கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி. வீரர்கள் ஒரு சிறுவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து அவையில் நிறுத்துவார்கள். பள்ளிக்கூடக் கூரை மீது தீ வைத்தான் என்பது குற்றச் சாட்டு. "படிக்க வேண்டிய வயதில் இந்த வேலையைச் செய்யலாமா ?" என்று கேட்பார் கர்ணன் (சிவாஜி கணேசன்). நான் தாய், தந்தை பெயர் அறியாதவனாம், அனாதையாம், எனக்கு படிப்பதற்கு அனுமதி இல்லையாம். அப்புறம் எதற்கு அந்தப் பள்ளிக்கூடம் என்று பொரிந்து தள்ளுவான் சிறுவன். மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய காட்சி அது. எல்லோருக்குமான கல்வி என இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று அல்ல என்றுமே அது எல்லோருக்குமானதாக இருந்திருக்கவில்லை என்பது தெளிவு.
கல்வி குறித்த விவாதங்களை நமது ஊடகங்கள் நிகழ்த்தத்தான் செய்கின்றன. திரைப்படங்கள், நாடகங்கள், கதைகள், தொலைகாட்சி நிகழ்வுகள் என ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில், ஒவ்வொரு கோணத்தில், ஒவ்வொரு விதத்தில் கல்வி குறித்துப் பேசவே செய்கின்றன. ஆசிரியர்-மாணவர் உறவு, கல்வித் திட்டம், வகுப்பறை நிகழ்வுகள், தேர்வுகள், மதிப்பெண்கள், மாணவர்களிடையே நிலவும் உறவுமுறை, அன்பு, போட்டி, பொறாமை, சண்டை, காதல், வன்முறை என எத்தனையோ அம்சங்களை நாம் செய்திகளில் கேட்கிறோம், படங்களில் பார்க்கிறோம், எழுத்துக்களில் வாசிக்கிறோம்.
அடிப்படையில் கல்வி குறித்தே கேள்விகள் எழுப்பும் வேலையை சமூக எண்ணங்களின் பிரதிபலிப்பாகக் கதைகள் பேசி இருக்கின்றன. கல்லாமை எப்போதும் இகழப்பட்டே வந்திருக்கிறது. கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார் என்றார் வள்ளுவர். ஆனால் ஒருவர் என் படிக்கவில்லை என்பதற்கான கேள்வியை எழுப்பாமல் படிக்காதவர்களை நாம் விமர்சிக்கிறோம். இந்தக் கதையைச் சற்று வாசியுங்கள்:
படித்திருந்தால் என்ன ஆகி இருப்பாய்?
சோமர்செட் மாம் என்னும் அருமையான படைப்பாளியின் "வெர்ஜர்' என்னும் கதையின் நாயகன், ஒரு தேவாலய ஊழியன். பல்லாண்டுக் காலம் அர்ப்பணிப்போடு உழைப்பவனை, புதிய பாதிரி வேறு விதமாகப் பார்க்கிறார். எழுதப் படிக்கத் தெரியாதவனை வேலைக்கு வைத்திருப்பது சாத்தியமில்லை, விரைந்து படித்துத் தெரிந்து கொண்டு வா அல்லது வேறு வேலை தேடு என்று நேரடியாகச் சொல்லிவிடுகிறார். அந்த வயதில் பாடசாலைக்குச் செல்வதை அவன் சிந்திக்க முடிவதில்லை. திடுதிப்பென்று சந்திக்கு வந்துவிட்ட வாழ்க்கையின் அதிர்ச்சி அவனைக் கலைத்துப் போடுகிறது. உளைச்சலை புகை உறிஞ்சி சமாளிக்க ஒரு நெடுவீதியில் கடை கடையாய்ச் சென்று கேட்டும், எங்கும் ஒற்றை சிகரெட் கிடைப்பதில்லை. யாரும் விற்பதில்லை. பளிச்சென்று பொறி தட்டுகிறது. வேலையை உதறித் தள்ளிவிட்டு நகர நெடுஞ்சாலையில் ஒரு சிகரெட் கடை தொடங்குகிறார்.
