Sunday, 22 February 2015

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்'

By dn, சென்னை
First Published : 22 February 2015 04:25 AM IST

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறினார்.

குழந்தை உரிமைக்கான முன்னணி, பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, யுனிசெப் ஆகிய அமைப்புகளின் சார்பில் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் வசந்திதேவி பேசியது:

இந்தியாவில் குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தும், அவை முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதால் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாமல் உள்ளது.

இதனால், குழந்தைகள் மீதான தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவை அதிகரித்து வருவதால், குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுகிறது.

தலித் குழந்தைகள், அடித்தட்டு குழந்தைகள், குடிசைகளில் வசிப்பவர்களின் குழந்தைகள், வேலைக்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் என 80 சதவீத குழந்தைகளுக்கு கல்வி, சத்தான உணவு, சமூகத்தில் வாழ்வதற்கு ஏற்ற சூழல், மருத்துவம் போன்றவை முழுமையாகக் கிடைப்பதில்லை.

மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கட்டாயக் கல்வி வழங்குகிறது. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளும், 14 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளும் இதில் விடுபட்டுள்ளனர். இவர்களையும் பாதுகாக்கும் வகையில் 18 வயது வரையுள்ளவர்களுக்கு இலவச, கட்டாயக் கல்வி என அறிவிக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் 18 வயது வரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். 

நோயை விரட்டும் ஒரு புத்தகம்

தமிழில் நகைச்சுவை எழுத்து அருகி வருகிறது. நகைச்சுவை என்ற பெயரில் வெளிவரும் நூல்கள் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. வாழ்வியலை உள்வாங்கி எழுதப்படும் நகைச்சுவை எழுத்துக்கு காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உண்டு. அத்தகைய ஒரு அரிய நூலாக வெளிவந்திருக்கிறது டாக்டர் ஜி.ராமானுஜம் எழுதியுள்ள நே(h)யர் விருப்பம்.டாக்டர் ராமானுஜம் ஒரு மனநல மருத்துவர்.

பொதுவாக மருத்துவர்கள் சிரிப்பது அரிது. அண்மையில் என்னுடைய மகனுக்கு குடல்வால் அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். சிகிச்சை செய்த மருத்துவர் அந்தத் துறையில் மிகப்பெரிய நிபுணர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களில் அவர் பேசியது மூன்றே வார்த்தைகள்தான். மொழியின் வழியாகவும் பேச முடியும் என்பதையே மறந்துவிட்டவர் போல சைகை மொழியிலேயே பேசினார்.

சில மிருக வைத்தியர்கள்கூட சிகிச்சை பெறும் விலங்கிடம் ஒரு சில வார்த்தைகள் பேசுவார்கள். ஆனால் இவர் சிகிச்சை பெறுபவர் ஒரு மனிதர் என்று கருதியதாகவே தெரியவில்லை. கடைசியில் போய்வருகிறோம் நன்றி என்று கூறியபோது அவர் முறைத்த முறைப்பு கடன் வாங்கிவிட்டு நீண்டகாலமாக கொடுக்காதவனை பார்ப்பது போல இருந்தது.

எல்லோருமே வயிற்றுக்காகத்தான் பிழைக்கிறோம். ஆனால் இவர் வயிற்றை கிழித்து பிழைக்கிறார். ஏதோஅவருடைய வயிற்றுப் பிழைப்பு ஓடுகிறது. அவரைப் பார்க்கும்போது ஏதோ தீராத வயிற்றுவலியில் சிரமப்படுபவர் போல காணப்பட்டார்.டாக்டர் ராமானுஜம் எழுதியுள்ள இந்த நூலைப் படிக்கும்போது பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. வயிற்றுவலி டாக்டர்யாருடனாவது உடன்பாடு வைத்திருப்பார் போலிருக்கிறது. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரி யாதா என்று கவியரசரின் பாடல் ஒன்று துவங்கும். இந்த நூலில் முதல் சொற்சித்திரம் மறக்கத் தெரிந்த மனமே என்ற தலைப்பில் துவங்கு கிறது. மருத்துவர்கள் தங்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நோயாளிகள் விரும்புவார்கள்.

ஆனால் மனநல மருத்துவர்கள் தங்களுடைய பெயரை ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடாது என்றே நோயாளிகள் விரும்புகிறார்கள் என்றார். மருத்துவர்களின் கையெழுத்தை வைத்து ஏராளமான நகைச்சுவை துணுக்குகள் உண்டு. ஒருமுறை ஒருமருத்துவர் எழுதிய சீட்டைக் கொண்டுபோய் மருந்துக்கடையில் கொடுத்தபோது, சார் அது மருந்தின் பெயரல்லஉங்களுடைய பெயர் என்று அவர் கூறியிருக்கிறார் என்றுராமானுஜம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மருந்துக்கடைக்காரர் பிழைக்கத் தெரியாதவர் போலிருக்கிறது.

நல்ல அனுபவஸ்தாராக இருந்திருந்தால் ஏதாவது ஒரு மருந்தை எடுத்து வந்தவர் தலையில் கட்டியிருப்பார். தெளிவாக மருந்தின் பெயரை எழுதிக்கொடுத்தால் போலி டாக்டரோ என்று சந்தேகப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.பெயரியல் பேராசான்கள் சிலர் தொலைக்காட்சியில் படுத்தும் பாட்டுக்கு அளவே இல்லை. பெயரியல் நிபுணர்கள் யாரும் இப்போதுள்ள பெயர் நன்றாக இருப்பதாக கூறியதே இல்லை. ராஜாராம் என்ற சர்க்கரை நோயாளியின் பெயரில் ஒரு சு சேர்க்கச்சொல்லி பெயரியல் நிபுணர் கூறியிருக்கிறார்.

இவரோ ஆர்வக்கோளாறில் இரண்டு சுசு சேர்த்துவிட்டார். இதனால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து ஐசியு வில் சேர்க்கும்படியாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தபோது சிரித்ததில் எனக்கு கொஞ்சம் சர்க்கரை குறைந்தது போல தெரிந்தது.ஒரு சில நோயாளிகள் மருத்துவர்களை கடுமையாக வேலை வாங்குவார்கள். மூட்டுவலிக்காக மருத்துவரிடம் சென்ற மூதாட்டி ஒருவர் `நானும் எத்தனையோ டாக்டர்களிடம் காட்டிவிட்டேன், யாருமே இந்த குழாயை மூட்டில் வைத்து பார்க்கவேயில்லையே’ என்று வினவ அந்த மருத்துவர் அவரது மூட்டில் ஸ்டெதெஸ்கோப் வைத்து பார்த்திருக்கிறார்.

அப்போதும் கூட பழக்கதோஷத்தில் `மூச்சை நல்லா விடுங்க’ என்று கூறியிருக்கிறார்.எந்த இடத்தில் வலிக்கிறதோ அந்த இடத்தில் ஊசி போடும் கைராசி டாக்டர்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒரு நோயாளி, வலது கையில் வலி என்று சொன்னேன், ஆனால் இந்த டாக்டர் இடது கையில் ஊசி போடுகிறார் என்று குறைகூறியிருக்கிறார்.

மருத்துவம் ஒரு அற்புதமான விஞ்ஞானம். ஆனால்சிலர் ஜோதிட நேரத்தை கணித்துக்கொண்டு அதற்கேற்பஅறுவை சிகிச்சை செய்யச்சொல்கிறார்கள். மருத்துவமனைகளில் டியூட்டி டாக்டர்கள் இருப்பது போல டியூட்டி ஜோதிடர்களும் இருக்கலாம் என்று யோசனை கூறுகிறார் டாக்டர் ராமானுஜம். ஒருவர் குடிச்சு குடிச்சு கை ரொம்ப நடுங்குது என்று மருத்துவரிடம் வந்தாராம். அதற்கு மருத்துவர் கவலைப்படாதீங்க,

உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திவிடலாம் என்றாராம். பதறிப்போன அவர், அதை நிறுத்த வேண்டாம். கைநடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க, நடுங்கி நடுங்கி சரக்கு கீழே சிந்திவிடுகிறது என்றாராம்.ரயிலில் நாமும்தான் போகிறோம். ஆனால் டாக்டர் ராமானுஜம் எவ்வளவு நகைச்சுவையான விசயங்களை கவனித்திருக்கிறார் என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டவுடன் பால், பழம் அருந்தி பல் விலக்கி, இரவு உடைக்கு மாறிபழைய உடையை மடித்து வைத்து படுக்கை விரித்து தலைக்கு, காலுக்கு என்று இரண்டு காற்றூதும் தலைய ணைகளை ஊதி படுக்கும்போது திருச்சி தாண்டியிருக்கும். பிறகு வரிசைக்கிரமமாக மீண்டும் அனைத்தையும் எடுத்துவைப்பார்கள் என்று எழுதியிருக்கிறார். காசிக்கு ரயிலில் போன பாட்டி ஒருவர், நான் போகும் இடமெல்லாம் கக்கூசும் கூட வருமா என்று அலுத்துக் கொண்டாராம்.

நான் சில சமயங்களில் ரயிலில் செல்லும்போது ஒரு சில குடும்பங்கள் ஒரு ஓட்டலையே கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அதை விடிய விடிய அவர்கள் ரசித்து சாப்பிடுவதைப் பார்க்கும்போது நமக்கு தூக்கம் போய்விடும். இன்னும் சில குடிகாரர்கள் குடிப்பதற்கென்றே ரயிலில் ஏறுவதுண்டு. ரயிலிலும் கூட அரசு அனுமதிபெற்ற பாரை துவக்கினால் லாபகரமாக இருக்கும்.உபதேசம் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது. சில பேர் இலவச அறிவுரை வழங்குவதை ஒரு பிறவிப் பணியாகவே செய்து வருவார்கள். கடை வைக்க நினைத்த ஒருவரிடம் மற்றொருவர் இந்தப் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டே கிடையாது. நீங்கள் வைத்தால் ஓஹோ என்று ஓடும். போட்டியே இருக்காது என்றார். இதை நம்பி அவரும்ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தப் பகுதியில் வீடுகளும்இல்லை என்பதை அறிவுரை வழங்கியவர் கூறாமல் விட்டுவிட்டாராம். உபதேச பக்தர்கள் அதிகம் காணப்படுவது மருத்துவத்துறையில்தான் என்கிறார் டாக்டர். சிலர் சொல்கிற மருத்துவம் இஞ்சி போல எளிமையாக இருந்துவிடும். வேறு சிலர் சிறுகுறிஞ்சான் இலை, ராட்சச ரணகள்ளி வேர் என்று தெரியாத பேர்களைத் தேடி மூலிகை மருந்தைத் தேடிய அனுமாரைப்போல அலையவிடுவார்கள் என்றார். இந்த கட்டுரைகளுக்கு ஓவியங்கள் தீட்டியுள்ள தேவாவுக்கும் நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்க வேண்டும். எழுத்துக்களின் வழியாக ஆசிரியர் கொண்டுவரும் உணர்வை கோடுகளின் வழியாக இவர் கூடுதலாக்குகிறார்.ஒரு பிரச்சனைக்கு உதவ பலர் முன்வருவார்கள் என்றால் அது நீங்கள் ஒருவரே சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் இந்த மனநல மருத்துவர்.நல்ல வாசிப்பு அனுபவம் உள்ள மனநல மருத்துவரான இவர் எழுதியுள்ள இந்த நூலை படித்தால் நீங்கள் ஒரு மனநல மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. மொத்தத்தில் இந்த புத்தகம் அவருக்கு நஷ்டம், நமக்கு லாபம்.
 
