Wednesday, 18 September 2013

இன்றைய கல்வியை வங்கி முறைக்கல்வி என்று சாடிய பாவ்லோ பிரைரே-யின் பிறந்த நாள்

கல்வி என்பது நடுநிலையானது அல்ல...
அது ஒரு அரசியல் நடவடிக்கை!

இன்றைய கல்வி கொடுக்கலும் வாங்கலுமான
வங்கிமுறைக் கல்வி!

ஆசிரியர் மட்டுமே என்றென்றும் பேசிக்கொண்டிருப்பவராக இருக்கிறார். மாணவர்கள் என்றென்றும் கேட்டுக்கொண்டிருக்கும் ஜடப்பொருளாக கருதப்படுகிறார்!


ஆசிரியர் கற்பிப்பவர்...
மாணவர் கறிக்கப்படுபவர்...

ஆசிரியர் ஒழுக்கத்தைப் போதிப்பவர்..
மாணவர் அதன்படியே நடப்பவர்....

மாணவர் மூளையில் தகவல்களை மட்டுமே
நிரப்பி விடுவதாக இருக்கிறது இன்றைய கல்வி!

இருக்கின்ற கல்விமுறையும் பள்ளிகளும்
நடுநிலையானவை அல்ல!
அவை ஆளும் வர்க்கத்தின் தத்துவார்த்த நிலையை
மீண்டும் மீண்டும் மீள் உருவாக்கம் செய்பவையாக இருக்கின்றன..

இருப்பதை இருக்கிற படியே ஏற்றுக்கொள்ளச் செய்வதாக
இருக்கிறது இன்றைய கல்வி!


மேற்கூறியது போல ஏராளமான புரட்சிகரமான கல்விக்கோட்பாடுகளை முன்வைத்தவர் பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாவ்லோ பிரைரே... 1960களில் வெளிவந்த இவருடைய புத்தகமான “ ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” அந்நாட்டு இராணுவ அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. அவரும் நாடு கடத்தப்பட்டார் என்றால் எந்த அளவிற்கு நாட்டையே உளுக்கியெடுத்திருக்கும்.. 1974ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு உலகமெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஆண்டே அனைவருக்கும் கல்வி வழங்குவதை நோக்கி திட்டங்களைத் தீட்டவும் செயல்படவுமான கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டன... நமது நாட்டின் இலக்காகவும் மாறியது. தமிழகத்தின் அறிவொளி திட்டமும் (வயது வந்தோர் கல்வி) பாவ்லோ பிரைரே பிரேசிலில் செய்த அறிவுப்புரட்சியின் நீட்சியே ஆகும்..

பிரேசில் நாட்டில் வெறும் 10% படித்த, பணக்கார வர்க்கத்தினருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை. கல்வியறிவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக நாட்டின் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வாக்குரிமை கூட மறுக்கப்பட்டிருந்த கொடுமையெண்ணி வருந்தினார். 20 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணி, ஆராய்ச்சி, மக்கள் சந்திப்பு என அவரது வருத்தம், கோபம் மக்களுக்கான இயக்கமாக மாறியது.. கேள்வி கேட்பதற்கான கல்வி, விமர்சன மனநிலைக்கான கல்வி உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்..

அவருடைய புத்தகங்களில் கல்வியாளர்கள் பலராலும் அவதானித்துப் பேசக்கூடியவையாக, மேற்கோள் காட்டி பேசக்கூடியவையாக இருப்பவை ”யதார்த்ததை வாசித்தலும் எழுதுதலும், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” ஆகிய இரண்டுமாகும்.

பாவ்லோ பிரைரே-யின் பிறந்த நாள்.. செப்டம்பர்,19


மாநில அளவிலான வாசிப்பு முகாம்:8

எனக்குரிய இடம் எங்கே?,  ஆளுக்கொரு கிணறு, ஆயிஷா, எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?, முதல் ஆசிரியன், பகல் கனவு, டோட்டோ ஜான், போயிட்டு வாங்க சார், வகுப்பறைக்குள் காற்றும் வெளிச்சமும், டேஞ்சர் ஸ்கூல், கரும்பலகையில் எழுதாதவை என நீளும் கல்வி சார்ந்த பல நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே அறிவியல் இயக்கம் வாசிப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

வருகின்ற செப்.28, 29 தேதிகளில் சென்னையில் மாநில அளவிலான 8ஆவது வாசிப்பு முகாம் நடைபெறுகிறது. வாசிப்பு முகாமில் விவாதிக்கப்பட உள்ள புத்தகம்: பாவ்லோ பிரைரே’வின் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” தான்..

முகாம்களில் பங்கேற்க விரும்பும் ஆசிரிய நண்பர்கள், வாசிப்பை நேசிக்கும் அனைவரும் தொடர்பு கொள்ள:
திருமிகு.நீலா, மாநில ஒருங்கிணைப்பாளர், வாசிப்பு முகாம்: 9786626273
திருமிகு.ஜெ.பாலசரவணன், இணை ஒருங்கிணைப்பாளர்: 9486161283






No comments:

Post a Comment