Monday, 14 September 2015

மாற்றுக் கல்வியின் பிதாமகன்

செப்.14: இன்று ஜான் ஹோல்ட் நினைவு தினம்


குழந்தைகளாக இருந்தபோது நாம் மிகவும் அதிருப் தியாக உணர்ந்த தருணங்கள் ‘நாம் நம்பிக்கைக்குரிய வர்களாக இல்லை’ என்று நமது பெற்றோரும் ஆசிரியர்களும் வெளிப்படுத்திய தருணங்கள்தாம். இதை நாம் மறுக்கப்போவதில்லை.

ஆனால் இன்று, நம் குழந்தைகளை நாம் நம்புகிறோமா என்ற கேள்வியை எழுப்பியவர் ஜான் ஹோல்ட். கற்றல், கற்பித்தல் தொடர்பாகப் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்த அமெரிக்கக் கல்வியாளர். “குழந்தைகளை நம்புங்கள்” என்பதுதான் அவரது சிந்தனைகளின் அடிப்படை.

குழந்தைகள் ஏன் தோற்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் ‘பயம்’ என்று பதில் கூறுகிறார். குழந்தைகள் தேர்வில் தோல்வியடைவதற்கு மொத்தக் காரணமும் பள்ளிகள் என்கிறார். இதற்காகப் பல ஆண்டுகள் குழந்தைகளை அணுகி ஆய்வு செய்து ‘எவ்வாறு குழந்தைகள் தோற்கிறார்கள்?’ என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.

கற்க விரும்பும் விலங்கு

‘எவ்வாறு குழந்தைகள் கற்கிறார்கள்?’ இது அவரது இரண்டாவது புத்தகம். அதில் “மனிதன் இயல்பாகவே கற்க விரும்பும் விலங்காவான், தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் விடப்பட்டால் அவனால் அதிகம் கல்வி கற்க முடியும்” என்கிறார். ஒரு குழந்தையைக் குழந்தை மனம் கொண்டவர்களாலேயே எளிதில் அணுக முடியும். கற்றல் என்பது குழந்தையின் மீது திணிக்கப்படும், ஏவப்படும் பணி அல்ல. அது குழந்தைகளின் மூச்சு என்கிறார்.

குழந்தைகளின் கற்றல் பள்ளி செல்வதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. அதாவது, மூன்று வயதுக்கு முன்பே குழந்தைகள் தாமாகவே கற்றலைத் தொடங்குகின்றன என்பதை ஏராளமான அனுபவங்கள் வழி நாட்குறிப்பாகத் தனது இரு புத்தகங்களில் எழுதிச் செல்கிறார்.

தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகள், தனது குழந்தைகளின் செயல்பாடுகளை நுட்பமாகக் கவனித்து ஆய்வு செய்து, தனது சிந்தனைகளை உருவாக்கினார். இதனை ஆசிரியராகத் தான் பணியாற்றிய பள்ளிகளில் எதிரொலிக்கச் செய்து நிறுவியது அவரது தனிச் சிறப்பாகும்.

இளமையில் கல்

“மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைப் பருவத்தில்தான் அவர்களுடைய சிறந்த கற்றல் நிகழ்கிறது. வளரும் குழந்தைகளைவிட இந்த இளம் குழந்தைகளே சிறப்பாகக் கற்க முடியும். ஏனெனில், அவர்கள் தமது மூளையைத் தனிச் சிறப்பான முறையில் பயன்படுத்துகின்றனர்’’ என்று ஓர் உண்மையை, தனது குழந்தைகளின், மற்றவர்களது குழந்தைகளின் அனைத்து விதமான நுட்பமான கற்றல் முயற்சிகள், விளையாட்டுக்களை எல்லாம் தினசரி கூர்ந்து கவனித்துப் பதிவுசெய்திருக்கிறார் ஜான் ஹோல்ட்.

குழந்தைகளின் படைப்புத் திறனைத் தற்போதைய தேர்வு முறைகள் தடுப்பதாகக் கூறும் அவர், பெரிய 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தேர்வு நடப்பதாகக் குற்றம் சாட்டினார். அது மட்டுமல்லாமல், மிகப் பெரிய பள்ளிகள், நிறுவனங்களாக உயர்ந்து வணிக முத்திரை பெற்றுப் பல இடங்களில் தொடர் பள்ளிகளைத் தொடங்கும் கல்வி நிறுவனங்கள் ஆபத்தானவை என்பதையும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார்.