நோயர் விருப்பம்ஆசிரியர்: டாக்டர் ஜி.ராமானுஜம் எம்.டி.வெளியீடு : பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 600 018.பக்: 80, விலை : ரூ.50 /-)

குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் தோல்வி மத்திய-மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு



சென்னை, பிப்.21-

குழந்தை உரிமைகள் தொடர்பான 1989ம் ஆண்டின் ஐ.நா. மாநாட்டு உடன்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் மத்திய, மாநில அரசுகள் அதை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.உடன்பாடு உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு விழா கடந்த நவம்பரில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய அரசு அதை ஏற்றதன் 25ம் ஆண்டு விழா 2017ல் வருகிறது. இதையொட்டி சென்னையில் பிப்.18, 19ல் கலந்தாய்வு - பயிலரங்கம் நடைபெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

“குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் உள்ள போதிலும், குழந்தை உரிமைகள் மீறப்படுவது தொடர்கிறது. உடல்ரீதியான - மனரீதியான சித்ரவதைகள், பொருளாதாரச் சுரண்டல்கள், குழந்தைத் திருமணம்,

பள்ளிகளிலும் விடுதிகளிலும் அண்டை இடங்களிலும் பாலியல் அத்துமீறல்கள், சிறார் இல்லங்களில் அத்துமீறல்கள், குழந்தைகள் கடத்தப்படுதல், ஆபாசப் படமெடுக்கப் பயன்படுத்தப்படுதல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுதல் போன்ற செயல்கள் மூலம் குழந்தை உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன,”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரம், கிராமம் ஆகிய இரு பகுதிகளிலுமே பள்ளிகளில் குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனைகள் அளிக்கப்படுவது, வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் மரியாதையும் மறுக்கப்படுவது,

வசிப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவை தொடர்கின்றன. காவல்துறை, வழக்குகளை நடத்துவதற்கான அரசுத் துறை, நீதித்துறை ஆகியவை போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை, இத்தகைய அத்துமீறல்கள் குறித்து அரசு அதிகாரிகளின் எதிர்வினை ஏமாற்றம் அளிப்பதாகஉள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.காவலில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மிகக் கடுமையாக மீறப்படுகின்றன.

உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாவது சர்வசாதாரணமாக நடக்கின்றது. கைது செய்யப்படும்போதும், விசாரிக்கப்படும்போதும் குழந்தைகள் ஆழமான உணர்ச்சிச் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆதிக்க வர்க்கத்தாலும், சாதியத்தாலும், மதவெறி தாக்குதல்களாலும் ஏற்படும் நெருக்கடியான நிலைமைகள், வன்முறைகள் ஆகிய சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதாகிவிடுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது.இந்தியாவின் சில சட்டங்களில் குழந்தை நிலைக்கான அதிகபட்ச வயது 18 என்று உள்ளது. ஆனால் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கான சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் அதிகபட்ச வயது 14 என்று உள்ளது.

இது பல்வேறு அத்துமீறல்களுக்குத் தோதாக இருக்கிறது என்று கலந்தாய்வில் பங்கேற்றோர் கூறினர்.ஐ.நா. உடன்பாட்டை இந்தியாவில் நிறைவேற்றுகையில், அந்தந்த நாட்டின் நிலைமைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப செயல்படுத்தப்படும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டது. இதன் மூலம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல விதிகள் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திருத்தத்தை எப்போதோ விலக்கிக்கொண்டிருக்க வேண்டும். 18 வயதுக்குக் குறைந்தோரை எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இனியாவது அரசு அத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தவும்,

உடல் நலம் உள்ளிட்ட பராமரிப்புகளில் கவனம் செலுத்தவும் உதவியாக அவர்களது வேலை நேரங்களை மாநில அரசு மாற்றியமைக்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட வாரியாக குழந்தை உரிமை செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்துதல், பொதுநல வழக்குகள் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நெருக்கடி நிலை நிதி (யுனிசெப்) அமைப்புடன் இணைந்து இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு,

குழந்தை உரிமைக்கான முன்னணி, பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சாரம், மனிதஉரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை நடத்தின.மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா, யுனிசெப் இயக்குநர் ஆர். வித்யாசாகர், கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆஸி பெர்னாண்டஸ், முன்னணியின் அமைப்பாளர் தாமஸ் ஜெயராஜ், பெண் கருக்கொலை எதிர்ப்புப் பிரச்சார அமைப்பின் எம். ஜீவா, வழக்குரைஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கல்வியில் மதவெறியை புகுத்தும் மோடி அரசுக்கு எதிர்ப்பு நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி

புதுதில்லி, பிப். 21 -

கல்வி வணிகமயமாக்கப்படுவதையும் மதவெறிமயமாக்கப்படுவதையும் எதிர்த்து பிப்ரவரி 26ம்தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணிநடத்தப்பட உள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு அறிவித்துள் ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தலைவர் டாக்டர். வி. சிவதாசன், பொதுச் செயலாளர் ரித்தபிரதா பானர்ஜி எம்.பி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கல்வித்துறையை பொறுத்தவரை பாஜக அரசு, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதே வணிகமயமாக்கும் திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது. ஆனால் அதே சமயத்தில், மிக ஆபத்தான முறையில் கல்வியை மத வாதமயமாக்கும் திட்டத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.மத்திய அரசின் மனித வள மேம் பாட்டுத்துறை பல்கலைக்கழகங்களுக்கு ஒருநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில் செமஸ்டர் முறையையும் தேர்வின் அடிப்படையிலான மதிப்பெண் முறையையும் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. தேர்வு அடிப்படையிலான மதிப்பெண் முறை என்பது நான்கு ஆண்டு இளநிலை படிப்பை 3 ஆண்டுகளில் முடிக்கும் முறையின் நகலே ஆகும். இந்த அரசு அதே திட்டத்தை அமல்படுத்துவதில் ஈடுபாடு காட்டுகிறது. நான்கு ஆண்டுகள் இளநிலைப்பாடத் திட்டத்தை திரும்பப் பெறுவது என்பது ஒரு அரசியல் நாடகமே. தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பெறும் முறையானது ஊழியர்களுக்கு காபி கடையில் அளிக்கப்படும் தேர்வு உரிமையை போன்றதாகும்.

இந்த முறையில் விரும்பியதை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வித்துறைகளுக்கும் இடையில் அலை வதற்கே வழிவகுக்கும். இது நான்குஆண்டு இளநிலை படிப்புடன் நான்காம் ஆண்டைத் தவிரமற்ற விசயங்களில் ( அடிப்படை வகுப்பு, மையம் மற்றும் தேர்வு செய்யும் பாடங்கள் ஆகிய முறையை திரும்ப கொண்டுவருவது) ஒத்துப் போவதாக அமைகிறது. அடிப்படை யில் இந்த முறையானது அமெரிக்க முறையினை பின்பற்றுகிறது. அங்கு கல்வியானது மாணவர்களின் கடனையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களையும் சார்ந்துள்ளது. இதுவெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்கு கவர்ந்திழுக்கும் முயற்சியே ஆகும்.

சிக்கலான திட்டம்

பாஜக அரசு `ராஷ்ட்ரிய உச்சாதர் சிக்ஷ அபியான்‘ என்ற தேசிய உயர்கல்விக்கான சிக்கலான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரம் குறித்து அதிகமான விவாதங்களும் நடந்துள்ளன. ஆனால் அதன் அமலாக்க அனுபவம் நமது கவலைகளை உறுதிப்படுத்தி விட்டது. இந்தப் பிரச்சாரம் அமல்படுத்தப்பட்ட இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது.

வகுப்பறையி லிருந்து தேர்வு மதிப்பிடுவது வரை கல்வித்துறையின் நிலைமை அவலமான நிலை யாகவே உள்ளது.இந்திய கல்வித் துறையானது ஏற்கனவே மிகவும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது. அதுஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர் களையும் மோசமாக பாதித்துள்ளது. தற் போது பொது நம்பிக்கைக்கு மாற்றாக நமது கல்வி அமைப்பானது தனியார்களினால்தான் நடத்தப்படுகிறது. அவர்களின் ஒரே நோக்கம் பட்டங்களை பெறுவதும் லாபங்களை சம் பாதிப்பதும்தான்.

அதிகரிக்கும் தனியார் பள்ளிகள்


நீண்ட காலப் போராட்டத்திற்கு பின்கல்விக்கான உரிமைச்சட்டம் அமல்படுத்தப் பட்ட பின்னரும்கூட தனியார்மயம் அதிகரித் துள்ளது. தனியார் கல்வி வணிகமயமாக மாறி உள்ளது மட்டுமின்றி அவை, சமூக நீதிக்கான நெறிகளை எப்போதுமே பின்பற்றுவதில்லை. கடந்த 2005ல் இந்தியாவின் கிராமப்புறங்களில் 17 விழுக்காடு தனியார் பள்ளிகள் இருந்தன. இவை 2013ல் 27 விழுக்காடாக அதிகரித்தன;

2014ல் 30.8 விழுக்காடாக உயர்ந்தன. தனியார்மயமாக்கப்படுவதால் அதன் பாதிப்பு பெண் குழந்தைகளின் மீது இருந்ததை அனுபவம் காட்டுகிறது. கடந்த 2014ல் 7லிருந்து 10வயது வரையிலான வயதிலுள்ள குழந் தைகளில் 35.6 விழுக்காடு சிறுவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர் .

அதே சமயத்தில் சிறுமிகள் 27.7 விழுக்காடுதான் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் சேர்ந்த 11லிருந்து 14வயது வரையிலான குழந்தைகளில்33.5 விழுக் காட்டினர் சிறுவர்கள்; 25.9 விழுக்காட்டினர் சிறுமிகள் ஆவர்.உயர்கல்வியைப் பொருத்தவரை தனியார்மயத்தின் வேகம் அதிகமாகவே உள்ளது. இன்றைக்கு உயர் நிலைக் கல்வியில்சேரும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களே.

66 விழுக்காடு மாணவர்கள் பொதுக்கல்வியிலும் 75லிருந்து 80 விழுக்காடு வரையிலான மாணவர்கள் தொழிற் கல்வியிலும் சேர்ந்துள்ள மாணவர்கள் தனியாரிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் தான் சேர்ந்துள்ளனர். கல்வி வணிகமயமாவது ஏற்கனவே கல்வி அமைப்பில் பெரிய விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் இந்த விரிசல்கள் அதிகரித்துள்ளன. சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குவது ஆகியவைதான் எந்த ஜன நாயகத்திலும் கொள்கைகளை உருவாக்கும் தூண்களைப்போன்றது ஆகும்.

