"நமது பள்ளியில் படிக்கும் 90 சதவிகித மாணவர்கள் 60 சதவிகித மதிப்பெண்ணுக்கு மேல் வாங்குகிறார்கள். 60 சதவிகித மாணவர்கள் 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள்...."எனப் அப்பள்ளி நிர்வாகி பேசிக் கொண்டே வந்தார். "பின்ன ஏன் நம்ம ஸ்கூலில் இருந்து ஸ்டேட்ரேங்க் வரலைன்னு கேக்கறீங்களா?"என்று கேள்வியைக் கேட்டு நிறுத்தினார். "என்னாலெல்லாம்பணத்தை சாக்குப் பையில கட்டிக்கிட்டு போய் கியூவுல நிற்க முடியாது. எனக்குன்னு கெளரவம்இருக்கு" எனப் பதில் கூறிவிட்டு அடுத்த விசயத்துக்கு நகர்கிறார். அவர் கூற்றில் உண்மையுண்டோஇல்லையோ அப்பள்ளிக்கு வயது 35. இன்று வரை ஒரு கால் பக்க பத்திரிகை விளம்பரம் கூட பள்ளிசேர்க்கைக்காக செய்ததில்லை. அப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் வேலை கிடைத்தாலும் இதை விட்டுச் செல்வதில்லை.
"என்னம்மா உங்க கல்வி மாவட்டத்தில் உள்ள அந்த (பள்ளியின் பெயரைக்
குறிப்பிட்டு) ஸ்கூல் தான் ஸ்டேட் ஃபஸ்ட்டா வரப்போகுதா ?", ஒரு மாவட்ட கல்வி அதிகாரியிடம்இன்னொரு அதிகாரி கேட்ட கேள்வி இது. அதே போல அந்தக் கல்வி நிறுவனமே அவ்வாண்டுமாநிலத்தில் முதல் இடம் பெற்றது. "இதுவெல்லாம் நிஜமா?" என்று ஒருவரிடம் கேட்டால் "பள்ளிக்கல்வி இயக்குநராகவும் தேர்வுத் துறை இயக்குனராகவும் யார் வர வேண்டும் என தனியார் கல்வி நிறுவனங்கள் தானே முடிவு செய்கிகின்றன " என அடுத்த குண்டைத் தூக்கிப் போடுகிறார்.இவையெல்லாம் உண்மையா? பொய்யா? இத்தகைய கேள்விகளும் விவாதங்களும் மனசாட்சி உள்ளகுடிமக்களை நிலை குலையவே செய்யும். பள்ளிக் கல்வியின் தரத்தை, கல்வி கலாச்சாரத்தைதலைகீழாக புரட்டிப்போட்டுவிட்ட மதிப்பெண்கள், கற்றல் அடைவுகளை அளந்து பார்க்கும் கருவிஎன்ற கருத்தும் காலமும் காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.
அதிக மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் கல்வித் தொழிற்கூடங்கள் மட்டுமே சிறந்த கல்விநிறுவனங்களாக கல்விச் சந்தையில் உலாவருகிறது. இவற்றின் மதிப்பு என்பது சந்தை மதிப்பு. 'சந்தை'என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடக்கம். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களால் மட்டுமே பன்னிரெண்டாம் வகுப்பின் சந்தை மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.பள்ளிக்கூடம் மாணவர்களை சந்தைப் பொருளாக பாவிக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளையும்பள்ளிகளையும் இலாபத்தை உச்சப்படுத்தும் பொருட்களாக அணுகுகின்றனர்.
இவ்வாறு கல்வி என்பது சந்தைப் பொருளாக மாற்றம் அடைந்த பின், இலாபத்தை உச்சப்படுத்துதலேமைய நோக்கமாக மாறிவிடுகிறது. இலாபத்தைத் தீர்மானிக்கும் கருவிகளாக பள்ளியின் விளம்பரம்,முதலீட்டின் அளவு, தங்கள் பள்ளியே சிறந்த பள்ளி என தரத்தை வேறுபடுத்திக்கட்ட (product differentiation) எடுக்கும் முயற்சிகள், அரசியல் சமூகப் பொருளாதார காரணிகள் போன்றவைஅமைந்துவிடுகிறது.
