Saturday, 21 February 2015

வீழ்ச்சியடையும் தமிழகக் கல்வி! பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தமிழக அரசுக்கு சிபிஎம் மாநில மாநாடு வற்புறுத்தல்

சென்னை, பிப். 20 -
தமிழக கல்விப் பிரச்சனைகளில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வற்புறுத்தியது. இதுதொடர்பாக மாநாட்டில் ஜோ.ராஜ்மோகன் முன்மொழிய, சி.பாலச்சந்தர் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்தினால் கல்வி இன்று பெரும் சமூகப் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. வணிகமய நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தால் பல மட்ட பாகுபடுத்தும் கல்வி அமைப்பு மேலும் பலப்படுத்தப்பட் டுள்ளது. இது சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தியுள்ளது; கல்வியமைப்பை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளது.

ஏழை மாணவர்களின் புகலிடம்குறிப்பாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தான் ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களின் புகலிடமாக இன்றும் உள்ளது. இப்பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்துவதும், மேம்படுத்துவதும் தரமான கல்வி என்பதை அரசுப் பள்ளியில் உறுதிப்படுத்த வேண்டியதும் இன்றைய அவசியமாக உள்ளது.

தமிழகத்தில் 36,959 அரசுப் பள்ளிகளில் 56,55,628 மாணவர்களும், 8,407 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31,12,603 மாணவர்களும், 11,462 தனியார் சுயநிதி பள்ளிகளில் 45,96,909 மாணவர்களும், என மொத்தம் 56,828 பள்ளிகளில் 1,33,65,140 மாணவர்கள் தமிழக பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கட்டிடம், வகுப்பறை, ஆய்வகம், சுத்தமான குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் போன்ற தேவைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டியுள்ளது. 

தமிழகத்தில் 60 சதவீதம் பள்ளிகளில் கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது. மேலும் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களை வகுப்பிற்கொரு ஆசிரியர், பாடத்திற்கொரு ஆசிரியர் என்ற அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மேலும் அலுவலர்கள், உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவை சந்தித்து வருவது கவலையளிக்கிறது.

சரிவைத் தடுக்க முடியாதது ஏன்? 

தமிழக அரசு 14 வகையான நலத்திட்டங்களை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் மாணவர் எண்ணிக்கை சரிவை தடுக்க முடியாதது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஆகவே உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து, தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1100 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 2000 த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பயின்று வருகின்றனர். எனவே இப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்திடவும், மூடப்படும் நிலையிலுள்ள பள்ளிகளை தனிக்கவனம் செலுத்தி பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளை அறிமுகப்படுத்தி உண்மையான பிரச்சனையை மூடி மறைக்க திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. 

தாய்மொழி வழிக் கல்வியை உறுதிப்படுத்துவதோடு, ஆங்கில மொழியை ஒரு பாடமொழியாக சிறப்பு பயிற்சியோடு, கற்றுக் கொடுத்திட வேண்டும்; சமச்சீர் பாடப்புத்தகங்கள் மட்டுமே சமச்சீர் கல்வியாகாது; ஆகவே முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களையும் தாண்டி தனியார் பள்ளிகள் தாங்களே தயாரித்த வேறு பல புத்தகங்களையும் திணிக்கின்றனர். இந்த பாடச்சுமை தவிர்க்கப்பட வேண்டும். மழலையர் கல்வி மிகப்பெரும் வணிகமயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் தமிழகத்தில் முன்பருவகல்வியை அரசே துவங்கிட வேண்டும் என்றும் மேலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்திடவும் அரசின் விதிகளை மீறிசெயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வ தோடு, இப்பள்ளிகளை முறைப்படுத்த வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. 

மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக!

அரசின் தவறான கல்விக் கொள்கைகளால் உயர்கல்வி பெறுவது பெரும் சவாலாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி வணிகமயநடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக உயர்கல்வி அமைப்புகளை கலைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. 

மேலும் அந்நிய முதலீட்டை கல்வித் துறையில் அதிகப்படுத்தவும் முயற்சித்து வருகிறது. அந்நியக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கவும் முயற்சிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க் கின்றது. மேலும் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமெனவும், தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டணம், மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு என எதிலும் அரசின் தலையீடு இல்லாமல் மிகப்பெரும் கல்வி வணிகம் நடைபெறுகிறது. ஆகவே தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் சமூகக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சட்டம்இயற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

தரமான ஆராய்ச்சிகள் எங்கே?

