ஐநாவின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, உலகில் அனைத்து சிறார்களும் ஆரம்பப் பள்ளிக் கல்வியை பெறுவதற்கு இன்னமும் 70 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளது.
ஆனால், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதனை எட்டிவிட முடியும் என்று உலகத் தலைவர்கள் உறுதி எடுத்திருந்தனர்.
5 கோடி 70 லட்சம் பிள்ளைகள் இன்னமும் பள்ளிக்கூடத்துக்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வறியவர்களும், ஆப்பிரிக்க பெண் பிள்ளைகளும் கல்வி வசதியைப் பெற 2086 ஆம் ஆண்டாகிவிடும் என்றும் அது கூறியுள்ளது.
இது மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் என்று இந்த அறிக்கையை எழுதிய பௌலின் ரோஸ் கூறியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் கணக்குப் போடும் திறன் கிடைக்கவில்லை என்று யுனெஸ்கோவின் அறிக்கை கூறுகிறது.
மூன்றில் ஒரு பங்கு நாடுகளில், கால் பங்குக்கும் மேலான ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி தரப்படுவதில்லை என்றும் அது கூறியது.
மிகவும் மோசமான நிலைமை நீடிக்கும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே படித்தல் மற்றும் கணிதம் ஆகிய இரு விஷயங்களின் அடிப்படையான அம்சங்கள் தெரிந்திருக்கின்றன என்று இஸ்லாமாபாதில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
அதேவேளை இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா மற்றும் தன்சானியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில், கல்வியை அடைவதில் முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை இந்த விடயத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
35 வருடமாக போரைச் சந்தித்து வருகின்ற ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பள்ளிக்கூடங்களை ஒருவாறாகத் திறக்கத் தொடங்கியுள்ளது.
வறிய நாடுகளைப் பொறுத்தவரை அங்குள்ள கால்வாசி இளையவர்கள் கல்வி கிடைக்காமலேயே இருக்கிறார்கள்.
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 ஜனவரி, 2014 - 12:52 ஜிஎம்டி
நன்றி: பிபிசி தமிழ்
No comments:
Post a Comment