இதில் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கு தடை யற்ற லாபம் சம்பாதிப்பதை மட்டுமே ஒரு நெறியாக கொள்ளும்பட்சத்தில் அதுவே முதல் இழப்பாக முடியும். கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்கத் தயாரில்லை அது இந்த அரசின் முதல் பட்ஜெட்டிலேயே முழுமையாக நிரூபணமானது. திருத்தப்பட்ட பட்ஜெட்டின் மதிப்பீடுகளின் படி 2014-15 ல் உயர் கல்விக்கான நிதியை ரூ. 3900 கோடி வரை குறைத்துள்ளது. கடந்த 9 மாதங்களில் ஆர்எஸ்எஸ்- பாஜக அரசின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய் தால் அதன் உள்நோக்கமானது தெளிவாகிறது.

பாஜகவின் அரசியல் கடமையே கல்வியை மதவாதமயமாக்குவதாகும். இது குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. இதை பாஜக தலைவர்களும் வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கின்றனர். நாடாளுமன்றத்தி லும் கூட இதை ஏற்றுக்கொள்கின்றனர். பாஜக தலைவர்கள் பாட நூல்களையும் கல்வித் திட்டத்தையும் மாற்றும் நோக்கம் குறித்து அறிவிக்கின்றனர். கடந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசிலும் இதுபோன்ற முயற்சிகள் இருந்தன. ஆனால் தற்போதைய பாஜக அரசு மிகவும் மூர்க்கத்தனமாகவும் வீரியத்துடனும் அமலாக்கத் துடிக்கிறது. இதுவே இந்திய கல்வி முறையின் இன்றைய தீவிரமான பிரச்சனையாகும். அது பாஜக அரசின் கீழ் மேலும் சீரழிவதாக உள்ளது. ஒரு பொறுப்பான மாணவர் அமைப்பு என்ற முறையில் இந்தச் சவாலை எதிர்கொள்ள இந்த கொள்கைகளுக்கு எதிராக ஒரு வலிமையான போராட்டத்தை தொடர வேண்டும். இதை கவனத்தில் கொண்டு இந்திய மாணவர் சங்கம் தேசிய அளவில் கல்வியை வணிகமயமாக்குவதற்கும் மதவாதமயமாக்குவதற்கும் எதிராக ஒரு போராட்டத்தை தொடங்கியுள்ளது . இதனடிப்படையில் இந்தப் பேரணியானது ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
 
நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Saturday, 21 February 2015

வீழ்ச்சியடையும் தமிழகக் கல்வி! பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தமிழக அரசுக்கு சிபிஎம் மாநில மாநாடு வற்புறுத்தல்

சென்னை, பிப். 20 -
தமிழக கல்விப் பிரச்சனைகளில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வற்புறுத்தியது. இதுதொடர்பாக மாநாட்டில் ஜோ.ராஜ்மோகன் முன்மொழிய, சி.பாலச்சந்தர் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்தினால் கல்வி இன்று பெரும் சமூகப் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. வணிகமய நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தால் பல மட்ட பாகுபடுத்தும் கல்வி அமைப்பு மேலும் பலப்படுத்தப்பட் டுள்ளது. இது சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தியுள்ளது; கல்வியமைப்பை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளது.

ஏழை மாணவர்களின் புகலிடம்குறிப்பாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தான் ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களின் புகலிடமாக இன்றும் உள்ளது. இப்பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்துவதும், மேம்படுத்துவதும் தரமான கல்வி என்பதை அரசுப் பள்ளியில் உறுதிப்படுத்த வேண்டியதும் இன்றைய அவசியமாக உள்ளது.

தமிழகத்தில் 36,959 அரசுப் பள்ளிகளில் 56,55,628 மாணவர்களும், 8,407 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31,12,603 மாணவர்களும், 11,462 தனியார் சுயநிதி பள்ளிகளில் 45,96,909 மாணவர்களும், என மொத்தம் 56,828 பள்ளிகளில் 1,33,65,140 மாணவர்கள் தமிழக பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கட்டிடம், வகுப்பறை, ஆய்வகம், சுத்தமான குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் போன்ற தேவைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டியுள்ளது. 

தமிழகத்தில் 60 சதவீதம் பள்ளிகளில் கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது. மேலும் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களை வகுப்பிற்கொரு ஆசிரியர், பாடத்திற்கொரு ஆசிரியர் என்ற அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மேலும் அலுவலர்கள், உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவை சந்தித்து வருவது கவலையளிக்கிறது.

சரிவைத் தடுக்க முடியாதது ஏன்? 

தமிழக அரசு 14 வகையான நலத்திட்டங்களை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் மாணவர் எண்ணிக்கை சரிவை தடுக்க முடியாதது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஆகவே உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து, தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1100 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 2000 த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பயின்று வருகின்றனர். எனவே இப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்திடவும், மூடப்படும் நிலையிலுள்ள பள்ளிகளை தனிக்கவனம் செலுத்தி பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளை அறிமுகப்படுத்தி உண்மையான பிரச்சனையை மூடி மறைக்க திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. 

தாய்மொழி வழிக் கல்வியை உறுதிப்படுத்துவதோடு, ஆங்கில மொழியை ஒரு பாடமொழியாக சிறப்பு பயிற்சியோடு, கற்றுக் கொடுத்திட வேண்டும்; சமச்சீர் பாடப்புத்தகங்கள் மட்டுமே சமச்சீர் கல்வியாகாது; ஆகவே முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களையும் தாண்டி தனியார் பள்ளிகள் தாங்களே தயாரித்த வேறு பல புத்தகங்களையும் திணிக்கின்றனர். இந்த பாடச்சுமை தவிர்க்கப்பட வேண்டும். மழலையர் கல்வி மிகப்பெரும் வணிகமயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் தமிழகத்தில் முன்பருவகல்வியை அரசே துவங்கிட வேண்டும் என்றும் மேலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்திடவும் அரசின் விதிகளை மீறிசெயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வ தோடு, இப்பள்ளிகளை முறைப்படுத்த வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. 

மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக!

அரசின் தவறான கல்விக் கொள்கைகளால் உயர்கல்வி பெறுவது பெரும் சவாலாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி வணிகமயநடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக உயர்கல்வி அமைப்புகளை கலைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. 

மேலும் அந்நிய முதலீட்டை கல்வித் துறையில் அதிகப்படுத்தவும் முயற்சித்து வருகிறது. அந்நியக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கவும் முயற்சிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க் கின்றது. மேலும் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமெனவும், தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டணம், மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு என எதிலும் அரசின் தலையீடு இல்லாமல் மிகப்பெரும் கல்வி வணிகம் நடைபெறுகிறது. ஆகவே தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் சமூகக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சட்டம்இயற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

தரமான ஆராய்ச்சிகள் எங்கே?

உயர்கல்வியின் மையமாக திகழ்கின்ற பல்கலைக்கழகங் களில் தரமான ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிக்கப்படாமல் பின்னுக்குதள்ளப்பட்டுள்ளது. ஊழல் முறைகேடுகளாலும் நிர்வாக சீர்கேடு களாலும் ஆசிரியர்- மாணவர் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் சந்தித்து வருகின்றன இவைகள் தடுக்கப்பட வேண்டும். தரமான ஆராய்ச்சிகள் வெளிவருவதற்கான முறையில் நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

அரசுக் கல்லூரிகள்

தமிழகத்திலுள்ள 72 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். பேராசிரியர் மற்றும் பேராசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை துவங்கிட வேண்டும். தமிழக அரசால் கடந்த சில ஆண்டுகளில் துவங்கப்பட்ட 34 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல் லாமல், திருமண மண்டபங்களிலும், அரசுப் பள்ளி வளாகங்களிலும், வாடகைக் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகளை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்திட வேண்டும். ஏற்கெனவே நிதி நெருக்கடிகளால் தள்ளாடும் பல்கலைக்கழகங்களின் தலையில் சுமத்துவது ஏற்கத்தக்கது அல்ல, ஆகவே இக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக அரசு ஏற்று நடத்திட வேண்டும். 134க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கலை-அறிவியல் கல்லூரி களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை மீறி வசூலிக்கப்படுகிறது. இதுதடுக்கப்பட வேண்டும் அரசின் பெரும் நிதியை பெற்று வளர்ந்த இக்கல்லூரிகளிலும் அரசு பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு சுயநிதி பாடப்பிரிவுகள் பெரும்பாலான கல்லூரிகளில் துவங்கப்பட்டுள்ளன. இவைகள் தடுக்கப்பட வேண்டும். 

அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருக!

மேலும் இக்கல்லூரிகளில் ஊழல் முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகளும் தொடர்கின்றன.குறிப்பாக ஈரோடு சிஎன்சி, கோவை சிபிஎம் கல்லூரி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் தொடரும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு இக்கல்லூரிகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோடு அரசே ஏற்று நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

அரசாணை 92 

மேலும் உயர்கல்வி பெறும் எஸ்.சி, எஸ்.டி, மாணவர்கள் துணைத் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்விச் செலவினை அரசே ஏற்பதாக அரசாணை 92 வெளியிடப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. ஆகவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அரசு மாணவர் நலவிடுதிகளில் மாணவர்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், கல்வி கற்பதற்கான ஆரோக்கிய மான சூழலையும் உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புற்றீசல்கள்

மேலும் தமிழகத்தில் 7 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 15 அண்ணா பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 584 என்ற எண்ணிக்கையில் புற்றீசல்கள் போல் பல்கி பெருகியுள்ளன. 

அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்திட வேண்டியுள்ளது. தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக கட்டணம் வசூலிக்கின்றன, தகுதிவாய்ந்த ஆசிரியரும் இல்லாத சூழலில் போதுமான கட்டமைப்பு வசதிகளற்றும் உள்ளன. தேவையற்ற கட்டுப்பாடுகள், அபராதம், பழிவாங்கல் நடவடிக்கை என்று ஜனநாயகமற்ற சூழலே உள்ளது. இந்நிலை மாற்றப்பட தமிழக உயர்கல்வித்துறையும், அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், அரசு பாலிடெக்னிக்கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். 

கிரிமினல் வழக்குப் பதிவு செய்க!

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் இக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து முறைகேட்டில் ஈடுபடுகிற கல்வி முதலாளிகளின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைத் தாண்டி, பகல் கொள்ளை நடத்துகின்றனர். இவை முழுமையாக தடுக்கப்பட வேண்டும். 

மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துக!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் புதிய அரசு சட்டக் கல்லூரிகள், அரசு மருத்துவ கல்லூரிகளை, அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநாடு வலியுறுத்துகிறது. பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திட மாணவர் பேரவை, தேர்தல்களை நடத்திட வேண்டுமெனவும், பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர் களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

அமைதிக்கான வீரர்கள்

 
 
நடப்பு ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ஒரு இந்தியரும், ஒரு பாகிஸ்தானி சிறுமியும் பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள்.

 17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய், பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வருவதற்காகவும், இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடி வருவதற்காகவும் இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுட்டிப்பெண் மலாலா
மலாலா மிகவும் சுட்டியான, துறு துறுப்பானஅழகுக் குழந்தை. தந்தை யூசுப்சாய் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலே படித்தாள். அவளது சுவாத் கிராமம் மலை சூழ்ந்த, நதி பாயும், இயற்கை எழில் கொஞ்சும் இடம். 2008 -ன் தொடக்கத்தில் அந்த கிராமத்தைத் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சவுக்கடி உள்ளிட்ட கடுமையானத் தண்டனைகளை விதித்தார்கள். 