அதே போல, குழந்தைகள்மீது பெற்றோர் செலுத்தும் அதிகாரத்துக்கு இரண்டே இரண்டு காரணங்கள் என்கிறார். (1) குழந்தைகளைவிட நாம் அதிக அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ற எண்ணம் (2) பொருளாதாரரீதியாகக் குழந்தைகள் நம்மைச் சார்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணம்.

அனைத்துக் குழந்தைகளுக்குமே கற்றல் ஆர்வமும் படைப்புத் திறனும் ஏறத்தாழ சமமாக இருக்கின்றன. அவர்களின் படைப்புத்திறனுக்கு ஊக்கம் அளிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் என்கிறார். இதனை மிகவும் உன்னதமான அனுபவங்கள் மூலம் தனது வாழ்நாளிலேயே நிரூபித்து உலகின் கவனத்தை ஈர்த்தார். இதற்கென விளையாட்டுகள், சோதனைகள், பேசுதல், வாசித்தல், கலை, கணிதம் எனப் பன்முகக் குழந்தை ஆற்றல்களை இனம் கண்டு சோதனைகள் நடத்தி வெற்றி கண்டுள்ளார். குழந்தைகளைத் திட்டுவதையும் அடிப்பதையும் கடுமையாக வெறுத்தார். இதற்காகக் கடுமையாகப் போராடினார்.

“பள்ளிக்கூடங்களை எனது வாழ்நாளுக்குள் மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது. அவை இப்படியே இருப்பதைத்தான் அரசாங்கமும் சமூகமும் விரும்புகின்றன” என்று குறிப்பிட்டுப் பேசிய அடுத்த நாளே ஆசிரியர் பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் கல்வி எவ்வளவு கீழ்த்தரமாகவும், வன்கொடுமை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை அவரது நூல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன.

கல்வியைக் குழந்தைகளின் விருப்பத்துக்கும் சுதந்திரத்துக்கும் விட்டுவிட அரசுகள் ஒருக்காலும் சம்மதிக்காது என்பதைக் கண்ட ஜான் கால்ட்வெல் ஹோல்ட், பள்ளிக்கே செல்லாமல் இருப்பதுதான் அதிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்.

இவரது சிந்தனைகளுக்கு ஐரோப்பாவில் பெரும் மதிப்பு உருவானது. இங்கிலாந்தில் ஜான் ஹோல்டின் சுதந்திரமான கல்வி முறையிலும், பள்ளிக் குழந்தைகள் உரிமையிலும் நாட்டம் கொண்ட தேசியப் பள்ளிக் கட்டமைப்பு 1972-ம் ஆண்டு, உலகின் பள்ளி மாணவர் உரிமை கோரும் முதல் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில், குழந்தைகள் உரிமை மீட்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் உலகெங்கும் உள்ள கல்வி ஆர்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாநாட்டுத் தீர்மானங்கள் கீழ்க்கண்ட நான்கு முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்துத் தீர்வு காண வலியுறுத்தியது.

அடிப்பது தவறு

மாணவர்களை அடிப்பது குற்றமாக்கப்படவும் உணவு இடைவேளையோடு, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆசுவாசப்படுத்தும் இடைவேளை கோரியும், இடைவேளையின்போது பள்ளி வளாகத்தினுள் எங்கும் சுற்றித் திரியும் சுதந்திரம் வேண்டுமென்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பலனாகவே இன்று உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளைத் திட்டுவதும் அடிப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இன்றி வளர்தல்' என்ற இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார். மேலும், வயலின் இசைக் கலைஞராகவும் இருந்த ஜான் ஹோல்ட், வயலின் இசைத் துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுவந்தார்.

ஜான் ஹோல்ட் 1923-ல் நியூயார்க் நகரில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் உலக அரசு இயக்கத்தின் பல பகுதிகளில் அவர் பணியாற்றி, இறுதியாக ஐக்கிய உலகக் கூட்டாட்சி என்ற அமைப்பின் நியூயார்க் கிளையின் நிர்வாக இயக்குநரானார். பின்னர், கொலராடோ மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பிற்காலத்தில் ஹார்வர்டு கல்வியியல் பட்டப் படிப்புப் பள்ளியிலும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலையிலும் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். வீட்டுக் கல்வி இயக்கத்தின் முக்கிய ஆதரவாளராகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், இதனை வலியுறுத்திப் பல்வேறு மாநிலங்களின் சட்ட மன்றங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். தமது குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தரும் பெற்றோர்களுக்காக

‘நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸ்', `புக் வீக்', லுக் அன்ட் பீஸ் நியூஸ்' போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

- அப்பணசாமி, எழுத்தாளர், பத்திரிகையாளர், தொடர்புக்கு: jeon08@gmail.com


No comments:

Post a Comment