'எங்க ஊர் குழந்தைகள் வெளியூர் போய் படிக்க முடியலை. உள்ளூர்ல ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்க...' என்றோ, 'எங்க கிராமப் பள்ளியை நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துங்கள்' என்றோ கோரிக்கைகள் வைக்கப்படுவதைதான் பார்த்திருப்போம். இதற்கான போராட்டங்கள்கூட தூள் பறக்கும். ஆனால், 'எங்க ஊர் அரசுப் பள்ளியை இழுத்து மூடிவிடுங்கள்...' என்ற கோரிக்கை 'அத்திப்பூ' ஆச்சர்யம்தானே. கிருஷ்ணகிரி மாவட்ட மலைக் கிராமம் ஒன்றில்தான் இப்படி ஒரு கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலைமுகட்டில் அமைந்திருக்கும். இவற்றில் சில கிராமங்களுக்கு கால்நடையாக மட்டும்தான் போக முடியும். அப்படியான கிராமம்தான் புல்லஅள்ளி. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 வீடுகளுடன் கம்பீரமாக இயங்கிய விவசாய கிராமம். டன் கணக்கில் தானியங்களை இருப்புவைக்க ஏற்ற வகையில் கட்டப்பட்ட வீடுகள். இங்கு சில வீடுகளில் மட்டும்தான் மக்கள் வசிக்கிறார்கள். பொருளாதாரம் எனும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, இந்தக் கிராமத்தில் 33 ஆண்டுகளாகச் செயல்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.
ஒன்றரை மணி நேர நடைப்பயணம்
புல்லஅள்ளி மலைக் கிராமத்தில் கடந்த 1979-ம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. புல்லஅள்ளி, ஆலாப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில், அதிகபட்சமாக 60 குழந்தைகள் வரை படித்திருக்கிறார்கள். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரடுமுரடான மண் சாலையில் இருசக்கர வாகனங்களில் மட்டும் 'திக்திக்' பயணம் செய்தால்தான் மலையடிவாரத்தை அடையலாம். இன்னொரு மாற்றுவழி 3 கி.மீ. தூரம்கொண்டது. படிகட்டுகளாக அமைந்துள்ள இந்த வழியில் நடந்துபோக ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்படியொரு சூழலில் வாழும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது சவாலாக மாறியது. மேலும், பொய்த்துப்போன மழை, கைகொடுக்காத விவசாயம் போன்ற காரணங்களாலும், இங்கு வாழ்ந்த மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக மலையை விட்டு இடம்பெயர ஆரம்பித்தனர்.
தனியார் பள்ளிகளில்…
தற்போது புல்லஅள்ளி கிராமத்தில் வெறும் 8 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. ஆலாப்பட்டி கிராமத்தில் இன்றைக்கு மிச்சமிருப்பவை 7 குடும்பங்கள்தான். கடந்த 2012-13-ம் கல்வியாண்டில் இங்கே படித்த குழந்தைகளின் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்தது. தற்போது எவருமே இல்லை. மலைமேல் வசிக்கும் சில குடும்பங்கள்கூட தங்கள் குழந்தைகளை மலையடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். எனவே நடப்புக் கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒரு குழந்தைகூட புதிதாக சேர்க்கப்படவில்லை. இந்த நிலையிலும் இந்தப் பள்ளிக்கு என நியமிக்கப்பட்ட செல்வக்குமார் என்ற ஆசிரியர் தினமும் நடந்தே மலையேறி வந்து போயிருக்கிறார். இதை கவனித்த அந்தக் கிராம மக்கள் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும், 'எங்கள் ஊர் பள்ளியில் சேர்ந்து படிக்க குழந்தைகளே இல்லை. இங்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கும், அதிகாரிகளுக்கும்கூட இது வீண் சிரமம். எனவே எங்கள் ஊருக்கு பள்ளி வேண்டாம்' என்று சமீபத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், 'ஆசிரியர் அந்தப் பள்ளிக்கு வருவதை மட்டும் தற்காலிகமாக நிறுத்துகிறோம். அடுத்த ஆண்டில் அங்கே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் முன்வந்தால் மீண்டும் பள்ளி செயல்படும். தொடர்ந்து குழந்தைகள் வராத நிலை இருந்தால் பள்ளியை ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வர்' என்று தெரிவித்துள்ளனர். இதையொட்டி ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு அந்த ஓராசிரியரும் வருவது நின்றுபோயிருக்கிறது.
புல்லஅள்ளியில் வசிக்கும், 1-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் சக்திவேல் பேசும்போது, "ரெண்டு கிராமங்களிலும் சேர்த்து சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அவ்வப்போது இங்கே யானை நடமாட்டம் உண்டு. நிலத்தை நம்பி வாழ்ந்த மக்கள் நவீன வாழ்க்கை முறையை விரும்பி படிப்படியா கீழே இடம்பெயர்ந்துடாங்க. அவங்களோட நிலங்களையும் பெங்களூரு தொழிலதிபர்களுக்கு வித்துட்டாங்க. மிச்சமிருக்கும் சிலரும் இன்னும் கொஞ்ச நாள்ல கீழே நகர்ந்திடுவோம். இங்குள்ள பள்ளிக்கூடத்துல சேர குழந்தைகளே இல்லை. அதனாலதான் பள்ளியை 'ரத்து பண்ணிடுங்க'னு மனு கொடுத்தோம். நானும் இந்தப் பள்ளியில்தான் படிச்சேன். எந்த நேரமும் குழந்தைகளின் கூச்சல் கேட்டுக்கிட்டே இருந்த எங்க ஊர் பள்ளிக்கூடத்தைப் பூட்டிய நிலையில் பார்க்க வேதனையாத்தான் இருக்கு..." என்றார் சக்திவேல்.
''இதோ.... இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்...' என பெருமையுடன் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்தைக் காட்டுபவர்களை நாம் பார்த்திருப்போம். தமிழகத்திலேயே முதல்முறையாக புல்லஅள்ளி மக்கள் துரதிர்ஷ்டவசமாக... மூடிக்கிடக்கும் பள்ளியைக் காட்டி, 'நாங்கள் ஒரு காலத்தில் படித்த பள்ளிக்கூடம்' என்கிறார்கள் கடந்த கால ஞாபகம் மிதக்கும் கண்களுடன்.
நன்றி : தமிழ் இந்து நாளிதழ்
No comments:
Post a Comment