Monday, 2 March 2015

மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி?

வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர் மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள் முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?) நிறைந்திருக்கும்.

அரசுப் பள்ளிகளில் இத்தனை பள்ளிகள் எவ்வளவு சதவீதம் தேர்ச்சி எந்தெந்த பாடங்களில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி, எந்த பாடத்தில் தேர்ச்சி குறைந்தது என மீளாய்வு கூட்டங்கள் நடத்தி, அதிகாரிகள் தங்களை திட்டுவது, அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிப்பது என்பதெல்லாம் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் பழகி விட்ட ஒன்றாகிவிட்டது.

தோல்வியடைந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற தகுதியில்லாதவர்களா? வெற்றி பெற்ற அனைவரும் தகுதியானவர்களா என்று உங்களுக்குள் ஒரு கேள்வி கேட்டுப்பாருங்கள்? உண்மை புரியும். தேர்வு நடந்த நாள் தோல்வியடைந்த மாணவனுக்கு நல்ல நாளாக அமையவில்லை. அல்லது தனது திறமையை வெளிப்படுத்தும் சூழல் இல்லை.

ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது. அவ்வளவுதான். கடந்த வருடத்தில் மட்டும் சில மாவட்டங்கள் திடீரென 10 முதல் 15 இடங்கள் வரை தேர்ச்சி சதவீதத்தில் முன்னேறி இருக்கிறது. எப்படி இந்த மாயாஜாலம் நிகழந்தது என்பது விட்டலாச்சார்யா படங்களை விஞ்சும் மர்மங்களாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தேர்ச்சி சதம் வருகிறது என்ற கேள்வியை அண்டை மாநில ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கேட்கும் போது நம்மிடம் பதில் இல்லை. தேர்ச்சி சதம் என்பது ஒரு முக்கியமான காரணிதான். ஆனால் அதையே கல்விக்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியுமா? மூன்றாம் தலைமுறையில் கற்கும் மாணவன் பெறும் மதிப்பெண்ணையே முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவன் பெற முடியுமா?

வீட்டு வாசற்படியில் இருந்து பள்ளி வகுப்பறை வரை மகிழுந்தில் பயணம் செய்து கல்வி கற்கும் மாணவனும், விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று சில பல மைல்கள் நடந்து சென்று, சில பாட ஆசிரியர்கள் இல்லாமல் தானே கற்கும் மாணவனும் ஒன்றா? ஈரோட்டில் விளையும் மஞ்சள் திருவண்ணாமலையில் விளையுமா? கன்னியாகுமரியில் விளையும் ரப்பர் கடலூரில் விளையுமா? இயற்கையாகவே ஒரு மண்ணில் எது விளையுமோ அது மட்டுமே விளையும். இது இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடம்.

காஷ்மீர் ஆப்பிளை தமிழ்நாட்டில் விளைவிக்க முயற்சி செய்தால் தோல்வியே மிஞ்சும் என்பது நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் அதையும் தாண்டி நமது மண்ணுக்கு ஒத்துவராத பயிர்களை கடந்த 20, 30 ஆண்டுகளாக பயிரிட்டதும், உரமிட்டதும் நமது மரபு சார்ந்த விவசாயத்தையும், மண்ணின் தன்மையையும் கொன்றொழித்து விட்டது. நவீன உரங்களை நம்பி நாம், இன்று விசமுள்ள உணவுகளை உற்பத்தி செய்து வருகிறோம். பசுமைப் புரட்சி நமது மண்ணின் உயிரை எடுத்து விட்டது. தற்போது மண் மலடாகிவிட்டது. வெள்ளைக்காரன் நமது மரபு சார்ந்த விவசாயத்தை ஒழிக்க நினைத்தான். அது நிறைவேறிவிட்டது.

மாணவர்களும் அறிவில்லாத மலடுகளாக பள்ளிக்கல்வியை முடிக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பயில் ஒரு மண்ணில் விளைய பல்வேறு காரணிகள் உள்ளது. பயிர் விளைச்சளைத் தரவில்லை எனில் விவசாயி மட்டும்தான் காரணமா? மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்கள் காரணமா? பயிர் விளைய பருவமழை, மண்ணின் தன்மை, பயிர் செய்த காலம், பராமரிப்பு, நல்ல விதை போன்ற பல காரணிகள் உள்ளது.

பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத சமூக, பொருளாதார, சாதி ரீதியான, புவியியல் ரீதியான பல ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் குடும்பங்களில் நிலவி வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல பெற்றோர்கள் தினக்கூலிகளாக பெங்களூரிலும், திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்கள் தாங்களே சமைத்து சாப்பிட்டு பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. சில மாணவிகள், பெற்றோர் உடன் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதும் உண்டு.

தொடர்ந்து இடைவெளியில்லாமல் ஒரு நிலத்தில் பயிர் செய்தால் நிலம் மலடாகிவிடும். தொடர்ந்து நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தால் பயிர் வளராது என்பதும் நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதே காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. தனியார் பள்ளிகளைப் பார்த்து தற்போது அரசுப் பள்ளிகளும் அதைப் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தங்கள் விடுமுறையையும் மகிழ்ச்சியையும் பறித்த ஆசிரியர்கள் மீது ஏன் மாணவர்களுக்கு கோபம் வராது?

இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?

ஒரு பெண்ணின் கருவறையில் உள்ள கருவை சோதிக்கும் போது முறையாக வளர்ச்சி இல்லை எனில், அதை கரு நீக்கம் செய்வதே ஓர் உண்மையான மருத்துவரின் கடமை. அது கொலையல்ல. ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மகிழுந்தில் பழுது என்றால் அதை அப்படியே ஒரு நிறுவனமோ, பொறியாளரோ சாலையில் ஓடவிட்டால் சில பல நபர்களை அது பலிவாங்கும். குறைபாடுடன் வாகனம் விற்பனைக்கு விடப்பட்டது தெரியவந்தால் நீதிமன்றம் மூலமாக பல லட்சங்கள் கோடிகளை நிறுவனம் தண்டம் கட்ட வேண்டி வரும். நிற்க.

இந்த காருக்கு பதிலாக நமது மாணவனை நினைத்துக்கொள்ளுங்கள். பொறியாளருக்கு பதிலாக ஆசிரியர்களையும், நிறுவனத் தலைவருக்கு பதிலாக நமது கல்வித் துறையையும் பொருத்திப் பாருங்கள். பள்ளி எனும் மனிதவள உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் எத்தனை குறைபாடுள்ள மகிழுந்துகள் வெளியே சென்று எத்தனை பேரின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்.ெ

தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முன்னால் மாணவனின் பங்கு உள்ளது. காரணம்... மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியையோ, விழிப்புணர்வோ தராமல் வெறும் மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றிவிட்டது நவீன மெக்காலேக்களின் கண்டுபிடிப்பு.்

மதியம் 10 நிமிடமே இடைவேளை விட வேண்டும். மீதி நேரம் வடக்கு பார்த்து வாஸ்து முறைப்படி உட்கார்ந்து கொண்டு படிக்க வேண்டும் என்றெல்லாம் சுற்றறிக்கைகள் விடப்படுகிறது. 10 நிமிடத்தில் ஒரு மாணவன் உணவருந்த முடியுமா? பள்ளியில் சத்துணவு 10 நிமிடத்தில் வழங்கப்பட்டு விடுகிறதா? சிறைக் கைதிகளுக்கு இருக்கும் மனித உரிமை கூட மாணவர்களுக்கு இல்லையா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என்று ஆசிரியர்கள் இருந்துவிடுகிறார்கள்.

தேர்ச்சி சதவீதம் என்ற பெயரில் மாணவர்களை கசக்கிப் பிழவதும், அவன் எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை, தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற நிலைக்கு ஆசிரியர்களை கல்வித்துறை தள்ளி பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஒரு பள்ளியில் ஒரு பெண்ணாசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டுகிறார் ஒரு மாணவர். ஆசிரியர் அறைக்கு சென்று அழுவதை தவிர அந்த ஆசிரியையால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த வருடத்தில் மட்டும் எத்தனை பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும் ஆய்ந்து பாருங்கள், எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களால் தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என நினைத்துப் பாருங்கள். நாம் கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு எதைக் கற்பித்தோம் என்பது புரியும்.

