டெல்லியில் ஆங்கில மொழி அறியாத, குடிசைவாழ் ஏழைக் குழந்தைகளுக்கு, ஆங்கில மொழி கற்பித்து வருகிறார் ஒரு தமிழ்ப் பெண்.
தலைநகர் தில்லி மாநகரில், பல காலமாக `மதராஸி ஸ்கூல்’ என்றே அழைக்கப்பட்டு வந்த தில்லி தமிழ்க் கல்விக் கழகம் [delhi tamil education society] என்ற பள்ளிக்கூடத்தில் பெரும்பாலான மாணவ மாணவிகள் பொருளாதார ரீதியில், தற்போது நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவ மணிகளே ஆவர். இந்தப் பள்ளிக்கூடத்தில் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியையாகச் சுமார் 37 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணியாற்றி வருகிறார் - டாக்டர் ஏ.ஆர். இந்திரா.
ஆங்கிலம் அறியாத குடிசைவாழ் ஏழைக் குழந்தைகளுக்கும் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்து, ஆங்கிலம் பேசுவதில் அவர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மையை அறவே நீக்குவது என்ற ஒரு பகீரதப் பிரயத்தனத்தில் தற்போது முழு வீச்சில் இறங்கியிருக்கிறார் 58 வயதாகும் இந்தப் பெண்.
நல்ல பலனை எட்டும் நோக்குடைய புதுமைப் படைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களைக் கொண்ட 'ஸ்டிர்' [STIR] அதாவது, schools and teachers innovating for result என்ற என்.ஜி.ஓ.அமைப்பு பிரிட்டனில் 2012இல் உதயமாயிற்று.
உரையாடல் பயிற்சி
அனைத்துத் துறைகளிலும் மாணவமணி களின் செயல்பாட்டுச் சாதனைகளை மேம்படுத்தச் செய்யும், கருத்துகளையும், புதுமையான முயற்சிகளையும் நாடிய இந்த அமைப்பு, சென்ற ஆண்டு சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக நேர்முகத் தேர்வு நடத்தியது; இவர்களில் ஐம்பது பேர் குறும்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முடிவில் 25 பெயர்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அந்த 25 பேரில் ஏ.ஆர். இந்திராவின் பெயரும் இடம்பெற்றது. டாக்டர் இந்திராவின் யோசனையைக் கொண்ட `கான்வெர்ஸ்’ எனும் பரஸ்பர சம்பாஷணை வழித் திட்டமும் இவற்றில் ஒன்று.
1923இல் தொடக்கப்பட்ட தில்லி தமிழ் கல்விக் கழகம் 90 ஆண்டுகளைத் தொட்டுவிட்டது. மந்திர் மார்க், லோதிரோடு, ஆர்.கே.புரம், பூஸா ரோடு, லக்ஷ்மிபாய் நகர், ஜனக்புரி, மோதிபாக் என்று ஏழு கிளைகளைக் கொண்ட இந்தக் கல்விக் கழகத்தில், விரைவிலேயே மயூர்விகார் பகுதியிலும் எட்டாவது கிளையைத் தொடங்க இருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பித்துவரும் இந்திரா, 1986-87ஆம் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியுடன், இந்திய-ரஷ்ய கல்வி-கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ், ரஷ்ய மொழியை ஒரு வெளிநாட்டு மொழியாகக் கற்பிப்பதற்காக மாஸ்கோவிலுள்ள புஷ்கின் கல்வி நிலையத்தில் ஓராண்டுக் காலம் பயிற்சி பெற்றவர் இந்திரா. இந்த ஸ்டிர் அமைப்புடன் தாம் சம்பந்தப்பட்டதைப் பற்றி அவர் விளக்கும்போது, `வீட்டில் போதுமான வாய்ப்பு வசதியும், பிற கட்டமைப்பு வசதியும் அற்ற முதலாம் தலைமுறை கல்வி கற்போருக்கு, ஆங்கிலம் கற்பிக்கும் புதியதோர் உத்தியை நான் கையாண்டேன். `கான்வெர்ஸ்’ என்று நான் பெயர் சூட்டிய இந்தத் திட்டத்தின்படி, மாணவர்கள் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் பேசி அளவளாவுவதன் மூலம் ஆங்கிலத்திலேயே நன்கு உரையாடப் பழகிக் கொள்கிறார்கள்; எனவே எளிதான சம்பாஷணைகள் மூலம் அந்தத் தாழ்வு மனப்பான்மையும் மறந்து மறைந்துபோகிறது என்கிறார் டாக்டர் இந்திரா.
ஆங்கிலப் பயிற்சி
“ஏழு கிளைகளைக் கொண்ட டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தில், முதன்முதலாக இந்த முறையை, என் கிளையில் மட்டுமே அறிமுகப்படுத்தினேன்; என் முயற்சியின் பலனும் வெற்றியும் பள்ளி நிர்வாகத்தாருக்கு மிகுந்த ஊக்கமளித்ததை அடுத்து, அனைத்துக் கிளைகளிலும் இதை விஸ்தரிப்பதாக அவர்கள் அறிவித்தனர்; எனக்கு இதுவே ஒரு பெரும் சாதனையாக அமைந்தது” என்று சற்று அடக்கமாகவே குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை, திட்ட வடிவம் போன்றவற்றைத் தயாரிப்பதில் ஸ்டிர் என்.ஜி.ஓ. அமைப்பு உதவியதையடுத்து, ஆசிரியர்களுக்கும் இந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
``மாணவ மாணவிகளுக்கு முற்றிலும் பரிச்சயமற்ற ஆங்கிலச் சொற்களை அவர்களுக்குச் சரிவரக் கற்பிக்கும் நோக்கத்துடன், ஒரு இசை ஆசிரியரின் உதவியுடன், ஒலிமூலமான ஃபோனிக் பாடல்களை நான் தயாரித்து, அவற்றை இசை வழியாகப் படைத்து ஒரு வீடியோ சிடியைத் தயாரித்து விளக்கினேன். இதன் பலனும் நன்கு பளிச்சிட்டது” என்கிறார்.
இறுதித் தேர்விற்குத் தகுதிபெற்ற 25 பேரிலிருந்து ஆறு பேரை, சி.ஐ.ஐ. எனப்படும் கான்ஃபிடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரீஸ் தெரிந்தெடுத்தது. இந்த ஆறு பேரில் ஏ.ஆர்.இந்திராவும் ஒருவர்.
“கல்வியறிவில் தரத்தை மேம்படுத்துவது” என்ற தலைப்பில், சண்டிகரில் நடைபெற்ற மாநாட்டில், தத்தமது புதிய கல்வித் திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி சி.ஐ.ஐ. இந்த ஆறு பேருக்கும் அழைப்புவிடுத்து அவர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தது.
: சரோஜ் நாராயணசுவாமி
நன்றி: தி தமிழ் இந்து
No comments:
Post a Comment