Saturday, 13 September 2014

மாணவர்கள் இல்லாததால் 52 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி மூடல்

மூடப்பட்ட ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.


மாணவர்கள் யாரும் இல்லாததால் வேதாரண்யம் அருகே அரசுத் தொடக்கப்பள்ளி மூடப்பட்டு, அதில் பணிபுரிந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

தகட்டூர் ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கடந்த 52 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. 5-ம் வகுப்பு வரையில் நடந்துவந்த இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். அரசின் அனைத்து வசதிகளும் இப்பள்ளியில் இருந்தும் இங்கு ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. 5-ம் வகுப்பில் 3 மாணவர்களும், 2-ம் வகுப்பில் ஒரு மாணவர் மட்டுமே படித்து வந்தனர்.

அவர்களில் ஐந்தாம் வகுப்பு படித்த மூன்று மாணவர்களும் தேர்வில் வெற்றிபெற்று 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்று விட்டனர்.

2-ம் வகுப்பில் படித்து வந்த மாணவர் முருகபூபதி தேர்வில் வெற்றி பெற்று 3-ம் வகுப்புக்குச் சென்றார். இந்த கல்வி ஆண்டிலும் யாரும் புதிதாக சேரவில்லை. எனவே, ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதற்கும் ஆபத்து கடந்த 6-ம் தேதி ஏற்பட்டது. முருகபூபதி மட்டும் பள்ளியில் தனியாக கல்வி பயில்வதை விரும்பாத பெற்றோர், முருகபூபதியை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டனர். இதனால் மாணவர்கள் இல்லாத பள்ளியாக மாறியது ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்த பள்ளி நிலவரம் குறித்து ஆலோசனை செய்த கல்வித்துறை உயர் அலுவலர்கள் பள்ளியை மூட உத்தரவிட்டனர்.

மேலும், இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் செட்டிப்புலம் தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், ஆசிரியர் பன்னாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும், சத்துணவுப் பணியாளர்கள் அருகில் உள்ள பள்ளிக்கும் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.- கரு.முத்து

நன்றி: தமிழ் இந்து

No comments:

Post a Comment