11, 12 ம் வகுப்பு பாடங்களில் 12-ம் வகுப்பு பாடங்களில் 10 சதவீதத்தைப் படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பதே நிதர்சனம். 10 சதவீதத்தை கூட படிக்க முடியாமல் முடியாமல் மாணவன் தோல்வியுறுவதும், இந்த 10 சதவீதத்தைப் படிக்க வைப்பதற்கே சனி, ஞாயிறு, விடுமுறை, காலை, மாலை என்று சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் அலைவதையும் நினைத்தால் தெரியும் நமதுமாணவனின் தரமும், கல்வித்துறையின் நிலையும்.

கற்றல் பணி மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்று ஆய்வதற்கு எந்த அதிகாரியும், ஆசிரியர்களும் தயாராக இல்லை. தேர்ச்சி சதமும் மதிப்பெண்களும் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பதிலேதான் ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்த வரையில் கல்லூரி கல்விக்கு மூலப்பொருட்கள் தயார் செய்து அனுப்பும் ஒரு தொழிற்சாலையாக மாறிவிட்டது. ஆனால் மூலப்பொருட்களின் தரம்தான் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. 12ம் வகுப்பை தாண்டிய மாணவர்கள் தங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை முறை அறிவியல், மொழி ஆய்வகங்களில் நுழைந்தனர் எனக் கேட்டால் தெரியும். நமது பள்ளிக்கல்வியின் தரம். ஆனால் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டும் வானளவு உயர்ந்து நிற்கிறது.

இதையும் தாண்டி தேர்ச்சி சதவீதம் குறைந்தால் 'நான் மாற்றப்படுவேன், நீங்கள் தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றப்படுவீர்கள்' என்று ஆசிரியர்களை மன ரீதியாக பயமுறுத்தி, மாவட்டத்தின் நலன் கருதி ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது.

விளைவு...? தமிழைக் கூட வாசிக்கத் தெரியாத மாணவர்கள் 11ம் வகுப்பை அடையும் நிலையில் நமது கல்வியின் தரம் உள்ளது. அவனுக்கு தமிழ் தெரிந்தால் என்ன? ஆங்கிலம் தெரிந்தால் என்ன? நமக்கு தேர்ச்சி விகிதம் வந்தால் சரி. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் மாணவர்களை அமர வைப்பதே பெரும் பாடாகி விட்டது. எனக்கு எப்படி தேர்ச்சி பெறுவது என்று தெரியும் என்று மாணவன் ஆசிரியரைப் பார்த்து கேலி செய்யும் நிலைக்கு ஆசிரியர் சமூகம் தள்ளப்பட்டுவிட்டது.

கற்றுக் கொடுப்பது கல்வி என்பது போய் புள்ளி விவரங்களில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது அரசும், அரசு அதிகாரிகளும். மாதம் மும்மாரி மழை பெய்யாவிட்டால் உங்களை தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று மேலதிகாரி சொன்னால் நான்கு முறை நன்றாக பொழிந்தது என்று கூட புள்ளிவிவரம் சமர்ப்பித்து நல்ல பெயர் வாங்கும் அதிகாரிகள் பலர் உள்ளனர்.

கடந்த வருடம் ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஒரு சுமார் லட்சம் மாணவர்களில் வெறும் 450 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள். அதிலும் வெறும் 31 பேர் மட்டுமே மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதை விட்டுவிட்டு தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வித்துறை செயல்பட்டால் இந்த சமூகம் அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியாது.

உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து தரமான 'கல்வியை' (தேர்ச்சி சதவீதத்தை அல்ல) வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கும் செயல்பாடுகள், கல்வி என்ற மரத்தின் வேரில் ஊற்றிய வெந்நீராகவே இருக்கும்.

*
கட்டுரையாளர்: கை.இளங்கோவன் 
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சங்கம். |
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

No comments:

Post a Comment