தங்களுடைய பள்ளிதான் சிறந்த பள்ளி எனக் காட்டிக் கொள்ள விண்ணை முட்டும் விளம்பரங்கள். பள்ளிக் கட்டடங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வண்ணப் பூச்சு. செயற்கை நீரூற்றுகள், நீச்சல் குளங்கள், பூச்செடிகள், குளிர்சாதன வகுப்பறைகள், குளிர்சாதனப் பேருந்துகள் எனநீண்டு கொண்டே செல்கிறது இவர்களது யுத்திகள். மதிப்பெண்ணை பண்ட வேறுபாட்டுக்கானஅடிப்படையாக பார்ப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களுக்குத்தான் தற்போதைய நிலையில்சந்தை மதிப்பு மிக மிக அதிகம். இங்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதைக் கூட யாரும் பார்ப்பதில்லை. குழந்தைகள் உரிமையும், மனித உரிமையும், கற்றல் என்பதன் அடிப்படை விதிகளும்அப்பட்டமாக மீறப்படும் இடம் இவை. இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத பெற்றோர்கள்'எதிர்கால நன்மை' என்ற ஒற்றை எண்ணத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளிவருவதில்லை.இப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. திருப்பதி கோவில் தரிசனத்திற்கு தவம் கிடப்பதைப் போல தவம் கிடக்கின்றனர். "லாரிகளில் பிரம்பு வந்து இறங்குகிறது"என்பதைக் கூட பெருமை(!) பேசினார்கள்.
இத்தகைய பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் மட்டும் படையெடுக்கவில்லை. பிற தனியார் பள்ளிகள் அனைத்தும் இத்தகைய பள்ளிகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன.இதனால் மேல்நிலைக் கல்வி என்பது 'ஓராண்டுப் பாடம் ஈராண்டுக் கல்வி' எனச் சுருக்கிவிட்டது.பதினொன்றாம் வகுப்பில் பாடம். பன்னிரெண்டாம் வகுப்பில் மனப்பாடம் என்பது வழக்கமாகிவிட்டது.ஒரு பாடத்தை எத்தனை மனப்பாடம் செய்வது? எத்தனை முறை எழுதிப்பார்ப்பது? பாத்ரூம்போகும்போது கூட புத்தகமும் கையுமாக இருக்க வேண்டுமென நிர்பந்திக்கப்படுகிறார்கள். பள்ளியில்சேர்க்கும் போது 50க்கு 50 செய்முறைத் தேர்வு மதிப்பெண் எல்லாத் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உத்தரவாதம் செய்யப்பட்டுவிட்டது. தேர்வு மேற்பார்வைக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாதுஎன்பதும் திட்டமிட்டவாறு செய்து முடிக்க முடிகிறது. தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்எடுப்பதற்கு மீத்திறன் குறைந்த மாணவர்கள் 'பிட்' அடித்த காலம் போய், 490க்கு மேல் வாங்கும்மாணவர்களை ஒரு வகுப்பறையில் அமர்த்தி, பிட் அடிக்கவும் பார்த்து எழுதவும் பகிரங்கமாகஅனுமதிக்கும் செயல் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு தயவு காட்ட, எல்லாப் பக்கமும் நிறைந்திருக்கும் சாதிய சாய்மானமும் அதிகாரிகளிடத்தில் சேர்ந்து கொள்கிறது.