பள்ளி செல்லத் தடை
ஒரு நாள் தாலிபான் தலைவர் அரசு வானொலி நிலையத்தைக் கைப்பற்றினார். “ஜனவரி 15 முதல் சுவாத் கிராமப் பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது, பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்லக்கூடாது.” என உத்திரவிட்டார். இதைத் தொடர்ந்து பல சிறுமிகள், பெண்கள் ஆட்டு மந்தைகளாக நடத்தப்பட்டனர். 

ஊடகத்தில் மலாலா
இத்தனையையும் பார்த்த 11 வயதுச் சிறுமியான மலாலா தன் உள்ளக் குமுறலை 2009-ம் ஆண்டில், பி.பி.சி. நிறுவனத்தின் உருது மொழி இணையதளத்தில், ‘குல் மகாய்’ என்ற பெயரில் வெளியிட்டாள். தன் ஊர் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுகிறது என்று உருக்கமாக விவரித்தாள். தொடர்ந்து தன்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும் என வலைப்பதிவு எழுதத் தொடங்கினாள். தாலிபான்கள் மலாலாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால் சளைக்காமல் பெண் கல்வி, குழந்தைத் திருமணம், சுகாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றி எழுதினாள். 

மீண்டும் பள்ளிக்கு..
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாலிபானுடன் சண்டையிட்டு அவர்கள் பிடியிலிருந்து சவாத் கிராமத்தை மீட்டது. மீண்டும் மலாலா தன்னுடைய பள்ளிக்கேச் செல்லத் தொடங்கினாள். 

ஒரு நாள் தாலிபான் படையை சேர்ந்த ஒருவன் பள்ளிப் பேருந்தில் ஏறினான். யார் மலாலா? யார் மலாலா? என கேட்டுப் பதில் சொல்வதற்குள், துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு நெற்றிக்குள் நுழைந்து, கழுத்து வழியாக, இடது தோளுக்குள் பாய்ந்தது. 

அதுபற்றி மலாலா “ கண் விழித்துப் பார்த்தபோது நான் இங்கிலாந்தின் மருத்துவமனையில் கிடந்தேன். ஏழு நாட்களாகக் கோமாவில் இருந்தேன் எனச் சொன்னார்கள். உயிரோடு இருக்கிறேன் எனச் சந்தோஷமாக இருந்தது. ஆனால் என்னால் பேச முடியவில்லை. என் கழுத்தில் குழாய் செருகப்பட்டிருந்தது. நான் பேப்பர், பேனா கேட்டேன். அதில் என் அப்பா எங்கே? யார் பில் கட்டுவார்கள்? என்று எழுதினேன்” என்றார். 

ஐநா சபையில் மலாலா பேசும்போது,“எதற்காக படிக்க வேண்டும் என்பது சுடப்பட்ட பிறகுதான் நன்கு புரிந்தது. என்னைச் சுட்டவன், என்னுள் இருந்த பயத்தை முழுமையாகக் கொன்றுவிட்டான். இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அனைத்துக் குழந்தைகளும், ஆணோ, பெண்ணோ, கறுப்போ, வெள்ளையோ, கிருத்துவரோ, இஸ்லாமியரோ, பள்ளிக்கு செல்லும் நாள் நிச்சயம் வரும்” என்றார். 

'நான் மலாலா’ என்ற தலைப்பில், ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறார் மலாலா. பாகிஸ்தானின் ‘தேசிய இளைஞர் அமைதி விருது’ மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இன்று அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டிருக்கிறது. 

சிறுவர்களைக் காத்த கைலாஷ்
“நான் காலை 8 மணிமுதல் அடுத்த நாள் காலை 1 மணி வரை நாள் முழுவதும் என் கால்களை ஒரு அங்குலம் அளவும் நகர்த்தாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே தைத்துக் கொண்டிருப்பேன். ஒரு காலை சற்றே அசைத்தால் கூட அடிப்பார்கள். வலியால் அழுது எங்களை விட்டுவிடுங்கள் என்றால் முகத்தில் அறைவார்கள்” என்கிறான் சிறுவன் ஆசிஃப். 

ஆசிஃப் குழந்தைத் தொழிலாளியாக வதைக்கப்பட்ட நிலையிலிருந்து கைலாஷ் சத்யார்த்தியின் அமைப்பால் மீட்டெடுக் கப்பட்டவர்களில் ஒருவன். நாம் ரசித்து அணியும் ஜரிகை வேலைப்பாடு கொண்ட துணிகளின் இழைகளுக்கு இடையில் சிக்குண்டுக் கிடக்கிறது இது போன்ற குழந்தைகளின் உழைப்பு. 

மீட்புப்பணி
லட்சக்கணக்கான குழந்தைகள் தினம் தினம் கொத்தடிமைகளாக் கடத்தப்படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள். குழந்தை அடிமைத்தனம் இப்படியாக நீடித்து வருவதைக் கண்டு கோபம் கொண்ட சத்யார்த்தி “ பச்சான் பச்சாவோ அந்தோலன் “ என்ற தனியார் சேவை நிறுவனத்தை 1990-ல் துவக்கினார். 

இந்த அமைப்பு தங்கள் குழந்தைகளை மீட்டுத்தருமாறு வேண்டுகிற பெற்றோர்களுக்காக செயல்படுகிறது. சத்யார்த்தியோடு ஒத்த கருத்துக் கொண்ட இளைஞர் படை அவரோடு களத்தில் செயல்படுகிறது. முதலில் ரகசிய சோதனை மற்றும் மீட்புப்பணி என திட்டமிடுகிறார்கள். அடுத்து காவல் துறை மற்றும் சட்ட நிபுணர்களை 

உடன் அழைத்துச் செல்கின்றனர். அதிரடியாக குழந்தைகள் அடிமைப்படுத்தப்படும் தொழிற்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள். இந்தப் பணியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டார். மற்றொருவர் அடித்துக் கொல்லப் பட்டார். ஆனால் இது போன்ற சவால்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாற்றிக்கொண்டவர்தான் இந்த கைலாஷ் சத்யார்த்தி. 

“குழந்தை அடிமை நிலையை ஒழிக்கவே பச்சான் பச்சாவோ அந்தோலன் உருவாக்கப்பட்டது. அனைத்துக் குழந்தைகளும் தங்கள் குழந்தைப் பருவத்தை முழுமையாக கொண்டாட வேண்டும். இதுவே எங்கள் இலக்கு” என்கிறார் சத்தியார்த்தி. 

ரக்மார்க்
மலாலா தன் சாம்பலில் இருந்து மீண்டெழுந்து உயரப் பறக்கும் ஃபீனிக்ஸ் புராணப் பறவை போல் என்றால் சத்யார்த்தியோ கூடுகளில் இருந்து தவறி விழுந்து சிறகொடிந்து போன குருவிகளை மீண்டும் பறக்கச் செய்பவர். சத்தியார்த்தி மத்தியப்பிரதேசத்தில் பிறந்தவர்,தற்போது டில்லியில் வசிக்கிறார். 

தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார். 

பரிசுத் தொகை
அமைதிக்கான நோபல் பரிசின் பரிசுத்தொகை 690,000 பவுண்டுகள். அதாவது மலாலா, கைலாஷ் சத்யார்த்தி இருவருக்கும் தலா ரூ.3 கோடியே 40 லட்சங்கள் கிடைக்கும்.இது அவர்களின் முயற்சிகளுக்கு வலுவூட்டும். 

இதர வெற்றியாளர்கள்
அமைதிக்கான நோபல் பரிசு தவிர்த்து மற்ற பிரிவுகளில் நோபல் பரிசுகளை பெற்றவர்கள் வருமாறு: 

வேதியியல்
எரிக் பெட்சிக், ஸ்டஃபான் ஹெல், வில்லியம் மோர்னர் - இவர்கள் மூன்று பேரும்தான் வேதியியல் பிரிவில் 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள். இவர்களில் எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர் ஆகிய இரு விஞ்ஞானிகளும் அமெரிக்கர்கள். ஸ்டஃபான் ஹெல் ஜெர்மானியர். 

இவர்கள் ஒளிரும் நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, ஒளிரும் நவீன நுண்ணோக்கியை கண்டுபிடித்துள்ளனர். இதனால் நேரடியாக புளோரஸன்ஸ் அல்லது பாஸ்போரசென்ஸ் ஒளியைப் பாய்ச்சி ஆய்வு செய்ய முடியும். உடலுக்குள் செல்களின் வளர்ச்சி, நோயின் தாக்கம் ஆகியவற்றையும் மிகவும் துல்லியமாக இனி அறிய முடியும். 

இயற்பியல்
இசாமு அகாசகி, ஹிரோசி இசாமு அகாசகி, ஷுஜி நகமுரா- இவர்கள் மூன்று பேரும்தான் இயற்பியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றவர்கள். இவர்களில் இசாமு அகாசகி, ஹிரோசி இசாமு இருவரும் ஜப்பானியர்கள். நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். க்ஷுஜி நகமுரா அமெரிக்கர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். 

இவர்கள் மூன்று பேரும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத புதிய எல்.இ.டி. விளக்குகளை கண்டுபிடித்துள்ளனர். மிகவும் குறைந்த ஆற்றலில் வழக்கமான ஒளியைவிட கூடுதலான ஒளியை இந்த டயோடுகள் மூலம் பெறலாம். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் கம்ப்யூட்டர் திரைகள், நவீன ஸ்மார்ட் செல்போன் திரைகளில் ‘எல்இடி’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. 

இலக்கியம்
‘பாட்ரிக் மோதியானோ’ இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ள பிரெஞ்சு எழுத்தாளர். 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸூக்கு அருகில் 1945-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ஒரு யூதர். தாய், பெல்ஜிய சினிமா கதாநாயகி. பிரான்ஸ் நாஜிகளின் ஆதிக்கத்தில் இருந்த பதற்றமான காலகட்டத்தில் மிக ரகசியமாகத் தங்கள் காதலை இருவரும் வளர்த்துவந்தனர். 

நாஜிகளின் பிரான்ஸ் படையெடுப்பின்போது அங்குள்ள சாதாரண மனிதர்களின் வாழ்க்கை என்னவாக இருந்தது என்பதை அச்சு அசலாகத் தன் கதைகளின் மூலம் மோதியானோ சித்திரித்தார். அவரது எழுத்தின் இந்தப் பண்பையே நோபல் பரிசு குறிப்பு, மேற்கோள் காட்டுகிறது. 

அவரது முதல் நாவலான La place de l'Etoile (Place the star)-ல் தன் முழு படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர். 1968-ல் இது வெளிவந்தது. பாரிஸும், போர் சூழலும்தான் இவரது கதைகளின் மையம். திரைக்கதைகளும் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதியுள்ளார். 

மருத்துவம்
நார்வே நாட்டைச் சேர்ந்த மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் எனும் கணவன்- மனைவிக்கு இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே துறையில் சாதனை புரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃபே இந்தப் பரிசைப் பகிர்ந்துகொள்கிறார்.

மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் இருவரும் பத்தாண்டுக் கால உழைப்பால் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். கிரிட் செல்கள் என்பவைதான் நாம் போக வேண்டிய இடத்தைக் கண்டு உணர்ந்து நம்மை அழைத்துச் செல்கின்றன என அவர்கள் அறிவித்துள்ளனர். 

1971-ல் ஜான் ஓ கீஃபே நமது மூளைக்குள் இருக்கும் ஜி.பி.எஸ். (Global Positioning System -GPS) சிஸ்டத்தைக் கண்டுபிடித்தார். அதாவது ஒரு திசையிலிருந்து பயணிக்கும்போது மூளை தானாக ஒரு மேப்பை உருவாக்கிப் பார்த்துக்கொள்கிறது என்பதை ஒரு எலியைக் கொண்டு அவர் நிரூபித்துக் காட்டினார். 

உருவாகட்டும் ஓராயிரம் சி.வி. ராமன்கள்!


இந்தியாவின் இயற்கை வளம் மட்டுமல்ல, அறிவு வளமும் பிரமிக்க வைப்பது. ஆனால், தங்கச் சுரங்கத்தின் மேல் அமர்ந்து கொண்டு வறுமையைப் பற்றிப் புலம்பும் நிலைதான் இந்தியர்களின் நிலை. இந்த நிலையை மாற்றக்கூடிய வாய்ப்பைத்தான் மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.

ஆம்! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் ஏற்படவும் அதுகுறித்துப் பயனுள்ள தகவல்களைப் பெறவும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார். அவருடைய துறையின் கீழ் வரும் அரசுத் துறை நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 6,000 விஞ்ஞானிகளை ஆண்டுதோறும் மொத்தம் 12 மணி நேரம் பள்ளி, கல்லூரிகளில் நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து உரையாற்றப் பயன்படுத்தவிருக்கிறார்.

இதனால், மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பாக ஆசிரியர்கள் தரும் தகவல்களைவிடக் கூடுதல் தகவல் கிடைக்கவும், எதைப் படிப்பது, எதில் ஆய்வை மேற்கொள்வது என்பதை மாணவர்கள் தீர்மானிக்கவும் பேருதவியாக இருக்கும்.

உலகமயமாதலின் பின்னணியில் கல்வி என்பது இந்தியாவில் இயந்திரத்தனமாகிவிட்டது. கல்விக்கூடங்களெல்லாம் உற்பத்திக் கூடங்கள்போல் ஆகிவிட்டன. சுயமான அறிவை விரிவுபடுத்த வேண்டிய கல்வி, நகலெடுக்கும் முறையாக இந்தியாவில் ஆகிவிட்டது. இந்திய அறிவுச் சூழலிலும், அறிவியல் சூழலிலும் இதன் பிரதிபலிப்பை நன்றாக உணரலாம். இந்தியர்கள் தற்காலத்தில் எந்த அறிவுச் சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது இதன் பொருளல்ல. நமது அறிவு வளத்துக்கும் அறிவியல் பாரம்பரியத்துக்கும் இணையான உயரத்தை நாம் இன்னும் அடையவில்லை என்பதே இதன் பொருள். இந்தியாவில் இருக்கும் பல்வேறுபட்ட துறைகள், அவற்றில் பணிபுரியும் வல்லுநர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பு மிகவும் பிரம்மாண்டமானது. இப்படிப்பட்ட கட்டமைப்பைக் கல்வித் துறையில் நாம் இவ்வளவு காலம் ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் விசித்திரம்! இந்தியக் கல்விச் சூழல் மிகவும் இறுக்கமாகவும் குறுகலான பார்வை கொண்டதாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

சர்வதேசத் தரத்திலான அறிவியலாளர் என்று நாம் இன்று கொண்டாடும் சத்யேந்திரநாத் போஸுக்கு, அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவி மறுக்கப்பட்டது. போஸின் மேதமையை அறிந்திருந்த ஐன்ஸ்டைன் பரிந்துரைத்த பிறகே அவருக்குப் பேராசிரியர் வேலை கிடைத்தது. இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை என்பதுதான் அவலம்!

கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியா உருவாக்கிய சர்வதேசத் தரத்திலான அறிவியலாளர்களைக் கணக்கெடுங்கள். சர் சி.வி. ராமன், சந்திரசேகர், எஸ்.என். போஸ், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரையே நம்மால் கூற முடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளோடு நம் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பது புரியும். தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அந்தப் பயணத்தை இலகுவாக்கினால் மகிழ்ச்சியே! 
 

நல்ல தமிழ் எது? இ.அண்ணாமலை





மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது.

தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது.

நல்ல என்ற சொல்லின் பொருள்

நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பார்வையிலிருந்து பிறப்பவை. ‘என் மகனுக்கு நல்ல பெண்ணாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று ஒரு தாய் சொல்லும்போது சிவந்த நிறமுடைய, அடங்கிப் போகும் பெண்ணையே குறிக்கிறாள். ‘நல்ல வேலை’ வருமானம் அதிகமுள்ள வேலையைக் குறிக்கிறது; சேவை செய்யும் வேலையை அல்ல. நல்ல என்னும் பெயரடை ‘நன்மை தரும்’ என்னும் பொருளில் புறநானூற்றில் ( பாடல் 50) வருவதாகக் கொள்ளலாம். அரசின் முரசு கட்டிலில் களைப்பால் உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவர், தன்னை வாளால் வெட்டாமல் சாமரத்தால் விசிறிய அரசனின் செயலைத் தமிழால் தான் பெற்ற நன்மை என்று பொருள்படும்படி ‘நற்றமிழ்’ என்கிறார். நன்மை என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘நல்’தானே. ‘இதிலிருந்து ஒரு நல்ல பாடம் படித்துக்கொண்டேன்’ என்று சொல்லும் போது ‘நன்மை தரும் பாடம்’என்றுதானே பொருள்.

நல்ல தமிழின் புதிய பொருள்

‘தமிழால் என்ன நன்மை’ என்று பலர் கேட்கும் இக்காலத்தில், நல்ல தமிழ் என்ற சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை! சுத்தானந்த பாரதியின் ‘நல்ல தமிழ் எழுதுவது எப்படி?’ (1964/1943), அ.கி. பரந்தாமனாரின் ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ (2012/1945),

அ.மு. பரமசிவானந்தத்தின் ‘நல்ல தமிழ்’(1961), ரம்போலா மாஸ்கரனேஸ், வை. தட்சிணாமூர்த்தியின் ‘நல்ல தமிழ் எழுதுங்கள்’(2005), சீனி நைனாமுகமதுவின் ‘நல்ல தமிழ் இலக்கணம்’(2013) என்ற நூல்களின் தலைப்பில் உள்ள ‘நல்ல தமிழு’க்கு மேற்சொன்ன பொருள் இல்லை. இங்கு இந்தச் சொல்லின் பொருள் ‘இலக்கண விதிப்படி எழுதும் தமிழ்’என்பது. பல வகைத் தமிழில் இதுவே நல்ல தமிழ்; மற்றவை குறைத் தமிழ் என்னும் கருத்தை உள்ளடக்கியது.

இலக்கணமின்றி எந்த மொழியும் இயங்க முடியாது. மொழிகளின் இலக்கணம் வேறுபடலாம்; ஆனால், இலக்கணம் இல்லாத மொழி இல்லை, இலக்கணமற்ற ராகம் இல்லாததைப் போல. பேச்சுத் தமிழுக்கும் இலக் கணம் உண்டு; வட்டாரத் தமிழுக்கும் இலக்கணம் உண்டு. நல்ல தமிழ் இலக்கண விதிப்படி எழுதும் தமிழ் எனும்போது அது தமிழின் பழைய இலக்கணத்தின்படி எழுதும் தமிழைக் குறிக்கிறது. பழைய இலக்கணம் தொல்காப்பியர், இல்லையென்றால் பவணந்தி எழுதிய இலக்கண நூல்களில் உள்ள விதிகளைக் குறிக்கிறது. மொழியில் புதியன புகுவதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதால், ஒரு சில புதிய விதிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

நல்ல தமிழும் தூய தமிழும்

நல்ல தமிழும் தூய தமிழும் மொழிக் கருத்தாக்க அடிப்படையில் ஒன்றென்றாலும், மொழிக் கூறுகளில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னது, சந்தி தொடங்கி தமிழின் இலக்கண அமைப்பையும் பின்னது, சொல்லின் மூலத்தையும் முன்னிலைப்படுத்தும். ஆனால், ஒன்று மற்றொன்றை விலக்காது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொல்லலாம். இரண்டும் தோன்றத் தூண்டுகோலான சமூகக் காரணி களிலும் வேறுபாடு உண்டு.

தூய தமிழ்வாதம் சுதந்திரம் பெறவிருந்த இந்தியாவில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி உட்படத் தனியிடம் தேடியும், தமிழகத்தில் பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் அரசியல் எழுச்சியை நிலைநாட்டியும் எழுந்தது. நல்ல தமிழ்வாதம் சுதந்திர இந்தியா தமிழின் பயன்பாட்டுக்குத் தந்த கல்வி மொழி, ஆட்சி மொழி போன்ற புதிய வாய்ப்புகளை எதிர்கொள்ளும் நோக்கிலும், எழுத்துத் தமிழில் (முக்கியமாக நவீன இலக்கியத்திலும் இதழ்களிலும்) பேச்சுத் தமிழ் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் எழுந்தது. எழுதும் தமிழ்ப் புலவர்கள் கையிலிருந்து நழுவித் தமிழை நவீனப் பள்ளிகளில் கற்றுப் புதிய துறைகளில் எழுதப் புகுந்தவர்களின் கைக்கு வந்ததன் எதிர்வினையாக நல்ல தமிழ் முன்னிறுத்தப்பட்டது. சாதாரண மனிதனின் தமிழில் புலவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்ட சமூக மாற்றத்தை அ.மு. பரமசிவானந்தம் தன் நூலின் முன்னுரையில் தெளிவாகவே சொல்கிறார். நல்ல தமிழ் வாதத்தின் சமூகப் பின்னணி, நவீன காலத் தமிழின் தேவை நிறைவுசெய்யும்போது பழமையிலிருந்து விலகாமல் இருந்தாலே தமிழுக்குப் பாதுகாப்பு என்று புலவர்களை எண்ணவைத்தது. இவர்கள் தமிழ்க் காவலே தமிழ்க் காதல் என்னும் கருத்தாக்கத்தைப் போற்றி வளர்த்தார்கள். காவல் என்றால் கால்கட்டு வரும்; ஓட்டம் தடைப்படும் என்பது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை.