அமோக விற்பனை. இரண்டரை ஆண்டுகளில் நகரின் மிகப் பெரிய புகையிலை விநியோகிப்பாளர். பெரும் பணக்காரர். வங்கியில் பண படடுவாடாவிற்குச் செல்கையில், மேலாளர் அவரை அழைத்து, பெரிய தொகையை வைப்பு நிதியாக மாற்றிப் போட அறிவுறுத்துகிறார். இவரோ நீங்களே காகிதங்களைத் தயார் செய்துவிடுங்கள், நான் கை நாட்டு போட்டுவிடுகிறேன் என்கிறார். மேலாளர் வாயடைத்துப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாமலா இத்தனை வெற்றிகரமான வியாபாரியாக வளர்ந்திருக்கிறீர்கள்! ஒருவேளை நாலு எழுத்துப் படித்திருந்தால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று வியப்போடு கேட்கிறார். "தேவாலயத்தில் மணியடித்துக் கொண்டிருந்திருப்பேன்" என்று அசராமல் பதில் வருகிறது அந்த முன்னாள் தேவாலய ஊழியரிடமிருந்து. அப்படியானால் கல்வி என்பது என்ன? படிப்பு என்பதென்ன? இந்தச் சிறுகதை எழுப்புகிறது அல்லவா பல கேள்விகளை?
உன் ஆயுளில் எத்தனை காலம் வீண்?
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னதாகக் கூறப்படும் மிகவும் புகழ் வாய்ந்த ஒரு கதையில், ஆற்றில் படகில் பயணம் செய்யும் பெரிய பண்டிதர் ஒருவர், ஒடக்காரரிடம் நீ இராமாயணம் படித்திருக்கிறாயா என்று கேட்கிறார். ஓடக்காரர் இல்லை என்று சொல்லவும், உன் ஆயுளில் கால் பங்கு வீணாயிற்று, மகாபாரதமாவது தெரியுமா என்று கேட்கிறார் மீண்டும். இல்லை என்கிறார் ஓடக்காரர். அப்படியானால் உன் ஆயுட்காலத்தில் பாதியும் வீண் என்கிறார் இவர். இப்படியான உரையாடலின் ஒரு கட்டத்தில், ஆற்றில் வெள்ளம் வந்துவிடுகிறது. ஓடம் மூழ்க இருக்கிறது. இப்போது ஓடக்காரர் பண்டிதரைப் பார்த்து வினவுகிறார், "சாமீ உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று. அவரோ அய்யய்யோ தெரியாதே என்கிறார். அடடா...உங்கள் ஆயுள் பூராவும் வீணாய்ப் போச்சே' என்று சொல்லிவிட்டுக் குதித்துவிடுகிறார் ஓடக்காரர். இப்போது சொல்லுங்கள், எது கல்வி, எது படிப்பு?
எல்லோர்க்கும் இல்லையா கல்வி ?
குறிப்பிட்ட சாராரைத் தவிர மற்றோருக்கு கல்வி மறுக்கப்பட்ட கதை இன்றும் தொடர்கிறது. நிலவுடைமை சமூகத்தின் சாதிய படிநிலை நவீன காலத்திலும் உடைய மறுப்பதன் பிரதிபலிப்புகள் கல்வியில் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இன ரீதியிலான ஒடுக்குமுறைக்கு ஆளான கறுப்பின மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதைப் பேசும் ஒரு நூல், கமலாலயன் அவர்களால் தமிழில் அற்புதமாகச் சொல்லப்பட்ட "உனக்குப் படிக்கத் தெரியாது" (வாசல் வெளியீடு). மேரி பெத்யூன், சிறு வயதில் அண்டை வீட்டில் உள்ள வெள்ளைக்காரச் சிறுமியால் உனக்குப் படிக்கத் தெரியாது என்று அவமதிப்புக்கு உள்ளாவதில் தொடங்கும் நூல், அந்தத் தாக்கத்தில் அவர் எப்படி பெரிய கல்வியாளராக வளர்ந்து கறுப்பின மக்களுக்கான பெரிய பல்கலைக் கழகத்தையும், மருத்துவமனையையும் எழுப்பினார் என்பதை ஒரு சாகசமிக்க நாவலைப் போல் பேசிச் செல்கிறது.தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலும், சாதி ஒழிப்பு நோக்கத்திலும் செயல்படும் நமது பண்பாட்டுக் களத்தில் இந்த வாசிப்பு நம்மை மேலும் உறுதி பெறச் செய்கிறது.
"பள்ளிக்கூடம்" திரைப்படத்தில் "நீ எல்லாம் எதுக்குப் படிக்க வர்ற..." என்று மாணவன் ஒருவன் ஏசப்படும் காட்சியில்தான் படம் மீண்டும் வந்து நின்று நிறைவுறும். ச தமிழ்ச்செல்வன் அவர்களது சிறுகதையில் வரும் நடராஜன் என்ற மாணவர், கணக்கு தேர்வில் எதுவும் தெரியாததால், "...நான் வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யவில்லை..இதில் தன் குற்றம் எதுவுமில்லை..." என்று கடிதம் எழுதி வைப்பார். பின்னர் ஆசிரியர் என்னிடம் டியூஷனுக்கு வா என்று உத்தரவிடுவார். வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்யுமிடத்தில், விறகு தரிக்கக் கூடத் தெரியாத ஆசிரியரை, "பார்த்து சார், அரிவாள் வெட்டிப்புடும் " என்று கிண்டல் செய்வான் நடராஜன்.