உயர்கல்வியின் மையமாக திகழ்கின்ற பல்கலைக்கழகங் களில் தரமான ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிக்கப்படாமல் பின்னுக்குதள்ளப்பட்டுள்ளது. ஊழல் முறைகேடுகளாலும் நிர்வாக சீர்கேடு களாலும் ஆசிரியர்- மாணவர் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் சந்தித்து வருகின்றன இவைகள் தடுக்கப்பட வேண்டும். தரமான ஆராய்ச்சிகள் வெளிவருவதற்கான முறையில் நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

அரசுக் கல்லூரிகள்

தமிழகத்திலுள்ள 72 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். பேராசிரியர் மற்றும் பேராசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை துவங்கிட வேண்டும். தமிழக அரசால் கடந்த சில ஆண்டுகளில் துவங்கப்பட்ட 34 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல் லாமல், திருமண மண்டபங்களிலும், அரசுப் பள்ளி வளாகங்களிலும், வாடகைக் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகளை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்திட வேண்டும். ஏற்கெனவே நிதி நெருக்கடிகளால் தள்ளாடும் பல்கலைக்கழகங்களின் தலையில் சுமத்துவது ஏற்கத்தக்கது அல்ல, ஆகவே இக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக அரசு ஏற்று நடத்திட வேண்டும். 134க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கலை-அறிவியல் கல்லூரி களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை மீறி வசூலிக்கப்படுகிறது. இதுதடுக்கப்பட வேண்டும் அரசின் பெரும் நிதியை பெற்று வளர்ந்த இக்கல்லூரிகளிலும் அரசு பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு சுயநிதி பாடப்பிரிவுகள் பெரும்பாலான கல்லூரிகளில் துவங்கப்பட்டுள்ளன. இவைகள் தடுக்கப்பட வேண்டும். 

அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருக!

மேலும் இக்கல்லூரிகளில் ஊழல் முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகளும் தொடர்கின்றன.குறிப்பாக ஈரோடு சிஎன்சி, கோவை சிபிஎம் கல்லூரி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் தொடரும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு இக்கல்லூரிகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோடு அரசே ஏற்று நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

அரசாணை 92 

மேலும் உயர்கல்வி பெறும் எஸ்.சி, எஸ்.டி, மாணவர்கள் துணைத் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்விச் செலவினை அரசே ஏற்பதாக அரசாணை 92 வெளியிடப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. ஆகவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அரசு மாணவர் நலவிடுதிகளில் மாணவர்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், கல்வி கற்பதற்கான ஆரோக்கிய மான சூழலையும் உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புற்றீசல்கள்

மேலும் தமிழகத்தில் 7 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 15 அண்ணா பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 584 என்ற எண்ணிக்கையில் புற்றீசல்கள் போல் பல்கி பெருகியுள்ளன. 

அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்திட வேண்டியுள்ளது. தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக கட்டணம் வசூலிக்கின்றன, தகுதிவாய்ந்த ஆசிரியரும் இல்லாத சூழலில் போதுமான கட்டமைப்பு வசதிகளற்றும் உள்ளன. தேவையற்ற கட்டுப்பாடுகள், அபராதம், பழிவாங்கல் நடவடிக்கை என்று ஜனநாயகமற்ற சூழலே உள்ளது. இந்நிலை மாற்றப்பட தமிழக உயர்கல்வித்துறையும், அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், அரசு பாலிடெக்னிக்கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். 

கிரிமினல் வழக்குப் பதிவு செய்க!

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் இக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து முறைகேட்டில் ஈடுபடுகிற கல்வி முதலாளிகளின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைத் தாண்டி, பகல் கொள்ளை நடத்துகின்றனர். இவை முழுமையாக தடுக்கப்பட வேண்டும். 

மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துக!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் புதிய அரசு சட்டக் கல்லூரிகள், அரசு மருத்துவ கல்லூரிகளை, அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநாடு வலியுறுத்துகிறது. பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திட மாணவர் பேரவை, தேர்தல்களை நடத்திட வேண்டுமெனவும், பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர் களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment