நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அரசியல் தான் தீர்மானிக்கிறது. முதலாளித்துவ அரசியல் அதன் இருப்பை உறுதி செய்கிற கல்வி, அறம், நீதி, பண்பாடு, முதலியவற்றை முன்னெடுக்கிறது. அதைப் பிரச்சாரம் செய்கிறது. மக்கள் மனதில் பதிய வைக்கிறது. மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. மக்கள் மனங்களைத் தன் வசப்படுத்துகிறது. ஆக அரசு யந்திரம் தன்னுடைய அரசியல் தத்துவத்துக்கேற்ப எல்லாவற்றையும் உருமாற்றுகிறது. கல்வியும் இந்த சமூகத்தில் அத்தகைய உருமாற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறது. இப்போதைய கல்வி முறை நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ தத்துவத்துக்கேற்ப மாற்றப்பட்டிருக்கிறது. போலியான ஜனநாயகநடைமுறைகள் உள்ள இந்த அமைப்பு அதே போலியான ஜனநாயகநடைமுறைகளைக் கல்வித் திட்டத்திலும் கடைப்பிடிக்கிறது. எல்லோருக்கும் கல்வி என்று முழங்குகிறது. கட்டாயக்கல்வி என்று கட்டாயப்படுத்துகிறது. ஆனால் அதே நேரம் சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் கல்வி இருக்கும்படியாக கல்வியைத் தனியார் மயமாக்கியுள்ளது. அரசுப்பள்ளிகளுக்குப் போதுமான அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ செய்து கொடுப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாநில, மற்றும் மத்திய அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கல்வி என்ற முழக்கத்தையும், கொஞ்சம் கொஞ்சமாகக் கல்விக்கான நிதிக்குறைப்பையும் செய்து தாங்கள் முதலாளிகள் பக்கம்தான் என்று நிருபிக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கல்வித்திட்டம் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் பிள்ளைகளுக்கேற்ப இல்லை. அந்தக் குழந்தைகளின் அறிதிறன், கற்றல் திறன், உள்வாங்கும் சக்தி, இவற்றிற்குச் சம்பந்தமில்லாமல் கல்வியைத் திணிக்கும்போது அந்தக் குழந்தைகளால் உள்வாங்க முடிவதில்லை. அல்லது சில குழந்தைகளுக்கேனும் அது முடிவதில்லை. அந்தக் குழந்தைகளைப் படிக்க லாயக்கில்லை என்ற முத்திரையைக் குத்தி பள்ளியை விட்டு விலகச்செய்து மாடு மேய், பன்னி மேய் என்று திரும்பத் திரும்பச்சொல்லி அவர்களை தாங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று மனதளவில் ஏற்றுக் கொள்ளவைத்து கல்வியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓரங்கட்டுகிறது. இப்படி பெரும்பான்மையான குழந்தைகளை உதிரித் தொழிலாளிகளாக்கி தன்னுடைய உழைப்புச் சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது இந்த அமைப்பு.
இப்படி பாரதூரமான பாதிப்பைக் குழந்தைகள் மனதில் நம்முடைய கல்வித்திட்டம் ஏற்படுத்தி அவர்களைத் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களாக மாற்றுகிறது. எந்த விமர்சனமுமில்லாமல் சமூகத்தின் அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ளும் பொறுமையை அது தருகிறது. இதற்கு ஆதரவாக மதமும், நீதித்துறையும் இருக்கிறது. இதைப் பெரும்பான்மையானவர்கள் புரிந்து கொள்ளும்போது சமூகத்தில் மாற்றம் நிகழும். இத்தகைய அரசியலைப் புரிந்து கொண்ட மாணவர்கள் எட்டுபேர் தங்களுடைய பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் தான் “ எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? ” என்ற குறுநூல். இதனை எழுத்தாளர் ஷாஜஹான் அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மை அதிரவைக்கும் கேள்விகளும் பதில்களும் கொண்டவை
இத்தாலியிலுள்ள பார்பியானோ நகரத்தின் பள்ளிக்கூட மாணவர்கள் எட்டு பேர் தங்களுடைய டீச்சருக்கு எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதுக்குமான கேள்விகளாக மாறி நம்மை உலுக்குகிறது. முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்றால் பாஸ். முப்பத்திநாலு மதிப்பெண்கள் பெற்றால் பெயில் என்ற நடைமுறையினை தகர்த்தெறியும் கேள்விகளை அந்த மாணவர்கள் கேட்கிறார்கள். கல்வி என்பது கூட்டாகக் கற்க வேண்டியது என்பதையும், கல்வியில் மாணவர்களுக்கான பங்கேற்பு பற்றியும் அவர்கள் கேட்கிறார்கள். ஆசிரியர் என்பவர் கல்வி பயிலுவதற்கான வழிகாட்டியாக ஏன் இல்லாமல் அதிகாரியாக நடந்து கொள்கிறார் என்று கேள்வி கேட்கிறார்கள். பெயிலாக்கப்பட்டு பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் ஒரு பாதிரியாரின் ஏற்பாட்டில் இரவுப்பள்ளி தொடங்கி தாங்களே ஆசிரியராகவும், தாங்களே மாணவர்களாகவும் நடத்திய அநுபவங்களைச் சொல்கிறார்கள். ஒருபாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின் தங்கிய மாணவனுக்காக வகுப்பே காத்திருந்து அவன் அந்தப் பாடத்தைக் கற்ற பிறகு அடுத்த பாடத்துக்குப் போவதைப்பற்றியும், வாழ்க்கை நடைமுறைக்கு ஒவ்வாத மேதாவித்தனமான பாடங்களை நெட்டுரு போட்டு வாந்தியெடுப்பதில் உள்ள இழிமுறைகளைப்பற்றியும் பேசுகிறது. ஒருவகையில் இது தோற்றுப்போனவர்களின் முழக்கம். தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி. புத்திசாலி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி, அலுப்பூட்டும் ஆசிரியர்களின் உரைகள் பற்றி, ஒருவழிப்பாதையாக வகுப்பறைகள் மாறியிருப்பதைப் பற்றி, கேட்கிறது. கூட்டாகக் கற்பது அரசியல் தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது. மதிப்பெண்களுக்காக, தேர்ச்சிக்காக, சான்றிதழுக்காகக் கல்வி பயிலும் நடமுறையைக் கேலி செய்கிறது. இத்தகையக் கல்விமுறையில் பெற்றோர்களின் தலையீடு பற்றி, ஆசிரியர்களின் பொறுப்பு பற்றி பேசுகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏழைகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே இந்தக் கல்விமுறையை மாற்ற முடியும் என்று முரசறைகிறது. கல்வி கற்க எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது போல சொல்லி மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றி அவர்களை கற்க லாயக்கில்லாதவர்களாக முத்திரை குத்தும் இந்த சமூக அமைப்பிற்கெதிரான போர்க்குரல் இந்தச் சிறுநூல்.
மதுரையிலுள்ள வாசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை அனைவரும் வாசிப்பதின் மூலம்நம்முடைய கல்விமுறை குறித்தும், நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதைப்பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.
உதயசங்கர்
நன்றி- இளைஞர் முழக்கம்
No comments:
Post a Comment