குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் தெரிவித்தார்.இதுகுறித்து தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னிசெய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த வருடம் மத்திய அரசுக்கு அனுப்பிய திட்டத்தில், குழந்தை திருமணத்தை தடுக்கும் திட்டத்திற்கும் சேர்ந்து நிதி கேட்டுள்ளோம்.
பெண்ணின் திருமண வயது 18. அந்த வயதுக்கு குறைவாக பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை குழந்தை திருமணம் என்று அழைக்கிறோம். குழந்தை திருமணத்தை தவிர்க்க திட்டமிட்டுள்ளோம்.6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளிடம் இந்த குழந்தை திருமணம் பற்றி எடுத்து கூற உள்ளோம். கூடிய மட்டும் அந்த குழந்தைகளுக்கு திருமணம் பேசினால் உடனே அதை தடுக்கும் வகையில் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் பேசுவார்கள். மாணவிகளும் தங்களுக்கு திருமணம் பேசினால் பெற்றோரிடம் நைசாக பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் ஆசிரியரிடம் தகவல் தெரிவியுங்கள். குழந்தை திருமணத்தால் வரும் தீமைகள் பற்றி பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.மத்திய அரசு குழந்தை திருமணத்தை தடுக்க நாங்கள் கொடுத்துள்ள திட்டத்திற்குநிதி தந்தால் அந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவோம்.
அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் குழந்தைகள் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் குழு மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் முதலில் விழுப்புரம், திருவண்ணாமலை,தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளோம்அனைவருக்கும் கல்வி திட்டம், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதே ஆகும். இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு செயல்வழி கற்றல் முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.இந்த முறையில் மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள். எழுத்துக்களை கூட்டி எளிமையாக படிக்கிறார்கள். வார்த்தைகள் நன்றாக அமைத்து காண்பிக்கிறார்கள்.அவர்களுக்கு கணிதம் நல்ல முறையில் தெரிகிறது.பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செயல்வழி முறையில் சரியாக கற்பிக்கிறார்களா? என்பதை வட்டார வள மைய ஆசிரியர்கள் மாதம்தோறும் சென்று ஆய்வு செய்கிறார்கள்.மேலும், பள்ளிகளில் சாதாரண மாணவர்களுடன் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் படிக்கிறார்கள். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை சாதாரண ஆசிரியர்களுக்கு, அதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களைகொண்டு பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்" என்றார்.
நன்றி:tntamilkalvi.blogspot.in
No comments:
Post a Comment