மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது.
தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது.
நல்ல என்ற சொல்லின் பொருள்
நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பார்வையிலிருந்து பிறப்பவை. ‘என் மகனுக்கு நல்ல பெண்ணாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று ஒரு தாய் சொல்லும்போது சிவந்த நிறமுடைய, அடங்கிப் போகும் பெண்ணையே குறிக்கிறாள். ‘நல்ல வேலை’ வருமானம் அதிகமுள்ள வேலையைக் குறிக்கிறது; சேவை செய்யும் வேலையை அல்ல. நல்ல என்னும் பெயரடை ‘நன்மை தரும்’ என்னும் பொருளில் புறநானூற்றில் ( பாடல் 50) வருவதாகக் கொள்ளலாம். அரசின் முரசு கட்டிலில் களைப்பால் உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவர், தன்னை வாளால் வெட்டாமல் சாமரத்தால் விசிறிய அரசனின் செயலைத் தமிழால் தான் பெற்ற நன்மை என்று பொருள்படும்படி ‘நற்றமிழ்’ என்கிறார். நன்மை என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘நல்’தானே. ‘இதிலிருந்து ஒரு நல்ல பாடம் படித்துக்கொண்டேன்’ என்று சொல்லும் போது ‘நன்மை தரும் பாடம்’என்றுதானே பொருள்.
நல்ல தமிழின் புதிய பொருள்
‘தமிழால் என்ன நன்மை’ என்று பலர் கேட்கும் இக்காலத்தில், நல்ல தமிழ் என்ற சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை! சுத்தானந்த பாரதியின் ‘நல்ல தமிழ் எழுதுவது எப்படி?’ (1964/1943), அ.கி. பரந்தாமனாரின் ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ (2012/1945),
அ.மு. பரமசிவானந்தத்தின் ‘நல்ல தமிழ்’(1961), ரம்போலா மாஸ்கரனேஸ், வை. தட்சிணாமூர்த்தியின் ‘நல்ல தமிழ் எழுதுங்கள்’(2005), சீனி நைனாமுகமதுவின் ‘நல்ல தமிழ் இலக்கணம்’(2013) என்ற நூல்களின் தலைப்பில் உள்ள ‘நல்ல தமிழு’க்கு மேற்சொன்ன பொருள் இல்லை. இங்கு இந்தச் சொல்லின் பொருள் ‘இலக்கண விதிப்படி எழுதும் தமிழ்’என்பது. பல வகைத் தமிழில் இதுவே நல்ல தமிழ்; மற்றவை குறைத் தமிழ் என்னும் கருத்தை உள்ளடக்கியது.
இலக்கணமின்றி எந்த மொழியும் இயங்க முடியாது. மொழிகளின் இலக்கணம் வேறுபடலாம்; ஆனால், இலக்கணம் இல்லாத மொழி இல்லை, இலக்கணமற்ற ராகம் இல்லாததைப் போல. பேச்சுத் தமிழுக்கும் இலக் கணம் உண்டு; வட்டாரத் தமிழுக்கும் இலக்கணம் உண்டு. நல்ல தமிழ் இலக்கண விதிப்படி எழுதும் தமிழ் எனும்போது அது தமிழின் பழைய இலக்கணத்தின்படி எழுதும் தமிழைக் குறிக்கிறது. பழைய இலக்கணம் தொல்காப்பியர், இல்லையென்றால் பவணந்தி எழுதிய இலக்கண நூல்களில் உள்ள விதிகளைக் குறிக்கிறது. மொழியில் புதியன புகுவதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதால், ஒரு சில புதிய விதிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
நல்ல தமிழும் தூய தமிழும்
நல்ல தமிழும் தூய தமிழும் மொழிக் கருத்தாக்க அடிப்படையில் ஒன்றென்றாலும், மொழிக் கூறுகளில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னது, சந்தி தொடங்கி தமிழின் இலக்கண அமைப்பையும் பின்னது, சொல்லின் மூலத்தையும் முன்னிலைப்படுத்தும். ஆனால், ஒன்று மற்றொன்றை விலக்காது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொல்லலாம். இரண்டும் தோன்றத் தூண்டுகோலான சமூகக் காரணி களிலும் வேறுபாடு உண்டு.
