாம் கற்றுக் கொண்டு வந்தது, பாவ்லோ பிரையரே சொல்வது போல் வகுப்பில் ஆசிரியர் மாணவர் இடைவெளி மறைந்து இருவரும் ஆசிரிய-மாணவராக ஒன்றாக மாறிய நம் அறிவொளி இயக்கத் தொண்டர்களின் அனுபவங்கள் ஆகியவை பதிப்பில் காண வேண்டாமா? குரல் வளமில்லை, பாடல் பாடும் தொழில்நுட்பம் தெரியாது, பெரிய இலக்கண அறிவு கொண்ட கவிஞர்கள் இல்லை, என்றாலும் அறிவொளி இயக்கப் பாடல்களை உரத்த குரலோடும், தயக்கத்தினை துடைத்தெறிந்து உணர்வோடு நாம் பாடிச் சென்ற அப்பொழுதுகள், கடினமான விஷயங்களை எளிய வார்த்தைகளில் சாறு பிழிந்து சந்தமிக்க பாடல்களாக மாற்றிய வித்தையினை இக்காலத்திய தமிழ் சமூகம் அறிய வேண்டாமா?



என்னுடைய அவா எல்லாம், அக்காலத்திய அறிவொளி இயக்கப் பணிகளை, அனுபவங்களை, கருத்துத்தாள்களை, பாடல்களை, ஏழை மக்கள் நமக்கு நன்றி சொல்லி அவர்களுடைய அழகான கிறுக்கல் கையெழுத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட வேண்டும். நிச்சயமாக என்னால் சொல்ல முடியும், அப்புத்தகம் பாவ்லோ பிரையரேவின் கற்பித்தல் முறைகளை பலபொழுதும் ஒத்தே இருக்கும், அவருடைய கல்வி சித்தாந்தங்களுக்கு ஒத்திசைவாக செல்லும், வலுசேர்க்கும், ஒரு பயிற்சி புத்தகமாக இருக்கும். பாவ்லோ பிரையரேவின் புத்தகத்தினை தொடக்கமாக கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் வாசிப்பு முகாமிற்கு நிச்சயமாய் அது துணை புரியும். உலகமய சூழலில் தமிழ்ச்சமூகத்தில் ஒற்றை கலாச்சாரத்தை, ஒற்றை பண்பாட்டினை முறியடிக்க, சுரண்டலுக்கு எதிரான மக்களை அணிதிரட்டும் பணியை அத்தொகுப்பு செய்யும். பாவ்லோ பிரையர் சொல்கிறார், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எடுக்கப்படும் கல்வி மற்றும் கலாச்சார தலையீடுகளின் வெற்றி என்பது அவர்களின் சங்கிலிகளை நாம் அறுத்தெறிவதில் அல்ல, அவர்களாகவே அவர்களது சங்கிலிகளை அறுத்தெறிய அவர்களை தயார் செய்வதிலேயே உள்ளது. அத்தயாரிப்பிற்கு நிச்சயமாக அறிவொளி இயக்கத்தின் அனுபவங்கள், கருத்துத்தாள்கள் பலன் தரும். பாரதி புத்தகாலயத்தினர் இந்தக் கடமைக்காக ரொம்ப நாட்களாகவே காத்துக் கிடக்கின்றனர். 


நகைச்சுவை நடிகர் வடிவேலு மூலம் சிம்புதேவன் சொல்வதற்கு முன்பே நமக்கு தெரியும், “வரலாறு மிக முக்கியம்”, அப்படித்தானே?


No comments:

Post a Comment