கல்வி முறையைக் கேள்விக்கு உட்படுத்தும், "எங்களை ஏன் டீச்சர் ஃபெயிலாக்கினீங்க?" என்ற புத்தகம் (ஷாஜஹான் அவர்களது அருமையான மொழிபெயர்ப்பில்), தங்களுக்குத் தெரிந்த மலைத்தோட்ட வேலைகளை ஆசிரியை செய்ய முடியுமா என்று கேட்கும் மாணவர்களை அறிமுகப் படுத்துகிறது. கல்வியின் அளவுகோல் என்ன, முதல் தலைமுறை மாணவர்களை ஒரு பள்ளி எப்படி நடத்த வேண்டும், ஆசிரியர் அதிகாரப் புள்ளியாக ஏன் இருக்கக் கூடாது என்பனவற்றைப் பேசும் படங்கள் சில வந்திருக்கின்றன.
நேர்மறை அணுகுமுறைகள் :
"டு சார் வித் லவ்" திரைப்படம் குறித்த டாக்டர் ஆர் கார்த்திகேயன் கட்டுரை (தி இந்து தமிழ்: ஜனவரி 23, 2015), இப்படி ஆரம்பிக்கிறது:
ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் குரலை இலக்கியம் வழியே ஒலிக்கச் செய்த கயானா தேசத்தின் நாவலாசிரியர் ஈ.ஆர். பிரைய்த் வைட். இவர் 1959-ல் எழுதிய நாவல் 1967-ல் திரைப்படமாக வெளிவந்து வெற்றி கண்டது. ‘டு சார் வித்லவ்’ ஒரு சுயசரிதையும் கூட.
இரண்டாம் உலகப் போர் முடிந்து ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தில் பொறியாளரான பிரெய்த் வைட்டுக்குப் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க உடனடியாக ஒரு வேலை தேவைப்படுகிறது. அதனால் குப்பத்துக் குழந்தைகள் அதிகம் படிக்கும் ஒரு பள்ளிக்கு ஆசிரியராக விண்ணப்பிக்கிறார். ஒரு தற்காலிக வேலைக்கு ஆசிரியர் பயிற்சி பெறாத ஒரு பொறியாளர் சேரும்போது ஏற்படும் அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறார்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பதில்லை. பெற்றோர்களுக்குக் கல்வி பற்றிப் பெரிய விழிப்புணர்வில்லை. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களிடம் உள்ள தீய பழக்கங்களும் அந்தப் பிள்ளைகளிடம் இருந்தன. பள்ளி முதல்வருக்கு நல்ல எண்ணம் இருந்தும் பெரும் நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் பிரைய்த் வைட் வேலைக்குச் சேர்கிறார்.
சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆசிரியர் ஒருவரின் கதை அது.
குஜராத்தி எழுத்தாளர் கிஜுபாய் பகேக எழுதிய "பகல் கனவு" என்னும் அற்புதமான நூல்,ஆசிரிய பயிற்சி மையங்களில் பாட திட்டத்தில் சேர்க்கப்படவேண்டியது. குழந்தைகளை அவர்களது ஆரவார, உல்லாசக் கொண்டாட்ட உளவியல் தளத்தில் ரசனையோடு பயணம் செய்தபடியே கல்வி கற்க வைக்க முடியும் என்பதன் நடைமுறை சாத்திய காட்சி நிரூபணம் இந்த புத்தகம்.
