Thursday, 10 September 2015

வீதியில் விதைக்கப்பட்ட நம்பிக்கை

அறிவொளி இயக்கத்தின் வெற்றி என்பது கல்வியைத் தாண்டிய சாதனை

அயர்லாந்து புரட்சியை ‘மகோன்னதமான அழகு’ என்று வர்ணித்தார் கவிஞர் யீட்ஸ். ஒவ்வோர் இயக்கமும் ஒரு கவிதைதான். அந்த வகையில் அறிவொளி இயக்கமும் ஓர் அழகுதான்; கவிதைதான். கால் நூற்றாண்டுக்கு முன் 1991-ல் இதே போன்ற ஒரு செப்டம்பரில் - புத்தம் புது அனுபவமாய், கிராமத்து வீதிகளில் பிறந்தது அறிவொளி இயக்கம். எழுத்துகளும் வார்த்தைகளும் உயிர் பெற்ற அனுபவம் அது.

எளிது எளிது ட, ப எளிது

‘பட்டா’, ‘படி’ இரண்டும்தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள். தமிழில் எழுதச் சுலபமான எழுத்து ‘ட’; அடுத்து ‘ப’. எனவே, இதுவரை எழுத்து அறியாதிருந்த வரும், ‘பட்டா’, ‘படி’ ஆகிய இரண்டு வார்த்தைகளையும் ஒரு தவறும் இல்லாமல் எழுதிக் காட்டினர். களைத்த முகங்களில் எழுத்தின் வெளிச்சம் மிளிரத் தொடங்கியது. “ரேகை வச்ச வெரலுக்கு / றெக்கை முளைச்ச சந்தோசம்” என்று இந்தப் பரவசத்தைக் கவிதை வரிகளாக்கினார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.

எத்தனை மாற்றங்கள்

கட்டிடங்களுக்குள் கட்டுண்டு கிடந்த கல்வி வீதிக்கு வந்ததே முதல் பெரிய மாற்றம். வீதியில் ஒரு சுதந்திரம் இருந்தது. புத்தகங்களுக்குள் கட்டுப்படாத பாடத்திட்டம் இருந்தது. பாட்டும் சிரிப்புமான ஒரு வகுப்பறை இருந்தது. கல்வி வியாபாரிகளின் கவனம் விழாத தூரம் இருந்தது. மாற்றத்துக்கான நம்பிக்கை இருந்தது.

கல்வியில் ஆதிக்கம் செலுத்திய மத்திய வர்க்கச் சிந்தனையும் மொழியும் உடைந்த இடம் அறிவொளி. “…வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி என்னுரையை முடிக்கிறேன்” என்று அறிவொளி நிகழ்ச்சிகளில் சம்பிரதாயமாகப் பேசினால் யாரும் கைதட்ட மாட்டார்கள்; சிரிப்பார்கள்.

விவாதப் பயிற்சிப் புத்தகம் ஒன்றைத் தயாரித்தோம். ‘ஒரு முடிவெடுப்போம்’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். ஒவ்வொரு பயிற்சியிலும் ஒரு பிரச்சினையைச் சொல்லி அதற்கு நான்கு தீர்வுகளை முன்வைத்தோம். தீர்வுகள் தொடர்பாக மக்கள் பேச வேண்டும். ’யாருக்கு மாலை?’ என்பது ஒரு பயிற்சி. நான்கு விதமான மாப்பிள்ளைகளை விவரித்து, “நம் வீட்டுப் பெண்ணுக்கு யாரைத் தேர்வுசெய்வீர்கள்?” எனக் கேட்டோம்.விவாதம் தொடங்கியதுமே “ஆமா! இப்படித்தான் மாப்பிள்ளை கள் வரிசை போட்டு வாரானுகளாக்கும்! வீட்ல பொம்பளப் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிப் பாருங்க! அப்பத் தெரியும்!” என்று சொல்லி விவாதத்தை முடித்தார் ஒரு மூதாட்டி. மூதாட்டி விட்டெறிந்த கல்லில் உடைந்து சிதறியது மத்திய வர்க்கச் சிந்தனைத் தளம்.



