Tuesday, 10 March 2015

தடைகளுக்கு அஞ்சாத முதல் பெண் ஆசிரியை

சாவித்திரிபாய் பூலே நினைவுதினம்: மார்ச் 10
தேசிய அளவிலும், மகாராஷ்டிரத்திலும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றழைக்கப்பட்ட ஜோதிபா பூலேயும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலேயும். 

தேசிய அளவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி அளிக்கும் முயற்சிகளை முதன்முதலில் தொடங்கியவர்கள் அவர்கள்தான். நாடு விடுதலை பெறுவதற்கு முன் 19-ம் நூற்றாண்டில் அவர்கள் செய்த பணிகள், நிச்சயம் சமூகப் புரட்சிதான். 

யாருக்குக் கல்வி?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்ட ஜோதிபா பூலே, விவசாய குடும்பங்களுக்கு கல்வி சென்று சேராமல் இருப்பதால்தான் அவர்கள் சுயசார்பு இல்லாமல், புத்திசாலி வர்க்கத்தினரின் நிழலில் இருக்கிறார்கள். 

அரசு வரி வருவாயில் பெருமளவு மேல்தட்டு வர்க்கத்தினரின் கல்விக்கு மட்டுமே செலவிடப்படுவதால், அரசு அலுவலகங்களில் பிராமணர்களே இருக்கின்றனர். இது தவறான போக்கு என்று ஜோதிபா பூலே ஆங்கிலேய அரசிடம் வாதிட்டார். மெக்காலே கல்வி முறைக்கு எதிராகவும் பேசினார். 

பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெற வேண்டும், அதுவே அவர்களுடைய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று கருதினார். பெண் குழந்தைகளுக்கு பெண்ணே ஆசிரியையாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஜோதிபா பூலே, தன் மனைவி சாவித்திரி பாய்க்கு வழிகாட்டியாக இருந்தார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் சேர்த்துவிட்டார். 

பிதேவாடா பள்ளி 
 
அவர் பயிற்சி பெற்றுத் திரும்பியவுடன் 1848-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பூனாவில் உள்ள நாராயண்பேத் என்ற இடத்தில் பிதேவாடா என்ற பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார்கள். இந்தியாவின் இரண்டாவது பெண்கள் பள்ளி அது. அந்தப் பள்ளியில் 9 சிறுமிகள் ஆரம்பத்தில் சேர்ந்தார்கள். அதே ஆண்டே மேலும் 5 பள்ளிகளைத் தொடங்கினர். திட்டமிட்டபடியே 1852-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட தலித் சிறுமிகளுக்கான பள்ளியையும் தொடங்கினார்கள். 

ஆனால், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்ட பள்ளியில் கற்றுத்தர ஆசிரியர்கள் முன்வரவில்லை. இதை முன்கூட்டியே யூகித்திருந்த ஜோதிபா, சாவித்திரி பாயை ஆசிரியர் பயிற்சி பெற வைத்திருந்தார். அந்த வகையில் தேசிய அளவில் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியையாக சாவித்திரி பாய் உருவானார். 

பல்முனை எதிர்ப்பு 
 
ஆனால், சொந்தமாக ஆரம்பித்த பள்ளியில் வேலை பார்க்கவும் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. சாவித்திரி பாய் வெளியே சென்ற பல நேரங்களில், கட்டுப்பெட்டித்தனமாக பழமைவாதம் பேசும் ஆண்கள் அவரைக் கேவலமாகப் பேசினார்கள். 

சில நேரம் கல், சாணியைக்கூட வீசினார்கள். ஜோதிபா, சாவித்திரிக்கு எதிராக தவறான பிரச்சாரத்தையும் பழமைவாதிகள் மேற்கொண்டார்கள். அதைப் பற்றியெல்லாம் சாவித்திரி பாய் கவலைப்படவில்லை. எடுத்த காரியத்தில் உறுதியோடு, மாணவிகளுக்கும், தலித் சிறுமிகளுக்கும் கற்றுத் தந்தார். 

அத்துடன் நிற்காமல், “இந்த பள்ளி நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் விலகியிருக்காவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்”, என்று ஜோதிபா பூலேயின் தந்தை கோவிந்தராவையும் சிலர் மிரட்டினார்கள். தன்னுடைய மகன், மருமகளிடம் பள்ளியை மூடிவிடுமாறு அவர் கூறினார். 

இந்த உயர்ந்த முயற்சியை கைவிடமாட்டோம் என்று ஜோதிபா பூலேயும், சாவித்திரிபாயும் மறுத்ததால், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றினார் கோவிந்தராவ். ஆனாலும் அவர்களுடைய பணி தொடர்ந்தது. அதனால்தான் அவர்களது பணி மிகப்
பெரிய சமூகப் புரட்சியாக இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.- ஆதி

2 comments:

  1. அன்பின் சுந்தருக்கு
    வணக்கம்.
    தடைகளுக்கு அஞ்சாத முதல் பெண் ஆசிரியை படித்தேன்.
    நெஞ்சில் வாழ்நாள் முழுவதும் போற்றப்பட வேண்டிய மாமனிதர் சாவித்ரி பாய் புலே
    பகிர்நதமைக்கு நன்றி.
    ஆனால் ஆசிரியர் என்ற பொதுப்பாலாக போட்டிருக்கலாம்.
    நானும் கூட சாவித்திரி பாய் புலே பற்றி ஒரு நாலு வார்த்தை முகநூலில் இரவு 10 மணிக்கு மேல் போட்டேன்.
    சந்தோஷம் .
    நன்றி.
    என்றும் அன்புடன் ,
    மோகனா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பேரா.மோகனா அவர்களுக்கு.........

      Delete