Sunday, 22 February 2015

நோயை விரட்டும் ஒரு புத்தகம்

தமிழில் நகைச்சுவை எழுத்து அருகி வருகிறது. நகைச்சுவை என்ற பெயரில் வெளிவரும் நூல்கள் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. வாழ்வியலை உள்வாங்கி எழுதப்படும் நகைச்சுவை எழுத்துக்கு காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உண்டு. அத்தகைய ஒரு அரிய நூலாக வெளிவந்திருக்கிறது டாக்டர் ஜி.ராமானுஜம் எழுதியுள்ள நே(h)யர் விருப்பம்.டாக்டர் ராமானுஜம் ஒரு மனநல மருத்துவர்.

பொதுவாக மருத்துவர்கள் சிரிப்பது அரிது. அண்மையில் என்னுடைய மகனுக்கு குடல்வால் அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். சிகிச்சை செய்த மருத்துவர் அந்தத் துறையில் மிகப்பெரிய நிபுணர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களில் அவர் பேசியது மூன்றே வார்த்தைகள்தான். மொழியின் வழியாகவும் பேச முடியும் என்பதையே மறந்துவிட்டவர் போல சைகை மொழியிலேயே பேசினார்.

சில மிருக வைத்தியர்கள்கூட சிகிச்சை பெறும் விலங்கிடம் ஒரு சில வார்த்தைகள் பேசுவார்கள். ஆனால் இவர் சிகிச்சை பெறுபவர் ஒரு மனிதர் என்று கருதியதாகவே தெரியவில்லை. கடைசியில் போய்வருகிறோம் நன்றி என்று கூறியபோது அவர் முறைத்த முறைப்பு கடன் வாங்கிவிட்டு நீண்டகாலமாக கொடுக்காதவனை பார்ப்பது போல இருந்தது.

எல்லோருமே வயிற்றுக்காகத்தான் பிழைக்கிறோம். ஆனால் இவர் வயிற்றை கிழித்து பிழைக்கிறார். ஏதோஅவருடைய வயிற்றுப் பிழைப்பு ஓடுகிறது. அவரைப் பார்க்கும்போது ஏதோ தீராத வயிற்றுவலியில் சிரமப்படுபவர் போல காணப்பட்டார்.டாக்டர் ராமானுஜம் எழுதியுள்ள இந்த நூலைப் படிக்கும்போது பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. வயிற்றுவலி டாக்டர்யாருடனாவது உடன்பாடு வைத்திருப்பார் போலிருக்கிறது. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரி யாதா என்று கவியரசரின் பாடல் ஒன்று துவங்கும். இந்த நூலில் முதல் சொற்சித்திரம் மறக்கத் தெரிந்த மனமே என்ற தலைப்பில் துவங்கு கிறது. மருத்துவர்கள் தங்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நோயாளிகள் விரும்புவார்கள்.

ஆனால் மனநல மருத்துவர்கள் தங்களுடைய பெயரை ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடாது என்றே நோயாளிகள் விரும்புகிறார்கள் என்றார். மருத்துவர்களின் கையெழுத்தை வைத்து ஏராளமான நகைச்சுவை துணுக்குகள் உண்டு. ஒருமுறை ஒருமருத்துவர் எழுதிய சீட்டைக் கொண்டுபோய் மருந்துக்கடையில் கொடுத்தபோது, சார் அது மருந்தின் பெயரல்லஉங்களுடைய பெயர் என்று அவர் கூறியிருக்கிறார் என்றுராமானுஜம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மருந்துக்கடைக்காரர் பிழைக்கத் தெரியாதவர் போலிருக்கிறது.

நல்ல அனுபவஸ்தாராக இருந்திருந்தால் ஏதாவது ஒரு மருந்தை எடுத்து வந்தவர் தலையில் கட்டியிருப்பார். தெளிவாக மருந்தின் பெயரை எழுதிக்கொடுத்தால் போலி டாக்டரோ என்று சந்தேகப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.பெயரியல் பேராசான்கள் சிலர் தொலைக்காட்சியில் படுத்தும் பாட்டுக்கு அளவே இல்லை. பெயரியல் நிபுணர்கள் யாரும் இப்போதுள்ள பெயர் நன்றாக இருப்பதாக கூறியதே இல்லை. ராஜாராம் என்ற சர்க்கரை நோயாளியின் பெயரில் ஒரு சு சேர்க்கச்சொல்லி பெயரியல் நிபுணர் கூறியிருக்கிறார்.

இவரோ ஆர்வக்கோளாறில் இரண்டு சுசு சேர்த்துவிட்டார். இதனால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து ஐசியு வில் சேர்க்கும்படியாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தபோது சிரித்ததில் எனக்கு கொஞ்சம் சர்க்கரை குறைந்தது போல தெரிந்தது.ஒரு சில நோயாளிகள் மருத்துவர்களை கடுமையாக வேலை வாங்குவார்கள். மூட்டுவலிக்காக மருத்துவரிடம் சென்ற மூதாட்டி ஒருவர் `நானும் எத்தனையோ டாக்டர்களிடம் காட்டிவிட்டேன், யாருமே இந்த குழாயை மூட்டில் வைத்து பார்க்கவேயில்லையே’ என்று வினவ அந்த மருத்துவர் அவரது மூட்டில் ஸ்டெதெஸ்கோப் வைத்து பார்த்திருக்கிறார்.