எத்தனை மலர்ச்சிகள்

நகரங்களில் பல வீடுகளில் பேச்சுச் சத்தமே கேட்பதில்லை. உறவினர் வருகையும் இல்லை. நம் வகுப்பறைகளும் இப்படித்தான் ஆகிவிட்டன. பேச்சு நிறைந்த வீடுகளும் சில உள்ளன- இந்தக் காலத்தின் அதிசயங்களாக. அறிவொளி - பேச்சு நிறைந்த வீடு போல. “குட்டப் பிள்ளைக்குக் குருணி நகை. அது என்ன?” என்று தொண்டர் விடுகதை போடுவார் (விடை: வெங்காயம்). பதில் வராது. ‘ஒம்பது பேருக்கு ஒரே குடுமி. அது என்ன? நீ சொல்லு’ என்று பதில் விடுகதை போடுவார்கள் கற்போர். (விடை: வெள்ளைப் பூண்டு). பஞ்சமில்லாமல் பேச்சும் சிரிப்பும் வகுப்பில் நிறைந்திருக்கும்!

ஒரு விதத்தில் ‘அறிவொளி’ என்பது பெண்களின் இயக்கம். படித்தோரும் படிப்பித்தோரும் பெரும்பாலும் பெண்களே! வீதியில் உட்கார்ந்து பலரும் பார்க்கப் படிப்பது ஆண்களுக்கு கவுரவப் பிரச்சினையாக இருந்தது. கற்றுக்கொடுத்த பெண்களில் பெரும்பாலோர் எட்டாம் வகுப்பு வரை படித்து நின்றவர்கள். வீட்டின் தினசரித் தேக்கங்களுக்குள் சிக்கியவர்கள். அங்கீகாரம் அற்றவர்கள். அவர்களுக்கான வாய்ப்பாக அமைந்தது அறிவொளி.

மூளைக்கோளாறு என்று சொல்லப்பட்டு வீட்டுக்குள் பூட்டப்பட்டிருந்தாள் வளர்மதி. அவளை அறிவொளி விடுதலை செய்தது. தொண்டர் ஆனாள். “என்ன சார்? பாடப்புத்தகத்தில அலுவலகம் அலுவலகம்’னு வருது. ஆபீஸ்’னு சொன்னாத்தான் சார் மக்களுக்குப் புரியுது” என்று எங்கள் பாடமொழியின் மீது அம்பெறிந்தவள் வளர்மதி; “நாங்கள் வாய்விட்டுச் சிரித்ததே அறிவொளியில்தான்” என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதியவள் அவள்.

எத்தனை தடைகள்

பள்ளிப் பிள்ளைகள் கட்டிடங்களுக்குள் கல்வி பெறுவது, ஸ்டவ் தீ பற்றிக்கொள்வது போல; மரத்தடிகளில் உழைப்பாளி மக்கள் கல்வி பெறுவது காடு தீ பற்றிக்கொள்வது போல - என்று அறிவொளியில் பேசுவோம். “புத்தகம் கையில் எடுத்துவிடு; அதுவே உன் போர்வாள்!” என்று கலைப் பயணங்களில் பாடுவோம். இது போதாதா ஆட்சியாளர்கள் மிரள?

அறிவொளிப் பயணம் தடைகள் நிறைந்த பயணமாகவே இருந்தது. அறிவொளியின் ஒவ்வோர் அசைவின் மீதும் சந்தேகம் இருந்தது. பாடப் புத்தகத்தில் இருந்த பசி, குடிசை என்ற வார்த்தைகளின் மீது சந்தேகம் இருந்தது. பாரதியார், பாரதிதாசன் பாடல் வரிகள் மீது சந்தேகம் இருந்தது. அறிவொளி அலுவலகங்கள் பல திடீர் திடீர் என்று பூட்டப்படுவதுண்டு. இயற்கையான தடைகளும் ஏராளம் இருந்தன. எரியாத தெருவிளக்கு, மழைக்காலங் களில் ஒதுங்கக் கட்டிடம் இல்லாமை- இரண்டும் நிரந்தரப் பிரச்சினைகள். சாதிக் கலவரம்- ஆபத்தான நெருப்பு! பல நாள் பாடுபட்டு, பல ஊர்களில் உருவாக்கிய மையங்கள் எல்லாம் ஒரே நாளில் உருக்குலைந்து சாயும். மிகப் பரிதாபமானது தொண்டர்களின் மரணம்தான். பாம்பு கடித்து மாண்ட தொண்டர்களைப் பற்றிய செய்தி வந்துகொண்டே இருக்கும்.