தூய தமிழ்வாதம் சுதந்திரம் பெறவிருந்த இந்தியாவில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி உட்படத் தனியிடம் தேடியும், தமிழகத்தில் பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் அரசியல் எழுச்சியை நிலைநாட்டியும் எழுந்தது. நல்ல தமிழ்வாதம் சுதந்திர இந்தியா தமிழின் பயன்பாட்டுக்குத் தந்த கல்வி மொழி, ஆட்சி மொழி போன்ற புதிய வாய்ப்புகளை எதிர்கொள்ளும் நோக்கிலும், எழுத்துத் தமிழில் (முக்கியமாக நவீன இலக்கியத்திலும் இதழ்களிலும்) பேச்சுத் தமிழ் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் எழுந்தது. எழுதும் தமிழ்ப் புலவர்கள் கையிலிருந்து நழுவித் தமிழை நவீனப் பள்ளிகளில் கற்றுப் புதிய துறைகளில் எழுதப் புகுந்தவர்களின் கைக்கு வந்ததன் எதிர்வினையாக நல்ல தமிழ் முன்னிறுத்தப்பட்டது. சாதாரண மனிதனின் தமிழில் புலவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்ட சமூக மாற்றத்தை அ.மு. பரமசிவானந்தம் தன் நூலின் முன்னுரையில் தெளிவாகவே சொல்கிறார். நல்ல தமிழ் வாதத்தின் சமூகப் பின்னணி, நவீன காலத் தமிழின் தேவை நிறைவுசெய்யும்போது பழமையிலிருந்து விலகாமல் இருந்தாலே தமிழுக்குப் பாதுகாப்பு என்று புலவர்களை எண்ணவைத்தது. இவர்கள் தமிழ்க் காவலே தமிழ்க் காதல் என்னும் கருத்தாக்கத்தைப் போற்றி வளர்த்தார்கள். காவல் என்றால் கால்கட்டு வரும்; ஓட்டம் தடைப்படும் என்பது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை.
கருத்துப் பரிமாற்றத் திறன்
இந்தப் பார்வையால் தமிழின் கருத்துப் பரிமாற்றத் திறன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கட்டுரை எழுதும் போது அது மேலே சொன்ன பொருளில் நல்ல தமிழில் இருக்கிறதா என்பதே, அது சொல்ல வந்த கருத்தைச் சரியாக, துல்லியமாகச் சொல்கிறதா என்பதைவிட முக்கியமாகிறது, பிற துறை வல்லுநர்களை அவர்களுடைய புதிய அறிவைத் தமிழில் எழுதத் தயக்கம் காட்டவைக்கிறது. தமிழில் பல நடைகள் தோன்றுவதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.
நல்ல ஆங்கிலம் என்று சொல்லும்போது, அது இலக்கண விதிகளைப் பின்பற்றும் ஆங்கிலம்தான். ஆனால், இந்த விதிகள் பழைய ஆங்கிலத்தின் இலக்கண விதிகள் அல்ல. அவை தரப்படுத்தப்பட்ட, இன்றைய பேச்சில் வழங்கும் ஆங்கிலத்தின் விதிகள். அதற்கு மேலாக, கருத்தைச் சொல்லும் திறனும் அழகும் நல்ல ஆங்கிலம் என்ற சொல்லில் உள்ள நல்ல என்ற அடையில் அடங்கும். இந்தத் திறன் பழைய இலக்கண அறிவு அல்ல; இந்த அழகு ஒப்பனை செய்யும் அலங் காரம் அல்ல.
இக்காலத் தேவைக்கான தமிழ்
நல்ல தமிழுக்கு இன்று புதிய விளக்கம் தேவை. இது இலக்கணத்திலும் சொல்லிலும் புதிய தமிழ்; காலத்தின் புதிய தேவைகளை, அனுபவத்தை, அறிவை இயல்பாக வெளிப்படுத்தும் தமிழ். இது கருத்துப் பரிமாற்றத் திறனுக்கு முதன்மை தரும் தமிழ். புதுக் கவிதைக்குப் புதிய யாப்புடைய தமிழே பொருத்தம் என்றால், புது உரைநடைக்கும் பாட நூல்களுக்கும் புதிய இலக்கணத் தமிழே பொருத்தமானது ஆகும். வட்டத் துளைக்குள் சதுரக் கோலைச் சொருகுவது பொருந்தாத வேலை. துளைக்கேற்பக் கோலைச் செதுக்குவதைத் தவிர்க்க முடியாது. இன்றைய தேவைக்காக இப்படிச் செதுக்கிய தமிழே நல்ல தமிழ்.
இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசியத் துறையில் வருகைதரு பேராசிரியர். தொடர்புக்கு: eannamalai38@gmail.com
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
No comments:
Post a Comment