கடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று RSS தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிட வுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாய கனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இன்னொருபக்கம் இதுவரை தடை செய்யப் பட்டிருந்த கோட்சே எழுதிய `நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தகம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டு தில்லியில் புத்தக கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் கோட்சேவுக்கு சிலை வைக்கப்பட வேண்டும் அதற்காக மத்திய அரசிடம் நிலம் கேட்கப் பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் கோட்சேவுக்கு சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளையொட்டி `RSS - ஒரு அறிமுகம்‘ என்ற பெயரில் நூலும் வெளியிடப் பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் மறைமுகமாக காந்தியின் கொலையை நியாயப்படுத்தவும் செய் துள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் சாதி- மதங்கள்- வர்க்கங்கள் கடந்து திரட்டிய ஒரு தன்னலமற்ற மாமனிதராம் காந்தியை, குக்கிராமம் தொடங்கி நாடு முழுவதும் தேசப்பிதா என்று கொண்டாடப்படும் காந்தியை சுட்டுப் படுகொலை செய்த மதவெறி கோட்சேவை இப்போது இப்படியாக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்த முயற்சி மேற்கொண்டுள்ளது காவிக் கூட்டம்.
காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வல்லபாய் படேல் MS.கோல்வாக்கருக்கும் SP முகர்ஜிக்கும் அனுப்பிய கடிதங்களில், “RSS தலைவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் முழுமையாக மதவெறியை தூண்டும் நச்சுக்களாகவே இருந்தன. இதனால் ஒரு நச்சுத்தனமான சூழல் உருவாக்கப்பட்டு, அதன் இறுதி விளைவாக ஒரு கொடுந்துயரம்(காந்தியின் படுகொலை) நடந்துள்ளது. RSS உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டனர். காந்தியின் மரணச் செய்தியை கேட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார். மதவெறியர்களின் அந்த மகிழ்ச்சி இன்றும் தொடர்கிறது.கோட்சே ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் அல்ல. RSSக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருவதும் முழுப் பொய் ஆகும். RSS அமைப்பே கூறுவது போல, அவர் ஒரு மதவாத அறிவு ஜீவி ஆவார். திட்டமிட்டே கொலை செய்து, ஏன் கொன்றேன் என்று நியாயப் படுத்தும் வாக்குமூலத்தையும் அளித்தவர்தான் கோட்சே. நாதுராம் விநாயக் கோட்சே என்ற அந்த நபர், மஹாராஷ்டிராவில் பூனாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், இதுவரை இந்திய நாட்டின் மிக உயர் அதிகாரபீடத்தில் இருந்து வரும் சித்பவன பிராமண வகுப்பில் பிறந்தவர். BJP மற்றும் அதன் தாய் அமைப்பான RSS அமைப்பின் தலைமைப்பொறுப்பை வகித்துவருபவர்களும் இவர்களே.
கோட்சேயின் குடும்பத்தில் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், அது பிறக்காத சூழலில், கோட்சேயை பெண்குழந்தையாக பாவித்து மூக்குத்தி மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை அணிவித்து வளர்க்கப்பட்டார். இதனால் கோட்சேயின் பாலின அடையாளம் குழப்பமாகி அது அவருக்கு சிக்கலான இளம் பருவமாக இருந்தது. அரசியலிலும் சமூகத்திலும் ஆதிக்கத்திலேயே இருந்து வரும் சித்பவன சாதிக்குடும்பம், திடீரென வறுமையில் வீழ்ந்தது. அதிகாரமில்லாததால் ஏற்பட்ட விரக்தியும், பாலின அடையாளச் சிக்கலும் சேர்ந்து கொண்டு அவனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்கும் பொருட்டு அவனை ஒரு தீவிரவாதியாக மாற்றியிருக்கலாம் என்று அரசியல் உளவியலாளர் ஆசிஸ் நந்தி, `உளவியலின் விளிம்பு’ (எட்ஜ் ஆப் சைக்காலஜி) என்ற நூலில் குறிப்பிடுகிறார். இன்னொருபக்கம் கோட்சே மகாத்மா காந்தியின் அரசியலையும் அவரது அணி திரட்டலையும் எப்போதுமே மிகக் கடுமையாகவும் விமர்சித்து வந்தார்.
மிகவும் குறுகிய வக்கிரத்துடன் காந்தியின் அரசியலைப் புரிந்து கொண்டு தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். “காந்தி இந்து, முஸ்லிம் மக்களை ஒற்றுமைப் படுத்துவது என்ற பெயரில் வரலாற்றுரீதியாக புனிதமான இந்து பூமிக்கு கடுமையான களங்கத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தி விட்டார். இதன் மூலம் நீசர்களாகிய முஸ்லிம்கள் தனி நாடாக பாகிஸ்தான் கேட்கும் அளவுக்கு ஊக்கமளித்து விட்டார். இதை விட இந்து மரபை கொச்சைப்படுத்தும்விதமாக `அகிம்சை’ என்ற பெயரில் இந்துக்களின் ஆண்மையை நீக்கி மலடாக்கி விட்டார். இந்து மக்களுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவித்து விட்டார்”என்று கோட்சேயின் நூலில் மதவெறி வக்கிரமும் ஆணாதிக்கத்தனமும் வழிந்தோடுகிறது.கோட்சே RSSசை விட்டு திட்டமிட்டு வெளியேறி, இந்து மகாசபையில் சேருகின்றார். அங்கு காந்தியை கொல்லும் திட்டம் உருவாக்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அத்வானி உள்ளிட்ட BJP தலைவர்கள் RSSக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி அவர்களின் வரலாற்றுக் குற்றங்களிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.ஆனால், கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, தெளிவாக கூறுகிறார்; கோட்சே RSSசை விட்டு வெளியேறியது, காந்தியின் கொலைக்குப் பின்னர் RSS தலைவர்கள் இந்த வழக்கினால் போலீசாரால் துன்புறுத்தப்படுவார்கள்; அதைத் தவிர்க்கவே RSSசை விட்டு வெளியேறினார். RSSக்கும் அந்த உள்ளார்ந்த புரிதல் இருந்தது.” கோட்சேவுக்கு சிலை வைக்கிற, அவரை ஆராதிக்கிற வக்கிர மதவெறிகள் அடையும் மகிழ்ச்சியின் பின்னணி இதுதான்.---தீக்கதிர் நாளிதழ்: ஜன.2.2015
தேனி.சுந்தர் பதிவிட்டுள்ள’கோட்சே என்ற கொடியவன் - மறக்கக்கூடாத வரலாறு...’ இன்றைய இளம்தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய மிகமுக்கியமான வரலாறு.
ReplyDelete