எத்தனை மதிப்பீடுகள்

அறிவொளி தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் பல. பலர் ஆளுக்கொரு தராசை எடுத்து அறிவொளியை மதிப்பிட வந்தார்கள். எத்தனை பேர் கையெழுத்து போடத் தெரிந்துகொண்டார்கள் என்ற ஒரு கேள்வியை அவர்களில் பலர் தாண்டவில்லை. அடிப்படைக் கற்றல் அளவுகளைப் பொருத்திப் பார்க்க வந்த நிபுணர்களும் உண்டு. எத்தனை வளர்மதிகள் விடுதலை பெற்றார்கள் என்பதை இவர்கள் எப்படி மதிப்பிடுவார்கள்?

ஒரே ஒருநாள் அறிவொளி மையம் வந்து பட்டா, படி எழுதிப் போன கற்போர்; சில நாட்கள் தொடர்ந்து வந்து கையெழுத்து போடக் கற்றோர், தட்டுத் தடுமாறிப் பத்திரிகை வாசிக்க முன்னேறியவர்கள்; தாமே தொண்ட ராக வளர்ந்தவர் என அறிவொளியின் விளைச்சல், பல நிலைகளில், பல வடிவங்களில் இருந்தது.

எதற்காகக் கல்விக்கூடங்கள்?

அறிவொளி நின்றதுமே, அதனை இயக்கிய அற்புதமான பெண்கள் பலர் கண் பார்வையில் இருந்து விலகி எங்கெங்கோ சென்றனர். அன்றாட வாழ்வு மீண்டும் வந்து கவ்வியது. வேலையும் திருமணமும் அவர்கள் சிரித்த சிரிப்பை அபகரித்துச் சென்றன. துர்மரணங்களும் நிகழ்ந்தன.

கல்விக்கூடங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக மட்டுமல்ல - பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவும்தான் என்று நாங்கள் புரிந்துகொண்டதே அறிவொளியில்தான்.

இன்றும் இந்தியாவில் ஆண்டுக்கு 1,35,000 குழந்தைகள், பிச்சையெடுக்கவும், முன்பின் தெரியாத நகரங்களில் வீட்டுவேலை பார்க்கவும், பாலியல் தொழிலுக்காகவும் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் யார்? பெரும்பாலோர் பள்ளிக்குச் செல்லாதவர்கள்; பள்ளியில் இருந்து இடைவிலகியவர்கள்.

பள்ளி என்றதும் ‘கற்றல்’ குறித்தே பேசுகிறோம். பள்ளியோடு இணைந்தது கற்றல் மட்டுமல்ல; குழந்தை களின் பாதுகாப்பும்தான். பள்ளிகளில் உள்ளவரை அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பிள்ளைகளைத் தேர்வு வெற்றி தோல்விகள் முடிவின் பெயரால், ஒரே வகுப்பில் வைக்கவும் கூடாது; பள்ளியை விட்டு வெளியேற் றவும் கூடாது என்ற கல்வி உரிமைச் சட்டம் எத்தனை அவசியமானது என்பதை இன்றைய சூழலில் மீண்டும் நினைவுபடுத்தி எச்சரிக்கிறது எழுத்தறிவு இயக்கம்!

- ச. மாடசாமி
அறிவொளி முன்னாள் ஒருங்கிணைப்பாளர்,
 ‘சொலவடைகளும் சொன்னவர்களும்’ நூலின் ஆசிரியர். 

தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

1 comment:

  1. உண்மையான அனுபவத்திலிருந்து வெளிவந்த கருத்துகள். அறிவொளி இயக்கம் மறைந்ததா, கொல்லப்பட்டதா.

    ReplyDelete