Monday, 2 March 2015

கற்றுக் கொடுக்கக் கூடாத பாடங்கள்

நாம் பயன்படுத்தும் கலைத்திட்டம், பாடத்திட்டம் பாடநூல்கள் அனைத்தும் சமூகத்தின் ஆதிக்க சக்தியினரால் தம் வசதிக்கு குந்தகம் வராவண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. மாணவர்களின் வாழ்வுச்சூழலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லா பாடங்களையே ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். ஆசிரியர்கள் வரலாற்று மற்றும் சமூக நிகழ்வுகளை அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வெறும் தகவல்களாக கற்கின்றனர். ஆசிரியர்கள் தாம் சேகரித்த தகவல்களை அறிவை தருதல் அல்லது ஊட்டுதலே இன்றைய நமது கல்வியாக உள்ளது.

வர்க்க ஏற்றத்தாழ்வையும், பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் சாதி,மத கட்டமைப்பையும், நியாயப்படுத்துவதோடு அதை நிலை நிறுத்தவும் செய்கிறது. ஆகவே ஒடுக்குமுறை, அநீதி பாகுபாடு இவற்றிற்கு எதிராக ஆழமான விமர்சன பார்வையை எதிர்ப்பு குரலை வெளிப்படுத்துவதும் கல்வி முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எனவே தான் இன்றைய கலைத்திட்டத்தில், பாடத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் முறையிலும் கூட அறிவியல்பூர்வமான மாற்றங்கள் தேவையென கல்வியாளர்களும், முற்போக்கு மாணவர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. கலைத்திட்டம் நமது அரசியல் சட்ட விழுமியங் களான சமத்துவம், இறையாண்மை, மதச்சார்பின்மை, சோஷலிசம் ,சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் அச்சம், நம்பிக்கைகள், நம்பிக்கையற்ற நிலை, இவைகளின் அடிப்படையில் கல்வியின் உள்ளடக்கம் அமைதல்வேண்டும்.

உணவு, நீர், வீடு, நியாயமற்ற சம்பளம், தரக் குறைவாக நடத்துதல், சாதியப் பாகுபாடு, ஆணாதிக்கம், ஆதிக்கம் போன்ற மனித நேயமற்ற செயல்களில் மக்களுக்கான பயம் ஆதங்கங்கள் கல்வியின் பொருளாக வேண்டும். எங்கெல்லாம் மாந்த நேயப் பண்புகள் வீழ்த்தப்படுகின்றனவோ அங்கே தான் உண்மையான விடுதலை நிகழமுடியும். ஆனால் தற்போதைய கல்வி முறையில் வாழ்வின் உண்மை நிலைமைகளுக்கு இடமில்லை. இம்முறையில் மக்களோடு இணைந்து போராடுவதற்கான உந்துதலோ மக்களின் இழந்துபோன மனிதத் தை மீட்டெடுப்பதற்கான முயற்சியோ எதுவுமில்லை.கல்வியமைப்பில் சாதியம் சமுதாயத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், சமூக பாகுபாடுகளையும் மறு உற்பத்தி செய்யும் கல்வி முறையாக இருப்பதால் இந்திய கல்வி அமைப்பில் ஆரம்பப்பள்ளி முதல் ஆராய்ச்சி கல்வி வரைசாதிய அடிப்படையிலான கண்ணோட்டங்களும் செயல்பாடுகளும் வெளிப்படையாகவே, முன்னுக்கு வருகின் றன. இந்திய பள்ளியமைப்பில் ஒடுக்கப்பட்ட தலித் பழங்குடியின குழந்தைகள் மீது பாகுபாட்டுடனான அணுகுமுறை பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் உயர் சாதி மற்றும் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்களே, அவர்களில் ஒரு பகுதி ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தங்கள் உணர்வோடு கலந்திட்ட பிற்போக்குத்தனமானசாதிச் சிந்தனைகளை புகுத்த முயல்கின்றனர். இந்த காரணியாலும் பெரும்பகுதி தலித் குழந்தைகள் பள்ளி அமைப்பிலிருந்தே விலக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி நிர்வாகத்தால், ஆசிரியர்களால் பல்வேறு நுட்பமான வடிவங்களில் இந்த பாகுபாட்டை கடைப்பிடிக்கின்றனர். ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களில் தலித் பழங்குடி மாணவர்களை மட்டும் அடையாளப்படுத்தி மாணவர் களிடமிருந்து தனிமைப்படுத்துவது, உனக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா? போகவேண்டியது தானே மாடு மேய்க்க.இங்கே வந்து எங்க உசுர ஏன் எடுக் குறிங்க? என்று ஆசிரியர்களின் வசவுகளும், வகுப்பறையில் தனியாக அமரவைப்பதும், சாதியை சொல்லி இழிவு படுத்துவதும், உடல்ரீதியான தண்டனைகள் கொடுப்பது எனவும், பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வதும், குப்பைகளைப் பொறுக்கச் சொல்லுவதும், மதிப்பெண்கள், தேர்ச்சி உள்பட அனைத்திலும் காட்டப்படும் பாகுபாடில் ஒடுக்கப்பட்ட தலித் பழங்குடி சமூகத்திலிருந்து வரக்கூடிய குழந்தைகளின் கல்வி எதிர்பார்ப்புகளை சுருக்குவதோடு மட்டுமல் லாமல் பள்ளி அமைப்பிலிருந்து விரட்டுவதாகவும் உள்ளது.

