சென்னைப் பல்கலைக் கழகத்தின் கம்பீரப் பொலிவு கொண்ட பேரவை (செனட் ஹவுஸ்) வாயிலின் எதிர்ப்புறச் சுவரில் கடந்த பல வாரங்களாக ஒரு விளம்பரப் பலகை தொங்கிக்கொண்டிருந்தது. “இறுதி ஆண்டு புராஜக்ட் எந்த துறைக்காயினும் அணுகலாம்; சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை குறைந்த விலையில் கிடைக்கும்.” தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை புராஜக்ட் முதல் பிஹெச்.டி. ஆய்வுகள் வரை மாணவர்களால் பெரும்பாலும் எழுதப்படுவதில்லை; மார்க்கெட்டில் வாங்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பல்கலைக்கழக வாயிலிலேயே விளம்பரம் செய்வதில் என்ன தவறு என்று ஒரு கெட்டிக்கார வியாபாரி எண்ணியிருக்கலாம். இத்தகைய ஆய்வு அறிக்கை தயாரித்துக் கொடுக்கும் 'வல்லுநர்கள்', 'ஆய்வு ஆலோசகர்' என்ற பெயரில் விசிட்டிங் கார்டு வைத்துக்கொண்டு, தங்கள் தொழிலில் பெருமையும் லாபமும் அடைகின்றனர் என்று கேள்விப்படுகிறோம். கல்லூரி ஆசிரியருக்கான நேர்முகத் தேர்வுகளில், அவர்களது பிஹெச்.டி ஆய்வு தொடர்பான கேள்விகள் கேட்டால் சிலருக்குத் தங்கள் ஆய்வின் அடிப்படைகளே தெரிவதில்லையென்று சொல்லப்படுகிறது.
“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக ஆக்குவோம்” என்ற அரசின் சூளுரைகள் பட்டமளிப்பு விழாக்கள்தோறும் கேட்கின்றன.
வேறெங்கும் இல்லாத விநோதம்
தமிழ்நாட்டில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 21, மத்தியப் பல்கலைக்கழகங்கள் 2, பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் 21. மொத்தம் 44 பல்கலைக்கழகங்கள் இருப்பது அல்ல பிரச்சினை. இதனினும் அதிகப் பல்கலைக்கழகங்கள் தேவை. இவற்றில் பல ‘ஒருதுறை பல்கலைக்கழகங்கள்’. பொறியியல், மருத்துவம், விவசாயம், ஆசிரியர் கல்வியியல், சட்டம், உடற்கல்வி, கால்நடை அறிவியல், தோட்டக் கலை போன்ற ஒவ்வொரு துறைசார் அறிவுக்கும் தனிப் பல்கலைக்கழகம். இந்தத் துறைகள் குறித்த கல்வியை மற்ற பொதுப் பல்கலைக்கழகங்களில் பெற இயலாது; இந்தப் பல்கலை மாணவர்கள் அந்த, குறுகிய துறைப் பாடங்கள் தவிர வேறேதும் கற்க இயலாது. இது உலகில் வேறு எங்கும் இல்லாத விநோதம். பல்கலைக்கழகம் என்பதன் பொருளே பல கலைகள் உறவாடி, பரிமாறிக்கொள்ளும் களம், அறிவுத் துறைகளின் பிரிவுகள் கடந்த, பிரபஞ்சப் பொதுமையில் கலந்த ஒரு அங்கமாகத் தன் துறையை உணரும் வெளி. பொறியியல் கற்கும் மாணவர் சட்டம் கற்க வேண்டுமென்றாலோ, மருத்துவராகப் பயிற்சி பெறும் மாணவருக்கு வரலாற்றிலும் ஆர்வம் உண்டென்றாலோ தன் பல்கலைக்கழக வளாகத்திலேயே அடுத்த கட்டடத்துக்குச் சென்று பயிலலாம். இந்தியாவிலும் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய வாய்ப்புகள் உண்டு.
தமிழகப் பல்கலைக்கழகங்களில் புரையோடிக் கிடக்கும் அவலங்களைப் பட்டியலிடுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அவற்றில் பல திரையின்றி நிற்கும் உண்மைகள்தான். தமிழக அரசு, பல்கலைக்கழகங்களின் மீது காட்டும் அக்கறையின்மை, அவற்றைப் பஞ்சத்தில் பரிதவிக்க விடும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு, அடிப்படை நிதித் தேவைக்கே அவை எந்தத் தரமோ நெறியோ இல்லாமல் நடத்தும் தொலைதூரக் கல்வி, பல்கலைகள் மேல் அரசு நடத்தும் அதிகாரத் தாண்டவம், சிண்டிகேட் போன்ற அனைத்துப் பல்கலைக்கழக அதிகார அமைப்புகளும் சுதந்திரமும் மாட்சிமையும் இழந்து, கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குதல், தலைமைப் பதவியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அனைத்து நியமனங்களிலும் தலைவிரித்தாடும் ஊழல், தரமற்ற ஆய்வுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளை போன்ற நெடிது நீளும் பட்டியல்.