"குட் பை மிஸ்டர் சிப்ஸ்" என்ற அருமையான நாவல், மீண்டும் மீண்டும் திரைப்படமாக ஆக்கம் கண்டிருப்பது. அதைத் தமிழாக்கம் செய்யாமல், மிகச் சுருக்கமாக ஆனால் அற்புதமாகத் தமது வாசிப்பு அனுபவமாக பேரா ச மாடசாமி வழங்கி இருக்கும் நூல் "போயிட்டு வாங்க சார்"! ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரு சேரக் கொண்டாட வேண்டிய நூல்களில் ஒன்று! மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக வாழ்ந்த சிப்ஸின் கதையே இந்நூல். “சிப்ஸ் திறமைசாலி இல்லை .அக்கறை உள்ளவர். திறமை கொண்டவர்கள் மேடைகளிலும் பொறுப்புகளிலும் அமரும்போது அக்கறை உள்ளவர்கள் பிறர் மனங்களில் அமர்கிறார்கள் . அப்படி அமர்ந்திருப்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை ”
டு சார் வித் லவ் படத்தைப் போலவே தமிழிலும் வந்திருக்கும் :"நம்மவர்", "சாட்டை" திரைப்படங்களை டாக்டர் ஆர் கார்த்திகேயன் குறிப்பிடுகிறார். எத்தனை எதிரான சூழலிலும் ஆக்கபூர்வமான முயற்சிகளை இடையறாது மேற்கொள்வோர் ஆசிரியராக அமைவது ஒரு சமூகத்திற்கு வாய்க்கும் கொடை. தி ஜானகிராமன் அவர்களது "முள்முடி" சிறுகதையில் பணி நிறைவு அன்று கொண்டாட்டமாக புகழப்பட்டு ஊரே திரண்டு வந்து வழியனுப்ப வீடு வந்து சேர்ந்த ஓர் ஆசிரியரிடம், எப்போதோ ஒரு தவறு செய்த மாணவனோடு யாரும் பேசக் கூடாது என்று அவர் தண்டித்ததை நினைவு கூறும் ஒரு மாணவன், சார் நீங்க அவனை மன்னிக்கணும், அந்தத் தடையை விலக்கணும் என்று கோரிக்கை வைக்கும்போது கூனிக் குறுகிப் போகும் இடம் அதிர வைப்பது. தனது சொல்லுக்கு இத்தனை தாக்கமா, தண்டிக்கவே செய்யாத வாத்தி என்று எடுத்த பெயர் உண்மையில் தனக்குத் தகுமா என்று உறைந்து போகிறார். தண்டனைகளுக்குக் குறைவா நமது மண்ணில்?
எதிர்மறையில் அணுகி விமர்சனங்களை வைத்தவை
அண்மையில் கல்வி பிரச்சனை குறித்து மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. "டோனி " திரைப்படம் விளையாட்டில் தன்னை நிரூபிக்கும் மகனை, பள்ளிக்கூட அளவுகோலின் வழியே தானும் பார்த்து அடித்து நொறுக்கி உடலையும், உள்ளத்தையும் காயப்படுத்தும் தந்தை குறித்தது மட்டுமல்ல, நமது கல்வி முறை மீது காட்டமான சில விமர்சனங்களை எழுப்பிய படம் அது. "தாரே ஜமீன் பர்" இந்தி திரைப்படம், மெதுவாகக் கற்பவர்கள் (Slow Learners ) குறித்தது. பள்ளியில் அந்தச் சிறுவன் திரும்பத் திரும்ப இழிவுக்கு உள்ளாவது, தந்தையிடம் அவமதிப்படைவது போன்றவற்றை, பின்னர் தகுந்த ஆசிரியர் தலையீடு எப்படி மாற்றி அமைக்கிறது என்று எடுத்துச் சொன்ன படம். தங்க மீன்கள் திரைப்படம் குழந்தைகளின் உளவியலைக் குறித்த செய்திகளை, தந்தை-மகள் உறவு குறித்த நுட்பமான விஷயங்களைப் பேசியது. கல்வி குறித்த காத்திரமான கேள்விகளை எழுப்பியது.
மாலனின் "தப்புக் கணக்கு" எனும் அருமையான சிறுகதையை, மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா சிறப்பான குறும்படமாக வழங்கி இருந்தார். ஓர் எளிய கணக்கு ஒன்றிற்கு கணக்கு ஆசிரியை மதிப்பெண் தராததைக் குறித்த விவாதமாக எழும்பும் கதை, இறுதியில் பெண் குழந்தை மாற்றி சிந்திக்கக் கூடாது, சொன்னதைத் தான் செய்யவேண்டும், எதிர்காலத்தில் சிக்கலாகிவிடும் என்ற போதனையை முன்வைக்கும் சமூகத்தை (தகப்பன் பாத்திரம் மூலம்) அடையாளப்படுத்தி முடிகிற இடத்தில் பார்வையாளர்களை மிகப் பெரிய சலனத்திற்கு உட்படுத்துகிறது.
பள்ளிக்கூடத்தின் ஒழுக்க விதிகள்
கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பள்ளி ஒன்றில் அந்த நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட மாணவர் ஒருவரை ஆசிரியை மிரட்டி உட்கார வைத்த செய்தியை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது. பழ புகழேந்தி கவிதை ஒன்றில், இப்படி "அனுமதி கேட்டு அடுத்தடுத்து உயரும் விரல்களை மறுத்து உட்காரச் செய்ததும் சற்று நேரத்தில் வகுப்பறை முழுக்க நாற்றம் எடுத்தது என் அதிகாரம்" என்று வரும். அதிகாரம் பெருமை மிக்கது என்று நினைப்போர்க்குச் சாட்டை அடி இந்தக் கவிதை.