கருத்துப் பரிமாற்றத் திறன்

இந்தப் பார்வையால் தமிழின் கருத்துப் பரிமாற்றத் திறன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கட்டுரை எழுதும் போது அது மேலே சொன்ன பொருளில் நல்ல தமிழில் இருக்கிறதா என்பதே, அது சொல்ல வந்த கருத்தைச் சரியாக, துல்லியமாகச் சொல்கிறதா என்பதைவிட முக்கியமாகிறது, பிற துறை வல்லுநர்களை அவர்களுடைய புதிய அறிவைத் தமிழில் எழுதத் தயக்கம் காட்டவைக்கிறது. தமிழில் பல நடைகள் தோன்றுவதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

நல்ல ஆங்கிலம் என்று சொல்லும்போது, அது இலக்கண விதிகளைப் பின்பற்றும் ஆங்கிலம்தான். ஆனால், இந்த விதிகள் பழைய ஆங்கிலத்தின் இலக்கண விதிகள் அல்ல. அவை தரப்படுத்தப்பட்ட, இன்றைய பேச்சில் வழங்கும் ஆங்கிலத்தின் விதிகள். அதற்கு மேலாக, கருத்தைச் சொல்லும் திறனும் அழகும் நல்ல ஆங்கிலம் என்ற சொல்லில் உள்ள நல்ல என்ற அடையில் அடங்கும். இந்தத் திறன் பழைய இலக்கண அறிவு அல்ல; இந்த அழகு ஒப்பனை செய்யும் அலங் காரம் அல்ல.

இக்காலத் தேவைக்கான தமிழ்

நல்ல தமிழுக்கு இன்று புதிய விளக்கம் தேவை. இது இலக்கணத்திலும் சொல்லிலும் புதிய தமிழ்; காலத்தின் புதிய தேவைகளை, அனுபவத்தை, அறிவை இயல்பாக வெளிப்படுத்தும் தமிழ். இது கருத்துப் பரிமாற்றத் திறனுக்கு முதன்மை தரும் தமிழ். புதுக் கவிதைக்குப் புதிய யாப்புடைய தமிழே பொருத்தம் என்றால், புது உரைநடைக்கும் பாட நூல்களுக்கும் புதிய இலக்கணத் தமிழே பொருத்தமானது ஆகும். வட்டத் துளைக்குள் சதுரக் கோலைச் சொருகுவது பொருந்தாத வேலை. துளைக்கேற்பக் கோலைச் செதுக்குவதைத் தவிர்க்க முடியாது. இன்றைய தேவைக்காக இப்படிச் செதுக்கிய தமிழே நல்ல தமிழ்.

இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசியத் துறையில் வருகைதரு பேராசிரியர். தொடர்புக்கு: eannamalai38@gmail.com
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

தனியார் சட்டக் கல்லூரித் தடைச்சட்டம் தேவையா? கே. சந்துரு



தமிழகத்தில் புதிய தனியார் சட்டக் கல்லூரிகளைத் தடுப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை வழங்குவதற்குப் படிப்படியாக அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்குக் கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும், பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் நலிவுற்ற பிரிவினர்களுக்குத் தனியாரால் தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியாததாலும் தனியாரால் திறம்படத் தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பதைக் கடந்த கால அனுபவங்கள் வெளிப் படுத்துவதாலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சட்டக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவதற்கோ, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கோ அதிகாரம் உள்ளதா என்பதே கேள்விக்குறி.

இந்தியாவிலுள்ள சட்டக் கல்லூரிகள்

புதிய சட்ட மசோதா கொண்டுவர திடீரென்று அரசு இப்படி ஒரு முடிவெடுத்ததற்கான உண்மையான காரணங்கள் என்ன? தமிழகத்தில் ஏழு அரசு சட்டக் கல்லூரிகளும், அம்பேத்கர் பல்கலைக்கழகம் நடத்திவரும் சிறப்புப் பள்ளி, ரங்கத்தில் தொடங்கப்பட்டுள்ள தேசிய சட்டப் பள்ளி தவிர, இரு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (சாஸ்திரா, சவீதா) நடத்திவரும் சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் நடத்தப்பட்டுவரும் தனியார் சட்டக் கல்லூரியும் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவில் 1,000-த்துக்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலுடன் நடத்தப்பட்டுவருகின்றன. மாநிலவாரியாகச் சட்டக் கல்லூரி கள்:- உத்தரப் பிரதேசத்தில் 300, ராஜஸ்தானில் 200, டெல்லி மற்றும் கர்நாடகத்தில் தலா 100, மகாராஷ்டிரத்தில் 200, மத்தியப் பிரதேசத்தில் 125, ஆந்திரத்தில் 65, கேரளத்தில் 30 என்று பட்டியல் நீள்கிறது. இவற்றில் 800-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் தனியாரால் நடத்தப்பட்டுவருகின்றன. இது தவிர, 14 தேசிய சட்டப் பள்ளிகளில் அகில இந்திய திறனறித் தேர்வுகள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறு கின்றன. தேசியப் பள்ளிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் இரண்டு லட்சத்துக்கும் மேல் வசூலிக்கப் படுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் நடத்தும் சட்டப் பள்ளியில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 45 லட்சம் என்பது நம்மை மலைக்க வைக்கிறது.

அடைக்கப்பட்ட வாய்ப்பு

அன்றைய சென்னை மாகாணத்தில் 1891-ல் சென்னை சட்டக் கல்லூரி துவங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், தமிழகத்தில் இருந்த ஒரே சட்டக் கல்லூரியாக அந்தக் கல்லூரி விளங்கியது. அன்றைக்கு இருந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பகுதி நேர ஆசிரியராக அந்தக் கல்லூரியில் பணியாற்றினர். பல மூத்த வழக்கறிஞர்கள் அந்தக் கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவார்கள். சட்டக் கல்லூரியை, உயர் நீதிமன்றம் பக்கத்தில் வைத்ததே மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்றுதான். ஆனால், உயர் நீதிமன்றத்தையும் சட்டக் கல்லூரியையும் இணைக்கும் வாயிலை இன்று நிரந்தரமாகவே பூட்டிவிட்டார்கள்!

முழுநேர ஆசிரியர்களைக் கொண்டுதான் கல்வி புகட்ட வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்ட பின், பகுதி நேர ஆசிரியர்களைத் தவிர்த்ததால் சட்டக் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி கிடைப்பது நின்றுபோனது. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், இன்று நிரந்தர ஆசிரியர்கள் எட்டுப் பேர் மட்டுமே. மற்றவர்களெல்லாம் தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் தற்காலிக ஆசிரியர்களே. திறமையான சட்டக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள தோடு, பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆசிரியர் தகுதி விதிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு நியமிக்கப்பட்டுவரும் ஆசிரியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

சுருங்கிய வரையறை
பல்கலைக்கழகங்களே புதிய கல்லூரிகள் தொடங்கு வதற்கு அரசிடம் முன்அனுமதியோ தடையின்மை சான்றிதழோ பெற அவசியமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு, சாஸ்திரா மற்றும் சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சட்டக் கல்லூரிகளை நடத்திவருகின்றன. உச்ச நீதிமன்றம், உயர்கல்வியின் ஒருங்கிணைப்பு மற்றும் தரநிர்ணயம்பற்றிய முழு அதிகாரம் மத்திய அரசுக்கும் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கும் மட்டுமே உண்டென்றும், மாநில அரசும் அதனால் ஏற்படுத் தப்பட்ட பல்கலைக்கழகங்களும் தேர்வுகள் நடத்திப் பட்டங் கள் வழங்க மட்டுமே அதிகாரம் படைத்தவை என்றும் கூறிவிட்டதால் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர் கல்விகளுக்கு மாநில அரசின் அதிகார வரையறை சுருங்கிவிட்டது.

சட்டக் கல்வி, சட்டக் கல்லூரிகளின் தரம், அவற்றின் கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்திய பார் கவுன்சில் மட்டுமே முடிவெடுக்க முடியும். எம்.பி. வாஷி என்ற மும்பை வழக்கறிஞர் போட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தனியார் சட்டக் கல்லூரிகள் நடத்தும் உரிமை குடிமக்களுக்கு உண்டென்றும், சட்டத் தொழிலின் முக்கியம் கருதி, அப்படிப்பட்ட கல்லூரிகளுக்கும் மாநில அரசுகள் மானியத் தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவியென்பது அரசமைப்புச் சட்டத்தின் 39-A என்ற பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சட்டப் பணியாற்ற மேலும் பல வழக்கறிஞர்கள் தேவையென்றும் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை மக்களின் தேவைகளின் அடிப்படையில் அமைக் கப்பட வேண்டுமென்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்ட வடிவு-2010


நாடு முழுவதும் சீரழிந்துவரும் சட்டக் கல்வியைப் பற்றி கவலையுற்ற மத்திய அரசு, இந்திய பார் கவுன்சிலின் மேற்பார்வை அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டக் கல்வியின் தரத்தை, இன்றுள்ள சவால்களைச் சமாளிக்கும் வகையிலான புதிய சட்ட வடிவை 2010-ல் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. மேற்பார்வை அதிகாரம் கொண்ட உயர் மட்டக் குழுவை நியமிப்பதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பையும் போராட்டங்கள் மூலம் காட்டினர். ஒரு பக்கத்தில் சிறப்பான கல்வி பயில தேசிய சட்டப் பள்ளிகளும், மறுபக்கத்தில் தரம் குறைந்த சட்டப் பயிற்சியளிக்கும் நூற்றுக் கணக்கான சட்டக் கல்லூரிகளும் இங்கிருப்பதை நாம் காணலாம்.

2008 நவம்பரில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் கள் பட்டப் பகலில் கத்தி கம்புகளுடன் மோதல், காவலர்கள் மௌனம் ஆகியவற்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோரின் ஈரக்குலைகள் நடுங்கின. காரணங்களை அறிய அரசு நியமித்த நீதிபதி சண்முகம் கமிஷன் ஜூன் 2009-ல் அறிக்கையைச் சமர்ப்பித்தது. பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அரசின் தனது நடவடிக்கைக் குறிப்பு, ஜூலை 2009-ல் அரசாணையாக வெளியிடப்பட்டது. கமிஷ னின் பரிந்துரை ஒன்று, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூன்றாகப் பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லியில் அமைக்க வேண்டும் என்பது. தற்போதுள்ள கல்லூரி வளாகமும் கிள்ளியூர் மாணவர் விடுதியும் பட்ட மேற்படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு சட்டத் தேர்வில் 36 சதவீதமே தேர்ச்சி பெற்றதைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிட்டது. 33 பேருக்குப் பதிலாக 18 முழுநேர ஆசிரியர்களும், 25 பேருக்குப் பதிலாக 14 பகுதி நேர ஆசிரியர்களும் பணிபுரிவதைக் குறிப்பிட்ட கமிஷன், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க உடனடியாகப் பரிந்துரைத்தது. ஆனால், இன்று வரை நீதிபதி சண்முகம் கமிஷனின் பரிந்துரைகளை அரசு நிறை வேற்றவில்லை.