தொடக்கப்பள்ளிகளில் சேரும் தலித் குழந்தைகளில் 50 சதவீதத்தினர் 5ம் வகுப்பிற்குள்ளேயே இடைவிலகு கின்றனர். 10ஆம் வகுப்பை முடிப்பதற்குள்ளாகவே பெரும்பகுதி விலகுகின்றனர் என்று ஆய்வாளர் நபீன்சன் 2001ல் குறிப்பிடுகின்றார். கல்வி வியாபாரத்தில் உச்சத்தில் உள்ள இன்றைய சூழலில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு விளம்பர யுத்திகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சில புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் ஒரு தலித் மற்றும் பழங்குடியின குழந்தைக்கு கூட இடம் கிடைக்க வாய்ப்புகளே இல்லை. ஏனென்றால் இக் குழந்தைகளின் கால் பட்டாலே பள்ளி `தீட்டாகி’ விடும். எனவே இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இங்கே இடஒதுக்கீடு, சமூக நீதி என்றெல்லாம் பேச முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் பள்ளிகள் மீது எந்த அரசும், கல்வி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வரமாட்டார்கள்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப் படையில் சமூக , மற்றும் பொருளாதார தளத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டுமென போராடிய போதும் சென்னையிலுள்ள பத்ம சேஷாத்திரி, அகர்வால் வித்யாலயா, அன்னை ஆதர்ஷ், அடையாறு பால வித்யா மந்திர், பக்வத்சல வித்யாஷாரம் போன்ற பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிராக மாணவர் சேர்க்கையை மறுத்துவிட்டன. இதுபோன்று தலித் குழந்தைகள் இல்லாத உயர் சாதி மாணவர்களுக்கான பள்ளி கூடங்களும் நம் தேசத்தில் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இதேகல்வி உரிமை சட்டத்தை உறுதியோடு நடைமுறைப் படுத்த வேண்டுமென கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் போராடியதற்கு பிறகே சில தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிர்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த 2011ம் ஆண்டு ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இடஒதுக்கீட்டின் படி சேர்க்கப்பட்ட குழந்தைகளை தனியாக அமரவைத்ததோடு, அக்குழந்தை களது முடியினை வெட்டி விட்டு இழிவுபடுத்தப்பட்டனர்.

இப்படி பள்ளி நிர்வாகங் களும், ஆசிரியர்களும் வர்ணாசிரம சாதிய மேலாதிக்கத்தை வெளிப்படையாக நிலைநிறுத்துகின்றனநவீன தாராளமய பொருளாதாரகொள்கைகளை மத்திய, மாநில அரசுகள்நடைமுறைப்படுத்தி வருவதால் கல்விமிகப்பெரும் வணிகமாக மாற்றப்பட்டுள் ளது. இந்த சூழல் மீண்டும் நமது சமு தாயத்தில் நிலவி வருகிற ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தவே உதவியுள்ளது என்பதையும் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட ஏழை, எளியதலித், பழங்குடி குழந்தைகள் அதிகம் படிக்கும் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை இல்லாத நிலையே நீடிக்கிறது. ஒப்பீட்டளவில் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகள், விடுதிகள், வதை முகாம்களாக காட்சியளிக்கின்றன.