தனது தலைமை ஆசிரியர் பணியின் அனுபவங்களைப் பேசுகையில், கல்வியாளர் ச சீ இராசகோபாலன் அவர்கள், மாணவர்க்கான நடத்தை விதிகளை பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர் அமைப்பிடமே வழங்கியதாகவும், வழக்கமாக ஆசிரியர்கள் உருவாக்கும் எதிர்மறை வாசகங்களுக்கு உற்சாக மாற்றாக நேர்மறை வாக்கியங்களில் விதிகள் கட்டமைக்கப் பட்டிருந்ததாம். அதாவது, தாமதமாக வந்தால் இத்தனை ரூபாய் அபராதம் என்று எழுதுவதற்குப் பதிலாக, நாம் அன்றாடம் பள்ளிக்கூடத்திற்கு உரிய நேரத்தில் வந்து விடுவோம். வகுப்புகளில் முழுமையாகப் பங்கேற்போம் என்பது போன்ற விதிமுறைகள். அதுமட்டுமல்ல, பள்ளிக்கு வெளியேயும் கூட பொதுவெளியில் தங்களை எப்படி நடத்திக் கொள்வோம் என்றும் மாணவர் எழுதி வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதையும், இது தாங்கள் உருவாக்கிய விதிமுறைகள், இவற்றை நடைமுறையில் அனுசரித்து நிரூபிப்பதே நம்மைப் பெருமிதம் கொள்ளவைக்கும் என்று மாணவர் தலைவர் கூட்டத்தில் பேசியதையும் ச சீ இரா அவர்கள் தமது கண்கள் மின்னச் சொல்வார்.
பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்கு அரை மணி நேரம் தண்டனை வழங்கும் எந்தப் பள்ளியும் மாணவர் கற்க வேண்டும் என்பதை விரும்புவதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. அர்த்தமற்ற ஒரு பிழைக்காக, ஷானுகான் என்ற சிறுமியை தில்லி பள்ளி ஆசிரியை வெயிலில் நிறுத்தி முதுகின்மேல் செங்கற்களை வேறு அடுக்கி, கோழி மாதிரி கோணிக் குறுகி நிற்குமாறு செய்த சம்பவத்தில், கடுமையாக உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி அடுத்த நாள் மாண்டுவிட்டாள். பாடம் நடத்தும்போது கவனிக்கவில்லை என்பதற்காக ஒன்பது வயது சுடலி மீது ஆசிரியர் தம்ளர் எறிந்த திருநெல்வேலி சம்பவத்தில், சுடலிக்கு நிரந்தரமாக பார்வை பறிபோய் விட்டது. திருச்சி மணப்பாறையில் ஸ்ரீ ரோகிணி என்ற குழந்தையின் தலையில் பிரம்பால் ஆசிரியை அடித்ததில் அந்தக் குழந்தை இப்போது உயிருடன் இல்லை. அத்தோடு அந்தக் கொடுமை முடியவில்லை. பள்ளியில் இறந்த குழந்தையின் உடல், மூன்று நாள் கழித்து அருகிலுள்ள குளத்தில் மிதந்தது.
இந்தச் செய்திகளைப் பேசும் நாளிதழ்கள், தொலைகாட்சி செய்திகள், பள்ளிக்கூட வளாகத்துள் இன்றும் தொடரும் வன்முறை குறித்த விவாதங்களை ஊக்குவிக்கின்றன.
தேர்வுகளில் 'காப்பி' அடிப்பது குறித்த அண்மைக்கால அதிர்ச்சி அனுபவத்தைத் தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் நாடு முழுவதும் அறியச் செய்தன. 'ஸ்பைடர்மேன்' மாதிரி மாணவர்களுடைய தகப்பன், தாய்மாமன், சித்தப்பன் மற்றும் உறவினர்கள் எல்லாம் கட்டிடத்தின் மீது ஏறி சன்னல் வழியே பதில் எழுதிக் கொடுத்து 'உதவி' செய்த கொடுமையான காட்சி வேதனைக்குரியது. தேர்வுகளைப் பற்றி எழுதுகையில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இப்படி குறிப்பிட்டிருந்தார்: "நான் எனது அறிவை நிரூபிக்கத் தேர்வு எழுதச் சென்றேன். அவர்களோ என் அறியாமையை நிரூபிப்பதிலேயே குறியாயிருந்தனர்"
தேர்வில் காப்பி அடிப்பதை, கல்வியாளர் ச சீ இரா எதிர்கொண்ட விதம் அபாரமானது. அவர் மாணவர்களிடையே வெள்ளை மனத்தோடு உள்ளம் திறந்து பேசினார். அவர்கள் சரியாகத் தேர்வு எழுதாது போனால், தங்களது கற்பித்தலில் உள்ள குறைபாடுகளைப் போக்கிக் கொண்டு மேலும் சிரத்தை எடுத்து கற்பிப்போம், காப்பி அடித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி விட்டால், ஆசிரியர்கள் திருந்த வாய்ப்பின்றி அப்படியே நடத்திக் கொண்டிருப்போம் என்று சொன்னாராம். தேர்வு என்பது மாணவர்களுக்கு அல்ல, கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களைப் பற்றி அறிந்து கொள்ள வைக்கும் தேர்வுதான் என்று விளக்கினார்.
