Thursday, 23 October 2014

என்ன செய்ய வேண்டும்?


‘நீண்ட காலத்துக்குப் போராட வேண்டி இருக்கிறது. உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறையப் படி’
-சேகுவாரா ( தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் )

அரசுப் பள்ளிகளை மூடுவிழா நடத்தும் அழிவிலிருந்து மீட்க ஒரு பிரமாண்ட இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கையெழுத்து இயக்கமாக வாசிப்பு இயக்கமாக 25 மாவட்டங்களில் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. முற்றிலும் வணிக மயமாக்கப்பட்டுவிட்ட வியாபார கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதே குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தை முன்மொழிந்து போராடிப் பெற்ற நமது இறுதி இலக்கு. அருகாமைப் பள்ளி பொதுப்பள்ளி இவையே நாம் முன்வைக்கும் மாற்றுக் கல்வியாகும். அதை அரசுதான் திறம்பட நடத்தமுடியும். பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி சிங்கப்பூர் ஹவாய் தீவுகள், கனடா ஆகிய அதி முதலாளித்துவ நாடுகள் உட்பட 62 நாடுகளில் சாத்தியமாகி இருக்கிறது. இங்கிலாந்தில் இன்றும் பிறக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்விச் செலவுக்கு மகாராணியே பொறுப்பு. ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிகள் வீதம் அதிவேகமாக மூடப்பட்டு வரும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மீட்பு இயக்கம் மூன்று முக்கிய அம்சங்களை முன்மொழிகிறது. அதை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். முதலாவது மூன்று வயதில் இன்று குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இது கோத்தாரி கமிசன் முன்மொழிந்து தொடர்ந்து ஜனார்த்தனரெட்டி கல்விக்குழு ஆதரித்த மாற்றம். அது அரசுப் பள்ளிகளில் இல்லை. ஆனால் அங்கன்வாடி என தனியே உள்ளது.

ஒரு தனியார் பள்ளியே எல்கேஜி தொடங்கி நடத்துகிறது. மூன்று வயதில் சேர்க்க வேறு இடமின்றிப் பெற்றோர் அங்கே சென்று விடுகிறார்கள். பிறகு மாற்றாமல் அங்கேயே கல்வியைத் தொடர்கிறார்கள். அரசுப் பள்ளிகள் அனைத்திலுமே முதல் வகுப்பாக எல்.கே.ஜி. தொடங்கப்பட வேண்டும். இதுவே பல இடங்களில் மாணவர் சேர்க்கையை பலப்படுத்திவிடும். இரண்டாவது தனியார் பள்ளிகள் போலவே அனைத்து அரசுப் பள்ளிகளுமே அனைத்து வகுப்புகளும் இடம் பெறும்படியான முழுமை கல்விச் சாலைகளாக மாற வேண்டும், தவிர முக்கியத் தேவை ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எனும் விஷயம். அரசுப் பள்ளிகள் பல தரம் இழந்து இருப்பதற்கு இங்கே ஆசிரியர் பணி இடங்கள் பலவும் நிரப்பப்படாமல் இருப்பதுதான். சரியான விகிதாச்சாரம் எது என்று குழந்தைகள் கல்வி உரிமை சட்டம் (RTE) சொல்லி இருப்பதை நாம் அமல்படுத்த அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அனைத்து வகை மக்களது பிள்ளைகளும் கல்வி கற்கும் ஊரின் ஒரே இடமாக அதாவது ஒரு பொதுப்பள்ளியாக அரசுப் பள்ளிகள் மாறிட இந்த விகிதாச்சாரப் படிநிலை மிகவும் அவசியம். இன்று வழங்கப்படும் பதினாறு வகையான இலவசங்களை ஒப்பிடும்போது இத்தனை ஆசிரியர்களை நியமிப்பது அரசுக்குப் பெரிய செலவல்ல. நாம் மக்கள் நலத் திட்டமான கல்வியின் விலையற்ற பொருட்களை குழந்தைகள் பெறுவதை எதிர்க்கவில்லை.

அரசுப் பள்ளியின் அருமை தெரிந்து தன் பிள்ளைகள் தனியார் பள்ளி எனும் ‘காசு கொடுத்து சூடு வைத்துக் கொள்ளும்’ கொடுமையை உணர்ந்து எத்தனையோ பேர் மாற்றத்தை தங்கள் குடும்பங்களில் கொண்டு வந்து கொண்டிருப்பதை இந்த இயக்கத்தின் வெற்றி பறைசாற்றுகிறது. ஆங்கில வகுப்புகளைத் தொடங்குவதை ஒரு தீர்வாக ஏற்பதைவிட முன்பருவப் பள்ளி (pre school) மற்றும் முழுமைப் பள்ளி (complete schooling in one place) என்பதையும் கூடவே ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் இவை மூன்றும் அரசுப் பள்ளிகளைக் கண்டிப்பாக மீட்கும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்கும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் மாற்றுக் கல்வி வாசிப்பு இயக்கத்தையும், அதன் வழியில் களத்தில் நிற்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தையும் புத்தகம் பேசுது இதழ் முழுமையாகப் பாராட்டுகிறது. அரசுப் பள்ளி மீட்போம், கல்வியில் தனியார் மயத்தை எதிர்ப்போம்… பொதுப்பள்ளி இயக்கத்தின் துணை நிற்போம். அனைவருக்கும் நன்றி

- ஆசிரியர் குழு­­, (புத்தகம் பேசுது மாத இதழ், அக்.2014 தலையங்கம்)

No comments:

Post a Comment