தனியார் பள்ளிகளே சிறந்தவை என்றதவறான திட்டமிட்ட கருத்துருவாக்கம் வெற்றி பெற்றுள்ள தால் தனியார் பள்ளிகளை நோக்கி நடுத்தர மக்களில் பெரும்பகுதி சென்று கொண்டிருப்பதால் அரசுப் பள்ளிகளில் இன்று பெரும் பகுதி மாணவர்கள் ஏழை, எளிய தலித்பழங்குடி மாணவர்களே அதிகம் பயின்று வருகின்றனர்.அதனால் தானோ என்னவோ அடிப்படையில் அரசுபள்ளிகளில் எவ்வித முன்னேற்றமும், மாற்றமும் நிக ழாமல் பார்த்துக் கொள்கிறது அரசு, பள்ளிக்கல்வியில் நடைமுறைப்படுத்தப்படும் பதினான்கு வகையான நலத்திட்டங்களுமே வாக்கு வங்கி அரசியலை மையப் படுத்தியே செயல்படுத்தப்படுகின்றன. குடிநீர், கழிவறை,வகுப்பறை, கட்டிடம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணம், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது போன்று கற்றல், கற்பித்தலில் தரம் உயர்த்து வதற்கான அடிப்படையிலான பணிகளை செய்ய மறுத்து வருகிறது. பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர் கள் தனியாக உட்கார வைக்கப்படுவதும், பள்ளி வளாகத் தை சுத்தம் செய்யவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகின்றார்கள்.

ஓம்பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தனது பள்ளி ஆசிரியர்களால் தனது சாதித் தொழிலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். பள்ளி வளாகம் முழுவதையும் பெருக்கி சுத்தம் செய்ய வைத்தனர். அதை மறுத்தால் அருவறுக்கத்தக்க மிருகத்தனமான சித்ரவதைகளை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகளை முறையாக கல்வி கற்ற ஒவ்வொரு தலித் தலைமுறையிடமும் கொடுமையான அனுபவங்கள் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன. அது புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் துவங்கி இந்த தலைமுறை வரையும் தொடர்ந்து வருகின்றன.

இதுபோன்ற கடக்க முடியாத சாத்தியங்களை கடந்து உயர்கல்வி வரை சென்றடையும் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் புள்ளி விபரங்களின்படி நூற்றில் 2 சதவீதம் மட்டுமே சாதிக்கின்றனர். ஆசிரியர் மற்றும்பிற மாணவர்களின் குத்தலும், கிண்டலும், ஏளனமும் அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தும் கொடுமைகளும் தற்கொலையில் போய் முடிகிறது. தற்கொலைக்கு தள்ளப்படாவிட்டால் உணர்வு ரீதியாக நசுக்கப்படுகின் றார்கள். ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வரை பாகுபாடும் சாதிய ஒடுக்குமுறைகளும் மண்டிக் கிடக்கின்றது. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணிபோன்ற அமைப்புகள் உறுதியோடு போராடி வருகின்றன. இந்திய கல்வி அமைப்பின் சமூக படிநிலை கட்டமைப்பும் அது சார்ந்த சாதிய பாகுப்பாடுகளும் வெளிப்படையாக கடைப்பிடிக்கப்படுகின்றன. இதை முறைப் படுத்துவதற்கான, தடுப்பதற்கான ஏற்பாடுகளோ ஆய்வு செய்யும் ஏற்பாடுகளோ வலுவாக இல்லை என்பதால் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த குழந்தைகள் சாதி அடிப்படையிலான அவமதிப்புகளை சந்திக்கின்றனர்.

இதுவேஅன்றாட அனுபவமாக இருக்கிறது . நமது சமுதாயத்தின் சாதிய படிநிலையை, பாகுபாட்டையே நமது கல்வி நிலையங்கள் பிரதிபலிக்கின்றன. ஆகவே அனைத்து வகையான ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறும் கல்வியமைப்பையே நாம் உருவாக்க வேண்டியுள்ளது. அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டியுள்ளது : ராஜ்மோகன்

No comments:

Post a Comment