பாடம் நடத்துவதில் மேற்கொள்ளாத சுவாரசியமான செயல்பாடுகளை, தேர்வு நேரத்தில் மேற்கொள்ளும் மிரட்டல் முறையால் எப்படி நேர் செய்வது? தேர்வு நேரத்திலும், தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலும் நிகழும் தற்கொலைகள் நமது கல்வி அமைப்பின் மோசமான பிரதிபலிப்பு அல்லவா? தற்கொலை செய்தியை வெளியிட நேரும் ஒவ்வொருமுறையும், அதன் கீழே மறவாமல் தற்கொலை தடுக்க ஆலோசனை நல்கும் தன்னார்வ அமைப்பு (சினேகா) ஒன்றின் தொடர்பு எண்ணை தி இந்து ஆங்கில நாளேடு பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. ஊடகங்களின் பொறுப்புணர்வுச் செய்கை அது.
த்ரீ இடியட்ஸ் என்று இந்தியிலும், நண்பன் என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்த திரைப்படம், கல்லூரிக் கல்வியை பின்புலமாகக் கொண்டு இன்றைய கல்வி முறை, புரியாமல் உருப்போடும் தன்மை உள்பட பலவேறு அம்சங்களை நையாண்டி விமர்சனமாக வைத்தது. கலகக் குரல் எழுப்பும் மாணவர் முதல் மதிப்பெண் பெறுபவராகவும் இருக்க முடியும், படிப்பிற்கும் அடிமைத் தனத்திற்கும் நேர்விகிதத் தொடர்பு ஒன்றும் கிடையாது என்று பேசியது அந்தப் படம்.
சாதியத்திலிருந்து விடுபடாத கல்வி
"கவர்மெண்ட் பிராம்மணன்" என்ற தலைப்பிலான தமது சுயசரிதை நூலில், கன்னட எழுத்தாளர், மைசூர் பல்கலை விரிவுரையாளர் அரவிந்த மாளகத்தி (அருமையான தமிழில்: பாவண்ணன்) ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவிலிருந்து படிக்க வரும் பிள்ளைகள் சந்திக்கும் இழிவுகளைச் சம்மட்டி அடியாகப் பதிவு செய்திருந்தார். ,மறுநாள் வகுப்பைப் பெருக்க வேண்டியவன் மாளகத்தி என்று எழுதிப் போட்டிருப்பார் ஆசிரியர். மறுக்கும்போது வகுப்பறைக்குள் கட்டி வைத்து அடிப்பார். மதுரையில் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாணவியை, கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் குறித்து நாம் மிக அண்மையில்தான் வாசித்தோம். பாண்டியக் கண்ணனின் "மழைப்பாறை" நாவலில் அருந்ததியர் சமூகத்துப் பிள்ளைகளை ஆசிரியைகள் எப்படி கழிப்பறை சுத்தம் செய்யவும், தங்களது வட்டித் தொகை வசூல் செய்யவும் ஏவிக் கொண்டிருந்தனர் என்பது வேதனையோடு சொல்லப்பட்டிருக்கும். படிக்க விரும்பும் அவர்களுக்கு போதிக்க விருப்பமற்ற சூழல். தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியுடே மகன் நாவல், தமிழில் சுந்தரம் ராமசாமி மொழிபெயர்ப்பில் தோட்டியின் மகன் என்று வந்தது. கல்விச் சாலையிலிருந்து விரட்டப்படும் தலைமுறையைப் பேசும் முக்கிய நாவல் அது.
