பரிசு பெறும் அபர்ணா நவீனா, ஸ்ரீபிரீத்தி, சாரதா, கிருஷ்ணவேனி
அபர்ணா ஸ்ரீபிரீத்தி - சாரதா - நவீனா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளைஞர் அறிவியல் திருவிழா சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் (மார்ச் 14, 15) நடைபெற்றது. புதியதோர் சமூகம் படைப்போம் என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட இந்த விழாவில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம், போஸ்டர் வடிவமைப்பு, கார்ட்டூன் என்று 4 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 17 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகளின் குறும்படம் முதல் பரிசு பெற்றுள்ளது.
அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, பெற்றோரின் ஆங்கில மோகமும், கல்வி தனியார் மயமும், அரசு செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை உள்ளடக்கியது இந்தக் குறும்படத்தின் மையக்கருத்து. “எது நம்முடைய பள்ளி?” என்பது அதன் தலைப்பு. இந்தக் குறும்படத்தை எடுத்த நான்கு பேர் கொண்ட மாணவிகள் குழுவில் ஒருவர்கூட அரசுப் பள்ளியில் படித்தவரல்ல.
தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை மாணவிகள் குறும்படமாக்கி வெற்றி பெற்றது எப்படி? தங்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தபோதும், நிறையப் பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பையே முடிப்பதில்லையே ஏன் என்ற கேள்விக்கு விடை காண முயன்றுள்ளார்கள் அந்த மாணவிகள். அரசுப் பள்ளிகளின் செயல்படாத தன்மையும், அவற்றைக் கபளீகரம் செய்த தனியார் பள்ளிகளும் இதற்கு ஒரு காரணம் என்று புரிந்து கொண்டுள்ளார்கள் அவர்கள்.
அந்த நேரத்தில்தான் போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அதில் வெறுமனே ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால், தேர்வுக் குழுவைத் தவிர யாரும் படிக்க மாட்டார்கள். ஆனால், குறும்படம் அப்படியல்ல. நன்றாக இருந்தால், அதன் கருத்து போட்டியைத் தாண்டியும் பரவும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளின் நிலையைப் பற்றிக் குறும்படம் எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இதை எல்லாம் தெரிவித்த மாணவி என்.நவீனா, “நாங்கள் படமெடுக்கத் துணை முதல்வர் பாத்திமா மேரியும், வேர்கள் பாலகிருஷ்ணனும் பெரிதும் உதவியாக இருந்தனர்” என்று நன்றியுடன் கூறினார்.
அரசுப் பள்ளிகள் சிறந்தவையா, தனியார் பள்ளிகள் சிறந்தவையா? என்ற குழப்பம் அவர்களுக்கும் இருந்துள்ளது. அதற்குத் தீர்வு காணும் முயற்சியாக இந்தக் குறும்படத்தைக் கருதியுள்ளார்கள். படமெடுப்பதற்கு முன்னர், ‘ கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ போன்ற படங்களை இயக்கிய ராம் தொடங்கி, சிவகாமி ஐ.ஏ.எஸ்., ‘நீயா நானா’ இயக்குநர் ஆண்டனி, கவிஞர் ஆதவன் தீட்சன்யா, கவிஞர் யாழன் ஆதி, பத்திரிகையாளர் மாலன், முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவி, எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திரன் என்று பலரைத் தேடிச் சென்று விவாதித்துள்ளனர். அந்த விவாதத்தின் தொகுப்புதான் இந்தப் படம் என்று குறும்படம் உருவான கதையைச் சொல்கிறார் அபர்ணா பிரீத்தி.
அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் அறியாமல் இல்லை. சமச்சீர் கல்வியிலும்கூடக் குறைபாடுகள் இருப்பதை உணர முடிகிறது என்று சொன்ன சாரதா, “ ஆனால், ஏழை, பணக்காரர், நகரம், கிராமம் கடந்து அனைத்துக் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்றால் அரசுப் பள்ளிகளும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டோம்” என்கிறார் உற்சாகத்துடன். தங்களைப் பொறுத்தவரையில் அந்தப் புரிதலே ஒரு பரிசுதான் என்றும் போட்டியில் கிடைத்த பரிசுகூட இரண்டாம் பட்சம்தான் என்றும் கூறிய அவர், பிரச்சினையை இன்னும் கொஞ்சம் விரிவாக அலசி, இந்த 15 நிமிடக் குறும்படத்தை 30 நிமிட ஆவணப் படமாக்குவதே தங்களது அடுத்த திட்டம் என நம்பிக்கை தொனிக்கப் பேசினார்.
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
No comments:
Post a Comment