Saturday, 14 September 2013

7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு (NTSC)-2013:

அறிவியல் கற்பிக்கும் பணியில் இருப்போர்க்கு அறிவியல் கல்வி மற்றும் கற்பித்தல் குறித்த அவர்களின் அறிவை, திறமையை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புகளால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

மாநாட்டின் நோக்கம்: 

அறிவியல் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் விமர்சனப்பூர்வமான கருத்துகளை வெளிக்கொண்டுவருதல், அதே நேரத்தில் அவர்களை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலுமாக அத்துறையில் நிபுணத்துவம் பெறச்செய்தல். 

அறிவியல் கோட்பாடுகளை, விதிமுறைகளை விளக்க ஆசிரியர்கள் சுயமாகக் கண்டுபிடித்து பயன்படுத்தும் அவர்களது வகுப்பறை சார்ந்து பயன்படுத்தும் புதிய வழிமுறைகளையும் எளிய, குறைந்த செலவிலான அல்லது செலவற்ற கற்றல் கற்பித்தல் கருவிகளையும் வெளிக்கொண்டு வருதல், ஊக்குவித்தல். 

அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஆய்வுகளை ஊக்குவித்தல், 

நடைமுறைப் படுத்தப்படுகின்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூழலில் அறிவியல்பூர்வமான கல்வியில் விளைவுகள் குறித்த ஒரு பரந்த, விரிந்த கருத்துப்பரிமாற்றத்தினை உருவாக்குதல், அதன் மூலமாக தரமான கல்வியை மக்களுக்கு வழங்குதல். 

நடைமுறையில் இருக்கின்ற கல்வி அமைப்பிற்கு அப்பால் நாட்டின் தன்னிறைவான வளர்ச்சிக்கு உதவுகின்ற புதிய கல்விக்கோட்பாடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்களாக உள்ளன.

மாநாட்டில் பங்கேற்கக் கூடியவர்கள்: 

துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பரப்பும் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் பங்கேற்கலாம். 

மையக் கருப்பொருள்: நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் கல்வி:

அறிவியல் ஒன்றால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பசிக்கொடுமையையும் வறுமையையும், சுகாதாரக் குறைபாடுகளையும், எழுத்தறிவின்மையையும், மக்களிடையே இருக்கின்ற மூடப்பழக்கவழக்கங்களையும், கண்மூடித்தனமான நடைமுறைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் களைய முடியும்.. லட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடுகின்ற நாட்டில் வீணாகும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தும் நிலையைக் கொண்டுவரமுடியும்- பண்டிட்.ஜவஹர்லால் நேரு-1960ல்.. அலகாபாத் பல்கலை விழாவில்.. 

நிலைத்த நீடித்த வளர்ச்சி ஒன்றே இந்தியாவின் அடிப்படைத் தேவையாக இருக்க முடியும்-அபதுல் கலாம். 

ஆக நிலைத்த நீடித்த வளர்சிக்கு தேசமானது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும். அதே நேரத்தில் மக்களை அறிவியல் விழிப்புணர்வுடையவர்களாக மாற்ற வேண்டும். அறிவியல் கொள்கைகளை நடைமுறையில் தங்களுடைய சொந்த வாழ்விலும் சமூகப் பிரச்சினைகளிலும் பயன்படுத்துபவர்களாக, அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுபவர்களாக உருவாக்க வேண்டும். 

நவீன அறிவியல் தொழில்நுட்பங்களே இன்றைய வாழ்க்கையின் இயக்குசக்தியாக இருக்கின்றன. இந்த நேரத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களில், செயல்பாடுகளில் மிக ஆழமான அறிவியல்பூர்வமான தலையீடுகளின் அவசியம் அதிகரித்திருக்கிறது. ஒரு அறிவியல் பூர்வமான சமூகத்தில் இயல்பாகவே சிக்கலுக்கான தீர்வுகளை எளிதாகக் கண்டறிதல், ஆழமாகச் சிந்தித்தல், இணைந்து செயல்படுதல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துதல், தொடர்ந்து கற்றல் ஆகிய பண்புகளைக் கொண்டவர்களாக மக்கள் திகழமுடியும். ஆக கல்வியை, குறிப்பாக அறிவியல் கல்வியை முழுமையாகக் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே நிலைத்த வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும்.

துணைக்கருப்பொருட்கள்: 

1.நிலைத்தகு வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு 

Ø அறிவியல் மற்றும் கணிதத்தினை நன்கு கற்றல் கற்பித்தல்: 

பாரம்பரியமான கற்பித்தல் முறைகளிலிருந்து வேறுபட்டு ஆசிரியர்கள் பின்பற்றக்கூடிய/ அறிமுகப்படுத்தக்கூடிய கதை கூறுதல், விளையாட்டு முறை, புதிர்கள், வினாடிவினா, களப்பயணம், தனியாள் ஆய்வு போன்ற முறைகளால் ஏற்படும் கற்றல் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வுகள் செய்தல்.. 

Ø அறிவியல் உணர்வை மேம்படுத்துதல்: 

அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதோடு மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அறிவியல் கற்பித்தலால் கற்றலால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்கள், மனப்பான்மைகள் குறித்த ஆய்வுகள், அளவீட்டிற்கான புதிய கருவிகள், மதிப்பீட்டு உத்திகள் தொடர்பான ஆய்வுகள்.. 