இயக்குநர் ஞானராஜசேகரன் (பாரதி, பெரியார், ராமானுஜம் படங்களை எடுத்தவர்) வழங்கிய "ஒரு கண் இரு பார்வை" என்னும் குறும்படம், சேலம் மாவட்டப் பள்ளி ஒன்றில் பொதுவான பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தமைக்காக அடிபட்டுக் கண் பார்வை பறிகொடுக்க நேர்ந்த தலித் மாணவி தனம் பற்றிய உண்மை நிகழ்வை சமூகத்திற்குச் சொன்னது. அண்மையில் கூடமத்திய பிரதேசத்தில் சிற்றூர் ஒன்றில், உயர் சாதியைச் சார்ந்த ஒருவர் மேல் தனது நிழல் விழுந்த "தீண்டாமைக்" குற்றத்திற்காக, தாழ்த்தப்பட்ட சாதி மாணவியை ஆதிக்க சாதி பெண்மணிகள் அடித்து நொறுக்கிய செய்தி பத்திரிகையில் வந்திருந்தது.
காஞ்சிபுரம் சங்கர மடம் நடத்திவரும் சங்கரா பலகலைக் கழகத்தில் தலித் மாணவர்கள் பொது உணவிடத்தில் உண்ண முடியாதது உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை பத்திரிகைகள் அம்பலப் படுத்தின. ஆனாலும் இன்னமும் ஊடக விவாதங்களில் சாதிய ஆதிக்கப் பேச்சு, அடிப்படை காரணங்களை விவாதிக்கும் மேடை அத்தனை காத்திரமாக உருவாகவில்லை. மேலோட்டமான கருத்துக்கள். ஒருதலைப் பட்சமான எண்ணங்கள் போன்றவை பொது புத்தியில் ஏற்றப்படுவது மாற்றத்தைக் கொண்டுவர உதவாது.
வணிக மயமான கல்வி
கடந்த காலங்களில் தனிப்பட்ட கல்வி என்று சொல்லப்படும் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்பவர்கள் தலைமறைவாக, யாருக்கும் தெரியாமல் போய்க் கற்று வருவார்கள். இப்போதோ, ஆரம்பத்திலிருந்தே டியூஷன் அனுப்புவதே பெருமை என்றாக்கப்பட்டு விட்டது.
தங்களிடமிருந்து பிரிய நேர்ந்தாலும் பரவாயில்லை என்று போர்டிங் ஸ்கூல் எனப்படும் தங்கிப் படிக்க வேண்டிய பள்ளிகளுக்குத் தொலைதூரம் அனுப்புகின்றனர் பெற்றோர். கோழிப்பண்ணை போல் நடத்தப்படும் இந்தப் பள்ளிகளில் உருப்போட வைத்து, நேரம் காலமின்றி படிப்பு படிப்பு என்று அலற வைக்கின்றனர். எழுத்தாளர் பெருமாள் முருகனை அவரது மாதொருபாகன் நாவலுக்காக குறி வைத்ததைவிடவும் முக்கிய காரணம், நாமக்கல்லை மையமாக வைத்து இத்தகு பள்ளிகளில் என்னென்ன மோசடிகள் நடக்கின்றன என்பதை அவர் காலச் சுவடு இதழில் சில ஆண்டுகளுக்குமுன் நிறுவி இருந்ததுதான்.
பிளஸ் 2 அளவிலேயே சில லட்சங்களைக் கொட்டி அழ பெற்றோர் துணிவதன் பின்னணி எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாதவண்ணம் அவர்கள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை தான். இந்தக் கல்வித் தொழிற்சாலைகளில் பயிலும் பிள்ளைகள் எத்தனை உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை நீயா நானா என்பது போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஓரளவு மக்கள் மன்றத்தில் பேச வைத்தன. மன நல மருத்துவர் எஸ் மோகன்ராஜ், இப்படி கொடூர முறையில் படித்த மாணவர்கள் சிலர் எப்படியாவது வாசித்தவற்றை மறக்க சிகிச்சை கேட்டு தன்னை வந்து சந்தித்த நெருக்கடியான விஷயங்களை ஒரு முறை தி இந்து ஆங்கில நாளிதழில் சொல்லி இருந்தார்.
இரா நடராசன் அவரகளது ரோஜா நாவல், எந்திர கதியில் பிள்ளையை வளர்க்கும் பெற்றோர், கல்விச் சாலை, ஆசிரியர்கள் என நிறைய செய்திகளைப் பேசும். இன்றைய பெற்றோர் உளவியல், சலவை எந்திரத்திடம் மொத்தமாக துணி துவைத்தலை விட்டுவிட்ட தன்மையில், காசை எடுத்து வீசிவிட்டால் பள்ளிக்கூடத்தின் பொறுப்பில் குழந்தைகள் கல்வி கற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கிறது. பள்ளிக்கூடம் என்பதே சமூகவய அனுபவம் தருமிடம். அங்கே அதன் தன்மைகள் எவ்வண்ணம் இருக்கின்றன, அவற்றில் தேவையான மாற்றங்கள் என்ன என்பதை விவாதிக்க வேண்டிய தருணம் இது. பின்னர் புத்தகம் பேசுது இதழுக்கான நேர்காணலில், இரா நடராசன் சொன்னது, "எனது ஆயிஷா நாவல் ஓர் ஆசிரியரின் சுயவிமர்சனம். ரோஜா, ஒரு தந்தையினுடையது". மிகவும் நுட்பமான இந்தக் கருத்து ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் இரு முக்கிய முனைகளை அடையாளப்படுத்துகிறது.
சமூகவியல், வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளை விடவும், காசு அதிகம் கொட்டும் என்ற அதீத எதிர்பார்ப்போடு பொறியியல், மருத்துவம் நோக்கியே பெற்றோர் கவனம் திருப்பப்பட்டது. 1991ல் தொடங்கிய உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உள்ளடக்கிய பொருளாதாரச் சிந்தனை மாற்றம் இதற்கு முக்கிய காரணம். இப்போது உலகளாவிய பொருளாதார சிக்கல்கள், பொறியியலைக் கை விட்டு வேறு துறைகளை நாட வைக்கிறது. பணத்திற்காக என்னவும் செய்யலாம் என்ற புதிய தர்க்கம், இந்த உலகமய காலத்தின் சாபமாகும். அதனால் எவ்வளவு காசு கொடுத்தாவது கல்வி பெறலாம் என்பதும் நியாயமாக்கப்பட்டுவிட்டது. இப்படி சம்மதங்களை உற்பத்தி செய்வதை (Manufacturing the Consent) சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி தொடர்ந்து சொல்லிவருகிறார்.
ஊடக தருமம், வர்க்க விசுவாசம்
பிரச்சனைகள் பெரிதாக வெடித்தால் மட்டுமே பேசும் ஊடகங்கள், அப்போதும் அவற்றின் அடிப்படை காரணிகளை விளக்க அதிகம் சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. அரசுப் பள்ளிகளின் கோளாறுகளை விரிவாக விவாதிக்கும் ஊடகங்கள் பலவும் தனியார் பள்ளிகள் குறித்த விமர்சனங்களை வைப்பதில்லை. கட்டணக் கொள்ளை பற்றி பெரிதாக செய்திகளே வருவதில்லை.அடிப்படை விஷயங்களை மாறாது பார்த்துக் கொள்வதில் முதலாளித்துவ ஊடகங்களுக்கு எச்சரிக்கை இருக்கிறது. எனவே அவை எத்தனை பேசினாலும், அடுத்தடுத்த பரபரப்புக்கு நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய ஊடகங்களில் மாற்றங்களை அழுத்தமுற வைக்க சமூக சிந்தனையாளர்கள் அரும்பாடு எடுக்க வேண்டி இருக்கிறது.
நவீன வருணாசிரமம் பணத்தை அடிப்படையாக வைக்கிறது. பணமற்றோர்க்கு இவ்வுலகம் கிடையாது என்று இப்போதும் பேசப்படுகிறது. எனவே தான் சந்தைப் பொருளாதாரத்தை முன்னுரிமை தந்து கவனிக்கும் யாருக்கும் ஆரோக்கியமான மாற்றங்கள் செய்ய ஆர்வம் இருப்பதில்லை.கலகக் குரல் எழும்பும் இடத்திலே தான் மாற்றங்களுக்கு விதை போட முடிகிறது.
1987ல் சென்னையில் நடைபெற்ற இந்திய ஜனநாய
க வாலிபர் சங்க மாநாட்டில் உரையாற்றுகையில், மார்க்சிய சிந்தனையாளர் பி டி இரணதிவே சொன்னார்: கலகக்காரனாயிரு...எதையும் கேள்வி கேள்....மாற்றத்தை உருவாக்கு.
அப்படியானால் மாற்றுக் கல்வி முறைக்குப் போராடுவதில் முன்னிற்கும் சவால்களை அடையாளப் படுத்திக் கொள்ள இந்த மாற்றுச் சிந்தனை, தத்துவக் கல்வி தேவையாக இருக்கிறது. மாணவர் இயக்கத்திற்கு அரசியல் சூழலை மாற்றி வளர்த்தெடுப்பதில் வரலாற்று ரீதியாகவே முக்கிய பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படை போராட்ட களத்தில், புதிய வரலாறுகளைப் படைக்க முன்னெழுவோம்.
எஸ்.வி.வேணுகோபாலன்
No comments:
Post a Comment