முட்டுக்கட்டைகளும் வலுவற்ற வாதங்களும்

வன்னியர் கல்வி அறக்கட்டளை திண்டிவனத்தில் ‘சரஸ் வதி சட்டக் கல்லூரி’ என்ற பெயரிலும் செல்லையா கல்வி அறக்கட்டளை, திருவள்ளூரில் ‘ஐடியல் சட்டக் கல்லூரி’ என்ற பெயரிலும் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, அந்த அறக்கட்டளைகளின் மனுக்களைப் பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களி்ல் சட்டக் கல்லூரிகள் இல்லையென்பதும், அதற்கான தேவை இருக்கிறது என்பதும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அந்த உத்தரவின்படி செயல்படாததால், அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், வேலூரில் உள்ள வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அதனுடைய சென்னை வளாகத்தில் சட்டக் கல்லூரியின் தொடக்க விழாவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடத்திமுடித்துவிட்டது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான், தமிழக அரசு தனியார் சட்டக் கல்லூரிகளைத் தொடங்கும் முயற்சியைத் தடைசெய்யும் வகையில் சட்டம் இயற்ற முற்பட்டுள்ளது. 7 கோடி மக்கள்தொகை உள்ள மாநிலத்தில், பல மாவட்டங்களில் சட்டக் கல்லூரிகளே இல்லாத சூழ்நிலையில், தனியார் அமைப்புகள் சட்டக் கல்லூரிகளை ஏற்படுத்துவதை மாநில அரசு எப்படித் தடுக்க முடியும்? அரசமைப்புச் சட்டத்தில், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. தவிர, மாநிலத்தின் தேவையையும் அரசு கணக்கில் கொள்ளவில்லை. 11 நீதிபதிகள் அடங்கிய டி.எம்.ஏ.பை வழக்கில் உச்ச நீதிமன்றம், உயர் கல்விக்கான முழுப் பொறுப்பும் அரசின் மீது சுமத்த முடியாது என்றும், உயர்கல்வி வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரலாம் என்றும் அதற்கான செலவினத்தையும் அதற்கு மேலும் நியாயமான வருவாயைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் தீர்ப்பளித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகம் என்பதால், அவை சட்டக் கல்லூரிகள் நிறுவ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது வலுவற்ற வாதம். 2 முதல் 45 லட்சம் வரை ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தி, மாணவர்கள் சட்டம் பயிலும் இந்தியாவில், கட்டண வீதங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசே சட்டக் கல்லூரிகளை அமைக்கப்போவதாகக் கூறுவது திசைதிருப்பும் வேலை. அப்படிப்பட்ட நிலைப்பாடுள்ள அரசு 800-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், 700-க் கும் மேற்பட்ட கல்வியியல் நிறுவனங்களையும், நூற்றுக் கணக்கான செவிலியர் பள்ளிகளையும் கட்டுப்படுத்த எவ்வித சட்ட முயற்சியையும் இன்றுவரை மேற்கொள்ளாதது ஏன்?

- கே. சந்துரு, முன்னாள் நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை.

குழந்தைப் பருவத் திருமணத்தின் தீமைகள்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி




அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

(சென்னை மாகாண சட்டசபையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய உரை)

“ஆணின் திருமண வயதை 21 என்றும், பெண்ணின் திருமண வயதை 16 என்றும் உயர்த்த வேண்டியது அவசியம் என்ற இந்த கருத்தை இந்திய அரசுக்குத் தெரிவிக்க, இந்த அவை பரிந்துரைக்கிறது.”

நான் இந்தத் தீர்மானத்தை இந்த நாட்டு மக்களின், முக்கியமாக நம் நாட்டுப் பெண்களின், சார்பில் கொண்டுவர விழைகிறேன். ஏனென்றால், இங்கே இளம் பருவத்திலேயே திருமணம் செய்யும் வழக்கம் இந்து மேல்வகுப்பினரிடையே நடைமுறையில் இருந்துவருவதால், ஒரு பெண் குழந்தையின் பிறப்பு வரவேற்கப்படுவதில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதைப் பெரும் துர்ப்பாக்கியமாகப் பார்க்கின்றனர். முக்கியமாகப் பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தால் இப்படி நடக்கிறது. ஒரு கண்ணியமான, தகுதி வாய்ந்த கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எந்த அளவுக்குப் பெற்றோர்களுடையதாகிவிடுகிறது என்றால், அந்த உணர்வு தந்தைக்கும், தாய்க்கும் குழந்தையிடம் உள்ள பாசத்தையே அழித்துவிடுவதாக இருக்கிறது. நிறைய ஏழைக் குடும்பங்களில் பெண் சிசுக்கள், பிறந்த நிமிடத்திலிருந்தே உதாசீனப்படுத்தப்படுகின்றன.

பிரசவ வேதனை முடிந்து, குழந்தையின் முதல் அழுகைச் சத்தம் கேட்டவுடன் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களில் ஒவ்வொருவரும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். குழந்தை பெண்ணாக இருந்தால், மகிழ்ச்சியற்ற இந்தச் செய்தியை அவர்களிடம் கூறாமல் பல முறை நானே மறைத்திருக்கிறேன். ஏனென்றால், வசதி படைத்தவர்களிடையேகூட இந்தச் செய்தி, வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும்தான் உணரப்படு கிறது. பல முறை நான் இந்தச் செய்தியைத் தாயிடம் கூறு வதைத் தவிர்த்திருக்கிறேன். இந்தச் செய்தி தாய்க்கு ஒரு அதிர்ச்சியாக இருந்துவிடக் கூடாது.

பெண் சிசுவை வளர்க்கும் விதம்

பெண் சிசுவை இளம்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கும் கெட்ட பழக்கத்தால் அவள் பிறந்ததிலிருந்தே கவலைக்குரியவளாகி, குடும்பத்துக்கு ஒரு சுமையாகிறாள். எட்டு அல்லது ஒன்பதாவது வயதை எட்டும்போது, அவள் பெற்றோர்கள் அவளது திருமணத்தைப் பற்றியும், அவளது வருங்காலக் கணவர் பற்றியும், ஆகக்கூடிய செலவைப் பற்றியும் பேசத் தொடங்குவார்கள். குடும்பத்தின் கவனமும் கவலையும் இவளைச் சுற்றியே இருக்கும்.

இளம் பெண்கள் கள்ளம்கபடமற்ற, தூய்மையான வாழ்க்கையைத் தியாகம் செய்தும் இந்த வெறுக்கத் தக்க தீய பழக்கத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை. பழக்கவழக்கங்கள் எவ்வாறு நம் சமூகத்தில் வேரூன்றிப்போயிருக்கின்றன என்பதை இது காட்டுகிறது. பல சமயங்களில் பெண் குழந்தை பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். மாப்பிள்ளை நிச்சயமான பிறகு, திருமணத்தைப் பற்றியும் அதற்கான ஏற்பாடுகளைப் பற்றியுமே வீட்டில் பேச்சு நடைபெறுகிறது.

இழப்புகளே அதிகம்


இளம் பெண், குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன் இயல்பை இழக்கிறாள். வெட்கப்பட்டு, பேசாது ஒதுங்கி நிற்கிறாள். வீட்டில் உள்ள வயதான பெண்களின் வழிமுறை களைப் பின்பற்றத் தொடங்குகிறாள். வீட்டிலுள்ள பெண் களுக்கு வெளியில் எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத தால், இந்த இளம் பெண்களின் மூளையில் முற்றிய பெண்களின் பாலுறவுக் கருத்துகளை அவர்கள் புகுத்து கின்றனர். திருமணத்துக்குப் பிறகு, மாப்பிள்ளையின் பெற்றோர் களுக்கான சொத்தாகிறாள் பெண். அவளது இயல்பான செயல்பாடுகளுக்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன. அவள் தன் மாமியார், மற்ற அயலார் முன்பு ஓடி விளையாடவோ, சத்தமாகப் பேசவோ, உரக்கச் சிரிக்கவோ கூடாது. இவ்வாறு அவளது இளம்பெண் பருவம், மிகவும் ஒளிவாய்ந்த பருவம், அவளிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவளுக்குக் குழந்தைப் பருவமும், முதிர்ந்த பெண்ணின் பருவமும் மட்டும்தான் தெரியும். “ஆகவே, சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் குழந்தை பெறும் பருவத்துக்குத் தள்ளப்படுகிறாள்.”

சிறிய நகரங்களில் சூழ்நிலை மாறலாம். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள நம் பெண்கள் எப்போதும் இதைப் போன்றுதான் இருக்கின்றனர். இதைப் போன்ற தாய்மை அடைவது கருச்சிதைவுக்கும் கரு கலைந்துபோவதற்கும் காரணமாகிறது. கர்ப்பப்பை சிறிய வயதில் வலுப்பெறாமல் இருப்பதால், தாய்மையின் மாற்றங்களைத் தக்கவைத்துக்கொண்டு, முழு வளர்ச்சிக்கும், முழுப் பேறுகாலத்துக்கும் இருக்கும் வகையில் ஊட்டத்தைப் பெற முடிவதில்லை.

குழந்தைத் தாய்

ஒரு வருடத்தில் இப்பெண்களுக்கு மூன்று நான்கு கருச் சிதைவுகள் நிகழ்கின்றன. அப்படி முழுக் கர்ப்பகாலம் அடைந்தாலும் பலருக்கு மிக நீண்ட, சோர்வு அளிக்கக் கூடிய, ஆயுதம் போட வேண்டிய நிலைமையே உண்டாகிறது. இது குழந்தையையும் தாயையும் பலவீனமாக்கிவிடுகிறது.

நான் என்னுடைய 16 வருட மருத்துவப் பயிற்சியில், மேல்வகுப்பு இந்துக் குடும்பங்களில் 12-லிருந்து 15 வரை வயதுள்ள குழந்தைத் தாய்களின் பிரசவ காலத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பேறுகாலம் கடைசியில் என்னவாகுமோ என்ற பயத்தையும் பிரசவத்தைப் பற்றிய பதற்றத்தையும் கொண்டிருந்தனர்.

நான் பல இரவுகள், பகல்கள் அவர்களது படுக்கை அருகே கனத்த இதயத்துடன் உட்கார்ந்திருக்கிறேன். அவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கம் கொண்டிருக்கிறேன். அந்த நிலைக்கு அவர்கள் பொறுப்பல்ல. எந்தத் தவறான செயலோ எண்ணமோ இல்லாத அவர்களை இந்நிலைக்குத் தள்ளியது, சமூகத்தின் குருட்டுத்தனமான, பொருளற்ற பழக்கங்களும் பெற்றோர்களின் அறியாமையும், மூடநம்பிக்கைகளும் அல்லவா?

இந்த இளம் பெண்கள் நன்கு வளர்ச்சி அடையாத உடம்புடன் கருத்தரித்து, பிரசவத்தின்போது படும் வேதனைகளையும், வலியால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன். அப்போதெல் லாம், பைத்தியக்காரத்தனமான பழக்கவழக்கத்துக்குத் தங்களது அருமையான குழந்தைகளைப் பறிகொடுக்கும் குருட்டுத்தனமான மனித இனத்தைத் தோற்றுவித்த வானை யும் மண்ணையும் தூற்றுவதைத் தவிர்க்க முடிந்ததில்லை. பிரசவத்துக்கு வரும் பலருக்குப் பிரசவ வேதனை நீண்ட நேரம் நீடிப்பதோடு, பல நாட்கள்கூடத் தொடரும். முதிர்ச்சி அடையாத பிறப்புறுப்பாலும், முழு வளர்ச்சி அடையாத தசைகளாலும் வலியால் இவர்கள் துன்பப்படுகிறார்கள்.

ஒரு குழந்தைப் பிறப்பே தாயின் உடல்நிலையைக் குலைய வைக்கிறது. பல வருடங்கள் வயதானது போன்ற தோற்றத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறது.