இத்தகைய ஆயகலைகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகள் செய்ய முடியாதென்றாலும்மதிப்பெண்களை நோக்கி ஓடியே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பள்ளிகளின் தலைமை ஆசிரியர் முதல் பள்ளிக் கல்வி இயக்குனர் வரை மதிப்பெண் என்னும் மந்திரச் சொல்லுக்கு அடிமையாகிவிட்டனர். தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுத்து, மதிப்பெண் பந்தயத்தில் ஐக்கியமாகிதன்னால் இயன்ற வேலைகளை அரசுப் பள்ளிகளிலும் செய்யத் தலைப்பட்டுவிட்டது. மதிப்பெண்பிரச்சனை மதிப்பெண்ணோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. கற்றல் செயல்பாடுகளை மொத்தமாக பாதிக்கிறது. அத்திபூத்தாற்போல் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக இருக்கும் சமூக அக்கறை உள்ளவர்கள் தொடங்கி நடத்தி வரும் சின்னஞ்சிறிய தனியார் பள்ளிகளின் பாடுதான் பெரும்பாடு.மதிப்பெண்ணும் பெறச்செய்து, சமூக கரிசனம், இதர கற்றல் செயல்பாடுகள் ஆகியவற்றை வளர்த்தெடுக்க அவர்கள் எடுக்கும் பெருமுயற்சிகள் சொல்லிமாளாது. மதிப்பெண் என்னும்அளவுகோலின் குறைபாடுகளை விமர்சிக்காத கல்வியாளர்கள் இல்லை. அதற்கு மாற்றானஅளவுகோல் உருவாக்கப்படவும் இல்லை. இளநிலை வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தொடர்மற்றும் முழுமையான மதிப்பெண் முறை, அதன் நடைமுறை செயலாக்கம் ஆகியவை, "தலைவலிபோய் திருகுவலி வந்ததை நினைவூட்டுகிறது". ஒட்டுமொத்தமாக கல்வியாளர் பாவ்லோ பிரைரேசொன்னதை விடவும் மிக மோசமான ஒரு கல்விச் சூழலில் கால் பதித்து நிற்கிறது நம் பள்ளிக் கல்வி. "இன்றைய கல்வி வங்கிமுறைக் கல்வி. வங்கியில் எவ்வளவு போட்டு வைத்திருக்கிறோமோ அவ்வளவே எடுக்க முடியும். அதைப்போல எவ்வளவு மனப்பாடம் செய்கிறோமோ அவ்வளவுதான்மதிப்பெண் எடுக்க முடியும்" என்றார். அவர் விமர்சித்த வங்கி முறைக் கல்வியை விடவும் கூடுதலாக,மனப்பாடம் செய்வித்தலும், மனப்பாடம் செய்விக்க புதிய யுக்திகளையும், புதிய தண்டனைமுறைகளையும் கைக்கொள்வதன் மூலமாக, எவ்வளவு போட்டு வைக்கிறோம் என்பதற்கு பதிலாக,எவ்வளவு திணிக்க முடியுமோ அவ்வளவு திணிக்கவும் எவ்வளவு பிடுங்க முடியுமோ அவ்வளவுபிடுங்கவுமான மிக மிக மோசமான கல்வி முறையாக மாறிவிட்டது.
கற்றல் என்பது முற்றிலும் இற்றுப் போய், பத்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் உலகத்திலேயே மிகவும் கடினமான பணியாக மாறிவிட்டது. 2014ஆம் கல்வி ஆண்டில் 8,26,000 பேர்தேர்வு எழுதினர். இவர்களில் 2,900 பேருக்கு மட்டுமே மருத்துவம் கிடைக்கப் போகிறது. அரசு மற்றும்அரசு உதவி பெரும் பொறியியல் கல்லூரிகளில் 12,131 இடங்களும் வேளாண்மை, கால்நடைமருத்துவம் என்று சேர்த்தால் கூட மொத்தம் 1400 இடங்களுக்கு மிகாது. +2 படித்த மொத்தமாணவர்களில் 1.98 விழுக்காடு இதனைக் காட்டிக் காட்டியே மொத்த கல்வி சந்தையும்இயக்கப்படுகிறது. இவ்விடங்களைக் காட்டியே மொத்த மாணவர்களையும் பொறியில் தள்ளுகிறார்கள்.இந்தக் கல்வி முறை மக்களின் வருமானத்தை இலட்ச, இலட்சம் கோடியாக காவு கேட்கிறது. மதிய தரவர்க்கத்தின் வருவாய் உயர்வில் எத்தனை சதமானத்தை கல்விச் சந்தை பிடுங்கிக் கொண்டது என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லை. "பெட்ரோல் பேங்க் தொழிலாளி ஒருவர், "இந்தஒருவாரமாய் தூக்கமில்லை. கேட்ட பக்கம் எங்கும் கிடைக்கவில்லை. அடுத்த வருடம் முதல் மாதம்500, 600 எனச் சேர்த்து இந்த இம்சையில் இருந்து விடுபட வேண்டும்" என கருவிக்கொண்டு இருந்தார்.தங்கள் சக்திக்கு மீறி பணத்தைத் திரட்டி கொட்டித் தீர்க்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் குறைவாகஇருந்த காலகட்டத்தில் கூட கல்வி என்பது இவ்வளவு காசு கேட்கும் பூதமாக மக்களைமிரட்டியதில்லை. கட்டணமில்லாக் கல்வியாக இருந்தது. அருகமைப் பள்ளியாக இருந்து, பொதுப்பள்ளியாக இருந்தது. அரசுப் பணத்தில் பள்ளிக் கல்வி மொத்தமும் இயங்கியது.
இதைசின்னாபின்னமாக்கி, காசு பார்க்கும் இவ்வளவு பெரிய சந்தைப் பொருளாக மாற்றியதுயார்? ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஏன் ஒவ்வொரு வருவாய் பிரிவினருக்கும் ஒரு பள்ளி என்றுகட்டமைத்தது யார்? இந்த நாட்டின் சாதியக் கட்டமைப்பை தலைவிதியாக பண்படுத்தியதைப் போல்,ஏற்றத்தாழ்வான கல்வி முறையையும் ஏற்கும்படி கட்டமைத்தது எது? முப்பது ஆண்டுகளுக்கு முன்புமொத்தப் பள்ளிக் கல்வியும் அரசின் பொறுப்பில் இருந்ததை கணப்பொழுதில் மறந்தது போல் மறந்ததுஎங்கனம்?? ஜனநாயக நாட்டில் இலவச கட்டாய தரமான கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதைபடித்தவர்கள் கூட மறந்து போனது எப்படி? இலவசமாக தரமான கல்வி நமது சட்டபூர்வ உரிமை.அதற்கு இவ்வளவு பெரிய தொகையை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்னும் சிந்தனையைத்தூண்டாமல் அல்லது கேள்வி எழுப்பாதபடி நம்மைக் கட்டுப்படுத்துவது எது? நாம் கற்றுக் கொண்ட கல்வி என்ன மாதிரியான கல்வி? பாவ்லோ பிரைரே கூறும் வங்கி முறைக் கல்விதானோ?வகுப்பறையில் பங்கேற்பாளனாக இல்லாமல் பார்வையாளர்களாக மாணவர்களை அமர வைத்திருந்தகல்விதான் முறையா? ஆசிரியருக்கு எல்லாம் தெரியும், மாணவனுக்கு எதுவும் தெரியாது என்றுஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை பக்குவப்படுத்திவிட்ட கல்வி முறையா? கல்வியில்ஒரு அரசியல் இருப்பதை ஆளுவோர் முதல் கல்வி வணிகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள்புரிந்துகொண்ட அளவிற்கு, மக்கள் புரிந்து கொள்ளாமல் போனதன் விளைவா? சிந்திக்க வேண்டியதருணம் எப்போதோ வந்துவிட்டது. சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையால் மக்கள் சிந்தனையால்ஒன்றிணையாமல் சிதறிக்கிடக்கின்றனர்.
No comments:
Post a Comment