அப்போதும் கூட பழக்கதோஷத்தில் `மூச்சை நல்லா விடுங்க’ என்று கூறியிருக்கிறார்.எந்த இடத்தில் வலிக்கிறதோ அந்த இடத்தில் ஊசி போடும் கைராசி டாக்டர்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒரு நோயாளி, வலது கையில் வலி என்று சொன்னேன், ஆனால் இந்த டாக்டர் இடது கையில் ஊசி போடுகிறார் என்று குறைகூறியிருக்கிறார்.

மருத்துவம் ஒரு அற்புதமான விஞ்ஞானம். ஆனால்சிலர் ஜோதிட நேரத்தை கணித்துக்கொண்டு அதற்கேற்பஅறுவை சிகிச்சை செய்யச்சொல்கிறார்கள். மருத்துவமனைகளில் டியூட்டி டாக்டர்கள் இருப்பது போல டியூட்டி ஜோதிடர்களும் இருக்கலாம் என்று யோசனை கூறுகிறார் டாக்டர் ராமானுஜம். ஒருவர் குடிச்சு குடிச்சு கை ரொம்ப நடுங்குது என்று மருத்துவரிடம் வந்தாராம். அதற்கு மருத்துவர் கவலைப்படாதீங்க,

உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திவிடலாம் என்றாராம். பதறிப்போன அவர், அதை நிறுத்த வேண்டாம். கைநடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க, நடுங்கி நடுங்கி சரக்கு கீழே சிந்திவிடுகிறது என்றாராம்.ரயிலில் நாமும்தான் போகிறோம். ஆனால் டாக்டர் ராமானுஜம் எவ்வளவு நகைச்சுவையான விசயங்களை கவனித்திருக்கிறார் என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டவுடன் பால், பழம் அருந்தி பல் விலக்கி, இரவு உடைக்கு மாறிபழைய உடையை மடித்து வைத்து படுக்கை விரித்து தலைக்கு, காலுக்கு என்று இரண்டு காற்றூதும் தலைய ணைகளை ஊதி படுக்கும்போது திருச்சி தாண்டியிருக்கும். பிறகு வரிசைக்கிரமமாக மீண்டும் அனைத்தையும் எடுத்துவைப்பார்கள் என்று எழுதியிருக்கிறார். காசிக்கு ரயிலில் போன பாட்டி ஒருவர், நான் போகும் இடமெல்லாம் கக்கூசும் கூட வருமா என்று அலுத்துக் கொண்டாராம்.

நான் சில சமயங்களில் ரயிலில் செல்லும்போது ஒரு சில குடும்பங்கள் ஒரு ஓட்டலையே கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அதை விடிய விடிய அவர்கள் ரசித்து சாப்பிடுவதைப் பார்க்கும்போது நமக்கு தூக்கம் போய்விடும். இன்னும் சில குடிகாரர்கள் குடிப்பதற்கென்றே ரயிலில் ஏறுவதுண்டு. ரயிலிலும் கூட அரசு அனுமதிபெற்ற பாரை துவக்கினால் லாபகரமாக இருக்கும்.உபதேசம் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது. சில பேர் இலவச அறிவுரை வழங்குவதை ஒரு பிறவிப் பணியாகவே செய்து வருவார்கள். கடை வைக்க நினைத்த ஒருவரிடம் மற்றொருவர் இந்தப் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டே கிடையாது. நீங்கள் வைத்தால் ஓஹோ என்று ஓடும். போட்டியே இருக்காது என்றார். இதை நம்பி அவரும்ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தப் பகுதியில் வீடுகளும்இல்லை என்பதை அறிவுரை வழங்கியவர் கூறாமல் விட்டுவிட்டாராம். உபதேச பக்தர்கள் அதிகம் காணப்படுவது மருத்துவத்துறையில்தான் என்கிறார் டாக்டர். சிலர் சொல்கிற மருத்துவம் இஞ்சி போல எளிமையாக இருந்துவிடும். வேறு சிலர் சிறுகுறிஞ்சான் இலை, ராட்சச ரணகள்ளி வேர் என்று தெரியாத பேர்களைத் தேடி மூலிகை மருந்தைத் தேடிய அனுமாரைப்போல அலையவிடுவார்கள் என்றார். இந்த கட்டுரைகளுக்கு ஓவியங்கள் தீட்டியுள்ள தேவாவுக்கும் நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்க வேண்டும். எழுத்துக்களின் வழியாக ஆசிரியர் கொண்டுவரும் உணர்வை கோடுகளின் வழியாக இவர் கூடுதலாக்குகிறார்.ஒரு பிரச்சனைக்கு உதவ பலர் முன்வருவார்கள் என்றால் அது நீங்கள் ஒருவரே சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் இந்த மனநல மருத்துவர்.நல்ல வாசிப்பு அனுபவம் உள்ள மனநல மருத்துவரான இவர் எழுதியுள்ள இந்த நூலை படித்தால் நீங்கள் ஒரு மனநல மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. மொத்தத்தில் இந்த புத்தகம் அவருக்கு நஷ்டம், நமக்கு லாபம்.
 
நோயர் விருப்பம்ஆசிரியர்: டாக்டர் ஜி.ராமானுஜம் எம்.டி.வெளியீடு : பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 600 018.பக்: 80, விலை : ரூ.50 /-)

No comments:

Post a Comment