நம் நாட்டு இளம் தாய்களின் அவலமான நிலையைப் பற்றி நினைக்கும்போது என் இதயத்தில் இவர்கள் மீது இரக்க உணர்வு மேலோங்குகிறது. இந்த இளம் தாய்மார்கள் அடிக்கடி அனுபவித்த கருத்தரிப்பு, கருச்சிதைவு, கருக் கலைதல் போன்றவற்றால் உடல்நலம் கெட்டுப்போன நிலையில், அவர்கள் எப்போதும் அழுதுகொண்டும் சிணுங் கிக்கொண்டும் நோய்வாய்ப்பட்ட ஆறு, ஏழு குழந்தைகளை வேறு பார்த்துக்கொள்ள வேண்டும். நடுத்தர வர்க்கத்திலும், ஏழை மக்களிடையேயும் சிறிதும் இரக்கமில்லாத கணவன், படிக்காத, கொடிய உள்ளம் கொண்ட மாமியார் இவர் களிடையே, இளமையான ஏழை மருமகளின் நிலைமை மிகவும் கொடுமையானது. அவள் சமையற்காரியாகவும் தனது குழந்தைகளுக்குத் தாதியாகவும், வீட்டில் பொது வேலைக்காரியாகவும், மனைவியாகவும் இயங்க வேண்டும். இத்துடன் வீட்டில் உள்ள பெரியவர்கள் விதிக்கும் முட்டாள்தன மான எல்லா ஆச்சாரங்களையும் பின்பற்ற வேண்டும்.

இந்தக் குழந்தைப் பருவத் தாய்மார்கள் வாழ்க்கையைச் சிறிதும் அனுபவிப்பதில்லை. தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையில், தங்கள் கஷ்டங்களை வாழ்க்கையின் ஒரு பாகமாக எடுத்துக்கொண்டு, கர்மவினைப் பயன் என்று வருந்துகின்றனர். இந்தப் பெண்களின் கணவர்களும் பெரும்பாலோர், இளமையாகவும், பொறுப்பற்றும் இருப்பதால் தங்கள் வாழ்க்கைத் துணைவிக்குக் குழந்தை பெறும் பாட்டிலிருந்து விடுதலை அளிக்கும் புலனடக்கத்தைப் பின்பற்றுவதில்லை.

சிறுமி-விதவைகளின் மாபெரும் சோகம்


எல்லாவற்றையும்விட மிக மோசமான விளைவு, இந்துக் குடும்பங்களில் நம்மிடையே பெரும் எண்ணிக்கையில் உள்ள சிறுமி சமூக அந்தஸ்தில் மோசமான நிலையில் உள்ள விதவைகள்.

ஒரு இந்துக் குடும்பத்தில் உள்ள சிறுமி-விதவை வெகு மோசமாகவும் கண்ணியமற்றும் நடத்தப்படுகிறாள். அவளது இந்த விதவை நிலைக்கு அவள் காரணம் இல்லாத போதும், அவளது வாழ்க்கை அவலமாக்கப்படுகிறது. நான் இங்கே நமது மாகாணத்தில் இந்தக் கொடுமையான வழக்கம் எவ்வளவு அநீதியை இழைத்துள்ளது என்பதைக் காட்டக் கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களை இந்த அவையின் முன்வைக்கிறேன்.

மொத்தப் பெண்களில் மணம் புரிந்தோர் 97 லட்சத்திலிருந்து 217 லட்சம். விதவையானோர் 40.2 லட்சம். விதவையான வர்கள், மணம்புரிந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளனர்.

நாகரிக உலகின் எந்தப் பாகத்திலும் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை. நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் பெண்ணின் வாழ்க்கையை இவ்வளவு மலிவாகக் கருது வதில்லை. இதைப் போன்ற வழக்கங்கள் இல்லாத நாடு களில் மக்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த வளத்துடனும் நம்மைவிட உடல் வலிமை உடையவர் களாகவும் இருக்கின்றனர். மதத்தின் பெயரால் பொருளற்ற நடப்புகளில் ஒட்டிக்கொண்டு, நாம் திறனற்றுத் துன்பப்படுகிறோம்.

ஏழ்மையாலும் நோய்களாலும் நாம் மிகவும் வருந்து கிறோம். நம்முடைய நாடு சுதந்திரமானதும் இல்லை. இந்தக் கள்ளமில்லாத, துன்பத்தில் உழலும் உதவியற்ற சிறுமியர் சார்பில், கோடிக் கணக்கான சிறுமியர்-மனைவிகள் சார்பில், கோடிக் கணக்கான சிறுமியர் - தாய்கள் சார்பில், குழந்தை விதவைகள் சார்பில் நான் இங்கு சட்டசபையில் இருக்கும் எல்லாப் பிரிவினர்களிடமும் இந்துக்கள், முகம்மதியர்கள், கிறிஸ்துவர்கள் என்று அனைவரிடமும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கக் கோருகிறேன். இது கோடிக் கணக்கான நம் சிறுமிகளை, அவர்கள் முதிர்ச்சி அடையாத வயதில் மனைவி ஆவதிலிருந்தும் தாய் ஆவதிலிருந்தும், சுமத்தப்பட்ட விதவை வாழ்க்கையிலிருந்தும் காப்பாற்றி, இந்த மெலிந்த தலைமுறைக்குப் பதிலாக எதற்கும் வளையாத, சக்தி வாய்ந்த வம்சத்தை உருவாக்க உதவும்.

(இந்தத் தீர்மானம் 1928 மார்ச் 27-ம் தேதி சென்னை மாகாண சட்டசபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.)

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...,   தமிழில்: எஸ். ராஜலட்சுமி

Monday, 9 February 2015

இளைஞர் அறிவியல் மாநாடு அறிவிப்பு (ஆங்கிலத்தில்)




இளைஞர் அறிவியல் மாநாடு அறிவிப்பு (தமிழில்)




YOUTH SCIENCE FESTIVAL-2015

NEED OF YSF

The youth of our Nation, has to understand the society which is being influenced and shaped by Education, Science & Technology Development activities. Though the formal education plays a pivotal role, it needs field based studies to strengthen their understanding and hence the Youth Science Festival (YSF).

OBJECTIVES OF YSF

The primary objective of the Youth Science Festival is to make a forum available to the youth of the age group of 17-25 yrs, inclusive of regular college students and the youth from other organizaitons, to exhibit their creativity and innovativeness and more particularly their ability to relate science to society and the addressing of various problems in society. 

This will involve the youth in close and keen observation of manner and matter, raising pertinent questions, building models, predicting solutions on the basis of the models, trying out various possible alternatives and arriving at an optimum solution using experiments, field work, research and innovative ideas. The Youth Science Congress provides a platform for invention and innovation by the young minds in the use of science for the betterment of society and the growth  of our nation and organising for a scientific, egalatarian society.

FEATURES OF YOUTH SCIENCE FESTIVAL PROJECTS 

  • Innovative, simple and practical
  • Based on exploration of everyday life-situations
  • May include field based data collection.
  • Development of suitable simple technology.
  • Definite outputs arrived through scientific methodology.
  • Definite follow up plans.
  • Projects will be assessed on the basis of problem chosen, presentation, data collection and analysis, experimentation, validation, problem solving attempts (including technological) and team work.
  • 25  best  projects will  be  selected  for  the  state  level.
  • All participants of the Youth Science Festival will be approciated  with  certificates.
  • n Summary of the best projects will be published as a book 
by  Tamil  Nadu  Science  Forum.

பரமேஸ்வரன் எம்.பி-யும் அறிவொளி இயக்கமும்






பரமேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவருடைய பெயர் எம்.பி. பரமேஸ்வரன். கொஞ்சம் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

40 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். மதுரையில் அப்போது இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் என்ற அமைப்பில் செயலாற்றிக் கொண்டிருந்தேன். பரமேஸ்வரன், கேரள மாநில அறிவியல் இயக்கத்தில் செயலாற்றிக்கொண்டிருந்தார். சிறந்த படிப்பாளி. கல்லூரியில் சிறப்புப் பாடமாக அணுவியல் படித்தார். மாஸ்கோ சென்று ‘லுமும்பா’ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். அங்கேயே முனைவர் பட்டம் பெற்று விஞ்ஞானியாக இந்தியா வந்தார். டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

விடுமுறையில் கேரளத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தபோது, மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் பார்த்துத் திகைத்தார். ‘நான் அணு விஞ்ஞானியாகிக் கிழித்தது போதும். என் சக இந்தியனைத் தெளிவுபடுத்த வேண்டும். அதுதான் என் முதற்பணி என்று முடிவு செய்து, டாடா நிறுவனத்திலிருந்து விலகினார். புரோகமன கலா சாகித்ய சங்கத்துடன் இணைந்து, அறிவியல் இயக்கத்தைத் தொடர்ந்தார்.

மதுரையில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தில் அவர் பேசும் கூட்டத்துக்கு நான் தலைமை வகிக்க வேண்டியதாயிற்று. இன்றும் அவர் பேசியவை என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆதிமனிதனின் ‘டிராஜெக்டரி’

“நாம் வானில் ஏவுகணைகளை இன்று அனுப்புகிறோம். அந்த ஏவுகணை பயணிக்கும் பாதையை ஆங்கிலத்தில் ‘டிராஜெக்டரி’(trajectory) என்பார்கள். வேட்டைச் சமூகத்தில் மனிதன் மானை நோக்கி அம்பை விடுகிறான். மான் முந்திவிடுகிறது. இப்போது மேலும் வேகமாக அம்பை விடுகிறான். அம்பு முந்திவிடுகிறது. முன்றாவது முறை மானின் வேகத்தையும் அம்பின் வேகத்தையும் தன் அனுபவத்தால் அளந்து விடுகிறான். மான் அடிபட்டுச் சாய்கிறது. இன்றைய ‘டிராஜெக்டரி’யின் கூறுகளுக்கு வேட்டைச் சமூகத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டன எனலாம். மானின் மாமிசத்தைப் புசிக்கிறான்.

அதன் தொடைக்கறி ருசியாக இருக்கிறது. குடலைவிட நெஞ்சுக் கறி நல்லது என்று உணர்கிறான். விலங்கியலுக்கு அடிக்கல் விழுகிறது. பழங்களையும் பச்சிலைகளையும் உண்கிறான். தாவரவியல் பிறக்கிறது. ஆதிமனிதனின் அனுபவத்தின் திரட்டுதான் இன்றைய நவீன விஞ்ஞானம். ஆனால், இன்றைய விஞ்ஞானம் அல்ல அது.”

அறிவியலைப் ‘பாலாடை’யில் வைத்துப் புகட்டினார். அவர் பேச்சைக் கேட்டு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பலரும் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு இயக்கமாக மாறிச் செயல்பட ஆரம்பித்தார்கள். கரிகாலன் அணை கட்டியது உண்மை. அதன் தொழில் நுணுக்கம் அறிந்துகொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், சிற்ப சாஸ்திரம்தான் பொறியியலின் முடிவு என்று சாதிக்கக் கூடாது. கிறிஸ்து பிறப்பதற்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘மத்ஸ்ய புராணம்’ சொல்லியிருக்கிறது என்று புளுகக் கூடாது.

வடஇந்தியாவில் ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்தப் புளுகுணிப் பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டன. அறிவியல் இயக்கங்கள் ஓய்வின்றிச் செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது!

-காஷ்யபன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: kashyapan1936@gsmail.com