Ø அறிவியல் கல்வியில் பல்லூடகம், அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகள்: 

அறிவியல் கற்பித்தலில் ஆசிரியர்களின் ஈடுபாடும் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய புதிய, எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளால் நிகழ்ந்த கற்றல் அடைவை முன், பின் தேர்வுகளால் அளவீடு செய்தல். 

Ø அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தலில் புதுமைகளைப் பயன்படுத்துதல்: 

ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்திய புதுமையான கற்பித்தல் முறை, அணுகுமுறை, செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுகள்.. 

Ø ஆசிரியர்களுக்கான தரமான பயிற்சி: 

கல்வியின் வெற்றியில் ஆசிரியர்களின் பங்கே முதன்மையானது. எனவே அவர்களுக்கான பணிமுன், பணியிடைப் பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஆசிரியர் பயிற்சி சார்ந்த நடைமுறைகள், தேர்வு நடைமுறைகள், இருக்கின்ற பொதுவான நிலைமை, பயிற்சி உத்திகள் போன்ற ஆசிரியர் பணியை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள்.. 

Ø அறிவியல் கல்விக்கான ஒருங்கிணைந்த கல்வி முறை: 

மாணவர்களின் தனியாள் வேற்றுமைகளுக்கேற்ப, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட புதிய கற்பித்தல் முறைகள், கருவிகள் குறித்த ஆய்வுகள்.. 



2. பாரம்பரிய அறிவு, பழக்க வழக்கங்கள் மற்றும் நிலைத்தகுவளர்ச்சி: 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியமான பழக்கவழக்கங்கள், புரிதல்கள் குறிப்பாக நிலம், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் குறித்தவை. பயிர்பாதுகாப்பு, விலங்குகளைப் பேணுதல், வானிலை, காலநிலையை முன்கூட்டியே கணித்தல், உடல்நலம், ஊடுபயிரிடுதல், நிலவளத்தை நிர்வகித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை உற்றுநோக்குதல். அவற்றில் இருக்கின்ற அறிவியல் பூர்வமான நடைமுறைகளை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல் போன்றவை. 

Ø பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியலை கண்டறிதல்: 

Øநிலைத்தகுவளர்ச்சிக்காக பாரம்பரிய அறிவினையும் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்துதல் 

3 .சமூகத்திற்கான அறிவியல்: 

சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு செயல்பாடுகளில் உள்ள அறிவியல் அணுகுமுறைகள், பிற்போக்கு மூடநம்பிக்கைகள், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்வில் இயல்பாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் இந்த உபதலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பிரச்சார அமைப்புகளின் தொடர்முயற்சிகளின் விளைவாக குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே அல்லது பொதுவாக சமூகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை இத்தலைப்பின் கீழ் மேற்கொள்ளலாம். 

Ø மூடநம்பிக்கைகளை களைவதில் அறிவியலின் பயன்பாடு 

Ø சுகாதாரம் மற்றும் சுத்தம்,விவசாயம், சக்தி சுற்றுச்சூழல் தண்ணீர் போன்றவற்றின் பங்களிப்பில் அறிவியல் 

Ø அறிவியல் பரப்புவதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பான ஆய்வுகள் 

முக்கிய தேதிகள்:
பதிவுப்படிவம், ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரை அனுப்பக் கடைசி நாள் 2013 அக்டோபர் 10. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முடிவு விவரங்கள் அக்டோபர் 20ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும். தேசிய அளவிலான மாநாடு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

அனுப்பவேண்டிய முகவரி: ashokntsc@gmail.com, tnsf.kalvikulu@gmail.com 

கூடுதல் விவரங்கள்: 

தயாரிக்கும் கட்டுரையானது A4 தாளில் 12 ஆம் எண் எழுத்துருவில் times new roman எழுத்துருவில் 1.5 இடைவெளியில் இருக்கவேண்டும். சுமார் 3000 முதல் 4500 வார்த்தைகளில் கட்டுரை அமைதல் நலம். போஸ்டராகவும் தயாரிக்கலாம் அதன் வடிவமைப்பு 70செமீ X 55 செமீ ஆக இருக்கலாம். 

ஆய்வுக்கட்டுரைகளானது வழக்கம் போல ஆய்வுச் சுருக்கம், முன்னுரை, நோக்கங்கள் அய்வு முறை, புள்ளிவிவரங்கள் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், ஆய்வு முடிவுகள், எதிர்கால திட்டங்கள், நன்றியுரை, மேற்கோள் நூல்கள், இணையதளங்கள் போன்ற உள்ளடக்கத்தில் இருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை www.ncstc-network.org என்ற இணையதள முகவரியில் காணலாம்.

மேலும் விபரங்களுக்கு: 

முனைவர்.என்.மாதவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு-2013
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி: 94437 24762 
மின்னஞ்சல்:thulirmadhavan@gmail.com 

தே.சுந்தர்
மாநிலச் செயலாளர்
மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி:9488011128 
மின்னஞ்சல்:sundar.tnsf@gmail.com

No comments:

Post a Comment