மேலும் ஒரு சுமை
ஒட்டகத்தின் முதுகில் சமீபத்தில் ஏற்றப்பட்டிருக்கும் கடைசிச் சுமை: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்று தமிழக அரசு முடிவெடுத்து, உயர்கல்வி கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தி. தனியார் பல்கலைக்கழகங்களை இது கட்டுப்படுத்தாது. பல்கலைக்கழகம் என்ற உயரிய அமைப்பின் ஆன்மாவைக் கொன்றுவிட்டு, செத்த உடலாக அதனை உலவ விட வேண்டுமென்பது தமிழக அரசின் திட்டமா என்பது புரியவில்லை. பல்கலைக்கழகங்களின் உயிர்மூச்சே அவற்றின் தன்னாட்சியும், தங்கள் தனித்துவத்துக்கு ஏற்ற வண்ணம் பாடத்திட்டங்களை உருவாக்கும் சுதந்திரமும்தான். இவற்றைப் பறிப்பது, மறுப்பது எத்தனை எளிதாக நிறைவேறியிருக்கிறது! உயர்கல்வி கவுன்சிலின் உறுப்பினர்களான துணை வேந்தர்கள் அதனை எதிர்த்தார்களா? தங்கள் புனிதப் பொறுப்பான பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தையும் உரிமையையும் மாண்பையும் கெளரவத்தையும் காக்க அவர்கள் குரல்கொடுத்தார்களா? தெரியவில்லை.
உலக அரங்கில் வேறு எங்கும் நடக்காத அதிசயம் இது. உலகின் பல்கலைகளில் ஒவ்வொரு துறைக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. தாங்கள் சிந்தித்து, திட்டமிட்டு, உருவாக்கிய பாடத்திட்டங்களை அந்தப் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுக்கள், மற்ற அமைப்புகளில் வைத்து, புதிய பாடங்களின் செழுமையை, தேவையை விளக்கி, விவாதித்து, ஒப்புதல் பெற்று, பின் நிறைவேற்றுகின்றன. தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அப்பாற்பட்ட எந்த அமைப்பின், அதிகாரத்தின் ஒப்புதலையும் அவர்கள் பெற வேண்டிய அவசியமே இல்லை. ஒரு துறையின் முதுகலைப் பாடம் என்றால், அவசியமான சில பாடங்கள் தவிர, விருப்பப் பாடங்கள் ஏராளமானவை ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுப்பதற்கு உள்ளன. அத்தகைய அவசிய, விருப்பப் பாடங்கள் இரண்டிலுமே ஒரு பல்கலைக்கும் மற்றொன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை முதுகலைக் கல்வியில் அளிக்கப்படும் பல பாடங்கள் அருகில் இருக்கும் டெல்லி பல்கலையில் இல்லை; ஆனால், வேறு பல அங்கு உண்டு. துறைகளுக்கு மட்டுமல்ல இந்தச் சுதந்திரமும் உரிமையும். ஒவ்வொரு தனிப்பட்ட ஆசிரியருக்கும் இந்த உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆசிரியர்கள் திறமை, புலமை, வெளியீடுகள் என்ற பல தரங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பின், ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆய்வுகள் தொடர்பான பாடங்களைக் கற்றுத்தரும் உரிமை அவர்களுக்கு உண்டு. பலதரப்பட்ட புலமைகள் கொண்ட ஆசிரியரை நியமிப்பதும், அவர்கள் தத்தமது தனி ஆய்வுகளின் அடிப்படையில் புதிய புதிய பாடங்களைத் துறையில் அறிமுகம்செய்வதும் ஒரு பல்கலையின் பெருமையாகக் கருதப்படுகிறது. அத்தகைய பன்முக அறிவு, செழுமையும் பெருமையும் அளிக்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.
இயந்திரங்களாகும் ஆசிரியர்கள்
ஆய்வும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று உயிர்ப் பிணைப்பு கொண்டவை. சிறந்த பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் தங்கள் ஆய்வுகளை வகுப்பறைக்குள் எடுத்துச் சென்று, பாடத்திட்டங்களாக மாற்றுகின்றனர். அந்த ஆய்வுப் பொருளில் ஆர்வம் ஏற்படும் மாணவர், ஆய்வை முன்னெடுத்துச் செல்கின்றனர். அறிவு, ஆழமும் விரிவும் அடைகிறது. பாடத்திட்டத்தை உருவாக்கும் சுதந்திரம் இழந்த ஆசிரியர் எங்கோ உருவாக்கப்படும் பாடங்களைப் புகட்டும் இயந்திரமாகத்தான் மாறுவார். நம் பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே தாழ்ந்து கிடக்கும் ஆய்வுத்திறன் இன்னும் அதல பாதாளத்தை, துரித கதியில் சென்றடையும்.
தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்று முடிவெடுத்த பின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் எதற்கு? பல்கலைக்கழக அமைப்புகளில் முதன்மையான கல்விக் குழுக்களை கலைத்துவிடலாம். தேர்வுகளும் அனைத்துப் பல்கலைகளுக்கும் பொதுவாக, ஒரே வினாத்தாள்கள் தயாரித்து, பள்ளி இறுதித் தேர்வுகள் போன்று மாநிலம் முழுதும் ஒரே சமயத்தில் நடத்திவிடலாம். ஒரே பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையங்களாக அவற்றை மாற்றிவிடலாம்.
தமிழ்நாட்டின் ஒரு பல்கலைக்கழகத்தில் ‘...பல்கலைக்கழகத்தைக் காப்போம்’ என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் காப்போம்’ என்ற இயக்கம் தொடங்க வேண்டியது இன்றைய வேதனை நிலை.
- வே. வசந்தி தேவி, கல்வியாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
நன்றி: தி இந்து தமிழ்
No comments:
Post a Comment